உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
மீன் பிடிக்கும் ஓநாய்கள்
மான்கள் போன்ற நிலவாழ் மிருகங்களை மட்டும்தான் ஓநாய்கள் அடித்து தின்னுகின்றன என்று அநேக காலமாக நம்பப்பட்டது. ஆனால், பிரிட்டிஷ் கொலம்பியாவின் மத்திய கடலோரப் பகுதியிலுள்ள மழைக் காடுகளில் வாழும் ஓநாய்கள் சிப்பி வகைகளான மஸல், க்ளாம், பார்னகில் ஆகியவற்றையும், வஞ்சிர மீன் வகைகளையும்—“மணி ஒன்றுக்கு 20 மீன்கள்வரை”—சாப்பிடுகின்றனவாம். முதலில் அவை சலனமின்றி நீரிலுள்ள ஒரு மீனை நோட்டமிடுகின்றன, பிறகு “தண்ணீருக்குள் ஒரே பாய்ச்சல் பாய்ந்து அதிரடி தாக்குதல் நடத்துகின்றன,” இப்படி 10 தடவை பாய்ந்தால் 4 தடவை அவற்றிற்கு வெற்றி கிடைக்கிறது. ஆனால், ஓநாய்கள் ஏன் வஞ்சிர மீன்களின் தலையை மட்டுமே சாப்பிடுகின்றன என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு புரியா புதிராகவே இருக்கிறது. ஒருவேளை வஞ்சிர மீனின் தலையில் ஓநாய்களுக்கு தேவையான ஊட்டச்சத்து இருக்கலாம் அல்லது அவற்றின் உடம்புப் பகுதியில் தீங்கு விளைவிக்கும் ஒட்டுண்ணிகள் ஏதாவது இருக்கலாம் என ஆராய்ச்சியாளரான கிறிஸ் டரிமன்ட் கருத்து தெரிவிக்கிறார். “இந்த ஓநாய்கள் தொடர்ந்து எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. இதைப் பார்க்கும்போது இந்த மழைக்காட்டில் இன்னும் எத்தனை எத்தனை மர்மங்கள் புதைந்து கிடக்கின்றனவோ என நினைக்கத் தோன்றுகிறது” என சொல்கிறார் டரிமன்ட். (g03 6/22)
இதில் குற்றமே இல்லை
“மெக்சிகோவில், ஜெயிலிலிருந்து தப்பி ஓடுவது ஒரு குற்றமாக கருதப்படுவதில்லை” என த கொரியா ஹெரால்ட் செய்தித்தாள் அறிவிக்கிறது. “சுதந்திரமாக வாழும் விருப்பம் எல்லா மக்களுக்கும் இருப்பதை மெக்சிகோ நாட்டுச் சட்டம் அங்கீகரிக்கிறது. ஆகவே, அந்நாட்டு சட்டப்படி, சுதந்திரமாக இருக்க முயல்பவர்கள் தண்டிக்கப்படுவதில்லை.” சிறைக் கைதிகள் தப்பிக்கும்போது சட்டத்தை மீறினாலோ, எவரையாவது காயப்படுத்தினாலோ, உடைமைகளை நாசமாக்கினாலோ, எவருக்காவது லஞ்சம் கொடுத்தாலோ, மற்ற குற்றவாளிகளுடன் கூட்டுசேர்ந்து சதித்திட்டம் போட்டாலோதான் அது குற்றமாக கருதப்படுகிறது. என்றாலும், தப்பிக்கையில் ஓர் அபாயம் நேரிட்டு விடலாம். தப்பி ஓட முயலுபவர்களை சுடுவதற்கு சிறைக் காவலர்களுக்கு அதிகாரம் உண்டு. இதன் காரணமாக, தப்பிச் செல்வதற்கு அதிபுத்திசாலித்தனமான சில உத்திகள் கையாளப்படுகின்றன. உதாரணமாக, 1998-ல், குற்றவாளியென தீர்க்கப்பட்ட ஒரு கொலைகாரன் பட்டினி கிடந்து தன் எடையை வெறும் 50 கிலோ அளவுக்குக் குறைத்தான்; எதற்கு? தன்னுடைய அழுக்கு துணிமணிகளை வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்காக தன் மனைவி பயன்படுத்திய ஒரு சூட்கேஸுக்குள் ஒளிந்துகொள்வதற்காக; திட்டமிட்டபடி அவன் மனைவி அவனை சூட்கேஸில் வைத்து தூக்கி சென்று விட்டாள். என்றாலும், ஒன்பது மாதம் கழித்து அவன் கைது செய்யப்பட்டான், ஆனால் மறுபடியுமாக தப்பி ஓடி எங்கோ தலைமறைவாகி விட்டான்; இன்று வரையாக அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. (g03 8/22)
பறவைகளின் அதிசய சமநிலை
பறவைகள் சமநிலையோடு இருப்பதற்கு உதவும் ஒரு உறுப்பு அவற்றின் உட்காதில் இருக்கிறது; இந்த உறுப்பு பறவைகள் பறக்கையில் அவற்றின் அசைவுகளை கட்டுப்படுத்துகிறது. ஆனால் இது பறவைகள் நேராக நிற்பதையும், நடப்பதையும் கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை; “ஏனெனில் அவற்றின் உடல், மனித உடலைப் போல அல்லாமல் கிடைநிலையில் இருக்கிறது, அதோடு அவை நடக்கையில் அவற்றின் வால்பகுதி உடம்பின் மற்ற பகுதியின் எடைக்கு சரிசமமாக இருப்பதில்லை” என ஜெர்மன் செய்தித்தாள் லைப்ட்ஸிகர் ஃபால்க்ஸ்ட்ஸைட்யுங் சொல்கிறது. “விலங்கு உடலியல் நிபுணரான ரைன்ஹால்ட் நெக்கர் நான்கு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, சமநிலைப்படுத்தும் மற்றொரு உறுப்பு புறாக்களின் உடம்பில் இருப்பதை கண்டுபிடித்தார்” என அந்த செய்தித்தாள் விளக்குகிறது. பறவைகளின் அடிவயிற்றுப் பின்பகுதியில் நரம்பணுக்களும் திரவங்களுள்ள சில குழிகளும் இருப்பதை நெக்கர் கண்டுபிடித்தார்; இவைதான் பறவைகள் சமநிலையோடு இருப்பதற்கு உதவுவதாக தோன்றுகிறது. “அந்தக் குழிகளில் உள்ள திரவங்கள் அகற்றப்பட்டு, அவற்றின் கண்கள் கட்டப்பட்டபோது புறாக்களால் நேராக உட்காரவோ நடக்கவோ முடியவில்லை. அவை அமர்ந்திருந்த இடத்திலிருந்து ‘தொப்பென்று’ கீழே விழுந்தன அல்லது பக்கவாட்டில் விழுந்தன. என்றாலும், அவற்றால் பறக்க முடிந்தது” என அந்த அறிக்கை சொல்கிறது. (g03 8/08)
இனிமேலும் அது “அநாதைக் குழந்தை” அல்ல
டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 1912-ல் மூழ்கியது; அந்தப் பேரழிவில் பலியாகி அடக்கம் செய்யப்பட்ட ஒரு ஆண் குழந்தையின் அடையாளம் தொண்ணூறு வருடங்கள் கழித்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என லண்டன் செய்தித்தாளான த டைம்ஸ் சொல்கிறது. நீரில் மிதந்து கொண்டிருந்த அந்தக் குழந்தையின் சடலமும், அடையாளம் தெரியாத இன்னும் 43 பேருடைய சடலங்களும் கனடாவிலுள்ள நோவா ஸ்காடியா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. அந்தக் குழந்தையின் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த கற்பலகையில், “அநாதைக் குழந்தை” என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. விஞ்ஞானிகள், சரித்திராசிரியர்கள், மரபு வரலாற்று ஆய்வாளர்கள், பல் டாக்டர்கள் என 50 பேர் அடங்கிய குழு ஒன்று டிஎன்ஏ பரிசோதனை செய்து அந்தக் குழந்தை யார் என்பதை கண்டுபிடித்திருக்கின்றனர்; அதன் பெயர் ஏனோ பானூலா; பின்லாந்தைச் சேர்ந்த 13 மாதக் குழந்தை; தன் தாயோடும் நான்கு அண்ணன்மார்களோடும் சேர்ந்து உயிரிழந்திருந்தது. இந்த முழு குடும்பமும் அமெரிக்காவுக்கு போய் ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க இருந்தது; ஏனோவின் தந்தை மட்டும் ஏற்கெனவே அங்கு போயிருந்தார்; ஆனால், தன் குடும்பத்தின் வருகைக்காக அவர் காத்துக் காத்து கடைசியில் ஏமாந்து போனார். அந்தக் குழந்தையின் பிரேதத்தை சொந்தம் கொண்டாட யாருமே வராததால் அல்லது யாருமே அதை அடையாளம் காட்டாததால், கனடாவைச் சேர்ந்த மீட்புக் கப்பல் குழுவினரே அந்தக் குழந்தையின் சடலத்தை “தத்தெடுத்துக் கொண்டனர்.” அதுமட்டுமல்ல, அதன் சவத்தை அடக்கம் செய்வதற்காக கல்லறைக்கு பணமும் கட்டி, அதன் மீது கற்பலகை ஒன்றையும் வைத்தனர். இவ்வாறே, டைட்டானிக் கப்பலில் பலியான பெயர் தெரியாத மற்றவர்களையும்கூட டிஎன்ஏ பரிசோதனை செய்து அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். அச்சமயத்தில் பலியான இன்னொரு நபருடைய அடையாளத்தைக் கண்டுபிடிக்க உதவுவதற்காக அவருடைய “தாய்வழி வந்த சொந்தக்காரர் ஒருவர் பரிசோதனைக்காக தன் இரத்தத்தை, பலியான அந்த நபரின் 100-வது பிறந்தநாள் முடிந்து சில நாட்களுக்குள்ளாக கொடுத்தார்” என த டைம்ஸ் கூறியது. (g03 8/08)
கம்ப்யூட்டர் ‘பூமி’
மார்ச் 11, 2002 அன்று, ஜப்பான் நாட்டு என்ஜினியர்கள் இதுவரை தயாரிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களிலேயே அதிசக்தி வாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்றை ‘ஆன்’ செய்தார்கள். “நமது கிரக பூமியின் மாடல் ஒன்றை உருவாக்குவதே” அவர்கள் லட்சியமாக இருந்ததென டைம் பத்திரிகை சொல்கிறது. இந்தக் கம்ப்யூட்டர் ‘பூமியானது,’ (Earth Simulator) நான்கு டென்னிஸ் கோர்ட் அளவுக்கு அத்தனை பெரியது; இதை உருவாக்க ஆன செலவு ரூ. 1,700 கோடி. இந்தக் கம்ப்யூட்டரால் நொடிக்கு 35 லட்சம் கோடி கணக்கீடுகளைச் செய்ய முடிகிறது; இதற்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கும் அமெரிக்க இராணுவ கம்ப்யூட்டரைவிட இது ஐந்து மடங்கு வேகமாக செயல்படுகிறது; அந்த இராணுவ கம்ப்யூட்டரால் ஒரு நிமிடத்திற்கு 7.2 லட்சம் கோடி கணக்கீடுகளை மட்டுமே செய்ய முடிகிறது. “செயற்கைக் கோள்களிலிருந்தும் கடல் மிதவைகளிலிருந்தும் கிடைக்கும் உண்மையான தட்பவெப்ப நிலை பற்றிய தகவல்களை இந்தக் கம்ப்யூட்டரில் பதிவு செய்தால், முழு பூமியின் கம்ப்யூட்டர் மாடல் ஒன்றை ஆராய்ச்சியாளர்களால் உருவாக்க முடியும்” என டைம் பத்திரிகை கூறுகிறது. மேலும், “இந்தக் கம்ப்யூட்டரை உபயோகித்து எதிர்காலத்தில் நம் சுற்றுச்சூழல் எப்படியிருக்கும் என்பதை அவர்களால் கணிக்க முடியும்” என்றும் அது கூறுகிறது. இதற்கிசைய, “அடுத்த 50 ஆண்டுகளில் கடலின் தட்பவெப்பநிலை எப்படியிருக்கும் என்பதை விஞ்ஞானிகள் ஏற்கெனவே கணித்துவிட்டார்கள்” என அந்தப் பத்திரிகை சொல்கிறது. (g03 8/08)
வாசிப்பதன் பயன்
“பிள்ளைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக திகழ்வதற்கு அவர்களுக்கு பேருதவி அளிப்பது அவர்கள் குடும்பத்தின் சொத்துபத்துகளோ அந்தஸ்தோ அல்ல, ஆனால் ஓய்வு நேரத்தில் உற்சாகத்தோடு வாசிப்பதே” என தி இன்டிப்பென்டன்ட் என்ற லண்டனின் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. 15 வயது டீனேஜர்களின் வாசிக்கும் பழக்கவழக்கங்களைக் கண்டறிய நடத்தப்பட்ட சர்வதேச ஆய்வு ஒன்றில், படிப்பறிவுள்ளவர்களாய், கை நிறைய சம்பாதிக்கும் பெற்றோர்களுக்குப் பிள்ளைகளாய் இருப்பதைவிட, “படு உற்சாகமாக வாசிப்பவர்களாகவும்,” “அடிக்கடி வாசிப்பவர்களாகவும்” இருப்பதே அதிக பிரயோஜனமானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆய்வு காண்பிக்கிறபடி, “வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் அவல நிலையிலுள்ள 15 வயது டீனேஜர்கள்—படு உற்சாகமாக வாசிக்கும் பழக்கமுள்ளவர்கள்—வாசிப்புத் தேர்வில் அதிக மார்க் (சராசரியாக 540) பெற்றிருக்கிறார்கள்; ஆனால் மிகப் பெரிய அந்தஸ்திலுள்ள, உயர்பதவி வகிக்கும் பெற்றோரின் பிள்ளைகளோ—வாசிப்பதில் ஆர்வமே இல்லாத பிள்ளைகளோ—அவர்களைவிட குறைவான மதிப்பெண்ணையே (491) பெற்றார்கள்” என அந்த செய்தித்தாள் கூறியது. “சும்மா ஜாலிக்காக வாசிக்கும் பழக்கம், ஆண் பிள்ளைகளைவிட பெரும்பாலும் பெண் பிள்ளைகளுக்கே அதிகமிருக்கிறது” என 1,000-க்கும் மேலான டீனேஜர்களிடம் நடத்தப்பட்ட ஒரு சர்வே காட்டியது. அதற்கு முந்தின மாதத்தில் தாங்கள் ஒரு புத்தகத்தை படித்ததாக பெண் பிள்ளைகளில் 75 சதவீதத்தினரும், ஆண் பிள்ளைகளில் 55 சதவீதத்தினரும் சொன்னார்கள். (g03 8/08)
கொசுக்களிடமிருந்து தப்பிக்க வழி
“2,500-க்கும் மேற்பட்ட வகையான கொசுக்கள் இந்த கிரகத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் காணப்படுகின்றன” என மெஹிகோ டெஸ்கோனோஸிடோ என்ற பத்திரிகை குறிப்பிடுகிறது. ஆண் கொசுக்களும் பெண் கொசுக்களும் மலர்த் தேனை உறிஞ்சிக் குடிக்கின்றபோதிலும், பெண் கொசுக்கள் மட்டுமே நம் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன. விளைவு? மலேரியா, டெங்கு, மேற்கு நைல் வைரஸ் ஆகிய வியாதிகள் நமக்கு வருகின்றன. கொசுக்களிடமிருந்து நீங்கள் எவ்வாறு தப்பிக்கலாம்? அந்த அறிக்கை பின்வரும் அறிவுரைகளை அளிக்கிறது: (1) கொசுக்கள் கொட்டமடிக்கும் நேரங்களில், அதாவது சாயங்காலம் மற்றும் இராத்திரி நேரங்களில், வெளியே செல்வதை தவிருங்கள். (2) கொசு வலையை பயன்படுத்துங்கள், கொசுவிரட்டி மருந்து தோய்க்கப்பட்ட கொசு வலைகள் இருந்தால் இன்னும் நல்லது. (3) தொள தொளவென்று இருக்கும் முழுக் கைச்சட்டையையும் முழுக்கால் பேன்ட்டையும் போட்டுக் கொள்ளுங்கள், தேவைப்பட்டால், தலையையும் முகத்தையும் மூடுவதற்காக வலைத் தொப்பி ஒன்றை போட்டுக் கொள்ளுங்கள். (4) கொசுவிரட்டி க்ரீமை உங்கள் உடை மறைக்காத சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள். (5) தினந்தோறும் 300 மில்லிகிராம் வைட்டமின் பி1 மாத்திரையை உட்கொள்ளுங்கள். இந்த மாத்திரை சிலரது வியர்வையை கொசுக்களுக்கு அருவருப்பானதாக மாற்றிவிடும், அதனால் அவை கிட்டவே நெருங்காது. (6) சேறும் சகதியுமாக உள்ள இடங்களில், கொசுத் தொல்லையிலிருந்து அவசர பாதுகாப்பு பெற உங்கள் மேனியில் மண்ணை பூசிக்கொள்ளுங்கள். உங்களை கொசு கடித்துவிட்டால் சொறியாதீர்கள், ஏனெனில் சொறியும்போது இரத்தம் வந்து, இன்ஃபெக்ஷன்கூட ஏற்பட்டு விடலாம். ஆகவே சொறிவதற்கு பதிலாக ஏதாவது கேலமைன் லோஷனை தடவிக் கொள்ளுங்கள். (g03 8/08)
வெவ்வேறு வருடத்தில் பிறந்த இரட்டையர்கள்
“கலி ஜான்ஸன் மற்றும் எமலி ஜான்ஸன் என்ற இரட்டை சகோதரிகளிடையே எக்கச்சக்க ஒற்றுமை இருக்கிறது; ஆனால் அவர்கள் பிறந்தநாளில் மட்டும் வித்தியாசம் இருக்கிறது—அவர்கள் வெவ்வேறு வருடங்களில் பிறந்தவர்கள்” என நியு யார்க்கின் டெய்லி நியூஸ் தெரிவிக்கிறது. “டிசம்பர் 31-ம் தேதி, இரவு 11:24-க்கு கலி பிறந்தாள்; ஜனவரி 1-ம் தேதி விடிகாலை 12:19-க்கு எமலி பிறந்தாள்.” நியு ஜெர்ஸியிலுள்ள பார்னிகட்டைச் சேர்ந்த அவர்களுடைய தாய், டான் ஜான்ஸனுக்கு பெருமை தாளவில்லை. “இவர்கள் இரட்டையர்களாக இருந்தபோதிலும், இவ்விருவருக்கும் வித்தியாசமான அடையாளங்கள் இருக்க வேண்டும் என்றே விரும்பினேன். அதை பிறப்பிலிருந்தே ஊர்ஜிதப்படுத்தி விட்டார்கள்” என அவர் கூறினார். இந்த இரட்டையர்கள் பிப்ரவரி 2-ம் தேதியன்று பிறப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் ஒரு மாதத்திற்கு முந்தியே பிறந்து விட்டார்கள். (g03 8/22)