உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
கடலில் நீந்தும் பிளாஸ்டிக் வாத்துகள்
ஜனவரி, 1992-ல் ஹாங்காங்கிலிருந்து ஐக்கிய மாகாணங்களை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஒரு கப்பல் கடும் புயலில் சிக்கியபோது அதிலிருந்த 29,000 பிளாஸ்டிக் வாத்துகள் கடலில் ‘மூழ்கியதாக’ ஜெர்மனியின் செய்தித்தாளான ஃப்ராங்க்ஃபுர்ட்டர் ஆல்ஜிமைன் ட்ஸைட்டுங் விளக்கியது. அலாஸ்கா, பாரானஃப் தீவில் 1992 நவம்பர் மாதத்தில், முதன்முதலாக சில வாத்துகள் கரை ஒதுங்கின. அந்தப் புயலுக்குப் பின்பு இரண்டு வருடங்கள் கழித்து இன்னும் சில வாத்துகள் “பேரிங் ஜலசந்திக்கு வடக்கே ஐஸ் கட்டி மேல் மிதந்துகொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.” அசாத்திய உறுதியுடன் இருக்கும் இந்த பொம்மைகள் வட அமெரிக்காவின் நியு இங்கிலாந்து கடற்கரைக்கும் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கப்பற்சேதம் விஞ்ஞானிகளுக்கு உதவியிருப்பது ஆர்வத்துக்குரிய விஷயம்; கடல் நீர் “பசிபிக் பெருங்கடலிலிருந்து நேரடியாக ஆர்க்டிக் பெருங்கடலுக்கும் பிறகு அட்லாண்டிக் பெருங்கடலுக்கும்” பாய்கிறது என்ற அவர்களது கொள்கையை இது ஊர்ஜிதப்படுத்தியிருப்பதாக செய்தித்தாள் சொன்னது. (g04 5/8)
பிஞ்சிலேயே நிக்கோடினுக்கு அடிமை
“பருவ வயதினர் சிகரெட்டை ஒரேவொரு முறை இழுத்தாலே போதும் அதற்கு அடிமையாகிவிடலாம். இப்படிப்பட்ட அசாத்திய கண்டுபிடிப்புகள், வருடக்கணக்கில் எக்கச்சக்கமாக புகைப்பவர்கள் மட்டுமே மெல்ல மெல்ல நிக்கோடினுக்கு அடிமையாவதாக நம்பப்படும் கருத்துக்கு முரணானதாக உள்ளன” என அறிக்கை செய்கிறது கனடாவில் வெளியாகும் நேஷனல் போஸ்ட் செய்தித்தாள். ஏறக்குறைய ஆறு வருடங்களாக 1,200 இளவட்டங்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வின்படி “ஓர் இளைஞனை புகைக்கத் தூண்டுவதில் மிக சக்திவாய்ந்தது, சகாக்களின் அழுத்தத்தைவிட நிக்கோடினுக்கு அடிமையாகியிருப்பதே; அவ்வப்போது புகைப்பவர்களின் மத்தியில்கூட இதுவே உண்மை” என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்ததாக அந்த செய்தித்தாள் சொன்னது. அந்த ஆய்வின்படி “புகைக்கும் இளைஞர்களின் மத்தியில் முதன்முதல் சிகரெட் புகைப்பதற்கும் தினசரி புகைக்க ஆரம்பிப்பதற்கும் இடைப்பட்ட சமயத்தில் நிக்கோடினுக்கு அடிமையாவதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.” புகைப்பதற்கு எதிராக அநேக பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன; அவை இளைஞர்கள் புகைப்பதற்கான அழுத்தத்தை எதிர்ப்பதற்கு மட்டுமல்ல ஆனால் நிக்கோடினுக்கு அடிமைப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்குக்கூட உதவும் விதத்தில் செய்யப்பட வேண்டுமென ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். (g04 5/22)
அநேக இளசுகள் தெரு வாசிகள்
“மாட்ரிட்டில் தெருவில் வாழும் பருவ வயதினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது” என அறிக்கை செய்கிறது எல் பாயிஸ் என்ற ஸ்பானிய நாளிதழின் ஆங்கில பதிப்பு. ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சியின்படி, “மாட்ரிட்டில் வீடின்றி திரியும் 5,000 பேரில் சுமார் 1,250 பேருக்கு, 20 வயதுக்குள் தெருவே வீடென ஆகிவிட்டது.” “வீடற்ற இளைஞர்களில் பெரும்பாலோர் பிளவுபட்ட குடும்பங்களிலிருந்து வந்தவர்கள், அவர்களது வாழ்க்கை வேதனை நிறைந்ததாக இருப்பதில் சந்தேகமில்லை” என ஆராய்ச்சி காட்டுகிறது. சொல்லப்போனால், “மூன்று இளைஞரில் இருவர் குடிகாரரின் அல்லது போதைப் பொருட்களை துஷ்பிரயோகிப்பவரின் பிள்ளையாக இருக்கிறார்கள், அதேயளவு எண்ணிக்கையானோர் வீடுகளில் துஷ்பிரயோகத்தை அனுபவித்தவர்கள்.” “மத்தியதரைக் கடல் பகுதிகளின் கலாச்சாரங்களுக்கே உரிய பாரம்பரிய குடும்ப உறவுகள் சிதைய ஆரம்பித்துவிட்டன” என இந்த அறிக்கையை தயாரித்த மான்வெல் மூன்யோஸ் என்பவர் சொல்கிறார். (g04 5/8)
“கொழுகொழு”காரர்களுக்கென்று ஒரு கடற்கரை
ஒல்லியான தேகமுடையவர்கள் குவிந்து கிடக்கும் கடற்கரையில் கால் வைக்க சங்கோஜப்படும் ஆட்களுக்காகவே மெக்சிகோவிலுள்ள ஒரு ஹோட்டல் ஓர் இடத்தை ஒதுக்கியிருப்பதாக அறிக்கை செய்கிறது எல் எக்கோநோமிஸ்டா என்ற செய்தித்தாள். கன்கூனிலுள்ள இந்த கடற்கரை ஹோட்டலின் ஸ்லோகன், “குண்டாயிருங்கள், குஷியாயிருங்கள்” என்பதே. ஹோட்டலின் இலட்சியம்: “குளியல் உடையில் கடற்கரைக்கு செல்ல பயப்படும் கொழுக்கு மொழுக்குக்காரர்களை சுண்டியிழுப்பதே.” பல்வேறு சைஸுகளில் இருக்கும் அந்த ஹோட்டல் பணியாளர்கள் விடுமுறையைக் கழிக்க வரும் பருத்தவர்களை எந்தப் பாகுபாடுமின்றி மதிப்புடன் நடத்த பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறார்கள், “காரணம், அப்படி வருகிறவர்கள் ஏற்கெனவே பாகுபாட்டினால் அன்றாட வாழ்க்கையில் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பவர்கள்” என அந்த அறிக்கை சொல்கிறது. (g04 5/8)
மத்தியதரைக் கடல் சூடாகிறது
இத்தாலியிலுள்ள ஜினோவா பல்கலைக்கழகத்தில் கடல் உயிரியலாளராக பணியாற்றும் மாவுரிட்ஸ்யோ வ்வுயிர்ட்ஸ், “மத்தியதரைக் கடல் சூடாவதை . . . கடந்த பத்து வருடங்களாக நாங்கள் குறித்துக்கொண்டு வருகிறோம்” என சொல்கிறார். சூடாகும் தண்ணீர் புதிதுபுதிதான நீர்வாழ் தாவரங்களையும் விலங்குகளையும் வசீகரிப்பதாக லா ரேபூப்பிளிகா என்ற இத்தாலிய செய்தித்தாளில் வெளியான அறிக்கை சொல்கிறது. “எண்ணற்ற உயிரினங்கள் ஆப்பிரிக்க கரையோரத்திலிருந்து மத்தியதரைக் கடலின் வடக்கு நோக்கி இடம் பெயர்கின்றன” என்கிறார் வ்வுயிர்ட்ஸ். இந்தக் குடியேறிகளின் பட்டியலில் இடம் பெறுபவை: வெப்பமண்டல தண்ணீரில் பொதுவாக காணப்படும் கிளி மீன்; வெப்பமண்டல அட்லாண்டிக் பகுதிகளை சேர்ந்த டாம்செல்ஃபிஷ்; இந்தியப் பெருங்கடலிலும் பசிபிக் பெருங்கடலிலும் பொதுவாக வாழும் ட்ரிகர்ஃபிஷ்; சூயஸ் கால்வாய் வழியாக மத்தியதரைக் கடலுக்கு வந்திருக்கும் ஒரு வகை கடற்பாசி. (g04 5/8)
பாழாய்ப் போன புத்திமதி
“1970-கள் வரை வங்காள தேசத்திலும் [இந்தியாவின்] மேற்கு வங்காளத்திலும் உள்ள பெரும்பாலான கிராமங்களில் ஆழமற்ற கிணறுகள் தோண்டப்பட்டன அல்லது குளங்களிலிருந்தும் ஆறுகளிலிருந்தும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது; அதனால் மேற்கூறப்பட்ட இடத்து கிராமவாசிகள் எப்போதும் காலரா, வயிற்றுப்போக்கு ஆகியவற்றாலும், தண்ணீரால் வரும் பிற வியாதிகளாலும் அவதிப்பட்டார்கள். எனவே சுத்தமான, கிருமிகள் இல்லாத தண்ணீரைப் பெறுவதற்கு நிலத்தடி நீர்நிலைகளில் (அதிகளவு துளைகளுடன் தண்ணீர் உறிஞ்சி வைக்கும் பாறைகள் உள்ள இடங்களில்) ஆழ்குழாய்க் கிணறுகளைத் தோண்டுமாறு ஐநா ஆலோசனை வழங்கியது” என குறிப்பிடுகிறது த கார்டியன் வீக்லி செய்தித்தாள். வங்காள தேசம், வியட்நாம், லாவோஸ், பர்மா (இன்று மயன்மார்), தாய்லாந்து, நேப்பாளம், சீனா, பாகிஸ்தான், கம்போடியா, இந்தியாவிலுள்ள மேற்கு வங்காளம் ஆகியவற்றில் சுமார் இரண்டு கோடி ஆழ்குழாய்க் கிணறுகள் தோண்டப்பட்டன. ஆனால் பெரும்பாலான கிணறுகள் அடிப்பரப்புக்கும் கீழேயுள்ள ஆர்செனிக் கலந்த மண்டிகள் வரை தோண்டப்பட்டன. விளைவு? ஆர்செனிக் நச்சு மிகப் பரந்தளவுக்கு பாதித்தது; “உலக சரித்திரத்திலேயே வேறெப்போதும் இந்தளவு ஒட்டுமொத்தமாக மக்கள் நச்சூட்டப்பட்டது கிடையாது” என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது. கடந்த இருபதாண்டுகளாக சுமார் 15 கோடி மக்கள் அந்த மாசுபட்ட தண்ணீரைக் குடிக்கிறார்கள். வங்காள தேசத்தில் மட்டும் ஆர்செனிக் நச்சால் படுமோசமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,000 ஆகும். உள்ளூர் குழுக்களும், அரசாங்கங்களும், ஐநாவும் மாற்று வழிகளைக் காண முயலுகின்றன, ஆனால் இந்த நிலைமைக்குப் பரிகாரம் காணும் பயனுள்ள திட்டம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. (g04 5/22)
சிறார் தற்கொலை —ஜாக்கிரதை!
“தற்கொலை செய்துகொள்ள முயலுகிற அல்லது அப்படி செய்துகொள்ளும் சிறார்களில் எண்பது சதவீதத்தினர் தங்கள் எண்ணத்தை பல நாட்களுக்கோ மாதங்களுக்கோ முன்பு சொல்லி விடுகிறார்கள் அல்லது எழுதி வைத்துவிடுகிறார்கள்” என அறிக்கை செய்கிறது மெக்சிகோ நகரில் வெளியாகும் மிலென்யோ என்ற செய்தித்தாள். (உடலளவில், மனதளவில், அல்லது பேச்சளவில்) மோசமாக நடத்தப்படுவது, பாலியல் துஷ்பிரயோகம், பிளவுபட்ட குடும்பம், பள்ளி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஆகியவை சிறார்கள் விரக்தியடைவதற்கு முக்கிய காரணங்களாகும். டிவியிலும் சினிமாவிலும் வீடியோ கேம்ஸிலும் புத்தகத்திலும் மரணம் சர்வசாதாரணமானதாக சித்தரிக்கப்படுவதால் வாழ்க்கையின் மதிப்பைப் பற்றிய தவறான கருத்தை பிள்ளைகள் பெற்றிருக்கிறார்கள்; இது, மெக்சிகன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சோஷியல் செக்யூரிட்டி நிறுவனத்தில் மனநோய் நிபுணராக பணியாற்றும் ஹோசே லூயிஸ் பாஸ்கெஸ் என்பவரின் கருத்து. எட்டு முதல் பத்து வயதுக்குட்பட்ட ஒவ்வொரு 100 பிள்ளைகளிலும் 15 பேருக்கு தற்கொலை எண்ணம் இருக்கிறது, அவர்களில் 5 சதவீதத்தினர் தற்கொலை செய்துகொள்வதாகவும் அவர் சொல்கிறார். சிறார்கள் தற்கொலையைப் பற்றி பேசுகையில் அவர்கள் ப்ளாக்மெயில் செய்வதாகவோ தங்கள் பக்கம் கவனத்தை திருப்ப முயற்சியெடுப்பதாகவோ நினைத்து புறக்கணித்துவிடுவதற்குப் பதிலாக உஷார் ஆகும்படி அந்த செய்தித்தாள் சிபாரிசு செய்கிறது. “பிள்ளைகளுடன் பெற்றோர்கள் நேரத்தை செலவிட வேண்டும், அவர்களுடன் விளையாட வேண்டும், தவறாமல் பேச்சுத் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும், எப்போதும் அன்பைப் பொழிய வேண்டும்” என அது மேலும் சொல்கிறது. (g04 5/22)
சீற்றம் சீரழிக்கும்
“சீற்றம் நம் சமுதாயத்தில் மிக அதிகமாக பெருகி வருகிறது, ஆனால் அது உடலைப் பாதிக்கிறது” என இத்தாலி, பாடவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனோதத்துவ ஆசிரியை வாலேன்டினா டூர்சோ சொல்கிறார். கோபப்படுகையில் தசைகள் விறைப்படைகின்றன, இதயத்துடிப்பும் சுவாசமும் விரைவடைகின்றன, இதனால் உடல் ஒருவித அழுத்தத்திற்கு உள்ளாகிறது. நியாயமாக சிந்திக்கும் ஒருவரின் திறமையை சீற்றம் தடைப்படுத்தி, அவரது செயல்களின் மீது கட்டுப்பாட்டை இழக்கும்படியும் செய்யலாம். “சீற்றம் தரும் காரியங்களை சந்திக்க தயாராவோமாக. . . . கோபப்படுவதற்குப் பதிலாக, ‘என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என சாந்தத்துடன் நேரடியாக சொல்வோமாக; அப்போது நம் வாழ்க்கை மிகவும் நன்றாயிருக்கும்” என டூர்சோ ஆலோசனை அளிக்கிறார். (g04 5/22)