குடும்பத் தலைவராக இருப்பதன் அர்த்தம் என்ன?
பைபிளின் கருத்து
குடும்பத் தலைவராக இருப்பதன் அர்த்தம் என்ன?
பைபிளின்படி, “ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறார்.” (1 கொரிந்தியர் 11:3; எபேசியர் 5:23) பைபிள் மீது மரியாதை வைத்திருப்பதாக சொல்லிக்கொள்ளும் அநேகர் தலைமை ஸ்தானம் என்னும் நியமம் பழமையானது மட்டுமல்ல, அது ஆபத்தானதும் கூட என்று நினைக்கிறார்கள். “மனைவி [தன் கணவனுக்கு] ‘மனப்பூர்வமாக கீழ்ப்படிய’ வேண்டும் என்ற நியமத்தை ஒரேயடியாக கடைப்பிடித்தால் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் அவள் துஷ்பிரயோகம் செய்யப்பட வாய்ப்புள்ளது” என்று ஒரு தம்பதியினர் சொல்கின்றனர். வருத்தகரமாக, தலைமை ஸ்தானத்தை துஷ்பிரயோகம் செய்வது பரவலாக காணப்படுகிறது. “மனைவியை அடிப்பது இல்லற வாழ்க்கையில் சர்வசாதாரணமாக நடக்கும் ஒன்று என அநேக நாடுகளில் கருதப்படுகிறது. இது ஆணுக்குரிய உரிமையென பாடல்களிலும் பழமொழிகளிலும் திருமண சடங்குகளிலும் போற்றப்படுகிறது” என்கிறார் ஒரு எழுத்தாளர்.
தலைமை ஸ்தானத்தைப் பற்றிய பைபிள் நியமம் இந்தக் கொடுமைகளுக்கு வழிநடத்தியிருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். தலைமை ஸ்தானத்தைப் பற்றிய பைபிளின் போதனை பெண்களை இழிவுபடுத்துகிறதா? இல்லற வன்முறையை தூண்டுகிறதா? குடும்பத் தலைவராய் இருப்பதன் உண்மையான அர்த்தம் என்ன? a
தலைமை ஸ்தானம் என்பது கொடுங்கோலாட்சி கிடையாது
கிறிஸ்தவ தலைமை ஸ்தானம் ஓர் அன்பான ஏற்பாடு. அதை ஒருபோதும் கொடுங்கோலாட்சியோடு சம்பந்தப்படுத்த முடியாது. தெய்வீக அதிகாரத்தை அவமதித்தது, இன்று பெண்களின் மீது ஆண்கள் கொடூரமான ஆதிக்கம் செலுத்துவதில் விளைவடைந்திருக்கிறது. (ஆதியாகமம் ) ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட காலந்தொட்டே மனிதன் பெண்களையும் பிள்ளைகளையும் ஏன், எல்லாரையுமே கொடிய முறையில் தன்னலத்திற்காக பயன்படுத்தியிருக்கிறான். இவ்வாறு தன்னுடைய அதிகாரத்தை அடிக்கடி துஷ்பிரயோகம் செய்திருக்கிறான். 3:16
ஆனால் அது ஒருபோதும் கடவுளுடைய ஏற்பாட்டின் பாகமாக இருந்ததில்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களை யெகோவா வெறுக்கிறார். தங்களுடைய மனைவிகளுக்கு ‘துரோகம் பண்ணின’ இஸ்ரவேல் ஆண்களை யெகோவா கண்டித்தார். (மல்கியா 2:13-16) ‘கொடுமையில் பிரியமுள்ளவனை என் உள்ளம் வெறுக்கிறது’ என்று சொல்கிறார். (சங்கீதம் 11:5) எனவே மனைவியை அடிப்பவர்களும் அவர்களை துஷ்பிரயோகம் செய்பவர்களும் எந்த விதத்திலேயும் பைபிளைப் பயன்படுத்தி தங்களுடைய கொடூரமான செயல்களை நியாயப்படுத்த முடியாது.
சரியான தலைமை ஸ்தானம் எதை உட்படுத்துகிறது?
தலைமை ஸ்தானம் என்பது சர்வலோக ஒழுங்கை காக்க கடவுள் பயன்படுத்தும் ஓர் அடிப்படை ஏற்பாடாகும். கடவுளை தவிர மற்ற அனைவரும் யாருக்காவது கீழ்ப்பட்டிருக்க வேண்டியிருக்கிறது. புருஷர்கள் கிறிஸ்துவுக்கு கீழ்ப்பட்டிருக்கிறார்கள், பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்பட்டிருக்கிறார்கள், எல்லா கிறிஸ்தவர்களும் அரசாங்கத்திற்கு கீழ்ப்பட்டிருக்கிறார்கள். இயேசுவும்கூட கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்.—ரோமர் 13:1; 1 கொரிந்தியர் 11:3; 15:28; எபேசியர் 6:1.
ஒழுங்கான, நிலையான ஒரு சமுதாயம் வேண்டுமென்றால் தலைமைத்துவத்திற்கு கீழ்ப்பட்டிருப்பது அவசியம். அதுபோலவே நிலையான சந்தோஷ சமாதானமுள்ள குடும்ப வாழ்க்கை வேண்டுமென்றால் குடும்பத் தலைவருக்கு கீழ்ப்பட்டிருப்பது அவசியம். குடும்பத்தில் கணவன் அல்லது தகப்பன் இல்லாதது இந்த உண்மையை மாற்றாது. அப்படிப்பட்ட குடும்பங்களில் தாயானவள் தலைமை ஸ்தானத்தை எடுத்துக்கொள்வாள். தாய் தகப்பன் இருவரும் இல்லாவிட்டால் மூத்தப்பிள்ளை அல்லது உறவினர் யாராவது குடும்பத் தலைவரின் பங்கை வகிக்கலாம். எல்லா சந்தர்ப்பத்திலும் தலைமை வகிப்பவர்களுக்கு சரியான மரியாதையை காட்டும்போது குடும்ப அங்கத்தினர்கள் நன்மை பெறுவார்கள்.
எனவே, முக்கிய குறிப்பு என்னவென்றால் தலைமை ஸ்தானத்தை நிராகரிப்பதற்கு பதிலாக அதை சரியாக வகிப்பதற்கும், சரியாக புரிந்து கொள்வதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும். “கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறது போல” புருஷர்கள் குடும்பத்தின் தலையாயிருக்க வேண்டுமென அப்போஸ்தலனாகிய பவுல் உற்சாகப்படுத்துகிறார். (எபேசியர் 5:21-23) கிறிஸ்து சபையிடம் நடந்து கொண்ட விதம் தலைமை ஸ்தானத்திற்கான பரிபூரண மாதிரி என பவுல் சுட்டிக்காட்டுகிறார். கிறிஸ்து என்ன முன்மாதிரி வைத்தார்?
மேசியாவாகவும் எதிர்கால ராஜாவாகவும் இருந்த இயேசு, கடவுளிடமிருந்தே அதிகாரத்தை பெற்றிருந்தார். சீஷர்களைவிட அதிபுத்திசாலியாகவும் அனுபவசாலியாகவும் இருந்தார். இவையெல்லாம் இருந்தபோதிலும் அவர் அன்புடனும் கனிவுடனும் பரிவிரக்கத்துடனும் நடந்து கொண்டார். ஆனால் ஒருபோதும் கொடூரமாகவோ கறாராகவோ அதிகத்தை எதிர்பார்ப்பவராகவோ இருந்ததில்லை. அதுமட்டுமல்ல தம்முடைய அதிகாரத்தை ஆணவத்துடன் செலுத்தவுமில்லை. எப்போது பார்த்தாலும் தாம் கடவுளுடைய குமாரனென்று எல்லாரிடமும் காட்டிக்கொள்ளவுமில்லை. மாறாக தாழ்மையுள்ளவராகவும் இரக்கமுள்ளவராகவுமே இருந்தார். அதன் விளைவாக, ‘அவருடைய நுகம் மெதுவாயும், அவருடைய சுமை இலகுவாயும் இருந்தது.’ (மத்தேயு 11:28-30) எனவே இயேசு சிநேகப்பான்மையானவராகவும் நியாயமானவராகவும் இருந்தார். சொல்லப்போனால், சபையை அந்தளவு அவர் நேசித்ததால் “தம்மைத்தாமே அதற்கு ஒப்புக்கொடுத்தார்” என்று பவுல் சொல்கிறார்.—எபேசியர் 5:25, 27ஆ.
ஒருவர் எவ்வாறு இயேசுவின் தலைமை ஸ்தானத்தை பின்பற்றலாம்?
குடும்பத் தலைவர்கள் எவ்வாறு கிறிஸ்துவின் பண்புகளை வெளிக்காட்டலாம்? ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவர் தன் குடும்பத்தின் சரீர மற்றும் ஆவிக்குரிய நலனில் அக்கறை காட்டுவார். குடும்ப அங்கத்தினர்களின் தனிப்பட்ட மேலும் ஒட்டுமொத்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான நேரத்தையும் கவனத்தையும் செலுத்துவதன் மூலம் குடும்பத்துக்காக தன்னையே அர்ப்பணிக்கிறார். தன்னுடைய தேவைகளுக்கு முன் தன் மனைவி, மக்களுடைய தேவைகளை வைக்கிறார். b (1 கொரிந்தியர் 10:24; பிலிப்பியர் 2:4) தன்னுடைய தினசரி வாழ்க்கையில் பைபிள் நியமங்களையும் போதனைகளையும் கடைப்பிடிக்கிறார். அதன் மூலம் மனைவியிடமிருந்தும் பிள்ளைகளிடமிருந்தும் மரியாதையையும் ஆதரவையும் பெறுகிறார். அன்பான தலைமை ஸ்தானத்தின் கீழ், குடும்ப அங்கத்தினர்களின் கூட்டு முயற்சியினால் எந்தப் பிரச்சினையையும் சுலபமாக தீர்த்துவிட முடியும். பைபிளின் அடிப்படையில் தலைமை ஸ்தானத்தை வகிக்கும்போது கடவுளுக்கு மகிமையும் துதியும் செலுத்தும் மகிழ்ச்சியான குடும்பத்தை ஒரு கணவனால் உருவாக்க முடியும்.
ஞானமான ஒரு குடும்பத் தலைவர் மனத்தாழ்மையாகவும் இருக்கிறார். தன் குற்றத்தை ஒத்துக்கொள்ள தனக்கு கடினமாக இருந்தாலும் உடனடியாக மன்னிப்பு கேட்க தயங்கமாட்டார். பைபிள் சொல்கிறது “ஆலோசனைக்காரர் அநேகரால்” ஜெயங்கிடைக்கும். (நீதிமொழிகள் 24:6) ஆம், பொருத்தமான சமயங்களில், மனைவி மக்களுடைய கருத்துக்களை கேட்க எப்போதும் மனமுள்ளவராய் இருப்பார். அதற்கு மனத்தாழ்மை அவரை உந்துவிக்கும். ஒரு கிறிஸ்தவ குடும்பத் தலைவர் இயேசுவை பின்பற்றுகையில் தன்னுடைய குடும்பத்திற்கு சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் தருவது மட்டுமல்லாமல் குடும்ப ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்த யெகோவா தேவனுக்கு கனத்தையும் மகிமையையும் சேர்க்கிறார்.—எபேசியர் 3:14, 15. (g04 7/8)
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் கட்டுரை முக்கியமாக கணவனுடைய மற்றும் தகப்பனுடைய பங்கை கலந்தாலோசிக்கிறது. என்றாலும் இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நியமத்திலிருந்து ஒற்றை தாய்மார்களும் பெற்றோரை இழந்து கூடப்பிறந்தவர்களை கவனிக்க வேண்டிய பொறுப்பை உடையவர்களும் நன்மையடையலாம்.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புத்தகம் குடும்பத்தை எவ்வாறு அன்பாக பராமரிப்பது என்பதைப் பற்றி நடைமுறையான ஆலோசனைகளை தருகிறது.
[பக்கம் 26-ன் படம்]
நியாயமான கணவன் தன் மனைவி மக்களுடைய கருத்துக்களை கவனத்தில் எடுத்துக் கொள்வார்