எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
கவலைப்படுதல் “இளைஞர் கேட்கின்றனர் . . . அதிகமாக கவலைப்படுவதை நான் எப்படி நிறுத்துவது?” (அக்டோபர் 8, 2001) என்ற கட்டுரைக்கு நன்றி. எனக்கு 17 வயது; என்னுடைய உயர்நிலை பள்ளிப் படிப்பை முடித்த பின்பு என்ன செய்வது என நினைத்து தினம் தினம் கவலைப்படுகிறேன். என்னுடைய கவலைகளை எல்லாம் என் மனசுக்குள்ளேயே பூட்டி வைக்க முயலுகிறேன். ஏனென்றால் மற்றவர்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை, அதனால் உள்ளுக்குள்ளேயே குமுறுகிறேன். என்னுடைய அம்மாவிடமும் சபையிலுள்ள முதிர்ச்சி வாய்ந்தவர்களிடமும் பேசுவது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தக் கட்டுரை எனக்கு உணர்த்தியது.
எல். ஆர்., ஐக்கிய மாகாணங்கள் (g02 5/8)
எனக்கு வயது 17. அம்மாவின் உடல்நிலை, பள்ளிப் பாடங்கள், வீட்டு வேலைகள்—இவற்றை பற்றி நான் அடிக்கடி கவலைப்படுகிறேன். கவலைப்படுவதைப் பற்றி கிறிஸ்தவ கூட்டங்களில் ஆலோசனை கொடுக்கும் போதெல்லாம் அம்மா என்னை இடிப்பார்கள். எந்த வேலை எவ்வளவு முக்கியமோ அதற்கு ஏற்றாற்போல் நேரத்தை செலவிட தீர்மானிப்பது பற்றியும் விருப்பமற்ற வேலைகளைக்கூட ஒத்திப்போடாமல் செய்து முடிப்பதைப் பற்றியும் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையான குறிப்புகளை ரசித்துப் படித்தேன். இந்தக் கட்டுரைக்கு நன்றி.
எச். எச்., ஐக்கிய மாகாணங்கள் (g02 5/8)
ஓர் அப்பாவாக, மூப்பராக, நம் இளம் பிள்ளைகள் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவதை என்னால் பார்க்க முடிகிறது. அம்மா அப்பாவிடம் விஷயத்தை கலந்து பேசி பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கு நீங்கள் கொடுத்த ஆலோசனை ரொம்ப பிரமாதம். இளைஞர்கள் மீது நீங்கள் தொடர்ந்து அக்கறை காட்டி வருவதற்கு நன்றி.
ஆர். எச்., கனடா (g02 5/8)
மனச்சோர்வடைந்த டீனேஜர்கள் ஏதாவது ஒரு சமூக பிரச்சினையை தேர்ந்தெடுத்து அதைப் பற்றி ஒரு கட்டுரை வரையும்படி பள்ளியில் சொன்னார்கள். அது டீனேஜர்களுக்கு ஏற்றதாக இருக்க வேண்டியிருந்தது. செப்டம்பர் 8, 2001 (ஆங்கிலம்) பத்திரிகையில் வெளிவந்த “மனச்சோர்வடைந்த டீனேஜர்களுக்கு உதவி” என்ற தொடர் கட்டுரைகளை பயன்படுத்தி கட்டுரை எழுதினேன். நான் வாழும் பகுதியிலுள்ள டீனேஜர்களின் மத்தியில் மனச்சோர்வு அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கு முன்பு இதுபோன்ற வாய்ப்புகள் எனக்கு கிடைத்த போதும் விழித்தெழு! பத்திரிகையை பயன்படுத்தினேன், நல்ல மார்க்குகளையும் பெற்றேன்!
எஸ். எச்., ஆஸ்திரேலியா (g02 5/8)
எங்களுடைய டீனேஜ் மகனுக்கு இருதயத்திலும் மூளையிலும் ஒரு நோய் தொற்றியது. அந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் அதோடு அவனை தொற்றிக்கொண்ட, அதிக ஆபத்தான மனச்சோர்வை கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் தற்கொலை செய்துகொண்டான். அவனுக்கு உதவி செய்ய முடியாமல் போனாலும், அவனுடைய கோளாறை புரிந்துகொள்வதற்கு இந்தத் தொடர் கட்டுரைகள் எங்களுக்கு பெரிதும் உதவுகின்றன. இந்த விஷயம் கலந்தாலோசிக்கப்பட்டிருப்பதையும் இளம் பிள்ளைகள் மீது காட்டியிருக்கிற இத்தகைய அன்பான அக்கறையையும் கண்டு எங்கள் உள்ளம் நன்றியால் பொங்கி வழிந்தது.
ஜி. & ஜி. ஆர்., ஜெர்மனி (g02 5/8)
பல சமயங்களில் நான் மனச்சோர்வடைந்து என்னையே லாயக்கற்றவளாக நினைக்க ஆரம்பிக்கிறேன். என்னுடைய உணர்வுகளைப் பற்றி என் கிறிஸ்தவ பெற்றோரிடமோ சபை மூப்பர்களிடமோ சொல்வதற்கு கூச்சப்பட்டேன். இருந்தாலும், “உங்களுடைய சூழ்நிலைக்காக உங்களையே நொந்துகொள்ள வேண்டியதில்லை” என்ற வரியை வாசித்ததும் எனக்கு ஒரு பெரிய ஆசுவாசம்! இது போன்ற பிரச்சினை மற்றவர்களுக்கும் உண்டு என்பதை மீண்டும் நான் அறிந்துகொண்டேன்.
எச். டி., ஜப்பான் (g02 5/8)
உலகை கவனித்தல் “உலகை கவனித்தல்” பகுதியில் வரும் வேடிக்கையான படங்களுக்கு பாராட்டை தெரிவித்து இதை நான் எழுதுகிறேன். அவை சித்தரிக்கும் செய்தியை மனதில் பதிய வைப்பதற்கு அவை உதவுகின்றன. அதைவிட அவை என்னை சிரிக்க வைக்கின்றன. உங்களது அருமையான பணி தொடரட்டும்!
ஏ.ஐ.பி.பி., ஸ்பெய்ன் (g02 5/8)
பைபிள் வாசிப்பு “இளைஞர் கேட்கின்றனர் . . . பைபிள் வாசிப்பை அதிக சுவாரஸ்யமாக்குவது எப்படி?” (செப்டம்பர் 8, 2001) என்ற கட்டுரைக்கு நன்றி. பைபிள் வாசிப்பது படு போர் என்றும், இவ்வளவு பெரிய தடியான புத்தகத்தை ஒருபோதும் என்னால் வாசிக்க முடியாது என்றும் நான் எப்போதுமே நினைத்துவந்தேன். ஆனால் இந்தக் கட்டுரையை வாசித்த பிறகு நான் பைபிளை வாசிக்க முயன்றேன், அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இப்போது நான் பைபிளை தவறாமல் வாசிக்கிறேன்.
எம். எஸ்., ஜெர்மனி (g02 5/22)