பூமி எப்படி பாதுகாக்கப் படும்
பூமி எப்படி பாதுகாக்கப் படும்
சுற்றுச்சூழல் கேடு எனும் காரிருள் தற்போது இப்பூமியின் மீது கவிந்திருந்தாலும், பூமி நிச்சயம் உயிர் பிழைக்க வேண்டும் என்பதே நமது ஆசை. ஏனென்றால் அது நம்முடைய வீடாயிற்றே—நமது பிள்ளைகள், பேரப் பிள்ளைகளுடைய வீடாயிற்றே! இந்த ஆசை ஈடேற நம்முடைய பங்கில் செய்வதற்கு ஏதாவது இருக்கிறதா?
சுற்றுச்சூழல் பற்றி பெரும்பாலோர் கவலைப்பட்டாலும், குப்பையை வீதியில் எறிவதைப் பற்றியோ, கழிவுகளை ஆற்றில் கொட்டுவதைப் பற்றியோ, அநாவசியமாக பல்புகளை எரியவிடுவதைப் பற்றியோ அநேகர் சிந்தித்துப் பார்ப்பதே கிடையாது. இவையெல்லாம் சின்னச் சின்ன விஷயங்களாக தோன்றலாம், ஆனால் பூமியில் வாழும் கோடிக்கணக்கான மக்களில் ஒவ்வொருவரும் பூமியைப் பராமரிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தால் அது எப்பேர்ப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும்! ஆற்றலை பயன்படுத்துவதில் சிக்கனமாக இருப்பது, மறுசுழற்சி செய்யும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பது, குப்பைகளை தகுந்த முறையில் அப்புறப்படுத்துவது போன்றவை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கைகொடுக்கும். இந்தப் பூமியை நாம் பேணிக்காத்து வருகிறோம் என்பதை நமது பழக்கவழக்கங்களின் வாயிலாக இப்போதே காட்டலாம்.
என்றாலும், நம்மை சுற்றியுள்ள பெரும்பாலான மக்களின் செயல்களை நாம் கட்டுப்படுத்த முடியாது. அதனால் இந்த நிலைமையை மாற்றவே முடியாது என அர்த்தமாகுமா?
மிகச் சிறந்த தீர்வு அருகில் இருக்கிறது
டைம் பத்திரிகை குறிப்பிட்டபடி, கிரீன்பீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டீலோ போடி என்பவர் சுற்றுச்சூழல் பிரச்சினையின் ஆணிவேரையே தொட்டுவிட்டார்: “கழிவுகள் எப்படி வெளியேற்றப்படுகின்றன என்பதற்கு கம்பெனிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எங்களது முக்கிய குறிக்கோள். அவை மூன்று அம்சங்களை சிந்தித்துப் பார்க்க வேண்டும்: உற்பத்தியாக்குதல், பயன்படுத்துதல், மேலும் அப்புறப்படுத்துதல்.” நம்மால் பொருட்களை உற்பத்தி செய்ய முடிகிறது, அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதும் தெரிகிறது, ஆனால் அவற்றை தகுந்த முறையில் அப்புறப்படுத்த தெரிவதில்லை. சில சந்தர்ப்பங்களில், பாதுகாப்பான முறையில் அதை எப்படி செய்வதென்று அறியாமல் இருக்கிறார்கள்.
மனிதருக்கு வரம்புகள் இருக்கின்றன, ஆனால் நமது படைப்பாளருக்கு அப்படி அல்ல. இந்தப் பூமியில் நாம் காணும் படைப்புகளில் அவர் ஏற்கெனவே தமது உயர்ந்த ஞானத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படி உண்டாக்குவது, எப்படி பயன்படுத்துவது, எப்படி பொருட்களை அப்புறப்படுத்துவது என்பதை அவர் அறிந்திருக்கிறார். அவர் ஏற்படுத்தியுள்ள பெரும்பாலான செயல்முறைகள் தானாக இயங்கும் தன்மை வாய்ந்தவை. விதை முளைத்து, செடி வளர்ந்து, கனி தருகிறது. பிறகு மடிந்துவிடுகிறது—அவற்றின்
மூலக்கூறுகள் அனைத்தும் மாசு உண்டாக்காமலேயே சிதைந்து, மீண்டும் உபயோகிக்கப்படுவதற்கு ஏற்றவாறு மாறிவிடுகிறது. இதுவே மிகச் சிறந்த மறுசுழற்சி! எந்தவொரு நச்சுத் தூய்மைக்கேடும் ஏற்படுவது இல்லை!இந்தப் பூமி குடியிருப்பில்லாத வெறும் குப்பைமேடாகி விடுவதற்கு நம் படைப்பாளர் அனுமதிக்க மாட்டார். பைபிளில் ஏசாயா 45:18-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகி[றார்].”
கடவுள் இந்தப் பூமியை குடியிருப்புக்காக படைத்திருந்தால், அது இந்தளவு பரிதாபகரமான நிலையை எட்டுவதற்கு ஏன் விட்டுவிட்டார்? ஆதியில் பூங்காவனம் போன்ற பரதீஸில் மனிதனை குடியிருக்கச் செய்தார் என பைபிள் சொல்கிறது. சொல்லப்போனால், பூமியின் கடைமுனை வரைக்கும் இந்தப் பரதீஸ் பரவ வேண்டும் என்பதும், அதில் எங்கும் மக்கள் வாழ வேண்டும் என்பதும் கடவுளுடைய நோக்கமாக இருந்தது. (ஆதியாகமம் 1:28) ஆனால் கலகத்தனம் வெடித்தது. முதல் மனிதனும் மனுஷியும் கடவுளுடைய ஆட்சிக்குத் தொடர்ந்து கீழ்ப்படிய விரும்பவில்லை.
மனிதர் தங்களுடைய சொந்த ஆட்சி முறையை முயன்று பார்ப்பதற்கு கடவுள் அவர்களை அனுமதித்தார். அதன் விளைவு? படுபயங்கர தோல்வி! இதைத்தான் இன்றைக்கு நாம் கண்ணார காண்கிறோம். மனிதர் தங்களுடைய பிரச்சினைகளை தாங்களாகவே தீர்க்க முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது. இதற்குரிய பழியை நாம் கடவுள் மீது போட முடியாது. மனித சமுதாயத்தைக் குறித்து பைபிள் சொல்வது உண்மையிலும் உண்மை: “அவர்களே தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகளாக நிலைத்திருக்கவில்லை; இதற்கு அவர்களே காரணம். அவர்கள் கோணலும் மாறுபாடுமுள்ள சந்ததியினர்!”—உபாகமம் 32:5, NW.
ஆனால் இந்தப் பூமி அழிக்கப்பட்டு வருவதைப் பார்க்காமல் கடவுள் தமது கண்களை மூடிக் கொள்ளவில்லை. காலம் கடந்து செல்வதற்குமுன், அதாவது குடியிருக்க முடியாத பாழ்நிலமாக இப்பூமி மாறுவதற்குமுன் அவர் நிச்சயம் செயல்படுவார். நமக்கு எப்படி தெரியும்? வெளிப்படுத்துதல் 11:18 இவ்வாறு சொல்கிறது: “ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; . . . பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது.” ஆம், பூமி நாசமாக்கப்படுவது கண்டிப்பாக நிறுத்தப்படும்.
பூமிக்காக கடவுள் கொண்டுள்ள அவருடைய ஆதி நோக்கம், அதாவது அதை ஒரு பரதீஸாக ஆக்க வேண்டுமென்ற நோக்கம் நிச்சயம் நிறைவேறும். இதை அவருடைய வார்த்தை நிரூபித்துக் காட்டுகிறது. உதாரணமாக, அவர் இவ்வாறு கூறினார்: ‘என் வாயிலிருந்து புறப்படும் வசனம் வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.’ (ஏசாயா 55:11) ஏசாயா 35-ம் அதிகாரத்தை நீங்கள் வாசித்து மகிழலாம், பாழ் நிலங்கள் பூத்துக்குலுங்கும் பூங்காவனம் போலவும் சுவைமிகு கனிதரும் விளைநிலங்கள் போலவும் மாறுவதைப் பற்றி அதில் கடவுள் வர்ணிக்கிறார்.
தூய்மைக்கேட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட இடங்களில், தானாகவே புதுப்பித்துக் கொள்வதற்கேற்ற வியத்தகு திறன் பெற்றிருப்பதை இப்பொழுதே பூமி காண்பித்திருக்கிறது. கடவுள் அத்தகைய திறனுடனே அதைப் படைத்திருக்கிறார். இந்தப் பூமியை தொடர்ந்து மாசுபடுத்துவதை நிறுத்தினால்தான் தண்ணீரிலும் நிலத்திலுமுள்ள பல்வகை நுண்ணுயிரிகளால் அந்தச் சேதத்தை பெருமளவு குணப்படுத்த முடியும். அதோடு, பூமியின் விவகாரங்களில் கடவுள் தலையிடும்போது, இந்தப் புதுப்பிக்கும் முறை இன்னும் அதிக பலன்தரும் விதத்தில் இருக்கும் என்பதில் நிச்சயமாய் இருக்கலாம். மனிதருக்கு இப்பொழுது கிடைக்காத பயிற்சியையும் பூரண வழிநடத்துதலையும் கூடிய விரைவில் அவர் கொடுப்பார்.
ஆகவே, இந்தப் பூமியின் எதிர்காலம் கேள்விக்குறியாக இல்லை. தாவரங்களும் விலங்கினங்களும் பாதுகாக்கப்படும். மறைந்துவரும் உயிரினங்களைப் பற்றிய பட்டியல்கள் இனிமேல் இரா. நமது காற்றும் தண்ணீரும் மீண்டும் மாசற்றதாக மாறும். கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் அதை அப்பொழுது அனுபவித்து களிப்பார்கள். அதைக் காண நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களால் காண முடியும். எப்படி? அதற்காக என்ன செய்ய வேண்டும் என்ற விவரங்களை பைபிள் தருகிறது. ஆகவே, நீங்கள் ஏன் பைபிளை முறையாக ஆராய்ந்து பார்க்கக் கூடாது? இந்த ஆராய்ச்சியை ஆரம்பிப்பதற்கு உதவ நீங்கள் ஏன் இந்தப் பத்திரிகையை பிரசுரிப்போரிடம் தொடர்புகொள்ளக் கூடாது? நீங்களும் உங்களுடைய குடும்பமும் புதுமை குன்றாத சுத்தமான சுற்றுச்சூழலை என்றென்றும் அனுபவித்து மகிழும் வாய்ப்பை ஏன் நழுவவிட வேண்டும்? (g03 11/22)