Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

போலீஸ் பாதுகாப்பு—நம்பிக்கைகளும் பயங்களும்

போலீஸ் பாதுகாப்பு—நம்பிக்கைகளும் பயங்களும்

போலீஸ் பாதுகாப்பு​—நம்பிக்கைகளும் பயங்களும்

இங்கிலாந்தில் 19-வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்த அநேகர் தொழில்ரீதியான, சீருடையணிந்த போலீஸ் படையை உருவாக்கும் யோசனையை எதிர்த்தனர். ஆயுதம் தாங்கிய ஒரு படை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் தங்கள் சுதந்திரம் பறிபோகலாம் என்று பயந்தனர். கடைசியில், ஷோஷெஃப் ஃபூஷேயின் தலைமையில் பிரான்சில் இயங்கிய போலீஸ் உளவாளிகளைப் போலவே தங்களுக்கும் ஏற்படலாம் என்று சிலர் அஞ்சினர். என்றாலும், ‘போலீஸ் படையில்லாமல் என்ன செய்வோம்?’ என்ற கேள்வியை சிந்திக்க வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு ஏற்பட்டது.

லண்டன், உலகிலேயே மாபெரும் நகரமாக, செல்வ செழிப்புமிக்கதாக ஆகியிருந்தது; பெருகி வரும் குற்றச்செயல் வியாபாரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தது. தொண்டார்வம் மிக்க இரவுநேர காவலாளிகளாலோ திருடர்களை பிடிக்கும் போவ் ஸ்டிரீட் ரன்னர்ஸ் என்ற தொழில்ரீதியான தனியார் நிறுவனத்தாலோ மக்களையும் அவர்கள் உடைமையையும் பாதுகாக்க முடியவில்லை. “குற்றச்செயலும் சீர்குலைவும் நாகரிகமான சமுதாயத்தில் நிகழக்கூடாதவை என்ற உணர்வு வெகுவாக அதிகரித்தது” என்று இங்கிலாந்தின் போலீஸ்: அரசியல், சமுதாய சரித்திரம் என்ற தனது ஆங்கில புத்தகத்தில் கிளைவ் எம்ஸ்லீ கூறுகிறார். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில் சர் ராபர்ட் பீல் a என்பவரின் தலைமையில் தொழில்ரீதியான போலீஸ் படையை உருவாக்க லண்டன்வாசிகள் ஒருவழியாக தீர்மானித்தனர். செப்டம்பர் 1829-⁠ல் சீருடையணிந்த மாநகர போலீஸ் கான்ஸ்டபிள்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஏரியாக்களில் ரோந்து வர ஆரம்பித்தனர்.

போலீஸ் என்ற பெயரே, அவர்களுடைய நவீன சரித்திரத்தின் ஆரம்ப காலம் முதல் நம்பிக்கையையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது; பாதுகாப்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வார்களோ என்ற பயத்தையும் கிளப்பியுள்ளது.

அமெரிக்க போலீஸ் பிறந்த கதை

ஐக்கிய மாகாணங்களைப் பொறுத்த வரை முதன்முதலாக நியூ யார்க் மாநகரத்தில்தான் தொழில்ரீதியான போலீஸ் படை ஆரம்பமானது. நகரத்தில் பணப் புழக்கம் அதிகரித்தபோது குற்றச்செயல்களும் அதிகரித்தன. 1830-களுக்குள் குற்றச்செயல்கள் பற்றிய கோரமான கதைகளை ஒவ்வொரு குடும்பத்தாலும் படித்து தெரிந்துகொள்ள முடிந்தது; ஏனெனில், புதிதாக வெளியிடப்பட்ட பென்னி பிரெஸ் என்ற மலிவான செய்தித்தாள்களில் இவை பிரசுரிக்கப்பட்டன. குற்றச்செயல்களைக் குறித்த பொதுமக்களின் எதிர்ப்பு அதிகரிக்கவே 1845-⁠ல் நியூ யார்க்கில் போலீஸ் படை உருவானது. அன்று முதல், நியூ யார்க் வாசிகளும் லண்டன்வாசிகளும் ஒருவர் மற்றவரின் போலீஸ் படையைப் பார்த்து மயங்கியிருக்கின்றனர்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் ஆயுத படையைப் பற்றி ஆங்கிலேயர்களுக்கு இருந்த அதே பயம் அமெரிக்கர்களுக்கும் இருந்தது. ஆனால் இவ்விரு நாடுகளுமே வெவ்வேறு வழிகளில் தீர்வுகளைக் கண்டன. கரும் ஊதா உடையும், உயரமான தொப்பியும் அணிந்த பண்பான போலீஸ்காரர்களை ஆங்கிலேயர்கள் தெரிவு செய்தனர். அவர்களிடம் இருந்ததெல்லாம் மறைவாக வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய தடி மட்டுமே. இன்றுவரை பிரிட்டிஷ் பாபிக்கள், நெருக்கடி நேரங்களைத் தவிர மற்ற சமயங்களில் துப்பாக்கி எடுத்துச் செல்வதே கிடையாது. என்றாலும், “பிரிட்டிஷ் போலீஸ், காலப்போக்கில் முற்றிலும் ஆயுதம் தரித்த படையாகும் என்ற . . . உணர்வு தவிர்க்க முடியாததாக வளர்ந்து வருகிறது” என ஓர் அறிக்கை கூறுகிறது.

ஐக்கிய மாகாணங்களிலோ, அரசாங்கம் தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யலாம் என்ற பயத்தின் காரணமாக ஐ.மா. அரசியல் அமைப்பின் இரண்டாவது திருத்தம் பிறந்தது; அது, “ஆயுதங்களை வைத்திருக்கவும் எடுத்துச் செல்லவும் மக்களுக்கு உரிமை” அளித்தது. இதனால் போலீஸாரும் துப்பாக்கி கேட்டனர். அவர்கள் அதை உபயோகித்தது காலப்போக்கில், போலீஸாருக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே தெருக்களில் துப்பாக்கி சூடு நடப்பதற்கு வழிநடத்தியது; அமெரிக்க போலீஸ் பற்றிய பிரபல கருத்திற்கு இதுவே காரணமானது. லண்டனிலிருந்து மிகவும் வித்தியாசப்பட்ட ஒரு சமுதாயத்தில்தான் ஐக்கிய மாகாணங்களின் முதல் போலீஸ் படை உருவானது; இதுவே, துப்பாக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அமெரிக்கர்களின் மனநிலைக்கு மற்றொரு காரணமாகும். கிடுகிடுவென பெருகிய நியூ யார்க்கின் ஜனத்தொகையால் அது பெரும் குழப்பத்திற்குள்ளானது. முக்கியமாக ஐரோப்பாவிலிருந்து ஆயிரக்கணக்கானோர் அங்கு குடியேறியதாலும், 1861-65-⁠ன் உள்நாட்டு போர் ஆரம்பித்த பிறகு ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் குடியேறியதாலும் இன வன்முறைகள் நிகழ்ந்தன. எனவே, அதிக கெடுபிடியான முறைகளை கையாள வேண்டும் என்று போலீஸ் உணர்ந்தது.

ஆகவே, போலீஸ் படை தேவைப்படும் தொல்லையாகவே பெரும்பாலும் கருதப்பட்டது. ஓரளவிற்காவது ஒழுங்கும் பாதுகாப்பும் நிலவும் என்ற நம்பிக்கையில், அவ்வப்போது நிகழும் அத்துமீறல்களை சகித்துக்கொள்ள மக்கள் தயாராயிருந்தனர். பூமியின் சில பாகங்களிலோ வேறு விதமான போலீஸ் படை உருவாகி வந்தது.

பயங்கர போலீஸ்

நவீன கால போலீஸ் படைகள் உருவாகிய 19-வது நூற்றாண்டின் ஆரம்பத்தில், மனிதவர்க்கத்தில் பெரும் பகுதியினர் ஐரோப்பிய பேரரசுகளின் ஆதிக்கத்தில் வாழ்ந்து வந்தனர். பொதுவாக, ஐரோப்பிய போலீஸ் படை, மக்களைவிட ஆளுபவர்களை பாதுகாப்பதற்காகவே அமைக்கப்பட்டிருந்தது. ஆயுதம் தாங்கிய, இராணுவத்திற்கு ஒத்த போலீஸ் படைகளை தங்கள் நாடுகளில் விரும்பாத ஆங்கிலேயர்கள்கூட காலனி நாடுகளை அடக்கி ஒடுக்க இராணுவ போலீஸை உபயோகிக்க கொஞ்சமும் தயங்கவில்லை. “குடியேற்ற நாடுகளில் போலீஸ் இருந்த காலத்தில் அநேகமாக எப்போதுமே அவர்களால் கொடுமை, ஊழல், வன்முறை, கொலை, அதிகார துஷ்பிரயோகம் போன்றவை விளைவடைந்தன” என்று உலகளாவிய போலீஸாரின் பணி என்ற ஆங்கில புத்தகத்தில் ராப் மாபீ கூறுகிறார். ஐரோப்பிய குடியேற்ற நாடுகளிலிருந்த போலீஸ் படைகளால் ஓரளவு நன்மைகள் ஏற்பட்டதைக் கூறிய பிறகு, “போலீஸ் என்றாலே அரசாங்கத்தின் படைதான், சமுதாய சேவை புரிபவை அல்ல என்ற எண்ணம் உலகெங்கும் பரவியது” அவர்கள் நிமித்தமாகத்தான் என்றும் அந்தப் புத்தகம் தொடர்ந்து கூறுகிறது.

கொடுங்கோல் அரசாங்கங்கள், புரட்சி வெடிக்கலாம் என்ற பயத்தில் தங்கள் குடிமக்களை வேவு பார்க்க அநேகமாக எப்போதுமே இரகசிய போலீஸை உபயோகித்துள்ளன. இவர்கள் சித்திரவதையைக் கையாண்டு தேவையான தகவல்களை கறந்தெடுத்தனர், கலகக்காரர்கள் என சந்தேகிப்பவர்களை கொல்ல அல்லது விசாரணை இல்லாமல் கைது செய்யக்கூட தயங்கியதில்லை. நாசிகளுக்கு கெஸ்டப்போக்களும், சோவியத் யூனியனுக்கு கேஜிபியும், கிழக்கு ஜெர்மனிக்கு ஷ்டாஸியும் இருந்தனர். ஷ்டாஸிக்கள், ஏறக்குறைய 1.6 கோடி மக்களை கட்டுப்படுத்த 1,00,000 அதிகாரிகளையும் சுமார் ஐந்து லட்சம் இன்ஃபார்மர்கள் அல்லது ஆள்காட்டிகளையும் உபயோகித்தனர் என்பது ஆச்சரியமான விஷயம். இந்த அதிகாரிகள் 24 மணிநேரமும் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டனர், ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரைப் பற்றிய விவரங்களைத் தங்கள் வசம் வைத்திருந்தனர். “ஷ்டாஸி அதிகாரிகள் வரம்புமீறியும் வெட்கம் கெட்டத்தனமாகவும் நடந்துகொண்டனர். புராட்டஸ்டன்ட், கத்தோலிக்க பிரிவுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உட்பட பெரும் எண்ணிக்கையில் பாதிரியார்களை இரகசிய ஆள்காட்டிகளாக நியமித்தனர். அவர்களுடைய அலுவலகங்களிலும் பாவ மன்னிப்பு அறைகளிலும் எக்கச்சக்கமான ஒட்டுக்கேட்கும் கருவிகள் இருந்தன” என ஜான் கோலர் என்பவர் ஷ்டாஸி என்ற தன் புத்தகத்தில் கூறுகிறார்.

என்றாலும், பயங்கர போலீஸ் படை கொடுங்கோல் அரசாங்கங்களிடம் மட்டுமே இருப்பதில்லை. மற்ற இடங்களிலுள்ள பெருநகர போலீஸாரும் சட்டம் ஒழுங்கை ஸ்தாபிக்க அளவுக்கதிகமான பலப்பிரயோகத்தை உபயோகிக்கும்போது​—முக்கியமாக சிறுபான்மை தொகுதியினரை குறிவைக்கும்போது—​பீதியை ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸில் மிகவும் பரவலாக அறியப்பட்டிருந்த ஓர் ஊழலைப் பற்றி குறிப்பிட்டு, “போலீஸின் தவறான நடத்தை அக்கிரமத்தின் புதிய உச்சக்கட்டத்தை எட்டியிருப்பதைக் காட்டுகிறது, அடாவடி போலீஸ் என்ற புதிய பதத்தை உருவாக்கியுள்ளது” என்று செய்தி பத்திரிகை ஒன்று கூறியது.

ஆகவே, அரசாங்க அதிகாரிகளின் மனதில் பின்வரும் கேள்வியே மேலோங்கி நிற்கிறது: போலீஸ் துறைகள் தங்கள் இமேஜை முன்னேற்றுவிக்க என்ன செய்யலாம்? தாங்கள் பொது சேவை புரிவதை வலியுறுத்த அநேக போலீஸ் படைகள், தங்கள் சேவையால் சமுதாயத்திற்கு விளையும் பலன்களை சிறப்பித்துக் காட்ட முயன்றிருக்கின்றன.

போலீஸின் சமுதாய சேவை பற்றிய நம்பிக்கை

ஜப்பானின் பாரம்பரிய சுற்றுவட்டார போலீஸ் சேவை என்பது மற்ற நாடுகளின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. பொதுவாக ஜப்பானிய போலீஸார் சிறிய போலீஸ் ஸ்டேஷன்களிலிருந்து சேவை செய்கின்றனர்; ஏறக்குறைய பன்னிரண்டு அதிகாரிகள் பல ஷிஃப்டுகளில் அங்கு வேலை செய்வர். பிரிட்டனைச் சேர்ந்த குற்றவியல் பேராசிரியரும் ஜப்பானில் பல வருடங்கள் வாழ்ந்தவருமான பிராங்க் லைஷ்மன் இவ்வாறு கூறுகிறார்: “சிறிய போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த அதிகாரிகளின் நட்பான சேவைகள் பலரும் அறிந்ததே: பெரும்பாலும் ஜப்பானில் பெயரில்லாத வீதிகளில் விலாசங்கள் கண்டுபிடிக்க உதவுவது; மழையில் மாட்டிக்கொண்டு தவிக்கும் பயணிகளுக்கு கேட்பாரற்று கிடக்கும் குடைகளை கொடுப்பது; குடிபோதையில் தடுமாறும் வியாபாரிகள் கடைசி ரயிலை பிடித்து பத்திரமாக வீட்டிற்கு போய் சேர உதவுவது; ‘குடிமக்கள் பிரச்சினைகளுக்கு’ ஆலோசனை அளிப்பது.” மற்றவர்கள் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு, வீதிகளில் பயமில்லாமல் நடமாடலாம் என்ற நற்பெயரை ஜப்பான் பெற சுற்றுவட்டார போலீஸ் சேவை ஒரு காரணமாகும்.

இந்த விதமான சேவை மற்ற இடங்களில் பயனுள்ளதாக இருக்குமா? குற்றவியலாளர்கள் சிலர் அதில் நல்லதொரு பாடம் இருப்பதை உணர ஆரம்பித்தனர். தொலைத்தொடர்பில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்களால் போலீஸார் அவர்கள் உதவியளிக்க வேண்டிய மக்களிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று அநேக நகரங்களில், நெருக்கடி நிலை ஏற்படுகையில் உதவுவதே போலீஸின் முக்கிய வேலை என்பதுபோல ஆகிவிட்டது. குற்றச்செயலை தடுப்பதற்கு ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மறைந்துவிட்டது என்றே சில சமயங்களில் தோன்றுகிறது. இத்தகைய சூழ்நிலையால் சுற்றுவட்டார காவல் என்பது மீண்டும் பிரபலமாகி வருகிறது.

சுற்றுவட்டார காவல்

டூயி என்ற போலீஸ் கான்ஸ்டபிள், வேல்ஸ் நகரில் தான் செய்யும் வேலையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “இது நல்ல பலன் தருகிறது, குற்றச்செயலை குறைக்கிறது. ஒவ்வொருவரும் பிறருடைய பாதுகாப்புக்கு கவனம் செலுத்தும்படி தூண்டுவதே சுற்றுவட்டார காவல் ஆகும். அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், அவர்களுடைய பெயர்கள், தொலைபேசி எண்கள் போன்றவற்றை அறிந்துகொள்ளவும், குற்றங்களை தடுக்கும் வழிகளைப் பற்றி அறியவும் நாங்கள் கூட்டங்களை ஏற்பாடு செய்கிறோம். சுற்றுவட்டாரங்களில் வசிப்பவர்களிடையே மீண்டும் சமுதாய உணர்வை ஊட்டுவதால் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் மகிழ்கிறேன். அநேக சமயங்களில் பக்கத்து வீட்டுக்காரர் யார் என்றுகூட தெரியாமல் மக்கள் வாழ்கிறார்கள். மக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதால் இது வெற்றி பெறுகிறது.” இது, போலீஸாருக்கும் மக்களுக்கும் இடையே நல்லுறவையும் அதிகரிக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களிடம் அதிக கரிசனை காட்டும்படி போலீஸாரை உற்சாகப்படுத்துவது மற்றொரு முயற்சியாகும். “டாக்டர்கள் நோயாளிகளை நடத்தும் விதம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் போலீஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை நடத்தும் விதம் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்” என்று பிரசித்தி பெற்ற டச் விக்டமாலஜிஸ்ட் யான் வான் டேக் எழுதினார். இன்றும் அநேக இடங்களில், குடும்ப வன்முறையையும் கற்பழிப்பையும் உண்மையில் குற்றங்களாகவே போலீஸ் கருதுவதில்லை. ஆனால், “சமீப காலங்களில் போலீஸார் குடும்ப வன்முறையையும் கற்பழிப்பு சம்பவங்களையும் கையாளும் விதம் வெகுவாக மேம்பட்டுள்ளது. இருந்தாலும், முன்னேற்றம் செய்ய இன்னமும் இடமுண்டு” என ராப் மாபீ கூறுகிறார். அநேகமாக அனைத்து போலீஸ் படையும் முன்னேற்றம் செய்வதற்குரிய மற்றொரு அம்சமும் உள்ளது; அதுவே போலீஸாரின் அதிகார துஷ்பிரயோகம்.

போலீஸ் ஊழலைப் பற்றிய பயம்

முக்கியமாக, போலீஸ் இலாகாவில் நடக்கும் ஊழலைப் பற்றிய செய்திகளை கேள்விப்படுகையில் அவர்கள் நம்மை பாதுகாப்பார்கள் என்ற எண்ணம் சில சமயங்களில் முட்டாள்தனமாக தோன்றுகிறது. போலீஸ் சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்தே அப்படிப்பட்ட செய்திகள் இருந்திருக்கின்றன. “போலீஸ் யார், கொள்ளைக்காரன் யார் என்ற வித்தியாசத்தைக் காண்பது அநேக நியூ யார்க் வாசிகளுக்கு கடினமாகி வருகிறது” என நியூ யார்க் போலீஸ் துறை​—⁠அந்த நகரமும் அதன் போலீஸும் என்ற ஆங்கில புத்தகம் 1855-⁠ம் வருடத்தைப் பற்றி விவரித்தது. காவல் துறைகளில் “ஊழல் புரையோடி கிடக்கிறது, லாயக்கற்றவர்களும் மனித உரிமைகளை மீறுபவர்களும் நிறைந்திருக்கிறார்கள்” என டங்கன் கிரீன் எழுதிய லத்தீன் அமெரிக்காவின் முகங்கள் என்ற ஆங்கில புத்தகம் அறிக்கை செய்கிறது. “மாதத்தில் [5,000 ரூபாய்க்கும்] குறைவாக சம்பாதிக்கும் ஒரு போலீஸ்காரரிடம் வேறு எதை நீங்கள் எதிர்பார்க்க முடியும்? லஞ்சத்தை நீட்டினால் அவர் என்ன செய்வார்?” என்று 14,000 லத்தீன் அமெரிக்க போலீஸார் அடங்கிய படையின் முக்கிய பெர்சனல் ஆபீஸர் கேட்டார்.

ஊழல் என்ற பிரச்சினை எந்தளவுக்கு மோசமாக உள்ளது? இக்கேள்விக்கான பதில், யாரிடம் கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. “நேர்மையற்ற போலீஸார் கொஞ்சம் பேர் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனால் பெரும்பான்மையான அதிகாரிகள் நேர்மையானவர்களே. அது எனது அனுபவத்தில் நான் கண்ட உண்மை” என்கிறார் 1,00,000 பேர் உள்ள நகரத்தில் பல வருடங்களாக ரோந்து பணி செய்து வந்த வட அமெரிக்காவிலுள்ள ஒரு போலீஸ்காரர். மறுபட்சத்தில், “ஊழல் எங்கும் நிறைந்திருப்பதாகவே நினைக்கிறேன். போலீஸார் மத்தியில் நேர்மையைக் காண்பது மிகவும் அபூர்வம். கொள்ளையடிக்கப்பட்ட வீட்டை சோதனை செய்கையில் பணம் கிடைத்தால் ஒரு போலீஸ்காரர் அதை எடுத்துக் கொள்ளலாம். திருட்டுப்போன விலையுயர்ந்த பொருட்களை கண்டுபிடித்தால் அதில் ஒரு பகுதியை அவரே வைத்துக்கொள்வார்” என்று 26 வருட அனுபவம் கொண்ட மற்றொரு தேசத்திலுள்ள குற்றச்செயல் ஆய்வாளர் பதிலளிக்கிறார். சில போலீஸ்காரர்கள் ஊழல் பேர்வழிகளாவது ஏன்?

சிலர் ஆரம்பத்தில் உயர்ந்த தராதரங்களைக் கடைப்பிடிக்கிறார்கள்; ஆனால் ஊழல் செய்யும் சகாக்களின் நட்பிற்கும் அன்றாடம் தொடர்புகொள்கிற குற்றவாளிகளின் மோசமான தராதரங்களுக்கும் மெல்ல மெல்ல அடிபணிந்துவிடுகிறார்கள். போலீஸார் அறிந்தவை என்ற ஆங்கில புத்தகம் சிகாகோவை சேர்ந்த ரோந்து போலீஸ்காரர் பின்வருமாறு கூறியதாக மேற்கோள் காட்டுகிறது: “போலீஸ் அதிகாரிகளைப் பொறுத்தவரை தங்கள் சொந்த அனுபவத்தில் பொல்லாப்பை பற்றி அறிந்திருக்கிறார்கள். அது அவர்களைச் சுற்றிலும் எங்கும் நிறைந்திருக்கிறது. அவர்கள் அதை தொடுகிறார்கள் . . . சுவைக்கிறார்கள் . . . முகர்கிறார்கள் . . . கேட்கிறார்கள் . . . அதை சமாளித்தாக வேண்டும்.” இப்படிப்பட்ட சீர்கேட்டோடு தொடர்புகொள்வது சீக்கிரத்திலேயே மோசமான விளைவை ஏற்படுத்தலாம்.

போலீஸாரின் சேவை மதிப்புமிக்கதாக இருக்கிறபோதிலும் அதில் குறைகள் இல்லாமல் இல்லை. இதைவிட சிறந்த ஒன்று கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கலாமா? (g02 7/8)

[அடிக்குறிப்பு]

a பிரிட்டிஷ் போலீஸின் ஸ்தாபகர் சர் ராபர்ட் (பாபி) பீல் என்பவரின் பெயராலேயே அவர்கள் பாபிக்கள் என்று அறியப்படலாயினர்.

[பக்கம் 89-ன் பெட்டி/படங்கள்]

“பிரிட்டிஷ் பாபிக்கள் தங்கமானவர்கள் அல்லவா?”

தொழில்ரீதியான போலீஸ் படை என்ற ஆடம்பர செலவை முதன்முதலில் ஏற்க துணிந்தவர்களுள் ஆங்கிலேயர்களும் அடங்குவர். நேரந்தவறாமல் இயங்கி வந்த அவர்களின் திறம்பட்ட குதிரைவண்டி திட்டத்தைப் போலவே தங்கள் சமுதாயமும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று விரும்பினர். ஸ்காட்லாந்து யார்ட்டில் தலைமையகத்தைக் கொண்ட லண்டன் மாநகர போலீஸை அங்கீகரிக்கும்படி உள்துறை செயலரான சர் ராபர்ட் (பாபி) பீல் 1829-⁠ல் பாராளுமன்றத்தை இணங்க வைத்தார். குடிபோதைக்கும் தெரு சூதாட்டங்களுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுத்த பாபிக்கள் ஆரம்பத்தில் பிரபலமாயிராவிட்டாலும் பின்னர் மக்களின் மனங்களைக் கவர்ந்தனர்.

1851-⁠ல், பிரிட்டிஷ் தொழிற்துறையின் அரும் பெரும் சாதனைகளை கண்டுகளிக்க மாபெரும் பொருட்காட்சிக்கு வரும்படி உலகுக்கே அழைப்புவிடுப்பதில் லண்டன் பெருமிதம் கொண்டது. நேர்த்தியான தெருக்களையும், குடிகாரர்கள், வேசிகள், போக்கத்தவர்கள் ஆகியோர் இல்லாததையும் கண்டு வந்திருந்தோர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். திறமைமிக்க போலீஸ்காரர்கள் கும்பல்களை கட்டுப்படுத்தினர், சாமான்களை தூக்கிச் செல்ல வந்திருந்தோருக்கு கைகொடுத்தனர், சாலையை கடக்க மக்களுக்கு உதவினர், டாக்ஸி வரை மூதாட்டிகளை தூக்கியும் சென்றனர். இதனால் ஆங்கிலேயர்களும் வெளியூர் விருந்தாளிகளும் ஏககுரலில், “பிரிட்டிஷ் பாபிக்கள் தங்கமானவர்கள் அல்லவா?” என புகழாரம் சூட்டியதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

தொழில்ரீதியான குற்றச்செயல் சுவடு தெரியாமல் போய்விடும் என்று செஸ்டர் நகரின் முக்கிய கான்ஸ்டபிள் 1873-⁠ல் கற்பனை செய்யுமளவிற்கு குற்றச்செயலைத் தடுப்பதில் அவர்கள் அவ்வளவு திறம்பட்டவர்களாக திகழ்ந்தார்கள்! ஆம்புலன்ஸ், தீயணைப்பு படை போன்ற சேவைகளையும் போலீஸார் ஒழுங்கமைக்க ஆரம்பித்தனர். ஏழைகளுக்கு ஷூக்களும் துணிமணிகளும் கொடுத்த அறக்கட்டளை நிலையங்களையும் ஸ்தாபித்தனர். சிலர் சிறு பையன்களுக்கான கிளப்புகள், சுற்றுலாக்கள், விடுமுறை விடுதிகள் போன்றவற்றை ஏற்படுத்தினர்.

ஊழலிலும் கொடுமையிலும் ஈடுபடும் போலீஸாரை தண்டிப்பதிலும் புதிய போலீஸ் படைக்கு பிரச்சினைகள் இருந்தன. ஆனால், அதிக பலத்தை உபயோகிக்காமலேயே பெரும்பாலானோர் சட்டம், ஒழுங்கை காத்ததில் பெருமை கொண்டனர். 1853-⁠ல் விக்கன், லங்காஷயரிலுள்ள போலீஸ், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சுரங்க தொழிலாளிகளின் கலவரத்தை எதிர்ப்பட்டனர். வெறுமனே பத்து போலீஸ்காரர்களுடன் சென்ற தைரியமிக்க போலீஸ் அதிகாரி சுரங்க முதலாளியின் துப்பாக்கிகளை உபயோகிக்க தொடர்ந்து மறுத்தார். அப்பாவைப் போலவே போலீஸ்காரரான ஹெக்டர் மக்லௌடுக்கு 1886-⁠ல் வந்த ஒரு கடிதம் அங்கு நிலவிய சூழலை சுட்டிக்காட்டுகிறது. அது, ஆங்கில போலீஸ் என்ற புத்தகத்தில் இவ்வாறு மேற்கோள் காட்டப்பட்டிருந்தது: “முரட்டுத்தனமாக நடந்தால் பொதுமக்களின் ஆதரவை இழப்பாய் . . . ஒரு போலீஸ்காரன் சமுதாயத்தின் சேவகன் என்பதால் பொதுமக்களின் நலனையே முதலில் வைக்கிறேன், தற்போது அவர்களுக்கு உதவும்படியே நீ நியமிக்கப்பட்டிருக்கிறாய்; அவர்களையும் உன் மேலதிகாரியையும் பிரியப்படுத்த வேண்டியது உன் கடமை.”

மாநகர போலீஸாக இருந்து ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் ஹேடன் இவ்வாறு கூறுகிறார்: “போலீஸ்காரராக திறம்பட செயல்படுவதற்கு சமுதாயத்தின் ஒத்துழைப்பு தேவை என்பதால் எப்போதும் சுயக்கட்டுப்பாட்டோடு வேலை செய்யும்படியே எங்களுக்கு கற்பிக்கப்படுகிறது. கடைசி ஆயுதமாகத்தான் எங்களுடைய சிறிய மரத்தடியை உபயோகிப்போம்; பெரும்பாலான அதிகாரிகள் தங்கள் வேலைக்காலம் முழுவதிலுமே அதை உபயோகிக்க மாட்டார்கள்.” 21 வருடங்கள் தொடர்ந்து ஒளிபரப்பான, டிக்ஸன் ஆஃப் டாக் கிரீன் என்ற பிரபல டிவி தொடரும் பிரிட்டிஷ் பாபிக்களின் நற்பெயருக்கு காரணமாக இருந்தது. அது, தன் ஏரியாவிலிருந்த அனைவரையும் அறிந்திருந்த நேர்மையான கான்ஸ்டபிளைப் பற்றிய கதை. அந்த இமேஜிற்கு இசைவாக வாழும்படி அது போலீஸாரை தூண்டியிருக்கலாம்; ஆனால், போலீஸ் மீது ஆங்கிலேயர்களுக்கு இருந்த பற்றுதலை அது நிச்சயமாகவே தூண்டிவிட்டது.

1960-களில் பிரிட்டனின் மனநிலை மாற ஆரம்பித்தது, தேசிய பெருமை என்ற மரபு மாறி அதிகாரத்தை கேள்வி கேட்கும் மரபு ஆரம்பமானது. சுற்றுவட்டார காவல் திட்டத்தின் மூலம் பொதுமக்களின் ஆதரவைப் பெற அவர்கள் முயன்றபோதிலும், காவல்துறையில் நடந்த ஊழல், இன பாகுபாடு பற்றிய அறிக்கைகள் வெளிவந்ததால் 1970-களில் அவர்களுடைய இமேஜ் பாதிக்கப்பட்டது. சமீபத்தில், இன பாகுபாடு, குற்றவாளியாக நிரூபிக்க அத்தாட்சிகளை ஜோடிப்பது போன்ற பல குற்றச்சாட்டுகள் குவிந்த பிறகு தங்கள் நடத்தையை மேம்படுத்த போலீஸார் உண்மையான முயற்சிகளை அதிகமாக எடுத்திருக்கின்றனர்.

[படத்திற்கான நன்றி]

மேலே உள்ள படம்: http://www.constabulary.com

[பக்கம் 10-ன் பெட்டி/படம்]

நியூ யார்க்கில் ஓர் அதிசயம்?

போலீஸார் விசேஷ முயற்சிகள் எடுத்தால் அபார பலன்கள் கிடைக்கலாம். உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களில் ஒன்றாக நியூ யார்க் பல காலம் கருதப்பட்டு வந்தது; 1980-களின் முடிவிலோ சோர்வுற்ற போலீஸாரும் தங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதுபோல் தோன்றியது. பொருளாதார பற்றாக்குறையால் சம்பள உயர்வு அளிக்காதிருக்கவும் போலீஸின் எண்ணிக்கையை குறைக்கவும் வேண்டிய கட்டாயம் அந்நகர அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. போதைப்பொருள் விற்பனையாளர்கள் தங்கள் தொழிலை விஸ்தரித்தனர், இதனால் வன்முறை பல மடங்கு அதிகரித்தது. நகர மையத்தில் வசித்தோர் பெரும்பாலும் துப்பாக்கி வெடியோசையைக் கேட்டுக்கொண்டுதான் இரவு தூங்கச் சென்றனர். 1991-⁠ல் மிகப் பெரிய இனக் கலவரங்கள் எழுந்தன, போலீஸாரும் தங்கள் குறைகளை வெளிப்படுத்த கூச்சல்போட்டு எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தினர்.

ஆனால், புதிதாக வந்த ஒரு போலீஸ் தலைவர் தன் அதிகாரிகளை உந்துவிப்பதில் அக்கறை காட்டினார்; ஏரியா வாரியாக போலீஸின் திட்டங்களை ஆராய அவர்களோடு அடிக்கடி கூட்டம் நடத்தினார். நியூ யார்க் போலீஸ் டிப்பார்ட்மென்ட் என்ற தங்கள் புத்தகத்தில் ஜேம்ஸ் லார்ட்னர் மற்றும் தாமஸ் ரபெட்டோ இவ்வாறு விவரிக்கின்றனர்: “துப்பறிபவர்களின் தலைவரைப் பற்றி அல்லது போதைப்பொருள் இலாகாவின் தலைவரைப் பற்றி ஏரியா கமாண்டர்கள் வெறுமனே பேப்பர்களில்தான் வாசித்தனர், நேரில் பார்த்ததே கிடையாது. இப்பொழுதோ அனைவரும் சேர்ந்து பல மணிநேரம் கலந்துபேசுகிறார்கள்.” குற்றச்செயல்களின் எண்ணிக்கை மளமளவென குறைந்தது. கொலைகளும் படுவேகமாக குறைந்ததாக அறிக்கை செய்யப்பட்டது; 1993-⁠ல் ஏறக்குறைய 2,000 என்பதிலிருந்து 1998-⁠ல் 633 என்ற எண்ணிக்கையை எட்டியது, 35 வருடங்களில் இதுவே மிகவும் குறைவான எண்ணிக்கையாகும். இதை ஓர் அதிசயம் என்றே நியூ யார்க் நகரவாசிகள் பேச ஆரம்பித்தனர். கடந்த எட்டு வருடங்களில், அறிக்கை செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 64 சதவிகிதம் குறைந்திருக்கிறது.

இந்த மாற்றத்துக்குக் காரணம் என்ன? காம்ப்ஸ்டாட் என்ற “குற்றத்தை கண்டுபிடிக்கும் ஒரு திட்டமே; அதாவது ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு ஏரியாவாக புள்ளிவிவரங்களை ஆராய்ந்து பிரச்சினைகளை கண்டுபிடித்து உடனுக்குடன் அவற்றை சரிசெய்வதே” இந்த வெற்றிக்கு ஒரு காரணம் என 2002, ஜனவரி 1-⁠ம் தேதியிட்ட த நியூ யார்க் டைம்ஸ் கருத்து தெரிவித்தது. “குற்றம் எங்கே நடக்கிறது, ஏன் நடக்கிறது என்பதை ஆராய்ந்து, அதற்கு ஏற்றவாறு படைகளையும் [போலீஸையும்] மற்ற வசதிகளையும் அந்த இடங்களுக்கு அனுப்பி வைத்து அவற்றிற்கு அதிக கவனம் செலுத்தினோம். இவ்வாறுதான் குற்றத்தை குறைக்க முடியும்” என முன்னாள் போலீஸ் கமிஷனர் பர்னார்ட் கெர்க் கூறினார்.

[பக்கம் 7-ன் படம்]

ஜப்பானிய போலீஸ் ஸ்டேஷன்

[பக்கம் 7-ன் படம்]

ஹாங்காங்கில் போக்குவரத்து போலீஸ்

[பக்கம் 89-ன் படம்]

ஆங்கிலேய கால்பந்தாட்ட போட்டியில் கும்பலைக் கட்டுப்படுத்துதல்

[பக்கம் 9-ன் படம்]

விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதும் போலீஸாரின் கடமைகளில் அடங்கும்