Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“சிலசமயம் இது கனவோன்னு நினைக்க தோணுது!”

“சிலசமயம் இது கனவோன்னு நினைக்க தோணுது!”

“சிலசமயம் இது கனவோன்னு நினைக்க தோணுது!”

லார்டஸ் தன் அப்பார்ட்மெண்ட் ஜன்னல் வழியாக பார்க்கிறார்; உதட்டில் ஒருவித நடுக்கம், ஆனால் விரல்களால் அதை மறைத்துக்கொள்கிறார். இவர் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த பெண், மிருகத்தனமான கணவரின் கைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கித் தவித்தவர். இவரது கணவராகிய ஆல்ஃப்ரெடோ இப்போது திருந்திவிட்டார். ஆனாலும் தான் பட்ட மன வேதனையையும் உடல் அவஸ்தையையும் இப்போது சொல்லுகையிலும் துக்கம் தொண்டையை அடைத்துக்கொள்கிறது.

லார்டஸ் குரல் தழுதழுக்க பேச ஆரம்பிக்கிறார்: “கல்யாணமாகி இரண்டே வாரத்தில் கொடுமை ஆரம்பித்துவிட்டது. ஒருமுறை, அவர் அடித்த அடியில் என் இரண்டு பல்கள் தெறித்து விழுந்தன. இன்னொரு முறை ஓங்கி குத்தவந்தார், ஆனால் நான் சட்டென குனிந்துகொண்டதால் பீரோமீது குத்து விழுந்தது. இதையெல்லாம்விட, வாய்க்கு வந்தபடி திட்டிய திட்டைக் கேட்டுத்தான் துடிதுடிச்சுப் போவேன். ‘சரியான தண்டச்சோறு’ என்பார், கொஞ்சம்கூட புத்தியே இல்லாதவள் போல் நடத்துவார். எங்காவது ஓடிப்போயிடலாமோன்னு தோணும், ஆனால் மூன்று பிள்ளைகள வைச்சுக்கிட்டு எப்படி முடியும்?”

லார்டஸின் தோளில் ஆல்ஃப்ரெடோ மென்மையாக கைவைத்து சொல்கிறார்: “நான் ஒரு சீனியர் டாக்டர். ஆகவே கோர்ட்டில் ஆஜராகும்படியான சமனையும் பாதுகாப்பு ஆணையையும் பெற்றபோது கூனிக்குறுகினேன். என்னை மாற்றிக்கொள்ள முயற்சி செய்தேன், ஆனால் கொஞ்ச நாட்களிலேயே பழையபடி நடக்க ஆரம்பித்தேன்.”

பிறகு எப்படி மாறினார்? லார்டஸிடம் இப்போது ஒருவித அமைதியை பார்க்க முடிகிறது. அவர் சொல்கிறார்: “தெரு முனையிலிருக்கும் கடைக்காரப் பெண் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர். பைபிளை புரிந்துகொள்ள எனக்கு உதவுவதாக அவர் சொன்னார். யெகோவா தேவன் பெண்களை மதிக்கிறார் என்று கற்றுக்கொண்டேன். யெகோவாவின் சாட்சிகளது கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்ததும் ஆல்ஃப்ரெடோ கொதித்துப்போனார், ஆனால் நான் மசியவில்லை. ராஜ்ய மன்றத்தில் நண்பர்களோடு நேரம் செலவழித்தது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. எனக்கென்று சொந்த நம்பிக்கைகளோடு வாழ முடியும், அதை தயக்கமில்லாமல் வெளிப்படுத்த முடியும், மற்றவர்களுக்கு கற்பிக்கவும் முடியும் என்றெல்லாம் அறிந்தபோது எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. கடவுள் பார்வையில் நான் மதிப்புள்ளவள் என்பதை புரிந்துகொண்டேன். இது எனக்கு தைரியத்தை தந்தது.

“என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனையை மறக்கவே முடியாது. ஆல்ஃப்ரெடோ ஞாயிற்றுக்கிழமைதோறும் கத்தோலிக்க சர்ச் மாஸுக்கு சென்றுகொண்டிருந்த சமயம் அது. நான் யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவு கொள்வதை எதிர்த்து தாட்டுபூட்டென்று கத்தி கலாட்டா செய்தார். அப்போது நான் அவரை நேருக்கு நேர் பார்த்து சாந்தமாக, அதே சமயத்தில் உறுதியாக இப்படி சொன்னேன்: ‘நீங்க நினைக்கிற மாதிரி நான் நினைக்கலங்க.’ அதைக் கேட்டதும் என்னை அடிக்காமல் போய்விட்டார்! கொஞ்ச நாளில் நான் முழுக்காட்டுதல் பெற்றேன். அதன் பிறகு இந்த அஞ்சு வருஷத்துல ஒருமுறைகூட அவர் என்னை அடிக்கவில்லை.”

ஆனால் இன்னும் பெரிய மாற்றங்கள் நடக்கவிருந்தன. ஆல்ஃப்ரெடோ இப்படி விளக்குகிறார்: “லார்டஸ் முழுக்காட்டுதல் எடுத்து சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, என்னுடன் வேலை பார்ப்பவர் அவருடைய வீட்டிற்கு என்னை அழைத்தார். அவர் ஒரு யெகோவாவின் சாட்சி. பைபிளிலிருந்து அருமையான விஷயங்களை எடுத்துக் காட்டி பேசினார். என் மனைவிக்கு தெரியாமலேயே அவரோடு பைபிளை படிக்க ஆரம்பித்தேன். விரைவில் அவளுடனேயே சேர்ந்து கூட்டங்களுக்கு செல்ல ஆரம்பித்தேன். அங்கே குடும்ப வாழ்க்கையைப் பற்றி அநேக பேச்சுக்களை கேட்டு, அவமானத்தால் அடிக்கடி தலைகுனிந்தேன்.”

சபையிலிருந்தவர்கள், அதுவும் ஆண்கள் கூட்டங்களுக்குப் பிறகு கூட்டி சுத்தம் செய்வதைப் பார்த்து ஆல்ஃப்ரெடோ அசந்துபோனார். அவர்கள் வீடுகளுக்கு சென்றபோது, கணவன்மார் தங்கள் மனைவிகளுக்கு பாத்திரங்கள் கழுவிக்கொடுத்து ஒத்தாசை செய்வதை அவர் பார்த்தார். இப்படி சின்ன சின்ன சம்பவங்கள், உண்மையான அன்பு எப்படி செயலில் காட்டப்படுகிறது என்பதை ஆல்ஃப்ரெடோவுக்கு உணர்த்தின.

கொஞ்ச காலத்தில் ஆல்ஃப்ரெடோ முழுக்காட்டுதல் பெற்றார். இப்போது அவரும் அவரது மனைவியும் முழுநேர ஊழியர்களாக சேவிக்கின்றனர். “எனக்கு கூடமாட ஒத்தாசையாக, சாப்பிட்ட பிறகு டேபிளை க்ளீன் செய்துகொடுக்கிறார், படுக்கையையும் மடித்து கொடுத்து அனுசரணையாக நடந்துகொள்கிறார்” என்கிறார் லார்டஸ். “என் சமையலை வாயார பாராட்டுகிறார், என் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்கிறார்; உதாரணத்திற்கு என்ன இசையை கேட்கலாம் அல்லது வீட்டிற்கு என்ன சாமான்கள் வாங்கலாம் என்றெல்லாம் கேட்கிறார். இப்படிப்பட்ட காரியங்களை அவரிடம் முன்பு எதிர்பார்த்திருக்கவே முடியாது! கொஞ்ச நாளுக்கு முன்னால், முதன்முறையாக எனக்கு பூச்செண்டு வாங்கிவந்தார். சிலசமயம் இது கனவோன்னு நினைக்க தோணுது!”(g01 11/8)

[பக்கம் 10-ன் படம்]

“கடவுள் பார்வையில் நான் மதிப்புள்ளவள் என்பதை புரிந்துகொண்டேன். இது எனக்கு தைரியத்தை தந்தது”

[பக்கம் 10-ன் படம்]

கணவன்மார் தங்கள் மனைவிகளுக்கு பாத்திரங்கள் கழுவிக்கொடுத்து ஒத்தாசை செய்வதை அவர் பார்த்தார்

[பக்கம் 10-ன் படம்]

சபையிலிருந்தவர்கள், அதுவும் ஆண்கள், கூட்டங்களுக்குப் பிறகு கூட்டி சுத்தம் செய்வதைப் பார்த்து ஆல்ஃப்ரெடோ அசந்துபோனார்

[பக்கம் 10-ன் படம்]

“கொஞ்ச நாளுக்கு முன்னால், முதன்முறையாக எனக்கு பூச்செண்டு வாங்கிவந்தார்”