Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திகில் பிரியர்கள்—ஏன் இந்த விபரீத ஆசை?

திகில் பிரியர்கள்—ஏன் இந்த விபரீத ஆசை?

திகில் பிரியர்கள்​—ஏன் இந்த விபரீத ஆசை?

பூர்வ ரோம விளையாட்டு அரங்கில் ஜேஜேவென்று கூட்டம், ஒரே பரபரப்பு; 50,000 பேர் தங்கள் இருக்கைகளின் நுனியில் இருப்புக்கொள்ளாமல் அமர்ந்திருந்தனர். “மயிர்க்கூச்செறியும் காட்சிகளைக் காணத் தவறாதீர்!” என நாட்கணக்காக எல்லா இடங்களிலும் அறிவிக்கப்பட்டிருந்த விளம்பரம் அவர்களது ஆர்வக் கனலைத் தூண்டிவிட்டிருந்தது.

மாய வித்தைகளையும் மௌன நாடகங்களையும் கோமாளிகளையும் நகைச்சுவையையும் கண்டுகளிக்க அநேகர் தியேட்டர்களுக்கு திரண்டு சென்றது உண்மைதான். ஆனால் விளையாட்டு அரங்கிற்கு திரண்டு சென்றவர்கள் பார்க்க ஆசைப்பட்ட காட்சிகளோ முற்றிலும் வித்தியாசமானவை. பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் மயிர்க்கூச்செறியும் காட்சிகள் அரங்கேறவிருக்க, அசௌகரியமான இருக்கைகளையும் பொருட்படுத்தாமல் அன்றாட கவலைகளை மறந்து அதில் அவர்கள் விரைவில் லயித்துப்போவார்கள்.

முதலில் பாடகர்கள் வந்தார்கள், அவர்களைத் தொடர்ந்து அங்கியணிந்த பூசாரி ஒருவர் வந்தார். அதன் பிறகு சிலர் தூபவர்க்கத்தைப் பிடித்துக்கொண்டு வர, தெய்வங்களையும் தேவியர்களையும் சித்தரித்த பல விக்கிரகங்கள் அணிவகுத்து ஊர்வலம் வந்தன. அனைவரின் பார்வையிலும் படும் விதத்தில் அவை தூக்கிப் பிடிக்கப்பட்டன. அந்நிகழ்ச்சிகளுக்கு கடவுளுடைய அனுக்கிரகம் இருந்ததாக காட்டவே இந்த ஊர்வலம்.

மிருகங்கள் கொன்று குவிக்கப்படுகின்றன

இப்போது பிரமாண்டமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகவிருந்தன. முதலில் தீக்கோழிகளும் ஒட்டகச்சிவிங்கிகளும் தப்பிக்க வழியில்லாதபடி அரங்கிற்குள் கொண்டு வந்து விடப்பட்டன; பார்வையாளர்களில் அநேகர் இவற்றை முதன்முறையாக கண்ணார கண்டனர். அம்பு எய்வதில் வல்லவர்கள் அநேகர் அந்த வாயில்லா ஜீவன்களை ஒன்றுவிடாமல் கொன்று குவிப்பதில் தங்கள் கைவரிசையைக் காட்டவே, பார்வையாளர்கள் திகிலில் திளைத்தனர்.

அடுத்து, கூட்டத்தாரின் திகில் பசிக்கு தீனிபோட, மலைபோன்ற இரு யானைகள் வாழ்வா சாவா என பார்த்திட சண்டை களத்தில் இறங்கின; அவற்றின் தந்தங்களில் நீண்ட, கூர்மையான இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தன. பலம் பொருந்திய அந்த யானைகளில் ஒன்று படுகாயமடைந்து, ரத்தம் தோய்ந்த மண்ணில் சரிய, கரகோஷம் விண்ணைப் பிளந்தது. பார்வையாளர்களின் குரூர பசியைக் கிளறி, சில நிமிடங்களில் துவங்கவிருக்கும் முக்கிய நிகழ்ச்சிக்கு அவர்களை தயார்படுத்தவே இந்தக் காட்சி.

பிரதான நிகழ்ச்சி

மிகுந்த ஆரவாரத்திற்கு மத்தியில் சண்டைவீரர்களின் கூட்டம் அரங்கில் நுழைய, திகில் பிரியர்கள் பரபரப்பு தாங்காமல் எழுந்து நிற்கின்றனர். சண்டைவீரர்களில் சிலர் வாள்கள், கேடயங்கள், உலோக தலைக்கவசங்கள், அல்லது கத்திகள் போன்ற ஆயுதங்கள் பூண்டிருக்கின்றனர், மற்றவர்களோ ஒருசில ஆயுதங்களுடனும் ஆடைகளுடனும் மட்டுமே காணப்படுகின்றனர். அவர்களது நேருக்கு நேர் மோதல், சாவு வரை நீடிக்கிறது; ஒருவரது அல்லது இருவரது உயிருமே பறிபோகையில் கூட்டத்தினர் குதூகலத்தில் ஆரவாரம் செய்கின்றனர். 100 நாட்கள் நடைபெற்ற இப்படிப்பட்ட ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் 5,000 மிருகங்கள் கொன்று குவிக்கப்பட்டதாக பதிவுகள் காட்டுகின்றன. மற்றொரு நிகழ்ச்சியில் 10,000 சண்டைவீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் அதுவும் போதாதென்று கூட்டத்தினர் கோஷம் போட்டார்கள்.

குற்றவாளிகளும் போர்க் கைதிகளும் எப்போதும் கைவசம் இருந்ததால் சண்டைவீரர்களுக்கு பஞ்சமே ஏற்படவில்லை. இருந்தாலும், “இப்படிப்பட்ட சண்டைவீரர்களையும் வீரதீரர்களான மற்ற சண்டைவீரர்களையும் குழப்பிக்கொள்ளக்கூடாது; அந்த வீராதி வீரர்களோ ஆயுதங்களோடு சண்டையிட்டு, கணிசமான பரிசுத் தொகைகளை அன்பளிப்பாக பெற்றனர்; அவர்கள் ஆயுள் கைதிகளும் அல்ல” என ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது. சில இடங்களில், கைகலப்புக் கலையை கற்றுக்கொள்ள சண்டைவீரர்கள் விசேஷ பள்ளிகளில் பயின்றனர். உடலின் ஒவ்வொரு அணுவிலும் கிளர்ச்சி கொப்பளிக்க, போட்டியின் திகிலிலும் வாழ்வா சாவா என்ற சுவாரஸ்யமான சவாலிலும் அவர்கள் லயித்துப்போயினர். மறுபடியும் சண்டையிட வேண்டுமென்ற துடிப்பு அவர்களுக்குள் அடங்கமாட்டாத ஆசையாக பெருக்கெடுத்தது. “ஐம்பது முறை சண்டையிட்டு ஓய்வு பெற்ற சண்டைவீரரே வெற்றி வாகை சூடியவர்” என ஒரு புத்தகம் முடிவாக சொல்கிறது.

ஜல்லிக்கட்டு

இன்று உலகம் புதிய மில்லனியத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறது. இருந்தாலும் ஆபத்தான, அதுவும் உயிருக்கே உலை வைக்கும் விளையாட்டுகளில் இன்னும் அநேகருக்கு வெறித்தனமான மோகம் இருக்கத்தான் செய்கிறது. உதாரணத்திற்கு ஜல்லிக்கட்டு போட்டி போர்ச்சுகலிலும், ஸ்பெயினிலும், லத்தீன் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் அநேக நூற்றாண்டுகளாக பிரசித்தி பெற்று விளங்குகிறது.

மெக்ஸிகோவில் சுமார் 200 அரங்குகளும் ஸ்பெயினில் 400-⁠க்கும் அதிகமான அரங்குகளும் இருப்பதாக அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது. மெக்ஸிகோவிலுள்ள ஓர் அரங்கு 50,000 பேர் உட்காரும் வசதிபடைத்தது. ஆவேசத்தோடு பாய்ந்து வரும் முரட்டுக் காளைகளை அடக்கி தங்கள் வீரதீரத்தை காட்ட துணியும் ஆண்களை வேடிக்கை பார்க்க வரும் கூட்டத்தால் இந்த அரங்குகள் பெரும்பாலும் நிரம்பி வழிகின்றன. காளையோடு சண்டையிட களம் இறங்கியவர் கொஞ்சம் பயப்படுவதாக தெரிந்தாலோ அவ்வளவுதான் கூட்டத்தார் அவரை நார்நாராகக் கிழித்துவிடுவார்கள்.

இப்போதெல்லாம் பெண்களும் இந்த போட்டியில் பங்குகொண்டு, காளைகளை கொன்று, “கோடி”களை வெல்லுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண் டிவிக்கு அளித்த ஒரு பேட்டியில் தனது திகில் வெறியை தணித்துக்கொள்ள தான் கண்ட ஒரே வழி சீறிப்பாயும் முரட்டுக் காளையோடு மல்லுக்கு நிற்பதுதான் என குறிப்பிட்டாள்; எக்கணமும் காளையின் கொதிப்பிற்கு இரையாகும் ஆபத்து இருந்தாலும், திகில் உணர்வுக்காக ஏங்கி தவித்த தன் உள்ளத்தை அது ஒன்றே ஆசுவாசப்படுத்தியதாகவும் குறிப்பிட்டாள்.

காளைகளோடு ஓட்டம்

“பாம்ப்ளோனா நகரின் காயே எஸ்டாஃபேடா தெருவில் சிக்ஸ்டோ உணவகத்திற்கு முன் நான்கு வரிசைகளில் ஆண்கள் நிற்கிறார்கள், ஓயாத கூச்சலும் கூப்பாடும் கேட்கிறது. பாஸ்க், காஸ்டிலியன், காடாலன், ஆங்கிலம் ஆகிய பல பாஷைகளில் உரையாடலும் கேட்கிறது” என ஒரு அறிக்கை குறிப்பிட்டது. நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க போட்டி நேரத்திற்கு வெகு முன்பே கூட்டம் குழுமிவிடும். ஜல்லிக்கட்டுக்கு தேர்ந்தெடுக்கப்படும் காளைகள் அரங்கிலிருந்து வெறும் 800 மீட்டர் தொலைவிலுள்ள கொட்டகைகளில் கட்டி வைக்கப்படுகின்றன.

போட்டி நடக்கவிருக்கும் தினத்தன்று காலையில், கொட்டகைகளின் கதவுகள் திறக்கப்பட்டு, ஆறு காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. அவை நேரே அரங்கிற்கு பாய்ந்தோட வசதியாக தெருவின் இரு பக்கங்களிலும் கட்டடங்கள் நிற்கின்றன, சந்துகளும் மறிக்கப்பட்டிக்கின்றன. பொதுவாக சுமார் இரண்டு நிமிடங்களில் அவை அரங்கை அடைந்துவிடும்.

பல வருடங்களுக்கு முன்பு, உயிரையும் துச்சமாக கருதி அநேக ஆண்கள் அந்தக் காளைகளைவிட வேகமாக ஓடி தங்கள் திறமையைக் காட்ட முயற்சி செய்தார்கள். இப்போதும்கூட வருடா வருடம் சிலர் இந்த முயற்சியில் இறங்குகிறார்கள். காலப்போக்கில் இது சர்வதேச நிகழ்ச்சி ஆகிவிட்டது. அநேகர் காளைகளால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்திருக்கிறார்கள், மற்றவர்கள் அதன் கொம்புகளுக்கு பலியாகியிருக்கிறார்கள். “அந்தக் காளைகளைவிட வேகமாக ஓட முடியுமென்று நீங்கள் நினைத்தால் மிகப் பெரிய தப்புக்கணக்கு போடுகிறீர்கள்” என்றார் ஓர் ஓட்டப்பந்தய வீரர். 20 ஆண்டு காலத்தில், “காளை முட்டியதால் சராசரியாக தினமும் ஒருவர் காயமுற்றார்” என்கிறது ஸ்பானிஷ் ரெட் க்ராஸ் சங்கம். இன்னும் 20, 25 பேர் மற்ற காயங்களுக்காக தினமும் சிகிச்சை பெற்றனர்.

இந்த விபரீத விளையாட்டின்மேல் ஏன் இப்படியொரு தணியா தாகம்? “காளைகளின் வாசனை மூக்கில் ஏற, குளம்புகளின் சத்தம் காதில் விழ, சில அங்குல இடைவெளியில் மேலும் கீழுமாக அசையும் கொம்புகள் கண்களில் பட, காளைகளின் வேகத்திற்கு ஈடுகொடுத்து சரிசமமாக ஓடும் அந்த சில விநாடிகள் இருக்கிறதே, அடடா, ஓட்டமென்றால் உண்மையில் அதுதான் ஓட்டம்” என்கிறார் ஓட்டப் பந்தய வீரர் ஒருவர். ஓடுபவர்களை கூட்டத்தினர் ஆரவாரித்து உற்சாகப்படுத்துகின்றனர். மாடு முட்டி, அவர்கள் துடிதுடித்து சாகும் காட்சியை பார்க்காவிட்டால் பார்வையாளர்கள் சிலர் சோர்ந்துபோவார்களா? அல்லது சுமார் 700 கிலோ எடையுள்ள முரட்டுக் காளையால் வெறித்தனமாக, அலாக்காக தூக்கி எறியப்படுவதை பார்க்காவிட்டால் ஏமாற்றமடைவார்களா? ரோம அரங்குகளில் திரண்டிருந்த கூட்டத்தாரை போலவே இன்றும் சிலர் இரத்தக்களரியைக் கண்டு ரசிக்க துடிக்கிறார்களா?

சாவோடு விளையாட்டு

மற்ற விதங்களிலும் சாவோடு விளையாடத் துடிப்பவர்கள் உண்டு. மோட்டார்சைக்கிள் சாகசக்காரர்கள் படுகாயத்தையும் சாவையும் துளியும் பொருட்படுத்தாமல், அருகருகே நிறுத்தப்பட்டிருக்கும் 50 கார்களைத் தாண்டுகிறார்கள் அல்லது பெரிய பாஸஞ்சர் பேருந்துகளையோ அகலமான பள்ளத்தாக்குகளையோ தாண்டுகிறார்கள். அப்படிப்பட்ட சாகசக்காரரில் ஒருவர், 37 எலும்புகளை முறித்துக்கொண்டதாகவும் 30 நாட்களாக கோமா நிலையில் கிடந்ததாகவும் கூறினார். “கை கால்களை முறித்துக்கொள்வதெல்லாம் இப்போது எனக்கு சர்வசாதாரணம். . . . எலும்பு முறிவுக்காக இதுவரை 12 முறை மேஜர் ஆபரேஷன் நடந்திருக்கிறது. உடலை அறுத்து உள்ளுக்குள் ஒரு ப்ளேட்டையோ ஸ்க்ரூவையோ பொருத்தும் ஆபரேஷன் அது. என் எலும்புகளுக்கு மொத்தமாக 35, 40 ஸ்க்ரூ போடப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஆஸ்பத்திரிக்கு போவதும் வருவதுமே என் பிழைப்பாகிவிட்டது” என்கிறார் அவர். ஒருமுறை பயிற்சி ஓட்டத்தில் அவருக்குக் காயம் ஏற்பட்டு கார்களைத் தாண்ட முடியாமல் போனபோது கூட்டத்தார் கத்திக் கூச்சலிட்டு அவர்மீது வெறுப்பைக் கொட்டினார்கள்.

திகில் பிரியர்கள் அநேகர் விபரீத விளையாட்டுக்களில் பங்குகொள்கிறார்கள்; வானளாவிய கட்டடங்களின்மீது பாதுகாப்பு சாதனம் இல்லாமல் ஏறுவது, 6,000 மீட்டர் செங்குத்தான பனிமலைகளிலிருந்து சறுக்குவது, உயர்ந்த கோபுரங்களிலிருந்தும் மேம்பாலங்களிலிருந்தும் குதிப்பது (பன்ஜீ ஜம்ப்பிங்), இன்னொருவரின் முதுகில் தொத்தியபடி பாராச்சூட்டிலிருந்து குதிப்பது, இரண்டே சிறிய கோடரிகளுடன் பனிமூடிய குத்துப்பாறைகள் மேல் ஏறுவது போன்ற உயிருக்கு ஆபத்தான சாகசங்களில் பங்குகொள்கிறார்கள். “வருடா வருடம் எப்படியும் மூன்று அல்லது நான்கு நண்பர்களை மரணத்தில் பறிகொடுப்பேன்” என புலம்பினார் பனிமலைகளில் ஏறும் வீரர் ஒருவர். விளையாட்டு உலகில் பிரபலமடைந்திருக்கும், சாவுக்கு சவால்விடும் சாகசங்களில் இவை ஒருசிலவே. “ஆபத்து நிகழும் வாய்ப்பு இருப்பதாலேயே இந்த விபரீத விளையாட்டுகள் அநேகரை சுண்டி இழுக்கின்றன” என்றார் ஓர் எழுத்தாளர்.

“மிக மிக மிதமிஞ்சிய விளையாட்டுகள்கூட மிகவும் பிரபலமடைந்து வருகின்றன” என யூ.எஸ்.நியூஸ் அண்டு உவர்ல்ட் ரிப்போர்ட் பத்திரிகை எழுதியது. “பாராச்சூட் ‘மன்னர்கள்’, கிராஃபைட் போர்டுகளுடன் ப்ளேனிலிருந்து குதித்து, பாராச்சூட்டை விரிக்காமலேயே 4,000 மீட்டர் தூரத்திலிருந்து விழுகையில் வளைவதும் திரும்புவதுமாக சர்க்கஸ் புரிகின்றனர். இந்த விளையாட்டு 1990-⁠ல் இல்லவே இல்லை, இப்போதோ இதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள். 1980-⁠ல் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்ட BASE ஜம்ப்பிங் என்ற ஒருவித விளையாட்டு . . . இப்போது நூற்றுக்கணக்கானோரின் மனங்களை கொள்ளை கொண்டிருக்கிறது. ரேடியோ டவர்கள், மேம்பாலங்கள் போன்ற நிலையான கட்டடங்களிலிருந்து​—⁠பெரும்பாலும் சட்ட விரோதமாக, இரவு நேரங்களில்​—⁠பாராச்சூட் உதவியுடன் குதிப்பதே இந்த விளையாட்டு.” இது ஏற்கெனவே அநேகரின் உயிரைப் பறித்திருக்கிறது. “BASE ஜம்ப்பிங்கில் காயம் ஏற்படுவது குறைவு; ஒன்று வாழ்வு, இல்லையேல் சாவு” என்றார் இந்த விளையாட்டில் தேர்ச்சி பெற்ற ஒருவர்.

பிடிப்பிற்காக கை விரல்களையும் கால் விரல்களையும் சிறு சந்துகளில் நுழைத்து குத்துப்பாறைகள் மேல் ஏறுவதில் ஆயிரக்கணக்கானோருக்கு அலாதி இன்பம். ட்ரக்குகள் முதற்கொண்டு தலைவலி நிவாரணிகள் வரை பல பொருட்களுக்கு வரும் டிவி, பத்திரிகை விளம்பரங்கள்கூட, வெறும் மெல்லிய கயிறுடன் நூற்றுக்கணக்கான மீட்டர் உயரத்தில் செங்குத்தான பாறையில் தொங்கிக்கொண்டிருக்கும் சாகசக்காரர்களை காட்டுகின்றன. ஐக்கிய மாகாணங்களில் 1989-⁠ல் சுமார் 50,000 பேர் இந்த விளையாட்டில் கலந்துகொள்ள துணிந்ததாக அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது; சமீப காலத்திலோ ஐந்து லட்சம் பேர் இந்த விபரீதத்தில் மோகம் கொண்டிருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை உலகெங்கும் அதிகரித்து வருகிறது.

ஐக்கிய மாகாணங்களில், “அதிகப்படியான எண்ணிக்கையில் சிறுவர்களும் சிறுமிகளும் விநோதமான, ஆபத்தான புதிய விளையாட்டுகளில் ஈடுபடுவதால் கொல்லப்படுகின்றனர் அல்லது ஊனமாகின்றனர்” என ஃபாமிலி சர்க்கிள் பத்திரிகை குறிப்பிட்டது. வேகமாக சென்றுகொண்டிருக்கும் காரில் ஜன்னல் வழியாக மேலே ஏறி நிற்பது, நகர்ந்துகொண்டிருக்கும் லிஃப்டின் மேல் நிற்பது, அல்லது விரைந்து செல்லும் சுரங்க ரயிலின் மேல் நிற்பது போன்றவற்றை உள்ளடக்கும் “கார் சர்ஃபிங்” விளையாட்டால் அநேக இளைஞர்களின் மூச்சே ஒரேயடியாக நின்றுவிட்டிருக்கிறது.

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கும் ஆசையும் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. போதிய பயிற்சி பெறாதவர்கள், மேலே சென்று வர உதவுபவர்களுக்கு சுமார் 31.5 லட்சம் ரூபாய் கொடுக்கிறார்கள். 1953 முதற்கொண்டு 700 பேருக்கும் அதிகமானோர் சிகரத்தின் உச்சியில் காலடி பதித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் அநேகர் கீழே வரவேயில்லை. சிலரது சடலங்கள் இன்னும் அங்கேயே கிடக்கின்றன. “எவரெஸ்ட்டில் ஏறியவர்களிலேயே மிக இளையவர், மிக வயதானவர், மிக வேகமாக ஏறியவர் போன்ற சாதனைகளைப் படைக்க இப்போது எல்லாரும் போட்டா போட்டி போடுகின்றனர்” என எழுதினார் ஒரு பத்திரிகையாளர். “மலை ஏறுவது மற்ற விளையாட்டுகளைப் போல் இல்லை, ஏனென்றால் இதற்கு சாக தயாராக இருப்பது ஒரு கட்டாய தேவை” என்று எழுதினார் மற்றொருவர். தைரியசாலி என மார்தட்டிக்கொள்வதற்காகவே ஆபத்தை வலிய வரவழைத்துக் கொள்வது சரியா? “தைரியம் என்பது முட்டாள்தனமான காரியங்களை செய்வதைக் குறிக்காது” என மலையேறுவதில் அனுபவம் பெற்ற ஒருவர் எச்சரித்தார். அந்த “முட்டாள்தனமான காரியங்களில் ஒன்று, அனுபவம் இல்லாதவர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ‘துணிகரப் பயணம்’ மேற்கொள்வது” என்கிறார்.

இப்படி எத்தனை எத்தனையோ சொல்லலாம். உலகெங்கும் பிரபலமாகிவரும், சாவுக்கு சவால்விடும் விளையாட்டுகள் எண்ணற்றவை, விதவிதமானவை; புதியவற்றை உருவாக்குபவர்களின் கற்பனைத் திறனைப் போலவே அவை எல்லையற்றவை. உயிரையே பணயம் வைக்க வேண்டிய மிதமிஞ்சிய விளையாட்டுகள் “இந்த 21-ஆம் நூற்றாண்டில் பார்வையாளர்கள் மற்றும் பங்குகொள்வோர் விளையாட்டுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும்” என்பது மனோதத்துவ நிபுணர் ஒருவரின் கணிப்பு.

ஏன் இந்த மோகம்?

அநேகர், சலிப்புத் தட்டாமல் இருப்பதற்காகத்தான் இந்த மிதமிஞ்சிய விபரீத விளையாட்டுகளில் ஈடுபடுவதாக நியாயம் கற்பிக்கிறார்கள். ஒரே வித வேலையை இயந்திரத்தனமாக செய்து சலித்துப்போன சிலர், அந்த வேலையை விட்டுவிட்டு மிதமிஞ்சிய விளையாட்டு உலகில் புதிதாக கால்பதிக்கின்றனர். “உயர்ந்த கட்டடங்களிலிருந்து குதிக்கும் பன்ஜீ ஜம்ப்பிங்கை ஒரு போதைப்பொருளாக நான் பயன்படுத்த ஆரம்பித்தேன், கவலைகளை மறந்து புதுவாழ்வு ஆரம்பிப்பதற்கான வழியாக அதை தேர்ந்தெடுத்தேன்” என்றார் ஒருவர். “அப்படி குதிக்கும்போது, ‘என்ன பொல்லாத பிரச்சினை? எல்லாம் கால் தூசு’ என்ற நினைப்புத்தான் எனக்கு வரும்” என்கிறார். “இவர் 456 முறை குதித்திருக்கும் அனுபவசாலி; யோசமைட்டின் எல் காப்பிட்டன் என்ற கருங்கல் மலையிலிருந்தும், சான் பிரான்ஸிஸ்கோ பே பிரிட்ஜிலிருந்தும், பிரான்ஸிலுள்ள உலகிலேயே மிக உயரமான ட்ராமிலிருந்தும் குதித்தவர் இவர்” என ஒரு பத்திரிகை குறிப்பிட்டது.

மிதமிஞ்சிய விளையாட்டுகளில் ஈடுபடும் மற்றொருவர் இவ்வாறு சொன்னார்: “காலம் நகராதது போல் இருக்கிறது. உலகில் என்ன நடக்கிறதென்ற கவலை துளியும் இல்லை.” இன்னொருவர் இவ்வாறு சொன்னார்: “நாங்கள் கிக்கிற்காக [அநேகருக்கு பண அன்பளிப்பு பெறுவதும் இதில் அடங்கும்] செய்வதை, துப்பாக்கியைக் காட்டி மிரட்டினாலும் பெரும்பாலானவர்கள் செய்ய மாட்டார்கள்.” நியூஸ்வீக் பத்திரிகை குறிப்பிட்டபடி, “இவர்கள் திகிலில் திளைக்க ஆலாய்ப்பறக்கிற கூட்டம்.”

மனோதத்துவ நிபுணர்கள் சிலர், திகில் பிரியர்களை வைத்து பெரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள். திகில் பிரியர்கள் T என்ற குணாதிசய வகையை சேர்ந்தவர்கள் என அந்த நிபுணர்களில் ஒருவர் குறிப்பிடுகிறார். ‘இந்த வகையை சேர்ந்தவர்கள் ரிஸ்க் எடுப்பதிலும் கிளர்ச்சியைத் தேடுவதிலும் இன்பங்காண்கிறார்கள்.’ “வாழ்க்கையில் விதிமுறைகள், பாரம்பரியங்கள் எனும் கைப்பிடிகளைப் பிடித்து நடப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஆனால் T வகையை சேர்ந்த திகில் பிரியர்களோ கைப்பிடிகளை விட்டுவிட்டு சொந்தமாக ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்கிறார்கள்” என்றார் அவர். இந்த T வகை குணாதிசயம் உள்ளவர்கள் மற்றவர்களைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமான சாலை விபத்துக்களில் சிக்கிக்கொள்வதாக ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றனவென அவர் சொல்கிறார். “டீனேஜர்களின் சாவுக்கு முதல் காரணம் விபத்துக்களே, திகில் வெறியை தீர்த்துக்கொள்ள விபரீதத்தில் இறங்குவதால்தான் பெரும்பாலும் இந்த விபத்துக்கள் நேரிடுகின்றன.”

உயிரைப் பணயம் வைக்கும் படு ஆபத்தான விளையாட்டுகளை நாடுவது இயல்புக்கு மாறானது என விஞ்ஞானிகளும் மனோதத்துவ நிபுணர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். அநேகர் தங்கள் உயிர் ஊசலாடும் அளவுக்கு படுகாயமடைந்து, ஆஸ்பத்திரிகளிலும் மறுவாழ்வு மையங்களிலும் நீண்ட காலம் தங்கியிருந்த பின்பும் உயிருக்கு ஆபத்தான விளையாட்டுகளில் மறுபடியும் ஈடுபட துவங்குவது, அவர்களது சிந்தனைத் திறன் குறைபடுவதையே காட்டுகிறது. இப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் மகா புத்திசாலிகளாக இருக்கலாம் என்பது வேடிக்கையான விஷயம்.

திகில் பிரியர்கள் தங்கள் உயிரையும் உடல் உறுப்புகளையும் பணயம் வைக்க விரும்புவது ஏன் என நிபுணர்களால் சரியாக சொல்ல முடியவில்லை. ஒருவேளை அதற்கான காரணங்கள் மூளை செயல்படும் விதத்தை சார்ந்திருக்கலாம் என அவர்கள் சொல்கிறார்கள். “திகில் வெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது, ஆனால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் காரியங்களில் ஈடுபடாதவாறு அவர்களை தடுக்க நாம் முயற்சிக்கலாம். மற்றவர்களின் உயிரையாவது அவர்கள் மதித்து நடக்க வேண்டுமென விரும்புகிறோம்” என்கிறார்கள்.

கிறிஸ்தவ நோக்குநிலை

உயிர் என்பது யெகோவா தேவனிடமிருந்து வந்திருக்கும் மதிப்பு வாய்ந்த பரிசு என்றே கிறிஸ்தவர்கள் கருதுகிறார்கள். தைரியத்தையும் துணிச்சலையும் காட்டுவதற்காக தேவையில்லாமல் உயிரை பணயம் வைக்கும் ஒருவர், கடவுள் அவருக்குக் கொடுத்திருக்கும் அருமையான பரிசாகிய உயிரை அவமதிக்கிறார். கூட்டத்தாரை மகிழ்விப்பதற்காகவோ சுயதிருப்திக்காகவோ உயிரோடு விளையாடுபவர்களும் அதை அவமதிக்கிறார்கள். இயேசு தமது உயிருக்கு ஆழ்ந்த மரியாதை காட்டினார், தேவையில்லாமல் அதை ஆபத்திற்குள்ளாக்கவில்லை. கடவுளை சோதிக்க அவர் மறுத்துவிட்டார்.​—மத்தேயு 4:5-7.

அதேபோல் உயிருக்கு மரியாதை காட்டும் கடமை கிறிஸ்தவர்களுக்கும் உண்டு. “நான் ஒரு குத்துப்பாறை மேல் ஏறினேன், கடைசியில் முன்னுக்கும் போக முடியாமல், பின்னுக்கும் நகர முடியாமல் சிக்கிக்கொண்டேன். கிட்டத்தட்ட செத்துப் பிழைத்த அந்த சமயத்தை இப்போது நினைத்தாலும் உடல் நடுநடுங்குகிறது. ஏதாவது ஆகியிருந்தால் எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருக்கும்!” என்று எழுதினாள் ஒரு கிறிஸ்தவ பெண்.

‘நான் வசிக்கும் இடத்தில் இப்படிப்பட்ட அநேக திகில் விளையாட்டுகள் பிள்ளைகள் மத்தியில் பிரபலம். அவற்றில் கலந்துகொள்ள என்னையும் எப்போதும் வற்புறுத்துகிறார்கள். ஆனால் அந்த விளையாட்டுகளில் ஈடுபட்டு அநேகர் இறந்துபோவதை அல்லது பயங்கரமாக காயமடைவதைப் பற்றி நான் நியூஸில் அடிக்கடி பார்க்கிறேன். திகில் உணர்வை அனுபவிக்கும் அல்ப சந்தோஷத்துக்காக யெகோவா தேவன் எனக்குக் கொடுத்திருக்கும் இந்த அருமையான உயிரை இழக்கத் துணிவது புத்திசாலித்தனமல்ல என்று எனக்கு படுகிறது’ என ஒரு கிறிஸ்தவ பெண் எழுதினாள். நீங்களும் அதேபோல் புத்திசாலித்தனத்தோடு நடந்துகொள்வீர்களாக. (g02 10/8)

[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]

© Reuters NewMedia Inc./CORBIS

[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]

Steve Vidler/SuperStock