Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் பிள்ளைக்கு ஜுரம் அடிக்கும்போது

உங்கள் பிள்ளைக்கு ஜுரம் அடிக்கும்போது

உங்கள் பிள்ளைக்கு ஜுரம் அடிக்கும்போது

“எனக்கு என்னவோ மாதிரி இருக்கு!” என்று உங்கள் பிள்ளை சோகக் குரலில் சொல்லும்போது, உடனடியாக அவனுக்கு ஜுரம் அடிக்கிறதா என்று நீங்கள் தொட்டுப் பார்க்கலாம். ஜுரம் அடித்தால் உங்களுக்கு கவலை வந்துவிடுவது இயல்பு.

அ.ஐ.மா., மேரிலாண்ட், பால்டிமோரில் உள்ள த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ச்சில்ரன்ஸ் சென்ட்டர் நடத்திய ஆராய்ச்சிப்படி, “லேசாக ஜுரம் அடித்தால்கூட வலிப்பு, மூளைச்சேதம் போன்ற ஏதாவதொரு மோசமான பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று” பெற்றோர்களில் 91 சதவீதத்தினர் நினைத்தார்கள். அதோடு, “89% பெற்றோர்கள் தங்கள் பிள்ளைக்கு 102 டிகிரி ஃபாரன்ஹீட் (38.9 டிகிரி செல்சியஸ்) ஜுரம் அடிப்பதற்கு முன்பே அதைக் குறைக்க மருந்துகளை கொடுத்தார்கள்” என்று அதே ஆராய்ச்சி காட்டியது.

உங்கள் பிள்ளைக்கு ஜுரம் அடித்தால் நீங்கள் உண்மையில் எந்தளவுக்கு கவலைப்பட வேண்டும்? அதைத் தணிக்க சிறந்த வழிகள் யாவை?

ஜுரத்தின் முக்கிய பங்கு

ஜுரம் வருவதற்குக் காரணம் என்ன? உடலின் இயல்பான வெப்பநிலை (தர்மாமீட்டர் வாயில் வைக்கப்படுகையில்) சராசரியாக சுமார் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட்டாக இருந்தாலும், நாள் முழுவதும் அது ஒரு டிகிரியோ அதற்கு அதிகமோ கூடிக்குறைவது சகஜம். * ஆகவே உங்கள் உடலின் வெப்பநிலை காலையில் குறைவாக இருக்கலாம், ஆனால் பிற்பகலில் அதிகமாக இருக்கலாம். மூளையின் அடிப்பகுதியிலுள்ள ஹைப்போதலாமஸே உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்துகிறது; வெப்ப சீர்நிலைக் கருவியை (thermostat) போலவே அது செயல்படுகிறது. பாக்டீரியாவோ வைரஸோ தாக்கும்போது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் ரத்தத்தில் காய்ச்சலூக்கிகளை (pyrogens) உண்டாக்குகின்றன. அப்போது ஹைப்போதலாமஸ் வெப்பநிலையை கூட்டுகிறது. இப்படித்தான் ஜுரம் வருகிறது.

ஜுரத்தினால் அசௌகரியமும் நீரிழப்பும் ஏற்படலாம் என்றாலும், ஜுரம்தானே ஆபத்தானது என்று நினைக்க முடியாது. சொல்லப்போனால், பாக்டீரியாவினாலும் வைரஸினாலும் உண்டாகும் தொற்றுகளிலிருந்து விடுபட உடலுக்கு உதவி செய்வதில் ஜுரம் முக்கிய பங்கு வகிப்பதாகத் தெரிகிறது என்று மேயோ ஃபௌன்டேஷன் ஃபார் மெடிக்கல் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச் சொல்கிறது. “ஜலதோஷத்தையும் இதர சுவாச மண்டல தொற்றுகளையும் உண்டாக்கும் வைரஸ்களுக்கு குளுகுளு சீதோஷணநிலை மிகவும் இஷ்டம். ஆகவே லேசான ஜுரம் உண்மையில் வைரஸை ஒழிக்க உதவி செய்யலாம்.” அதனால், “லேசான ஜுரத்தை தணிக்க வேண்டிய அவசியமில்லை, அது உங்கள் பிள்ளையின் உடல் இயல்பாக குணமடைவதை தடை செய்யலாம்” என்றும் அது சொல்கிறது. ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவென்றால், மெக்சிகோவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி, உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதன் மூலம் சில உடல்நல கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கிறது; இந்த சிகிச்சைக்கு பெயர் ஹைப்பர்தெர்மியா.

அவசர சிகிச்சை மருத்துவர்களுக்கான அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் ஆல் சாக்கேட்டி இவ்வாறு சொல்கிறார்: “ஜுரம்தானே ஒரு பெரிய பிரச்சினை அல்ல. ஆனால் தொற்று ஏற்பட்டிருப்பதற்கு அது ஒரு அடையாளமாக இருக்கலாம். ஆகவே பிள்ளைக்கு ஜுரம் அடிக்கும்போது, பிள்ளைமீதும் ஒருவேளை அதற்கு வந்திருக்கும் தொற்றின் மீதும் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, தர்மாமீட்டர் அளவையே பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.” தி அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறது: “காய்ச்சல் 101 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு (38.3 டிகிரி செல்சியஸ்) குறைவாக இருந்தால் பொதுவாக எந்த சிகிச்சையும் தேவையில்லை; பிள்ளை அசௌகரியமாக உணர்ந்தால் அல்லது பிள்ளைக்கு ஏற்கெனவே ஜுரத்துடன் வலிப்பும் ஏற்பட்டிருந்தால் சிகிச்சை தேவைப்படலாம். அதைவிட அதிக ஜுரம்கூட ஆபத்தானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை; ஆனால் உங்கள் பிள்ளைக்கு இதற்கு முன்பு ஜுரத்துடன் வலிப்பு ஏற்பட்டிருந்தால் அல்லது தீராத வியாதி ஏதேனும் இருந்தால் அது ஆபத்தாக இருக்கலாம். உங்கள் பிள்ளை எப்படி நடந்துகொள்கிறான் என்பதை கவனிப்பது மிகவும் முக்கியம். நன்றாக சாப்பிட்டு, நன்றாக தூங்கி, அவ்வப்போது விளையாடுகிறான் என்றால் அவனுக்கு ஒருவேளை எவ்வித சிகிச்சையும் தேவைப்படாது.”

லேசாக ஜுரமடித்தால் செய்ய வேண்டியவை

அப்படியானால், உங்கள் பிள்ளைக்கு நீங்கள் எந்த விதத்திலும் உதவ முடியாது என்று அர்த்தமல்ல. லேசாக ஜுரமடிக்கும்போது பின்வருமாறு செய்யலாம் என சில மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்: பிள்ளையின் ரூம் ஓரளவுக்கு குளுகுளுவென்று இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பிள்ளைக்கு லேசான துணியை போட்டுவிடுங்கள். (சூடு அதிகமானால் ஜுரம் அதிகமாகலாம்.) தண்ணீர், நீர் கலந்த பழ ரசங்கள், சூப் போன்றவற்றை அதிகமாக குடிக்க வையுங்கள்; ஏனென்றால் ஜுரத்தினால் நீரிழப்பு ஏற்படலாம். * (கோலா அல்லது கறுப்பு டீ போன்ற காஃபீன் கலந்த பானங்கள் சிறுநீரிறக்கிகளாக [diuretics] இருப்பதால் இன்னுமதிக நீரிழப்பு ஏற்படும்.) பச்சிளம் குழந்தைகளுக்கு தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். எளிதில் ஜீரணமாகாத உணவுகளை தவிருங்கள், ஏனென்றால் ஜுரமடிக்கும்போது வயிறு சரியாக வேலை செய்யாது.

பிள்ளையின் ஜுரம் 102 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டினால், டாக்டரின் பரிந்துரை இல்லாமலேயே கிடைக்கும் அஸிடாமினோஃபென் அல்லது இபூப்ரோஃபென் போன்ற மருந்துகள் பெரும்பாலும் கொடுக்கப்படுகின்றன. ஆனால் லேபிளில் கொடுக்கப்பட்ட அளவையே பிள்ளைக்கு தருவது முக்கியம். (இரண்டு வயதை எட்டாத பிள்ளைகளுக்கு டாக்டர் சொல்லாமல் எந்த மருந்தையும் கொடுக்கக்கூடாது.) ஜுரத்தைக் குறைப்பதற்கான மருந்துகள் வைரஸை கொல்வதில்லை. ஆகவே ஜலதோஷம் போன்றவற்றிலிருந்து சீக்கிரமாக குணமடைய அவை உதவாது, ஆனால் அவை அசௌகரியத்தை நீக்கலாம். காய்ச்சலைத் தணிப்பதற்கு 16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு ஆஸ்பிரின் மாத்திரையை கொடுக்கவே கூடாது என சில நிபுணர்கள் சொல்கிறார்கள்; ஏனென்றால் அது உயிருக்கு ஆபத்தான ரைஸ் சின்ட்ரோமை உண்டாக்குவதாக கருதப்படுகிறது. *

ஸ்பன்ஜினால் துடைப்பதன் மூலமும் ஜுரத்தை தணிக்கலாம்: ஒரு டப்பில் ஓரிரு அங்குலத்திற்கு வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி அதில் பிள்ளையை உட்கார வையுங்கள்; பிறகு ஸ்பன்ஜினால் துடைத்து விடுங்கள். (ரப்பிங் ஆல்கஹாலை பயன்படுத்தாதீர்கள், அது நச்சுள்ளதாக இருக்கலாம்.)

டாக்டரை எப்போது கூப்பிடலாம் என்பதன் பேரில் உபயோகமான தகவல் இங்கே உள்ள பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது. டெங்கி, இபோலா வைரஸ், டைஃபாய்டு காய்ச்சல், அல்லது மஞ்சள் காய்ச்சல் போன்ற ஆபத்தான ஜுரங்கள் பரவியிருக்கும் பகுதியில் நீங்கள் வாழ்ந்தால் பிள்ளையை டாக்டரிடம் காட்டுவது மிக முக்கியம்.

பொதுப்படையில், உங்கள் பிள்ளையை அதிக சௌகரியமாக உணர வைப்பதுதான் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியம். நரம்பு மண்டல சேதத்தை அல்லது மரணத்தை விளைவிக்கும் அளவுக்கு ஜுரம் அதிகமாவது அரிது என்பதை ஞாபகத்தில் வையுங்கள். ஜுரத்தால் ஏற்படும் வலிப்புகள்கூட, பயத்தை ஏற்படுத்தினாலும், பொதுவாக நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை.

வருமுன் காப்பதே சிறந்த மருத்துவம் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் பிள்ளைக்கு தொற்று வராமல் பார்த்துக் கொள்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று அடிப்படை சுகாதாரத்தை கற்றுக்கொடுப்பதுதான். பிள்ளைகள் அடிக்கடி​—⁠முக்கியமாக சாப்பிடுவதற்கு முன்பு, கழிப்பறைக்கு போய் வந்த பிறகு, ஜனக்கூட்டமுள்ள இடங்களுக்கு சென்று வந்த பிறகு, செல்லப் பிராணிகளை தொட்டு விளையாடிய பிறகு​—⁠தங்கள் கைகளை கழுவ கற்றுக்கொடுக்க வேண்டும். உங்கள் பங்கில் செய்ய வேண்டியதையெல்லாம் செய்த பிறகும் பிள்ளைக்கு லேசாக ஜுரம் வந்தால் கவலையில் மூழ்கிவிடாதீர்கள். நாம் இப்போது கற்றபடி, பிள்ளை குணமாக நீங்கள் நிறைய காரியங்களைச் செய்யலாம். (g03 12/08)

[அடிக்குறிப்புகள்]

^ பாரா. 6 எப்படிப்பட்ட தர்மாமீட்டர் எங்கே வைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து வெப்பநிலை மாறலாம்.

^ பாரா. 10 நீரிழப்பை சரிசெய்வதற்கான பானத்தை தயாரிக்கும் விதத்தை ஏப்ரல் 8, 1995, விழித்தெழு!, பக்கம் 11-⁠ல் காண்க. பிள்ளைக்கு ஜுரத்துடன் பேதி அல்லது வாந்தி இருந்தால் இந்த பானத்தை கொடுக்கலாம்.

^ பாரா. 11 ரைஸ் சின்ட்ரோம் என்பது ஒருவித கடும் நரம்புக் கோளாறு; அது வைரஸ் தொற்றுக்குப் பிறகு பிள்ளைகளுக்கு வரும் கோளாறு.

[பக்கம் 21-ன் பெட்டி]

பிள்ளைக்கு ஜுரம் அடித்தால், இந்த சந்தர்ப்பங்களில் டாக்டரை வரவழையுங்கள்:

◼ மூன்று மாத அல்லது அதைவிட சிறிய குழந்தைக்கு ஆசனவாயில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது அதற்கும் அதிகமாக ஜுரம் அடிக்கும்போது

◼ மூன்று முதல் ஆறு மாதக் குழந்தைக்கு 101 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது அதற்கும் அதிகமாக ஜுரம் அடிக்கும்போது

◼ ஆறு மாதத்தை தாண்டிவிட்ட குழந்தைக்கு 104 டிகிரி ஃபாரன்ஹீட் அல்லது அதற்கும் அதிகமாக ஜுரம் அடிக்கும்போது

◼ பிள்ளை பானங்களை குடிக்க மறுக்கும்போதும், நீரிழப்புக்கான அறிகுறிகள் தெரியும்போதும்

◼ பிள்ளைக்கு வலிப்பு ஏற்படும்போது அல்லது மிகவும் துவண்டு போகும்போது

◼ 72 மணிநேரங்களுக்குப் பிறகும் பிள்ளைக்கு ஜுரம் தணியாதபோது

◼ பிள்ளை நிறுத்தாமல் அழுதுகொண்டே இருக்கும்போது; குழப்பம் அல்லது பிதற்றல் போன்ற அறிகுறிகள் தெரியும்போது

◼ பிள்ளைக்கு தோலில் தடிப்புகள், மூச்சுத்திணறல், பேதி, அல்லது தொடர்ந்தாற்போல் வாந்தி ஏற்படும்போது

◼ பிள்ளையின் கழுத்து விறைப்பாகும்போது அல்லது திடீரென கடும் தலைவலி ஏற்படும்போது

[படத்திற்கான நன்றி]

தகவல்: தி அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்