உணவு உற்பத்திக்கு மனிதனே பகைஞனா?
உணவு உற்பத்திக்கு மனிதனே பகைஞனா?
“இப்போதெல்லாம் உண்மையான சவால் கடனோ, பணப்பற்றாக்குறையோ அல்லது சர்வதேச அளவில் போட்டியோ அல்ல. ஆனால் எல்லா உயிர்களையும் ஆதரித்துக் காப்பாற்றி வரும் இந்தக் கிரகத்தின் உயிரியக்கோளத்தை கெடுத்துவிடாமல், செழிப்பாகவும் மனநிறைவாகவும் வாழ்வதற்கு வழியைக் கண்டுபிடிப்பதுதான். இப்படியொரு அச்சுறுத்தலை—வாழ வைக்கும் இயற்கை சக்திகளே சிதைந்து வரும் அச்சுறுத்தலை—மனிதன் இதுவரை சந்தித்ததே இல்லை.”—மரபியல் நிபுணர் டேவிட் ஸூசூகி.
ஆப்பிள் பழத்தின் மதிப்பை அற்பமாக எடை போட்டுவிடுவது எளிது. ஆப்பிள் பழங்கள் ஏராளமாக விளையும் இடத்தில் நீங்கள் வாழ்ந்துவந்தால், நினைத்த மாத்திரத்தில் பிடித்தமான ரகத்தை வாங்கலாம் என்று நினைப்பீர்கள். ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஏராளமான ரகங்களில் இப்போது சில ரகங்களே இருப்பது உங்களுக்குத் தெரியுமா?
1804-க்கும் 1905-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் ஐக்கிய மாகாணங்களில் 7,098 ரக ஆப்பிள்கள் இருந்தன. இன்று இதில் 86 சதவீதம், அதாவது 6,121 ரகங்கள் அழிந்துவிட்டன. பேரிக்காய்களின் நிலைமையும் இதுவே. ஒரு சமயம் 2,683 ரகங்கள் இருந்தன. அவற்றில் சுமார் 88 சதவீதம் அழிந்துவிட்டன. காய்கறிகளை எடுத்துக்கொண்டால் அவற்றின் நிலைமை அதைவிட மோசம். ஏதோவொன்று மறைந்துபோகிறது; அதுதான் உயிரியல் பல்வகைமை. எண்ணிலடங்கா இனங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு இனத்திலும் காணப்படும் எண்ணிலடங்கா வகைகளையும் இது குறிக்கிறது. ஐக்கிய மாகாணங்களில் விளையும் காய்கறி வகைகளில் 80-க்கும் குறைவான ஆண்டுகளில் 97 சதவீதம் குறைந்துவிட்டன! ஆனால் பல்வகைமை உண்மையில் அவசியம்தானா?
அவசியம் என்று விஞ்ஞானிகள் பலரும் கூறுகின்றனர். உயிரியல் பல்வகைமை ஆற்றும் பங்கைப் பற்றி இன்னும் விவாதம் நடந்துவந்தாலும், அது பூமியில் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதது என சுற்றுச்சூழல் நிபுணர்கள் பலர் கூறுகின்றனர். உலகின் காடுகளிலும் வனங்களிலும் புல்வெளிகளிலும் வளரும் தாவரங்களுக்கு அது எவ்வளவு முக்கியமோ அதேபோல் உணவுக்காக நாம் வளர்க்கும் தாவரங்களுக்கும் அது அவ்வளவு முக்கியம் என்று அவர்கள் கூறுகின்றனர். ஒரே இனத்திற்குள் காணப்படும் பல்வகைமையும்கூட முக்கியமே. உதாரணமாக அரிசியில் பல ரகங்கள் இருப்பதால் பொதுவாக காணப்படும் கொள்ளை நோய்களை எதிர்க்கும் சக்தி சில ரக அரிசிகளில் இருப்பதற்கு அதிக சாத்தியம் உள்ளது. ஆகவே உவர்ல்டுவாட்ச் நிறுவனம் அண்மையில் பிரசுரித்த ஒரு அறிக்கையில், பூமியின் உயிரியல் பல்வகைமையை சீரழிப்பது எவ்வளவு மோசமானதாக இருக்கும் என்பதை, முக்கியமாக நம் உணவு உற்பத்தியின்மீது ஏற்படும் பாதிப்பு மனிதனுக்கு உணர்த்திவிடும் என்று குறிப்பிட்டது.
தாவரங்கள் பூண்டோடு அழிந்துபோவதால் உணவு பயிர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு வழிகளில் பாதிப்பு ஏற்படலாம்: முதலாவது எதிர்காலத்தில் தாவர இனப்பெருக்கத்திற்கு பயன்படும் ஜீன்களை வழங்க ஆற்றல்படைத்த, தானாக வளரும், அதே இனத்தைச் சேர்ந்த காட்டுப் பயிர்கள் அழிக்கப்படுவது. இரண்டாவதாக பயிர் செய்யப்படும் இனங்களுக்குள் இருக்கும் ரகங்கள் குறைந்துவிடுவது. உதாரணமாக, 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆசியாவில் அரிசியைப் பொறுத்தவரை 1,00,000-க்கும் அதிகமான நாட்டு-ரகங்கள் பயிர் செய்யப்பட்டன. அதில் இந்தியாவில் மாத்திரம் குறைந்தபட்சம் 30,000 ரகங்கள் பயிர் செய்யப்பட்டன. இப்போதோ இந்தியாவின் 75 சதவீத பயிர்களில் பத்து ரகங்கள் மாத்திரமே பயிர் செய்யப்படுகின்றன. இலங்கையில் 2,000 அரிசி ரகங்களில் இன்று ஐந்து ரகங்கள் மாத்திரமே உள்ளன. சோளத்தின் பிறப்பிடம் என்று பெயர் பெற்ற மெக்ஸிக்கோவில் 1930-களில் இருந்த சோள வகைகளில் வெறும் 20 சதவீதத்தையே இன்று காண முடிகிறது.
ஆனால் ஆபத்து உணவுக்கு மாத்திரமல்ல. விற்பனைக்கென தயாரிக்கப்படும் மருந்துகளில் சுமார் 25 சதவீதம் தாவரங்களிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகின்றன. மருத்துவ குணமுள்ள புதிய தாவரங்களும் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இன்னொரு பக்கத்தில் தாவரங்கள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன.
அப்படியென்றால், நம் குடியை நாமே கெடுத்துக்கொண்டிருக்கிறோமோ?உவர்ல்டு கான்சர்வேஷன் யூனியன் பிரகாரம், ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சுமார் 18,000 வித்தியாசமான இனங்களைச் சேர்ந்த தாவரங்கள் மற்றும் விலங்குகளில் 11,000-க்கு மேல் அழிந்துவிடும் ஆபத்தில் உள்ளன. இந்தோனீஷியா, மலேசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற இடங்களில் பயிர்செய்வதற்காக காடுகள் பேரளவில் அழிக்கப்பட்டிருக்கின்றன; அந்த இடங்களில் எத்தனை இனங்கள் மறைந்துபோகும் தறுவாயில் இருக்கின்றன அல்லது மறைந்தே போய்விட்டன என்பதை ஆய்வாளர்களால் ஊகிக்க மாத்திரமே முடியும். ஆனாலும் இந்த மறைந்து போதல் “கேடுண்டாக்கும் வேகத்தில்” நடந்துவருவதாக சிலர் கூறுகின்றனர் என்று தி யுனஸ்கோ கூரியர் அறிவிக்கிறது.
பூமி இன்னும் அபரிமிதமான விளைச்சலை தந்துகொண்டிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் கிரகத்தின் உயிரியல் பல்வகைமை படிப்படியாக குறைந்துகொண்டே போனால் வேகமாக பெருகிவரும் மக்கள் தொகைக்கு இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் உணவிருக்கும்? இப்படிப்பட்ட கவலைகளுக்கு கைக்கொடுக்கும் வண்ணம், முக்கியமான தாவரங்களின் இழப்புக்கு ஈடுசெய்ய பல நாடுகள் விதை வங்கிகளை ஏற்படுத்தியுள்ளன. சில தாவரவியல் தோட்டங்கள் இனங்களை பாதுகாக்கும் பணியில் இறங்கியிருக்கின்றன. மரபுப் பொறியியல் சார்ந்த சக்திவாய்ந்த புதிய வழிமுறைகளை விஞ்ஞானம் அளித்துள்ளது. ஆனால் விதை வங்கிகளும் விஞ்ஞானமும் உண்மையில் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியுமா? பின்வரும் கட்டுரை இந்தக் கேள்வியை ஆராய்கிறது.(g01 9/22)