உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
மழைக் காடுகள்
இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் மட்டுமே மழைக் காடுகள் இருப்பதாக அறியப்பட்டிருந்தது. ஆனால், வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாமையும் அருணாசலப் பிரதேசத்தையும் இணைக்கும் 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள மழைக் காட்டை சுற்றுச்சூழல்வாதியான சாம்யதீப் தத்தா சமீபத்தில் கண்டுபிடித்ததாக நியூ டில்லி பத்திரிகையான டௌன் டு எர்த் அறிக்கை செய்கிறது. அந்த காட்டில் பல விதமான வனவிலங்குகள் உள்ளன—“32 வகை பாலூட்டிகள், 260 வகை பறவைகள் உட்பட யானை, புலி, க்லௌடட் சிறுத்தை, சீன பேன்கோலின், ஸ்லாத் கரடி, சாம்பர், ஹூலாக் கிப்பன்கள், காலிஜ் ஃபிசன்ட்கள், ஹார்ன்பில்கள், உட் டக்குகள் போன்றவற்றின் அரிய வகைகள்.” இருந்தாலும், காட்டில் விளையும் மரங்களுக்கு சர்வதேச அளவில் தேவை அதிகரிப்பதால் அநேக மழைக் காடுகள் ஆபத்திலிருக்கின்றன என்கிறது டௌன் டு எர்த். அளவுக்கு அதிகமாக வெட்டுவதால் அப்படிப்பட்ட பொருட்கள் தீர்ந்துபோனால் மழைக் காடுகள் இனி இருக்காது, மாறாக விவசாய நிலங்களாகவே மாறும் என்று இயற்கையியலாளர்கள் சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.(g01 10/8)
கப்பல்கள் வியாதியை பரப்புகின்றன
“கப்பல்களிலுள்ள அடிச்சுமை (ballast) தண்ணீர் உலகமுழுவதிலும் வியாதிகளை பரப்புகிறது, இதனால் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும், தாவரங்களுக்கும் ஆபத்து ஏற்படுகிறது” என லண்டனின் த டெய்லி டெலிகிராஃப் கூறுகிறது. கப்பல்களில் சமநிலையை காப்பதற்காக உபயோகிக்கப்படும் அடிச்சுமை தண்ணீர் கடலில் அல்லது இடைநிலை துறைமுகங்களில் வெளியேற்றப்படுகிறது. பெருங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் எடுத்துச்செல்லும் அடிச்சுமை தண்ணீரில் ஏராளமான பாக்டீரியாக்களும், வைரஸுகளும் இருப்பதாக ஐக்கிய மாகாணங்கள், மேரிலாண்டில் உள்ள ஸ்மித்சோனியன் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ச்சேஷபீக் விரிகுடாவிற்கு வந்த 15 கப்பல்களும் சோதிக்கப்பட்டன; அவற்றின் அடிச்சுமை நீரிலிருந்த மிதக்கும் உயிரிகளை ஆராய்ந்ததில் அவை அனைத்திலுமே காலரா ஏற்படுத்தும் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு லிட்டர் அடிச்சுமை நீரில் சுமார் 83 கோடி பாக்டீரியாக்களும், 740 கோடி வைரஸுகளும் இருந்தன; இது மற்ற கிருமிகளின் எண்ணிக்கையைவிட ஆறு முதல் எட்டு மடங்கு அதிகமாகும்.(g01 10/8)
“டெக்னோ அழுத்தம்”
“டெக்னோ அழுத்தம்,” அதாவது புதிய தொழில்நுட்பத்தை உபயோகிக்க வேண்டுமென்ற அழுத்தத்தால் வரும் ஏமாற்றம் அதிகரித்து வருகிறது என கனடாவின் மக்லேன்ஸ் பத்திரிகை அறிக்கையிடுகிறது. இதற்கு, “புதிய தொழில்நுட்பத்தை உபயோகிக்க எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பது முதல், ஈ-மெயில், கால் ஃபார்வர்டிங், செல்லுலர் தொலைபேசி போன்ற கண்டுபிடிப்புகளின் விளைவாக அலுவலக வேலைக்கும் வீட்டு வேலைக்கும் வித்தியாசம் தெரியாமல் போவது” வரை காரணங்களாக இருக்கலாம் என ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. இதை நீங்கள் எவ்வாறு சமாளிக்கலாம்? எல்லைகளை வகுக்கும்படி வல்லுனர்கள் ஆலோசனை கூறுகின்றனர். குறிப்பிட்ட உபகரணத்தை உபயோகிப்பதால் வாழ்க்கை உண்மையில் எளிமையாகுமா அல்லது அதிக சிக்கலாகுமா என்பதை உறுதி செய்யுங்கள். ஒரு புதிய தொழில்நுட்பத்தின் முழு பயனையும் அடைய அதை நன்றாக கற்றுக்கொள்ள வேண்டும், அதற்கு நேரம் செலவாகும் என்பதை முன்கூட்டியே சிந்தியுங்கள். “ஒவ்வொரு நாளும் அந்த தொழில்நுட்பத்தை கொஞ்ச நேரமாவது நிறுத்தி வையுங்கள்,” மற்ற முன்னுரிமைகளுக்காக நேரத்தை செலவிடுங்கள். “ஒரு திட்டத்தின்படி வேலை செய்யாமல் காலையிலேயே தங்கள் ஈ-மெயிலை திறக்கும் அடிப்படையான தவறை மக்கள் செய்துவிடுகின்றனர். ஒரு நாளின் மிகச் சிறந்த ஒன்றரை மணிநேரத்தை முற்றிலும் லாயக்கற்ற ஒன்றிற்காக செலவு செய்கின்றனர்” என வான்கூவரை சேர்ந்த உற்பத்தி திறன் வல்லுனரான டான் ஸ்டாம்ப் கூறுகிறார்.(g01 10/22)
புலியின் உறுமல்
புலியின் உறுமல், மற்ற மிருகங்களை மாத்திரமல்ல சில மனிதர்களையும்கூட செயலிழக்க வைப்பது ஏன்? அ.ஐ.மா., வட கரோலினாவிலுள்ள ஃபானா கம்யூனிகேஷன்ஸ் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த விஞ்ஞானிகள், “ஒரு புலி குறைந்த தொனிகொண்ட ‘கேளா அக ஒலியை’ (‘infrasound’) வெளியிடுகிறது என கண்டுபிடித்துள்ளனர்; இது அந்தளவு ஆழ்ந்ததாக இருப்பதால் மனிதர்களால் அதை கேட்க முடியாது” என லண்டனின் த சன்டே டெலிகிராஃப் அறிக்கை செய்கிறது. மனிதர்களால் 20 ஹெர்ட்ஸுக்கு அதிகமான ஒலி அலைகளை மட்டுமே கேட்க முடியும்; ஆனால், புலியானது “18-க்கும் குறைவான ஹெர்ட்ஸ் கொண்ட கேளா அக ஒலி உறுமல்களை நாம் கேட்கக்கூடிய உறுமல்களோடு சேர்த்து வெளியிடுகிறது; அதன் விளைவாக, அந்த இன்ஸ்டிட்யூட்டின் தலைவரான டாக்டர் எலிசபெத் வான் முகன்தாலா கூறுகிறபடி, புலியின் உறுமலை மனிதர்களால் உண்மையில் உணர முடிகிறது, இந்த உணர்வே கணநேரத்திற்கு நம்மை செயலிழக்க செய்கிறது” என்று அந்த செய்தித்தாள் விளக்குகிறது. புலிகளுக்கு பல வருடங்கள் பயிற்சியளித்தவர்கள்கூட இதை அனுபவித்திருக்கிறார்கள்.(g01 10/8)
பிள்ளைகளே தங்களுக்கு புத்தகங்களை எழுதுகின்றனர்
வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஜாம்பியாவிலுள்ள பள்ளி பிள்ளைகள் தாங்களே சிறு புத்தகங்களை சொந்தமாக எழுதி, படங்களை
வரையும்படி ஊக்குவிக்கப்படுகின்றனர் என ஜாம்பியா டெய்லி மெயில் அறிவிக்கிறது. “பள்ளிகளின் பெரும்பாலான நூலகங்களில் உள்ள புத்தகங்கள் ஜாம்பிய பிள்ளைகள் கொஞ்சமும் அறியாத விஷயங்களையும் சூழ்நிலைகளையும் பற்றியவை” என அரசாங்க அறிக்கை ஒன்று கூறுகிறது. “பிள்ளைகளின் அறிவாற்றலுக்கும் விருப்பத்திற்கும் ஏற்றவாறு புத்தகங்கள் அமைவதே பிள்ளைகளை தங்களுக்கென்று புத்தகங்கள் எழுத செய்வதால் வரும் பயன்.” அந்த கதைகளில் சில, பள்ளி அல்லது வகுப்பு நூலகத்தில் வைக்கப்படலாம், ரேடியோவில் வாசிக்கப்படலாம், அல்லது பிரசுரிக்கப்படலாம். டெய்லி மெயில் இவ்வாறு குறிப்பிடுகிறது: “பேப்பரும் பேனாவும் மட்டுமே தேவைப்படுவதால் புத்தகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இதுவே மிக மலிவான வழியாகும். மிகவும் ஏராளமாக கிடைக்கும் வாய்ப்பு வளத்தை (மாணவர்களை) உபயோகித்து மிகவும் குறைவான, அதிக விலையுள்ள ஒன்றை (புத்தகங்களை) உருவாக்கும் வழியும் இதுவே.” (g01 10/22)மலேரியா மருந்தால் இனி பயனில்லை
‘ஜாம்பியாவில் மலேரியா சிகிச்சையின் முதல் கட்டமாக, அதற்கான மருந்தாக மிகவும் பரவலாக உபயோகிக்கப்படும் க்ளோரக்வீன் அரசாங்க மருத்துவமனைகளிலிருந்து படிப்படியாக நீக்கப்பட்டு’ அதிக திறம்பட்ட மருந்து அதை மாற்றீடு செய்யும் என டைம்ஸ் ஆஃப் ஜாம்பியா அறிக்கை செய்கிறது. “ஜாம்பியாவில் ஒவ்வொரு வருடமும் மலேரியாவினால் இறக்கும் ஐந்து வயதிற்கும் குறைந்த 25,000 பிள்ளைகளில் 12,000 பேர் க்ளோரக்வீனுக்கான எதிர்ப்பு சக்தியின் காரணமாகவே இறக்கின்றனர்” என ஓர் ஆராய்ச்சி சுட்டிக்காட்டிய பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெரும்பாலான மற்ற கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. “க்ளோரக்வீன், 30-க்கும் அதிகமான வருடங்கள் வெற்றிகரமாக இருந்தபோதிலும் மலேரியாவை குணப்படுத்துவதில் அது இனியும் திறம்பட்டதாக இல்லை. இன்னமும் மலேரியாவே தேசத்தின் அதிமுக்கிய கொலையாளியாக இருந்துவருகிறது” என்று டைம்ஸ் கூறுகிறது.(g01 10/22)
பூச்சிக்கொல்லிகளைவிட களைகளே சிறந்தவை
மக்காச்சோள பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க கிழக்கு ஆப்பிரிக்க விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை உபயோகிப்பதற்கு பதிலாக களைகளை உபயோகிக்கின்றனர் என நியூ சயன்டிஸ்ட் பத்திரிக்கை அறிக்கை செய்கிறது. கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள மக்காச்சோள விவசாயிகள் இரண்டு தொல்லைகளை எதிர்ப்படுகின்றனர். ஒன்று, ஸ்டிரைகா என்ற ஒட்டுண்ணி தாவரமாகும், இது ஒவ்வொரு வருடமும் 1,000 கோடி டாலர் மதிப்புடைய மக்காச்சோள பயிரை சேதப்படுத்துகிறது. டெஸ்மோடியம் என்ற களையை மக்காச்சோள பயிர் வரிசைகளிடையே வளர்த்தால் ஸ்டிரைகா வளருவதில்லை என்பதை கென்யாவை சேர்ந்த ஆராய்ச்சியாளரான சைதீன் க்கான் கண்டுபிடித்தார். மற்றொரு தொல்லை, தண்டு துளைப்பான் பூச்சியின் லார்வா ஆகும், இது பெரும்பாலான வருடங்களில் மக்காச்சோள பயிரில் மூன்றில் ஒரு பங்கை கபளீகரம் செய்துவிடுகிறது. ஆனால், இதைவிட நேப்பியர் புல் என்ற களையை சாப்பிடவே தண்டு துளைப்பான்கள் விரும்புவதை க்கான் கண்டுபிடித்தார். இந்தக் களையை தங்கள் வயல்களில் விதைப்பதன் மூலம் பூச்சிகள் மக்காச்சோளத்தை அண்டாதபடி விவசாயிகள் செய்துவிடுகின்றனர். அந்த புல்லில் உற்பத்தியாகும் ஒரு வகை பிசுபிசுப்பான பொருள் லார்வாக்களை சிக்கவைத்து கொன்றுவிடுகிறது. “அது பூச்சிக்கொல்லிகளைவிட சிறந்தது, அதிக சிக்கனமானதும்கூட. இங்கு பயிர்களின் விளைச்சலை 60 முதல் 70 சதவீதம் அதிகரிக்கவும் உதவியிருக்கிறது” என்று கூறுகிறார் க்கான்.(g01 10/8)
குடித்துவிட்டு சைக்கிள் ஓட்டாதீர்!
குடித்துவிட்டு சைக்கிள் ஓட்டுவது, குடித்துவிட்டு கார் ஓட்டுவதைப் போன்றே ஆபத்தானது என நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை அறிவிக்கிறது. அ.ஐ.மா., மேரிலாண்டிலுள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த க்வாஹ்வா லீ, “கார் ஓட்டுவதைவிட சைக்கிள் ஓட்டுவதற்கே மூளை கட்டுப்படுத்துகிற தசைகளின் திறமைகளும் உறுப்புகளின் ஒத்திசைவும் அதிகம் தேவை, ஆகவே குடிப்பது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது” என்று கூறுகிறார். சைக்கிள் ஓட்டும் 466 பேரை லீயும் அவரது கூட்டாளிகளும் ஆராய்ந்தனர். அதில், நான்கு அல்லது ஐந்து பெக் குடித்திருந்தவர்கள் படுகாயமடைய அல்லது மரிக்க 20 மடங்கு அதிக சாத்தியமிருந்ததை கண்டுபிடித்தனர். ஒரு பெக் குடிப்பதுகூட சைக்கிள் ஓட்டுவதை ஆறு மடங்கு ஆபத்தானதாக ஆக்கியது. “சைக்கிள் ஓட்டுபவர்கள் எந்தளவுக்கு அதிகமாக குடித்தார்களோ, அந்தளவுக்கு ஹெல்மெட் அணியும் சாத்தியமும் குறைந்தது, இது பிரச்சினையை மோசமாக்கியது” என்று நியூ சயன்டிஸ்ட் கூறுகிறது. (g01 10/22)
வாழை மரத்திலிருந்து பேப்பர்
வாழை மரங்களின் அறுவடைக்கு பிறகு அதன் தண்டு உரமாகும்படி பொதுவாக நிலத்திலேயே விடப்படுகிறது. என்றாலும், நகோயா நகர பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஹீரோஷீ மோரீஷீமா வாழைத் தண்டுகளிலிருந்து பேப்பர் தயாரிப்பதில் வெற்றி கண்டுள்ளார் என்று ஜப்பானிய செய்தித்தாளான ஆஸாஹி ஷிம்பூன் கூறுகிறது. அந்த தாவரத்தின் நார்கள் “நீளமாகவும் வலுவாகவும் உள்ளன, மணிலா ஹெம்பிலிருந்து பெறப்படும் பேப்பர் தயாரிக்க தேவையான கச்சாப்பொருளை போலவே நல்ல தரம் வாய்ந்தவை.” வாழைத் தண்டிலிருந்து இயந்திரத்தின் உதவியால் தயாரிக்கப்பட்ட பேப்பர் சாதாரண நகல் எடுக்கும் பேப்பருக்கு இணையான தரம் கொண்டது, மறுஉற்பத்தி செய்யப்பட்ட பேப்பரைவிட வலுவாக நிரூபித்துள்ளது. “வாழை, உலகமுழுவதிலும் 123 நாடுகளில், ஒவ்வொரு வருடமும் 5 கோடியே 80 லட்சம் டன்கள் சாகுபடி செய்யப்படுவதால் நம்பிக்கையூட்டும் வள ஆதாரமாகும்” என அந்த செய்தித்தாள் கூறுகிறது.(g01 10/22)