உடல் பருமன் உலகளாவிய கொள்ளைநோயா?
உடல்—பருமன் உலகளாவிய கொள்ளைநோயா?
“செல்வச் செழிப்புமிக்க, வளர்ச்சியடைந்த நாடுகளில் காணப்படும் நவீன வாழ்க்கை முறையே உடல் பருமனுக்குக் காரணமென பெரும்பாலும் கருதப்படுகிறது; இது வளரும் நாடுகளிலும் பரவி வருகிறது” என குறிப்பிடுகிறது பிரிட்டிஷ் மருத்துவ இதழ் த லான்செட். ‘உலகளாவிய கொள்ளைநோயான’ உடல் பருமனால் வரும் வியாதிகளைக் குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் இப்போது எச்சரித்து வருவதாக அது குறிப்பிட்டது. நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், இதய இரத்த நாளம் சம்பந்தப்பட்ட நோய் இவையாவும் உடல் பருமனால் வருபவை.
சீனாவில் கடந்த எட்டு ஆண்டுகளில், பூதாகாரமாக பெருத்திருக்கும் ஆண்களின் எண்ணிக்கை மூன்று மடங்காகவும் பெண்களின் எண்ணிக்கை இரு மடங்காகவும் அதிகரித்துள்ளது; இதனால், சீனாவில் உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுவோரின் விகிதம் ஐக்கிய மாகாணங்களின் விகிதத்தை எட்டிவிட்டது. நீரிழிவு நோய் இருப்பதாக புதிதாக கண்டுபிடிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியாவிலும் சீனாவிலும்தான் இருக்கிறார்கள். எகிப்தில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை ஐக்கிய மாகாணங்களின் எண்ணிக்கைக்கு சரிசமமாகிவிட்டது; அங்குள்ள பெண்களில் சரிபாதியானோர் அதிக குண்டாக இருக்கிறார்கள். மெக்சிகோவில் உடல் பருத்தவர்களின் எண்ணிக்கை மேல்தட்டு, கீழ்த்தட்டு என்ற பாகுபாடின்றி எல்லா சமுதாயத்திலும் கிடுகிடுவென ஏறிக்கொண்டே போகிறது. விளைவு? நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை பெருத்துவிட்டது. ஆப்பிரிக்காவில் சகாராவின் தென் பகுதிகளில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள நாடுகளிலும்கூட பருத்தவர்களும் நீரிழிவு நோயாளிகளும் அதிகரித்துக்கொண்டே போகிறார்கள்.
சில நாடுகளில் உடல் பருமனுக்கு கொழுப்பு நிறைந்த ஃபாஸ்ட் ஃபுட்ஸ் காரணமாக இருந்தாலும், இப்போதெல்லாம் உற்பத்தியாளர்கள் பலர் உணவு பதார்த்தங்களை “ருசிமிக்கதாக்க” அவற்றில் நிறைய இனிப்பு சேர்ப்பதே அதற்கு முக்கிய காரணம். அதைத் தவிர, ஆசிய, ஆப்பிரிக்க நாட்டவர்கள் உணவில் தாராளமாக எண்ணெய் உபயோகிப்பதால் தேவைக்கு அதிகமான கலோரிகள் சேர்ந்துவிடுகின்றன. தொழிற்சாலைகளிலும், வேளாண்மை துறைகளிலும் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் பொருள் உற்பத்திக்கு அதிக ஆட்கள் தேவைப்படாதது உடல் பருமனுக்கு மற்றொரு காரணம். குறைந்த வேலை, அதிக ஓய்வு—இதையே மக்கள் விரும்புகிறார்கள். இன்று கம்ப்யூட்டர்களும், டிவியும் எங்கும் பிரபலமாகி விட்டதால் வேலை செய்பவர்களுக்கு உடற்பயிற்சியே இல்லாமல் போய்விட்டது; அதோடு, “சக பணியாளர்களிடம் தகவல் தெரிவிப்பதையும் எழுந்து சென்று பேசுவதையும் ஈ-மெயில் தடுத்துவிட்டது.”
பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் மத்தியிலும் உடல் பருமன் விசுவரூபம் எடுத்து வருகிறது, முக்கியமாக பொழுதுபோக்கு, உடற்பயிற்சி ஆகியவற்றை குறைத்திருக்கும் இடங்களில் பிள்ளைகள் அதிக பருமனாக இருக்கிறார்கள். ஆகவே, உணவுக்கும் படிப்புக்கும் உள்ள தொடர்பைக் குறித்து ஆசிரியர்கள் அறிந்திருப்பது ஓர் அவசர தேவை. உடல் பருமன் என்ற உலகளாவிய கொள்ளை நோயையும் அதோடு சம்பந்தப்பட்ட வியாதிகளையும் சமாளிப்பதற்கு பிராந்திய அளவில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டும் போதாது, “உலகளவில் ஒரு பொது திட்டத்தை ஏற்படுத்துவதும் மிக முக்கியம்; அதோடு, அரசியல் திட்டம், தனித்திறன், விரிவாக செயல்படும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை முன்னேற்றுவிப்பதும் முக்கியம்” என எச்சரிக்கிறார் கலிபோர்னியா பல்கலையின் பொது சுகாதார பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த கேல் ஹாரிஸன். (g03 4/08)