“பைபிள் ஆண்டு”
“பைபிள் ஆண்டு”
ஆஸ்திரியா, பிரான்சு, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் 2003-ம் ஆண்டிற்கு “பைபிள் ஆண்டு” என பெயர் வைத்திருக்கின்றன. ஃப்ராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜிமைனா ட்ஸைட்டுங் என்ற ஜெர்மன் தினசரி கூறுவதாவது: “இதற்கு முன்பு 1992-ம் ஆண்டில்தான் முதன்முறையாக பைபிள் ஆண்டு கொண்டாடப்பட்டது; அந்த ஆண்டைப் போலவே இப்போதும், ‘ஜீவ புத்தகமாகிய’ பரிசுத்த வேதாகமத்தின் மீது மக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், அதன் கலாச்சார மதிப்பை வலியுறுத்துவதற்கும் [சர்ச்சுகள்] நோக்கம் கொண்டிருக்கின்றன.”
பைபிள் 2,287 மொழிகளில்—குறைந்தபட்சம் சில பகுதிகளாவது—மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என ஜூன் 2002 பீபெல்ரிப்போர்ட் கூறியது. சுமார் 500 கோடி பிரதிகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன என்றும் கணக்கீடுகள் காட்டுகின்றன. இந்தப் புத்தகத்தின் மீது மக்கள் எவ்வளவு உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதை இத்தகைய பிரமாண்டமான முயற்சிகள் தெளிவாக காட்டுகின்றன.
பைபிளிலுள்ள தகவல்கள் நடைமுறைக்கு ஒத்து வருபவை என்ற விஷயமே பெரும்பாலோருக்கு நம்ப முடியாததாக இருக்கலாம். சொல்லப்போனால், பைபிளில் சொல்லப்பட்டுள்ள தராதரங்கள் எல்லாம் பழமையானவை, வாழ்க்கையின் எதார்த்தங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றே அநேகர் நினைக்கின்றனர். ஆனால், பைபிள் ஆண்டில், ஜெர்மனியிலுள்ள சர்ச்சுகள் இரண்டு காரியங்களை சாதிக்கலாம் என எதிர்பார்க்கின்றன. ஒன்று, பைபிளுக்கு இசைவாக வாழ மக்களை உற்சாகப்படுத்துவது, மற்றொன்று சர்ச்சிலிருந்து தூர விலகியிருப்பவர்களுக்கு பைபிள் மீது ஆர்வத்தை மீண்டும் தூண்டுவது.
ஆரம்பம் முதல் கடைசி வரை பைபிளை வாசிப்பது சாமானியமான விஷயமல்ல, ஆனால் வேதாகமத்திலுள்ள முக்கிய குறிப்புகளை கிரகித்துக் கொள்வதற்கு இது நிச்சயமாகவே ஒரு சிறந்த வழியாகும். என்றாலும், பைபிளிலிருந்து அதிக நன்மையடைய விரும்பும் ஒருவர், 2 தீமோத்தேயு 3:16, 17-ல் உள்ள கூற்றை மனதில் வைத்திருக்க வேண்டும். அது இவ்வாறு வாசிக்கிறது: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் [“ஏவப்பட்டு,” NW] அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”
ஜெர்மன் நாட்டு கவிஞர் யோஹான் வால்ஃப்காங் ஃபான் கோத்தா (1749-1832) இவ்வாறு கூறினார்: “ஒருவர் பைபிளை எந்தளவு நன்றாக புரிந்துகொள்கிறாரோ அந்தளவு அவருக்கு அது சுவாரஸ்யமானதாய் ஆகிறது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.” நாம் எங்கிருந்து வந்தோம், ஏன் இங்கே இருக்கிறோம், எதிர்காலம் எப்படி இருக்கும் போன்ற கேள்விகளுக்கு சரியான விளக்கத்தை கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் மட்டுமே நாம் காண முடியும்.—ஏசாயா 46:9, 10. (g03 9/22)
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
Bildersaal deutscher Geschichte என்ற புத்தகத்திலிருந்து