எல்லாவற்றிலும் நூறு சதம் எதிர்பார்ப்பதை நான் எப்படி தவிர்ப்பது?
இளைஞர் கேட்கின்றனர் . . .
எல்லாவற்றிலும் நூறு சதம் எதிர்பார்ப்பதை நான் எப்படி தவிர்ப்பது?
“எதையும் நூறு சதம் கரெக்ட்டா செய்யனுங்கிற எதிர்பார்ப்பு என் வாழ்க்கையை ஆட்டிப் படைக்கிற மாதிரி இருக்கு.”
—கார்லி.
பரிபூரணவாதம்—தான் செய்யும் எந்தக் காரியமும் முற்றும் முழுமையாக பரிபூரணமாய் இருக்க வேண்டுமென்ற உணர்வு—அநேக இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்கிறது.
பரிபூரணவாதம்—குறையற்றவராக சிறந்து விளங்குவதில் என்ன தவறு? என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “சிறந்து விளங்குவதற்கான ஆரோக்கியமான முயற்சிக்கும், எட்ட முடியாத இலக்கை அடைவதற்கான ஆரோக்கியமற்ற முயற்சிக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் இருக்கிறது. சிறந்து விளங்க முயலுபவர்கள் எதையும் சீராகவும் ஒழுங்காகவும் செய்ய பெரிதும் விரும்பலாம்; பெரிய பெரிய எதிர்பார்ப்புகள் அவர்களுக்கு இருந்தாலும், தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு, அவற்றை சரிசெய்ய நியாயமான வழிகளில் முயலுவார்கள். . . . மறுபட்சத்தில், பரிபூரணவாதிகளோ தவறுகள் செய்துவிடுவோமோ என்ற பயத்தில் சதா கவலைப்படுகிறார்கள். எட்ட முடியாத உயர்ந்த தராதரங்கள் அவர்களுக்கு இருக்கின்றன.”
இது உங்களைப் பற்றி சொல்வது போல் தோன்றுகிறதா? உங்கள் தராதரங்கள் எட்ட முடியாதவையாக இருந்தால் நீங்கள் எளிதில் இடிந்துபோய் உட்கார்ந்துவிடலாம். புதிதாக எதையும் முயன்று பார்ப்பதைத் தவிர்க்கலாம். அல்லது தோல்வியைத் தழுவ நேரிடுமோ என்ற பயத்தில் முக்கியமான காரியங்களை செய்யாமல் தள்ளிப் போட நினைக்கலாம். நீங்கள் எதிர்பார்க்கும் தராதரங்களின்படி நடக்காதவர்களை ஒதுக்கி தள்ளவும்கூட எண்ணலாம். கடைசியில் நண்பர்கள் என சொல்லிக் கொள்ள யாருமே இல்லாத நிலைக்கு நீங்கள் வந்துவிடலாம்.
எந்த விதத்திலாவது மேலே விவரிக்கப்பட்டவை உங்கள் விஷயத்தில் உண்மையென்றால் பிரசங்கி 7:16-ல் பைபிள் சொல்வதைக் கவனியுங்கள்: “மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ள [“அழித்துக்கொள்ள,” NW] வேண்டும்?” ஆம், நூறு சதம் கரெக்ட்டாக செய்ய எதிர்பார்ப்பவர் தன்னையே ‘அழித்துக் கொள்ளலாம்’! சொல்லப்போனால், பரிபூரணவாதத்திற்கும் தவறான உணவு பழக்கத்தால் ஏற்படும் பசியில்லா உளநோய் (Anorexia Nervosa), பெரும் பசிநோய் (Bulimia) போன்ற உயிரைக் குடிக்கும் நோய்களுக்கும் தொடர்பு உள்ளது. a
‘எல்லாவற்றிலும் நூறு சதம் எதிர்பார்ப்பதை நான் எப்படி தவிர்ப்பது?’ என ஒருவேளை நீங்கள் கேட்கலாம். இந்த விஷயத்தில் ஒருவர் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்வது அவ்வளவு சுலபமல்ல என்பது உண்மைதான். ஆனால் கடவுளுடைய உதவியுடன் அதை சாதிக்கலாம். எனவே பரிபூரணவாதத்தை கடவுள் எப்படி கருதுகிறார் என சிந்திப்போம்.
பரிபூரணம்—எட்ட முடிந்த இலக்கா?
முதலாவது, முற்றும் முழுமையான கருத்தில் நீங்கள் பரிபூரணராய் இருக்க முடியுமா? முடியாதென ரோமர் 3:10-12) இவை சிந்திக்க வைக்கும் வார்த்தைகள் அல்லவா? முற்றும் முழுமையாய் பரிபூரணமாக இருக்க முயலுகிற எவரும் தோல்வியைத் தழுவ வேண்டியிருக்கும் என இவ்வார்த்தைகள் காட்டுகின்றன.
பைபிள் சொல்கிறது; “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; . . . எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்” என அது சொல்கிறது. (அப்போஸ்தலன் பவுலுடைய உதாரணத்தைக் கவனியுங்கள். ஆவிக்குரிய தன்மையில் அவர் ஒப்பற்ற முன்மாதிரி என்பது தெள்ளத் தெளிவானதே. ஆனால் பவுலால்கூட தவறேதும் செய்யாமல் கடவுளை சேவிக்க முடியவில்லை. “நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்[டு] . . . உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது” என அவர் ஒப்புக்கொண்டார். (ரோமர் 7:21-23) கடவுளுடைய உதவியினாலேயே பவுலால் ஒரு கிறிஸ்தவராக உண்மையுள்ளவராய் இருக்க முடிந்தது.
முற்றும் முழுமையான பரிபூரணத்தை கடவுள் நம் யாரிடமும் எதிர்பார்க்காதது சந்தோஷமான விஷயம். “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.” (சங்கீதம் 103:14) கடவுளுடைய புதிய உலகில் மட்டுமே இறுதியில் மனிதர்கள் பரிபூரண நிலையை அடைவார்கள்.
எதிர்பார்ப்புகளில் மாற்றங்களை செய்யுங்கள்
இதற்கிடையில் நீங்கள் முற்றும் முழுமையாக பரிபூரணராய் இருக்க முடியுமென எண்ணுவது எதார்த்தமானதல்ல. சொல்லப்போனால், நீங்கள் அவ்வப்போது தவறு செய்வீர்கள் என எதிர்பார்க்கத்தான் வேண்டும். (ரோமர் 3:23) சிலசமயங்களில் நம்முடைய தவறுகளை நாம் உணருவதுகூட இல்லையே! “தன் தவறுகளை யாருமே காண்பதில்லை” என சங்கீதம் 19:12 சொல்கிறது. (டுடேஸ் இங்லீஷ் வர்ஷன்) “நீங்கள் பரிபூரணர் அல்ல—பூமியில் அப்படி யாருமே இல்லை. உங்களிடம் நீங்களே நூறு சதம் எதிர்பார்த்தால் சந்தோஷமாகவே இருக்க மாட்டீர்கள். . . . அதை எதிர்பார்ப்பது எதார்த்தமானதல்ல, அது முடியாத காரியம்” என மேத்யூ என்ற இளைஞன் சொல்கிறான்.
அதை மனதில் வைத்து உங்கள் எதிர்பார்ப்புகளில் ஏன் சில மாற்றங்களை செய்ய முயலக்கூடாது? உதாரணமாக, ஏதோவொன்றில் நம்பர் 1-ஆக திகழ்வதற்காக படாத பாடுபட்டு சோர்ந்துவிடுகிறீர்களா? சொல்லப்போனால், இப்படி துவண்டுவிடும் அளவுக்கு பாடுபடுவது “மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது” என பைபிள் காட்டுகிறது. (பிரசங்கி 4:4) உண்மையில் சிலர் மட்டுமே நம்பர் 1 ஆவதில் எப்போதாவது வெற்றி காணலாம். அப்படியே ஒருவர் வெற்றி கண்டாலும் பொதுவாக வெகு சீக்கிரத்திலேயே அந்த இடத்தைப் பிடிக்க இன்னொருவர் வருகிறார்.
“நான் சொல்லுகிறதாவது, உங்களில் எவனானாலும் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், . . . தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ண வேண்டும்” என அப்போஸ்தலன் பவுல் புத்திமதி கூறினார். (ரோமர் 12:3) எதார்த்தமாய் இருக்கப் பாருங்கள்! உங்கள் திறமைகளையும் வரையறைகளையும் புரிந்துகொண்டு உங்கள் எதிர்பார்ப்புகளில் மாற்றங்களைச் செய்யுங்கள். சிறந்து விளங்க முயலுங்கள், ஆனால் நூறு சதம் கரெக்ட்டாக இருக்க முயலாதீர்கள். குறிப்பிட்ட இலக்கை வையுங்கள், அது எட்டத் தக்கதாக இருக்கட்டும்.
2 தீமோத்தேயு 2:15) ஆம், பரிபூரணத்தை அல்ல, சிறந்து விளங்குவதையே பவுல் உற்சாகப்படுத்தினார். அதேவிதமாக, நியாயமான இலக்குகளை வைத்திருங்கள். எது “நியாயமானது” என சரியாக தெரியாவிட்டால் அதைக் குறித்து உங்கள் பெற்றோரிடம் அல்லது நம்பிக்கைக்குரிய பெரியவர்களிடம் பேசிப் பாருங்கள்.
உதாரணமாக, “வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும்” இருக்கும்படி தீமோத்தேயுவை பவுல் உற்சாகப்படுத்தினார். (புதிதாக ஒரு விளையாட்டில் சேருவது அல்லது ஓர் இசைக் கருவி இசைப்பது போன்ற எதையாவது கற்றுக்கொள்ள வலிந்து முயன்று பார்க்கும்படி சிலர் பரிந்துரை செய்கிறார்கள். நீங்கள் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்கையில் உண்மையிலேயே எக்கச்சக்கமான தவறுகளைச் செய்வீர்கள். ஆனால் அது ஒன்றும் தவறான விஷயமல்ல. தவறுகள் செய்யாமல் கற்றுக்கொள்ள முடியாது என்பதை புரிந்துகொள்ள ஒருவேளை அது உங்களுக்கு உதவலாம்.
பள்ளியில் கட்டுரை எழுதுவதாக இருக்கட்டும், பியானோவில் பல்வேறு சந்தங்களுடன் இசைப்பதாக இருக்கட்டும், எதை செய்வதானாலும் “முயற்சியில் தளராதிருங்கள்” என்ற அப்போஸ்தலன் பவுல் தரும் மற்றொரு அறிவுரையையும் மனதில் வையுங்கள். (ரோமர் 12:11, திருத்திய மொழிபெயர்ப்பு) ஆம், தோல்வியை சந்திக்க நேரிடுமோ என்ற பயத்தில் காரியங்களைத் தள்ளிப் போடாதீர்கள்.
“தன்னையே ஒழுங்கமைத்துக் கொள்வதாக” சாக்குப்போக்கு சொல்வதன் மூலம் பள்ளி ப்ராஜெக்ட்டுகளை செய்யாமல் தள்ளிப்போடுவது ஓர் இளம் பெண்ணின் பழக்கமாக இருந்தது. தனிப்பட்ட விதத்தில் ஒழுங்கமைத்துக் கொள்வது பாராட்டத்தக்க விஷயமானாலும் காரியங்கள் செய்வதை தள்ளிப்போடுவதற்கான சாக்குப்போக்காக அது இராதபடி கவனமாய் இருங்கள். “முழுவதும் திருப்தி அளிக்காவிட்டாலும் பள்ளியில் ப்ராஜெக்ட்டை சமர்ப்பிப்பது அல்லது சமர்ப்பிக்காமலேயே இருந்துவிடுவது என்பதில் ஒன்றை தெரிவு செய்யும் நிலையை எதிர்ப்பட்டபோது அதை சமர்ப்பிப்பதே எப்போதும் சரியான தெரிவு” என்பதை அந்தப் பெண் கடைசியில் புரிந்துகொண்டாள்.
சேதம் விளைவிக்கும் எண்ணங்களை ஒழித்துக் கட்டுங்கள்!
ஒரு காரியத்தை பரிபூரணமாய் செய்யாமல் போவது மனதுக்கு கஷ்டமாக இருக்கலாம் என்பது உண்மைதான். குதர்க்கமான, சோர்வூட்டும் எண்ணங்கள் உங்கள் மனதில் பெருக்கெடுக்கலாம். அப்போது என்ன செய்வீர்கள்? உண்மையில், சோர்வூட்டும் எண்ணங்களில் உழலுவது உங்களுக்கு சேதம் விளைவிக்கும். எனவே உங்களைப் பற்றிய நியாயமற்ற கருத்துக்களை உங்கள் மனதிலிருந்து ஒழித்துக்கட்ட ஊக்கமாக முயலுங்கள். தவறுகள் செய்கையில் நகைச்சுவை உணர்வை இழந்துவிடாதீர்கள். எப்படியிருந்தாலும், “நகைக்க ஒரு காலமுண்டு.” (பிரசங்கி 3:4) தூஷணமான பேச்சை யெகோவா அங்கீகரிப்பதில்லை என்பதையும் நினைவில் வையுங்கள், நம்மை நாமே நொந்துகொள்வதும்கூட அவருக்குப் பிடிக்காது.—எபேசியர் 4:31.
எப்போதும் உங்களை நீங்களே குறைவாக எடைபோடுவதற்குப் பதிலாக நீதிமொழிகள் 11:17-லுள்ள வார்த்தைகளைப் பின்பற்றுங்கள்: “தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான்.” எனவே இக்கேள்வியை சிந்தியுங்கள்: ரொம்பவே உயர்ந்த தராதரங்களைக் கடைப்பிடிக்கையில் எளிதில் நண்பர்களைப் பெற முடியுமா? முடியாமல் போகலாம். அவர்கள் நூறு சதம் கரெக்ட்டாக இல்லாததால் ஒருவேளை நீங்கள் அவர்களை ஒதுக்கியும் இருக்கலாம். எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
பைபிளின் கட்டளையைக் கடைப்பிடியுங்கள்: “ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவரைப்பற்றி ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால் மன்னியுங்கள்.” (கொலோசெயர் 3:13, பொது மொழிபெயர்ப்பு) ஆம், மற்றவர்களிடம் எதிர்பார்ப்பவற்றில் ரொம்பவே நியாயமாக நடந்துகொள்ளுகையில் உங்களால் தோழமையை நன்கு அனுபவிக்க முடியும்!
‘பரிபூரணத்தை நான் எதிர்பார்க்கையில் ஜனங்கள் ஏன் என்னை ஒதுக்க நினைப்பார்கள்?’ என நீங்கள் யோசிக்கலாம். உங்களுக்குப் பெரும் எதிர்பார்ப்புகள் இருப்பதை மற்றவர்களிடம் கூறுகையில் அவர்கள் எப்படி உணருவார்கள் என்பதைக் கவனியுங்கள். பரிபூரணம் திருப்தி தராதபோது என்ற ஆங்கில புத்தகம் இப்படியாக விவரிக்கிறது: “பரீட்சையில் A கிரேட் மார்க்கைவிட கொஞ்சம் குறைவான மார்க் வாங்கும் போதெல்லாம் நீங்கள் ஒரேயடியாக குறைப்பட்டுக் கொண்டால், அது B கிரேட் அல்லது C கிரேட் மார்க் வாங்குவதற்காக படாத பாடுபடும் நண்பர்களை அவமதிப்பதாகவே இருக்கும்.” எனவே அந்தளவுக்கு எதிர்மறையாகவோ, தன்னலமாகவோ இருப்பதை தவிர்க்க முயலுங்கள். அப்போது உங்களுடன் சகவாசம் வைத்துக் கொள்வதை ஜனங்கள் பெரிதும் விரும்புவார்கள்.
இளம் கார்லி இவ்விஷயத்தை இவ்வாறு தொகுத்துரைக்கிறாள்: “நூறு சதம் கரெக்ட்டாக செய்ய தூண்டும் என் எண்ணத்தை தலைகாட்டாதிருக்கும்படி சொல்கிறேன்.” அதை நீங்கள் எப்படி செய்யலாம்? காரியங்களைக் கடவுள் எப்படி கருதுகிறார் என தியானியுங்கள். உங்கள் எண்ணத்தை கட்டுப்படுத்துவதில் இன்னும் உங்களுக்குப் பிரச்சினை இருந்தால் உங்கள் பெற்றோரிடமோ உங்கள் சபையிலுள்ள முதிர்ச்சியான கிறிஸ்தவர்களிடமோ அதைக் குறித்துப் பேசிப் பாருங்கள். கடவுளிடம் ஜெபியுங்கள், உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வதற்கு அவரிடம் உதவி கேளுங்கள். பரிபூரணவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஜெபம் வல்லமை வாய்ந்த கருவி.—சங்கீதம் 55:22; பிலிப்பியர் 4:6, 7.
யெகோவா நூறு சதம் கரெக்ட்டாக செய்யும்படி எதிர்பார்ப்பதில்லை என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்; நாம் அவருக்கு உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டுமென்றே நம்மிடம் அவர் எதிர்பார்க்கிறார். (1 கொரிந்தியர் 4:2) அப்படி நீங்கள் உண்மையுள்ளவராக இருக்க முயன்றால் நீங்கள் எல்லாவற்றையும் நூறு சதம் கரெக்ட்டாக செய்யாதபோதிலும் உங்களையே எண்ணி உச்சி குளிர்ந்து போவீர்கள். (g03 8/22)
[அடிக்குறிப்பு]
a எமது ஆகஸ்ட் 8, 2003 இதழில் “நான் எதிலும் நூறு சதம் எதிர்பார்ப்பது ஏன்?” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 21-ன் படம்]
தோல்வி ஏற்படுமோ என்ற பயத்தில் ஒருவேளை நீங்கள் இடிந்துபோய் உட்கார்ந்துவிடலாம்
[பக்கம் 22-ன் படம்]
புதிய காரியங்களைக் கற்றுக்கொள்ள முயலுவது தவறுகள் செய்கையில் சமாளிக்க உங்களுக்கு உதவலாம்