அறிவியல் என் மதமாக இருந்தது
அறிவியல் என் மதமாக இருந்தது
கென்னத் டானாக்கா சொன்னது
“சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” கலிபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் (கால்டெக்) முத்திரை ஒன்றில் பொறிக்கப்பட்டிருந்த அவ்வார்த்தைகளே அறிவியல் மேதையாவதற்கு என்னைத் தூண்டின. 1974-ம் வருடம் இந்த இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்ததுதான் ஓர் அறிவியல் ஆய்வாளர் ஆவதற்கு என்னை தயார்படுத்தியது. நில இயலில் (geology) இளங்கலை பட்டமும் முதுகலை பட்டமும் பெற்ற பிறகு, சான்ட்டா பார்பராவிலிருந்த கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் என் படிப்பை தொடர்ந்தேன்.
நான் ஓர் விஞ்ஞானியாக முன்னேறி வந்தபோது, என் ஆன்மீக கருத்துகளிலும் மதிப்பீடுகளிலும் பெரும் மாற்றங்களை செய்தேன். பரிணாமக் கொள்கை பற்றி நான் கற்றிருந்ததால், இருந்த கொஞ்சநஞ்ச கடவுள் நம்பிக்கையும் அற்றுப்போனது. ஆனால் பிற்பாடு, என் கருத்துகளை மறுபரிசீலனை செய்து பார்க்கும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டேன். நில இயல் ஆராய்ச்சியாளரான நான் எப்படி கடவுளின் தீவிர பக்தனாக ஆனேன்? என் அனுபவத்தை கொஞ்சம் கேளுங்கள்.
பிரபஞ்சத்தை எண்ணி பிரமித்த சிறுவன்
சிறு வயதிலேயே விஞ்ஞான மோகம் எனக்குள் துளிர்விட ஆரம்பித்தது. அ.ஐ.மா., வாஷிங்டனிலுள்ள சியட்டில் நகரில்தான் நான் வளர்ந்தேன். படிப்பில் சாதனை புரிய வேண்டுமென்று என் பெற்றோர் சிறு வயதிலிருந்தே எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வந்தார்கள். பிரபஞ்சம் பற்றிய விஷயங்களையெல்லாம்—பொருள் மற்றும் உயிரின் அடிப்படைக்கூறுகள், அடிப்படையான இயற்கை சக்திகள், விண்வெளி, காலக்கணக்கு, சார்பியல் கோட்பாடு—பற்றி சுவாரஸ்யமாக வாசித்தேன். சுமார் எட்டு வயதாக இருந்தபோது, என்னுடைய விஞ்ஞான மோகத்தை பள்ளி ஆசிரியர்கள் கண்டு, விஞ்ஞான பாடமெடுக்கும் ஒரு ட்யூஷன் மாஸ்டரிடம் தனிப்பட்ட விதத்தில் வாரந்தோறும் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார்கள்.
பாப்டிஸ்ட் சர்ச் நடத்திய சன்டே ஸ்கூலுக்கும் சென்றுவந்தேன். ஆனால் நீண்டதூர நடைப் பயணங்களில் கலந்து கொள்வதற்காகவும், வெளி ஊர்களுக்கு சென்று உல்லாச
முகாமிடுவதற்காகவும்தான் பெரும்பாலும் அங்கு சென்றேன். என் குடும்பத்தினர் மதத்தின் மீதும் கடவுள் மீதும் துளிகூட அக்கறை காட்டவில்லை. வரலாற்றையும் மதத்தின் பெயரில் செய்யப்பட்ட அட்டூழியங்களையும் பற்றி படிக்கப் படிக்க, சர்ச் நடவடிக்கைகளில் கலந்துகொள்வதை நிறுத்தும்படி என் மனசாட்சி என்னை தூண்டியது. கிட்டத்தட்ட எல்லா விஷயங்களைப் பற்றியும் விஞ்ஞானம் விளக்கமளிப்பது போல தோன்றியது, ஆகவே கடவுள் இருக்கிறாரா என்றும்கூட சந்தேகிக்க ஆரம்பித்தேன்.திருப்புமுனை—இன்னும் நிறைய வரவிருந்தது
இயற்பியலை படிப்பதற்காகத்தான் நான் காலேஜுக்கு விண்ணப்பித்திருந்தேன், ஆனால் உயர்நிலைப்பள்ளி இறுதி ஆண்டில் நான் எடுத்திருந்த விருப்பப் பாடம் நில இயல். இதற்காக வாஷிங்டனிலிருந்த முக்கிய நிலத்தடி பாறாங்கற்களைப் பார்வையிட நிறைய முறை பயணிக்க வேண்டியிருந்தது. ‘மனித சஞ்சாரமற்ற இடங்களை சுற்றிப்பார்க்க வேண்டுமென்ற என் தீரா ஆசையை என் விஞ்ஞான மோகத்தோடு சேர்த்துக்கொண்டால் எவ்வளவு அருமையாக இருக்கும்’ என்று அப்போது என் மனதில் நினைத்துக் கொண்டேன்.
அதனால், நான் காலேஜில் சேர்ந்த உடனேயே நில இயல் பாடத்தை என் சிறப்புப் பாடமாக எடுத்துக் கொண்டேன். புவி வளரிய காலகட்டத்தையும் (geologic time), புதைபடிவ பதிவுகளிலிருந்து தெரியவருகிற பூமியின் சரித்திரத்தையும் பற்றிய சில பாடங்களும் அதில் அடங்கியிருந்தன. புதைபடிவ பதிவுகள் சம்பந்தப்பட்ட பாடத்தை படிக்கையில், உயிரினங்கள் பரிணாம முறையில் தானாகவே உருவாயின என்பதாக கற்பிக்கப்பட்டேன். பரிணாமக் கொள்கை முற்றிலும் சரியென நிரூபிக்கப்படவில்லை என்பதை அறிந்திருந்தேன். இருந்தபோதிலும், நில இயல் ஆதாரத்தை வைத்துப் பார்க்கையில் பரிணாமக் கொள்கை நியாயமான விளக்கமாகவே எனக்குப் பட்டது; குறிப்பாக, பிரபல படைப்புக் கொள்கையோடு வைத்துப் பார்க்கையில் பரிணாமக் கொள்கை எவ்வளவோ நியாயமாகத் தெரிந்தது. கல்லூரி வளாகத்தில் படைப்புவாதிகளுக்கும் பரிணாமவாதிகளுக்கும் இடையே ஒரு விவாதம் நடைபெறப் போகிறது என்று கேள்விப்பட்டபோது, அங்கு போக வேண்டாம் என்று தீர்மானித்தேன். சில படைப்புவாதிகள் சொல்வது போல் இந்த பூமி எப்படி ஒரேவொரு வாரத்திற்குள் உண்டாகியிருக்க முடியும்? கண்டிப்பாக அது சாத்தியமே இல்லை என்பது தெளிவாக இருந்தது.
மதத்தின் மீது எனக்கு பயங்கர வெறுப்பு இருந்தபோதிலும், ஐக்கிய மாகாணங்களின் தென்மேற்குப் பகுதியின் நில இயலை படிப்பதற்காக நான் மேற்கொண்ட பயணங்கள், கடவுளைப் பற்றிய என் எண்ணங்களை மறுபரிசீலனை செய்து பார்க்க என்னை உந்துவித்தன. அங்கு, பாலைவனத்தில், இரவு வேளையில், தெள்ளத்தெளிவான வானில் விண்வெளிக் காட்சியை நான் ரசித்துக்கொண்டிருக்கும்போது, இந்தப் பிரபஞ்சத்தை கடவுள்தான் சிருஷ்டித்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். இந்தப் பிரபஞ்சத்திற்கு ஓர் ஆரம்பம் இருந்ததென்று வான் ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்திருக்கின்றனர், ஆனால் அது ஏன் ஆரம்பமானது என்பதற்கான விளக்கத்தை அறிவியலால் ஒருபோதும் தர முடியாது என்று எனக்கு நன்றாக தெரிந்திருந்தது. ஆக, புத்திக்கூர்மையுள்ள, வல்லமை வாய்ந்த ஒரு சிருஷ்டிகரே நம்மைச் சுற்றியுள்ள இந்தப் பிரபஞ்சத்தை வடிவமைத்து உருவாக்கியிருக்க வேண்டும் என்று நம்புவது எனக்கு நியாயமாகத் தோன்றியது.
செவ்வாய் கிரக நில வரைபடமும், கேள்விகளும்
1983-ல் நில இயலில் நான் டாக்டர் பட்டம் பெறுவதற்குள்ளேயே, என்னுடைய 27-வது வயதில், ஐ.மா. நில இயல் சர்வேக்காக செவ்வாய் கிரகத்தின் நில வரைபடத்தை தயாரித்துக் கொண்டிருந்தேன். அன்றிலிருந்து இன்றுவரையாக, அறிவியல் வாசகர்களுக்கும் பொது வாசகர்களுக்கும் விண் கோளங்களின் நிலபடத்தைப் பற்றி டஜன் கணக்கில் பல கட்டுரைகளையும் நில வரைபடங்களையும் வெளியிட்டிருக்கிறேன். ஐ.மா. தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிறுவனத்தின் ஆலோசனைக் குழுக்களில் நான் சேவை செய்ததால், செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்கலப் பயண ஏற்பாடுகளில் உதவி புரிந்தேன். என் ஆராய்ச்சி மற்றும் வேலையின் காரணமாக பல நாடுகளிலிருந்தும், பல்கலைக்கழகங்களிலிருந்தும், ஆராய்ச்சி பயிலகங்களிலிருந்தும் வந்திருந்த மதிப்பிற்குரிய விண்கோள விஞ்ஞானிகள் பலரை என்னால் சந்திக்க முடிந்தது.
கிடைத்த எல்லா பயிற்சிகளும், செய்த ஆராய்ச்சிகளும் விஞ்ஞானத்தைப் பற்றிய என் சிறு வயது கற்பனைகளிலிருந்து படிப்படியாக என்னை மீட்டன. எல்லா கேள்விகளுக்கும் விஞ்ஞானத்திடம் பதில் இல்லை, பதில் தரவும் முடியாது என்பதை நான் புரிந்துகொண்டேன். முக்கியமாக, விஞ்ஞானம் வாழ்க்கைக்கு நிரந்தர நோக்கத்தையோ அர்த்தத்தையோ கொடுப்பதில்லை என்பதை உணர்ந்துகொண்டேன். இந்த அண்டம் தானாகவே அழிந்துவிடும் அல்லது வெற்றுப் பிண்டமாக சுருங்கிவிடும் என்பது இன்றைய விஞ்ஞானிகளின் கணிப்பு. ஆனால், எல்லாமே கடைசியில் ஒன்றுமில்லாதபடி ஆகப் போகிறதென்றால், இப்போது உயிர் வாழ்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?
புதிய பாதை வகுத்தேன்
செப்டம்பர் 1981-ல், அரிஜோனாவிலுள்ள ஃபிளாக்ஸ்டாஃப் என்ற ஊரில் இருக்கும்போது யெகோவாவின் சாட்சிகள் என்னை சந்தித்தனர். அவர்கள் போதனைகளும் தவறு, பைபிளும் தவறு என்பதை நிரூபித்துக் காட்டுவதற்காகவே அவர்களோடு பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டேன். உண்மையிலேயே பைபிளில் என்ன இருக்கிறதென தெரிந்து கொள்வதற்கும் இந்தப் படிப்பு எனக்கு வாய்ப்பளிக்கும் என்பதால் அதற்கு ஒத்துக்கொண்டேன்.
வேதப்பூர்வ போதனைகளை மிகக் கவனமாக ஆராய்வதற்கு ஒவ்வொரு வாரமும் பல மணிநேரத்தை செலவிட ஆரம்பித்தேன். பைபிளில் கணிசமானளவு அறிவும் ஆழ்ந்த உட்பார்வையும் இருப்பதைக் கண்டு நான் அசந்துபோனேன். பைபிள் விஞ்ஞானப்பூர்வமாக எவ்வளவு துல்லியமானது என்பதைப் பற்றிய ஆராய்ச்சியில் மனம் லயித்துப்போனேன்; அதுமட்டுமல்ல, மனித சரித்திரத்தின் ஆயிரக்கணக்கான வருடங்களின்போது நடந்த நிகழ்ச்சிகளைக் குறித்த நூற்றுக்கணக்கான, 2 தீமோத்தேயு 3:1.
விலாவாரியான தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்தபோதும் அவ்வாறே உணர்ந்தேன். குறிப்பாக, நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்பதை பலமாக நிரூபிக்கின்ற தானியேல், வெளிப்படுத்துதல் ஆகிய இரண்டு புத்தகங்களிலுள்ள அநேக தீர்க்கதரிசனங்களின் ஒற்றுமை என்னை மிகவும் கவர்ந்தது.—முன்பு வாழ்ந்திருந்த ஒரு மாமேதை செய்தது போலவே நானும் பைபிளைப் படிக்கத் தொடங்கியிருந்தேன். ஆம், எக்காலத்திலும் வாழ்ந்தவர்களிலேயே மாபெரும் விஞ்ஞான மேதையென்று கருதப்பட்ட சர் ஐசக் நியூட்டன் பைபிளை மதித்தார் என்றும், அதைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்தார் என்றும் பிற்பாடு நான் தெரிந்துகொண்டேன். உண்மையில் நிறைவேறிய முக்கிய சரித்திர நிகழ்ச்சிகளையும் மாற்றங்களையும் பற்றிய தானியேல் மற்றும் வெளிப்படுத்துதல் புத்தக தீர்க்கதரிசனங்கள் மீது என் முழு கவனத்தையும் குவித்தேன்; இதைத்தான் நியூட்டனும் செய்தார். a ஆனால், நியூட்டனுக்கு கிடைக்காத வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது, அதாவது அவருடைய சமயத்திற்கு பின் அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும் காலத்திலும், நிறைவேறி முடிந்த காலத்திலும் வாழும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. இந்த தீர்க்கதரிசனங்கள் ஆச்சரியமான விதத்தில் பல்வேறு வகைப்பட்டவையாகவும் கருத்தாழம் மிக்கவையாகவும் இருப்பதை புரிந்து கொண்டேன்; அதுமட்டுமல்ல, அவை பிழையற்றதாகவும் மறுக்க முடியாததாகவும் இருப்பதையும் கண்டேன். 1600 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதியில், 40-க்கும் அதிகமானோரால் எழுதப்பட்ட இந்த முழு பைபிளில், மனிதவர்க்கம் எதிர்ப்படும் முக்கிய சவால்களைக் குறித்தும் அவர்கள் எதிர்காலத்தைக் குறித்தும் ஒத்திசைவான, முரண்பாடற்ற, வலிமையான செய்தி இருப்பதை புரிந்துகொண்டபோது என் அறிவுக் கண்கள் திறந்ததைப் போல உணர்ந்தேன்.
என்றாலும், பரிணாமக் கொள்கை மீது எனக்கிருந்த பிடிப்பை அவ்வளவு எளிதாக என்னால் உதறித்தள்ள முடியவில்லை. இந்தக் கொள்கையை ஆதரித்த ஏராளமான அறிவியல்பூர்வ கருத்துகளின் முக்கியத்துவத்தை நான் மதித்தேன். இருந்தாலும், இந்தப் பூலோகத்தைப் பற்றி குறிப்பிடும் எல்லா பைபிள் வசனங்களுமே அறியப்பட்ட உண்மைகளோடு முழுக்க முழுக்க ஒத்திசைவாக இருப்பதையும், தவறென்று நிரூபிக்க முடியாததாக இருப்பதையும் கண்டேன்.
பைபிளிலுள்ள ஆழமான, ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட விஷயங்களை முழுமையாகவும் முரண்பாடில்லாமலும் ஒருவர் புரிந்துகொள்ள வேண்டுமானால், அதிலுள்ள ஒரு விஷயத்தைக்கூட—ஆதியாகமத்திலுள்ள படைப்பைப் பற்றிய பதிவு உட்பட—புறக்கணிக்க முடியாது என்பதை உணர ஆரம்பித்தேன். ஆகவே முழு பைபிளுமே சத்தியம் என்று ஒத்துக்கொள்வதுதான் நியாயம் என்ற முடிவுக்கு வந்தேன்.
சத்தியத்தை தேடி . . .
இதற்கிடையே, சிறிது காலத்திற்கு மட்டுமே பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எத்தனையோ கொள்கைகள் பிற்பாடு தவறென நிரூபிக்கப்பட்டிருப்பதை அறிவியல் ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த சமயத்தில் நான் கண்டேன். விஞ்ஞானிகளான எங்களுக்கு உள்ள ஒரு பிரச்சினை என்னவென்றால், நாங்கள் செய்யும் ஆராய்ச்சிகள் படு சிக்கலானவை; ஆனால் அவற்றைப் பற்றிய போதுமான தகவல்களோ ஆராய்ச்சி உபகரணங்களோ எங்களிடம் இருப்பதில்லை. ஆகவே, நிரூபிக்கப்படாத கோட்பாடுகளை—அவை எவ்வளவுதான் புத்திசாலித்தனமாக நிறுவப்பட்டிருந்தாலும் அவற்றை—உண்மையென ஏற்றுக்கொள்வதைக் குறித்து உஷாராக இருப்பதற்கு கற்றிருக்கிறேன்.
நம் இயற்கை உலகின் அநேக அடிப்படை அம்சங்களுக்கு விஞ்ஞானம் விளக்கம் தர முடியாது என்பதே உண்மை. உதாரணத்திற்கு, உயிரின் மூலக்கூறுகளும் அவற்றைக் கட்டுப்படுத்தும் இயற்கை விதிகளும் உயிரினங்களின் சிக்கல் வாய்ந்த செயல்பாடுகளையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கின்ற விதத்தில் ஏன் அவ்வளவு கச்சிதமாக அமைந்திருக்கின்றன? விஞ்ஞானத்திடம் பதிலில்லை. அதோடு, கடவுளை வெளிப்படுத்தவும் விஞ்ஞானத்தால் முடியாது. மறுபட்சத்தில் கடவுளுடைய வார்த்தையோ, அவர் இருப்பதைக் குறித்தும், ஒரு சிருஷ்டிகராக அவருடைய செயல்களைக் குறித்தும் தெளிவான அத்தாட்சிகளை அளிக்கிறது. (2 தீமோத்தேயு 3:16) இத்தகைய ஆன்மீக அறிவைக்கொண்டு, நமது பூமியில் வெளிப்படையாக தெரியும் வல்லமை, ஞானம், அழகு ஆகியவற்றிற்கு ஊற்றுக்கண்ணாக இருப்பவரைப் பற்றி நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.
உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?, உங்கள் மீது அக்கறையுடைய சிருஷ்டிகர் ஒருவர் இருக்கிறாரா? (ஆங்கிலம்) போன்ற யெகோவாவின் சாட்சிகளது பல்வேறு பிரசுரங்களை மிக உன்னிப்புடன் ஆராய்ந்து பார்த்ததில், பைபிள் விஞ்ஞானப்பூர்வமாக துல்லியமானதென்று மேலும் எனக்கு ஊர்ஜிதமானது. இந்தப்
பிரசுரங்கள், அறிவியல் விஷயங்களை நன்றாக அலசி ஆராய்கின்றன, அதோடு முன்னணி வல்லுநர்களின் தற்போதைய ஆராய்ச்சிகளைப் பற்றியும், அவர்களது முடிவுகளைப் பற்றியும் சிறந்த நுண்ணோக்கை அளிக்கின்றன. கூடுதலாக, அறியப்பட்ட விஞ்ஞான உண்மைகளுக்கும் பைபிளின் திருத்தமான அறிவுக்கும் இடையே எவ்வளவு ஒத்திசைவு இருக்கிறதென்று அந்தப் பிரசுரங்கள் கலந்தாலோசிக்கின்றன.உதாரணத்திற்கு, புதைபடிவ பதிவுகளும் உயிரினங்கள் தோன்றியதைப் பற்றி ஆதியாகமத்தில் விவரிக்கப்பட்டுள்ள பொதுவான வரிசைக் கிரமமும் ஒத்திசைவாக இருப்பதை அவை எடுத்துக்காட்டுகின்றன. மேலும், அக்காலத்து ஜனங்கள் புரிந்துகொண்டது போல ஒரு படைப்பு நாள் என்பது ஒரு நீண்ட காலப்பகுதியைக் குறிக்கலாம்; “காலகட்டம்,” “சகாப்தம்” ஆகிய வார்த்தைகளை பூமியின் சரித்திரத்தைப் பற்றி விளக்குகையில் விஞ்ஞானம் பயன்படுத்துவதைப் போன்றே இதுவும் உள்ளது. ஆகவே, பைபிளிலுள்ள எந்த விஷயமும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு முரணாக இல்லை. படைப்பு நாட்கள் பல யுகங்கள் நீடித்ததாக பைபிள் சுட்டிக்காட்டுகிறது. அந்த நாட்கள் ஒவ்வொன்றும் 24 மணிநேரத்தை குறிக்கிறதென்ற படைப்புவாதிகளின் கூற்றை பைபிள் ஆதரிப்பதில்லை.
விசுவாசம் Vs குருட்டு நம்பிக்கை
ஒரு விஞ்ஞானியான எனக்கு எதையுமே குருட்டாம்போக்கில் நம்புவது என்றாலே பிடிக்காது. ஆனால் ஆதாரப்பூர்வ விசுவாசத்தின் மீது நான் ஆழ்ந்த மரியாதை வைத்திருக்கிறேன். அப்படிப்பட்ட நம்பத்தகுந்த விசுவாசத்தை எபிரெயர் 11:1 இவ்வாறு விளக்குகிறது: “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.” பைபிள் கடவுளால் ஏவி எழுதப்பட்டது என்பதற்கு உறுதியான ஆதாரம் இருந்தால்தான் கடவுளுடைய வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்க முடியும். வேத வசனங்களுக்கு எதிர்மாறாக இருக்கும் பொதுவான, ஆதாரமற்ற மத கோட்பாடுகளை ஒதுக்க வேண்டிய தேவையை உணர்ந்தேன். ஆத்துமா அழியாமை, எரிநரகம், திரித்துவம் போன்ற இன்னும் பிற போதனைகள் இவற்றில் அடங்கும். பண்டைய தத்துவங்கள், கட்டுக்கதைகள், அல்லது மட்டுப்பட்ட பைபிள் அறிவு ஆகியவையே இப்படிப்பட்ட தவறான கோட்பாடுகள் பிறப்பதற்கு காரணமாக இருந்தன. பொய் போதகங்களை பின்பற்றுவது ‘குருட்டு நம்பிக்கைக்கு’ வழிநடத்துகிறது; இதைத்தான் இன்று பெரும்பாலான மதத்தவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். விளைவு? அநேக விஞ்ஞானிகள் மதத்தை துளிகூட மதிப்பதில்லை.
ஒரு விஞ்ஞானியாக எனக்கிருக்கும் முக்கிய பொறுப்புகளில் ஒன்று, என்னுடைய கண்டுபிடிப்புகளை விளக்க வேண்டும், நியாயப்படுத்திக் காட்ட வேண்டும், அதோடு எல்லாருக்கும் அதைத் தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறே, பைபிள் சத்தியத்தை மற்றவர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என்று என் மனம் துடித்தது; ஏனெனில் வேறு எந்த அறிவும் இதைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க முடியாது. இந்தப் பலனளிக்கும் வேலையை செய்ய ஆரம்பித்தேன்; சுமார் 20 வருடங்களுக்கு முன் ஒரு யெகோவாவின் சாட்சியாக நான் முழுக்காட்டப்பட்டேன். பிறகு, செப்டம்பர் 2000-ல், ஒவ்வொரு மாதமும் பிரசங்க வேலையில் இன்னுமதிகமாய் ஈடுபட்டு, சராசரியாக 70 மணிநேரம் செலவிட முடிந்தது. அன்றிலிருந்து, இன்றுவரை ஒவ்வொரு மாதமும் ஆர்வமுள்ள பத்து நபர்களிடமாவது பைபிள் படிப்பு நடத்துகிற நல்வாய்ப்பு எனக்கு கிடைத்து வந்திருக்கிறது; அதுமட்டுமல்லாமல் என்னுடைய அநேக பைபிள் மாணாக்கர்கள் ஊக்கமுள்ள பைபிள் ஆசிரியர்களாக ஆகியிருப்பதை காணும் பாக்கியமும் எனக்கு கிடைத்திருக்கிறது.
பூமியைச் சுற்றியுள்ள விண்வெளிக் கோளங்களை ஆராய்வதற்காக செலுத்தப்பட்டிருக்கும் அதிநவீன செயற்கை கோளின் “கண்கள்” மூலம் செவ்வாய் கிரகத்தைப் பற்றியும், இந்தப் பிரபஞ்சத்தின் மற்ற பகுதிகளைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது இன்னமும்கூட எனக்கு பிடித்தமான ஒன்று. பல காரியங்கள் விஞ்ஞானிகளுக்கு இன்னும் புரியாப் புதிராகவே இருக்கின்றன. ஆன்மீக மற்றும் விஞ்ஞான அறிவுப் பசியைத் தீர்க்கவிருக்கும் எதிர்காலத்திற்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன்; அப்போது அநேக விஷயங்களைத் தெரிந்துகொள்ள துடிக்கும் மனிதனின் பேராவல் தணிக்கப்பட்டு, மிக ஆழமான கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கும். கடவுளையும், மனிதவர்க்கத்திற்கான அவருடைய நோக்கத்தையும் பற்றிய திருத்தமான அறிவுதான் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தைக் கொடுக்கும் என்பதை நான் புரிந்துகொண்டேன்; இதுவே கால்டெக்கின் முத்திரை ஒன்றில் பொறிக்கப்பட்டிருந்த “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்ற இயேசுவின் வார்த்தைகளின் சரியான அர்த்தம்.—யோவான் 8:32. (g03 9/22)
[அடிக்குறிப்பு]
a சர் ஐசக் நியூட்டன், 1733-ல் வெளியிட்ட தானியேல் தீர்க்கதரிசனங்கள் மற்றும் புனித யோவான் எழுதிய வெளிப்படுத்துதலின் பேரில் ஆராய்ச்சி என்ற தன் ஆங்கில புத்தகத்தில், தானியேல் மற்றும் வெளிப்படுத்துதல் என்ற பைபிள் புத்தகங்களிலுள்ள தீர்க்கதரிசனங்களை சீர்தூக்கிப் பார்த்திருந்தார்.
[பக்கம் 15-ன் சிறு குறிப்பு]
“கிட்டத்தட்ட எல்லா விஷயங்களைப் பற்றியும் விஞ்ஞானம் விளக்கமளிப்பது போல தோன்றியது”
[பக்கம் 16-ன் சிறு குறிப்பு]
“எல்லா கேள்விகளுக்கும் விஞ்ஞானத்திடம் பதில் இல்லை, பதில் தரவும் முடியாது”
[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]
“பைபிளில் கணிசமானளவு அறிவும் ஆழ்ந்த உட்பார்வையும் இருப்பதைக் கண்டேன்”
[பக்கம் 14-ன் தேசப்படங்கள்]
செவ்வாய் கிரகத்தின் நில வரைபடம்
[பக்கம் 16-ன் படங்கள்]
பைபிளிலுள்ள தானியேல் மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகங்கள் நியூட்டனைக் கவர்ந்தது போல என்னையும் கவர்ந்தன
[படத்திற்கான நன்றி]
University of Florida
[பக்கம் 17-ன் படம்]
பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்
[பக்கம் 14-ன் படங்களுக்கான நன்றி]
மேல் இடது: Courtesy USGS Astrogeology Research Program, http://astrogeology.usgs.gov; செவ்வாய் நில வரைபடம்: National Geographic Society, MOLA Science Team, MSS, JPL, NASA; செவ்வாய் வெளிப்பரப்பு: NASA/JPL/Caltech
[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]
விண்வெளிப் படம்: J. Hester and P. Scowen (AZ State Univ.), NASA