Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒட்டகங்களும் ப்ரம்பிகளும் சுற்றித் திரியுமிடம்

ஒட்டகங்களும் ப்ரம்பிகளும் சுற்றித் திரியுமிடம்

ஒட்டகங்களும் ப்ரம்பிகளும் சுற்றித் திரியுமிடம்

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

அவுட்பேக் ஆஸ்திரேலியா அதாவது ஆஸ்திரேலியாவின் ஒதுக்குப்புறமான, உள்நாட்டுப் பகுதி என்றவுடன் உங்கள் மனதிற்கு வருவது என்ன? தாவிச் செல்லும் கங்காருக்கள், பறக்க முடியாத ஈமூக்கள், புழுதி நிறைந்த பாலைவனங்கள், கொழுத்தும் வெயில்​—⁠இவைதானா? இவை அனைத்தும் உண்மைதான் என்றாலும் அது ஆச்சரியங்கள் நிறைந்த தேசமும்கூட.

பூமியில் இருப்பவற்றிலேயே மிகவும் முரட்டுத்தனமான ஒட்டக மந்தைகள், உலகில் எங்குமில்லாதளவு காட்டு குதிரைகளின் பெரும் கும்பல்கள், இந்த கிரகத்தில் எங்குமே காண முடியாத கழுதைகளின் பட்டாளம் என இவையனைத்தும் ஆஸ்திரேலியாவில் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? எதையும் தாங்கும் வலிமைகொண்ட இந்த மிருகங்களின் வருகையும் வாழ்க்கையும் அநேகர் அறியாத சச்சரவு நிறைந்த கதையாகும். அதோடு, கடந்த காலத்தை நினைப்பூட்டும் உயிருள்ள சின்னங்களாகும்.

ஒட்டகத்தின் உதவியோடு கட்டப்பட்டது

கடந்த 40 வருடங்களாக உள்நாட்டுப் பகுதிகளில் வாழும் கால்நடை சொந்தக்காரர்கள், ஆஸ்திரேலியாவில் ஒட்டகம் என்ற ஆங்கில புத்தகத்தில் வரும் கௌபாயைப் போன்றே குற்றஞ்சாட்டி உள்ளனர். “ஐந்தே ஒட்டகங்கள் சேர்ந்து 10 கிலோமீட்டர் நீளத்திற்கு வேலிகளை சின்னாபின்னமாக்கி போட்டிருந்ததை நானே நேரில் பார்த்திருக்கிறேன் . . . ஓர் இடத்தில் அவை வேலிக் கம்பிகளை மாத்திரமல்ல, கம்பங்களையும் எல்லாவற்றையுமே பிடுங்கிப் போட்டுவிட்டன.”

பிடிவாதம் பிடித்த ஓர் ஒட்டகத்தின் மலைபோன்ற உடலுக்கும் நீண்ட கால்களுக்கும் முன்பு விலையுயர்ந்த பாதுகாப்பு கம்பிகள் எந்த மூலைக்கு! ஆனால், இந்த கண்டத்தின் ஒதுக்குப்புறமான உட்பகுதியை கடந்து செல்லும், மிகவும் அத்தியாவசியமான போக்குவரத்து வசதிகளை கட்ட உதவியதும் இதே கால்கள்தான்.

ஒட்டகங்கள் 1860-⁠ல் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. பர்க், வில்ஸ் என்ற ஆய்வுப்பயணிகள் ஆஸ்திரேலியாவில் தெற்கிலிருந்து வடக்குவரை சென்ற மாபெரும் பயணத்தின்போது அவர்களுக்கு உதவியது ஒட்டகங்களே. புகுத்தப்பட்ட இந்த விலங்குகளின் பலமும் உரமும் அவற்றை ஆரம்பகால துணிச்சல்காரர்களின் தோழர்களாக்கின. அவை வெறுமனே 15 லிட்டர் தண்ணீரை குடித்துவிட்டு, 300 கிலோ பாரத்தை 800 கிலோமீட்டர் தூரம்வரை எந்த கஷ்டமுமின்றி சுமந்து சென்றன.

ஒட்டகங்களை முழுக்க முழுக்க நம்ப முடியும் என்பதால்தான் அவற்றை பல வேலைகளுக்காக உபயோகித்தனர். எல்லைப் பகுதியில் அமைந்திருந்த தங்கச் சுரங்கங்களுள்ள நகரங்களுக்கு உணவையும் சாதனங்களையும் எடுத்துச் செல்லவும், அடிலெய்டிலிருந்து டார்வின் வரை தந்தி கம்பங்களை நாட்டிடவும், சிட்னியிலிருந்து பெர்த் வரை செல்லும் டிரான்ஸ் ஆஸ்டிரேலியன் ரயில்வேயை கட்ட சர்வே எடுக்கவும் அவை உதவின. அவை 40 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தங்குதடையின்றி வலம் வந்தன. இந்தப் பாதைகளில் செல்ல நவீனகால வாகனங்களும் திணறுகின்றன.

1922-⁠ல் வீடுகளில் வளர்க்கப்பட்ட ஒட்டகங்களின் உச்ச எண்ணிக்கை 22,000 ஆக இருந்தது. ஆனால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தபோதோ அநேக ஒட்டகங்கள் விடுவிக்கப்பட்டன. எங்கும் சுற்றித்திரிந்து, தங்குதடையின்றி இனப்பெருக்கம் செய்ய முடிந்ததால் தற்போது இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஒட்டகங்கள் ஆஸ்திரேலிய பாலைவனங்களில் சுற்றி வருகின்றன. இந்த எண்ணிக்கை ஆறு வருடங்களுக்குள் இரட்டிப்பாகிவிடும் என்றும் சிலர் கணிக்கின்றனர்.

ஆனாலும் எல்லா ஒட்டகங்களும் கட்டுப்பாடின்றி சுற்றித்திரிய அனுமதிக்கப்படுவதில்லை. “உலகிலேயே நோய்வாய்ப்படாத ஒட்டக மந்தைகள் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கின்றன. ஆகவே, அவற்றில் கொஞ்சத்தை ஒவ்வொரு வருடமும் ஐக்கிய மாகாணங்களிலும் ஆசியாவிலுமுள்ள மிருகக்காட்சி சாலைகளுக்கும் பூங்காக்களுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்” என மத்திய ஆஸ்திரேலிய ஒட்டக சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் விழித்தெழு!-விடம் கூறினார். சுற்றுலா பயணிகள் ஒட்டகத்தின்மீது சவாரிசெய்து ஆஸ்திரேலியாவின் உட்புற காட்டுப் பகுதிகளை கண்டுகளிக்க உள்ளூர் சுற்றுலா நிறுவனங்கள் ஏற்பாடு செய்கின்றன. இந்தக் காட்டுப் பகுதிகளில்தான் விடுவிக்கப்பட்ட மற்ற சுமைதாங்கி விலங்குகளும் சுற்றித் திரிகின்றன.

ப்ரம்பி என்பது என்ன?

1788-⁠ல் இங்கிலாந்திலிருந்து முதன்முதலில் வந்த கப்பற்தொகுதி கைதிகளையும், இராணுவ வீரர்களையும், குதிரைகளையும் ஆஸ்திரேலிய மண்ணில் இறக்கிவிட்டது. இந்நாட்டிலுள்ள குதிரைகளின் கதை, அவற்றோடு வந்திறங்கிய மனிதர்களின் கதையைப் போலவே உணர்ச்சி ததும்புவதாகவும் அதேசமயம் சோகமயமானதாகவும் இருந்திருக்கிறது.

புதிய பிராந்தியங்களை கைப்பற்ற மிகவும் உதவியாக இருந்ததால், அந்தக் கண்டத்தின் நான்கு மூலைகளுக்கும் செல்ல குதிரைகளே உபயோகிக்கப்பட்டன. காணாமற்போன அல்லது தப்பித்துச் சென்ற குதிரைகள் ஒன்றுசேர்ந்து முரட்டு குதிரைகளாயின. இவையே ப்ரம்பிகள் என அழைக்கப்பட்டன. “ப்ரம்பி” என்ற வார்த்தை, க்வீன்ஸ்லாந்தின் பழங்குடியினர் உபயோகித்த பரூம்பீ என்ற வார்த்தையிலிருந்து பிறந்திருக்கலாம். “முரட்டுத்தனமான” என்பதே அந்த வார்த்தையின் அர்த்தம்.

அடங்காமல், கட்டுப்பாடற்று திரியும் ப்ரம்பியின் போக்கு, ஏ. பீ. (பாஞ்சோ) பாட்டர்சன் போன்ற கவிஞர்களின் கற்பனை குதிரையை தூண்டிவிட்டது. அவர் இயற்றிய “ஸ்நோயீ ஆற்றிலிருந்து வந்த மனிதன்” என்ற ஆங்கில கவிதையின் காரணமாக ப்ரம்பிகள் அநேக ஆஸ்திரேலியர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தன. முதலாம் உலக யுத்தத்திற்கு பிறகு, வேலர் ரக குதிரைகளின் தேவை குறைந்து அவையும் விடுவிக்கப்பட்டதால் ப்ரம்பிகளின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது. இந்த வேலர் ரக குதிரைகள், ஆஸ்திரேலிய குதிரைப் படைக்காகவும் இந்திய ராணுவத்தின் தேவைக்காகவும் விசேஷமாக இனப்பெருக்கம் செய்யப்பட்டன. இப்போது அந்தக் கண்டத்தில் சுமார் 3,00,000 முரட்டுக் குதிரைகள் சுற்றித் திரிகின்றன.

இவ்வாறு திரிகையில் அவற்றின் குளம்புகள், கொல்லனுடைய சம்மட்டியைப் போல மென்மையான மேல் மண்ணை அடிக்கின்றன. அதோடு, விலங்குகள் தண்ணீர் குடிக்கும் குளங்களின் கரைகளையும் நாசப்படுத்துகின்றன. வறட்சி காலத்தில் அவை பசியாலோ தாகத்தாலோ சாகின்றன. ஏகப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கையால் படாதபாடுபடும் ஒரு தேசத்தில் இந்த ப்ரம்பிகளும் சேர்ந்துகொண்டு பிரச்சினையை சிக்கலாக்குகின்றன. இதன் காரணமாகவே, ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானவை சட்டப்பூர்வமாக கொல்லப்படுகின்றன. சில சமயங்களில் அவற்றின் மாமிசம் பதப்படுத்தப்பட்டு மனிதருக்கும், சில வளர்ப்பு பிராணிகளுக்கும் உணவாகிறது.

ஆனாலும் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், ப்ரம்பியின் குடும்பத்தை சேர்ந்த காட்டுக் கழுதைகளே ஏராளமாக உள்ளன. முரட்டுக் குதிரைகளைவிட எண்ணிக்கையில் அதிகமாகவும் ஒட்டகங்களைவிட பரவலாகவும் காணப்படும் இவற்றின் வளர்ச்சியே இவற்றின் அழிவிற்கும் காரணமாகிவிட்டது.

யூதாஸ் தீர்வு

குதிரைகளைப் போலவே கழுதைகளும் 1700-களின் முடிவில், பாரமிழுக்க அல்லது நிலங்களை உழ முதன்முதலாக இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் வெகு சீக்கிரத்தில் உள்ளூர் சூழ்நிலைமைக்கு ஏற்றவாறு ‘அட்ஜஸ்ட்’ செய்துகொண்டன. 1920-களில் அவை ஒட்டுமொத்தமாக காட்டில் விடுவிக்கப்பட்டன. அதன் விளைவாக அவற்றின் எண்ணிக்கை, இயற்கையாகவே காட்டிலிருந்த முரட்டு கழுதைகளின் எண்ணிக்கையைவிட 30 மடங்கு அதிகரித்துவிட்டது.

ஒட்டகங்களைப் போல கழுதைகளும் பாலைவனத்தில் வாழ்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. உடலிலிருக்கும் தண்ணீர் குறைந்துவிட்டால் வியர்வையை கட்டுப்படுத்துகின்றன, அவற்றின் எடையில் 30 சதவிகிதம் தண்ணீர் குறைந்தாலும் அவற்றால் வாழ முடியும். (12 முதல் 15 சதவிகிதம் தண்ணீர் குறைந்தாலே பெரும்பாலான மற்ற பாலூட்டிகள் செத்துவிடும்.) பச்சைப்பசேல் என்ற புல்லை தின்னவே அவை விரும்புகின்றன என்றாலும் மற்ற கால்நடைகள் தீண்டாத கடினமான புற்பூண்டுகளையும் அவற்றால் உண்டு வாழ முடியும். 1970-களில், அவற்றில் 7,50,000-⁠த்திற்கும் அதிகமானவை பாதி கண்டத்தில் மட்டுமே சுற்றித் திரிந்தன. கிடுகிடுவென அதிகரித்த இந்த எண்ணிக்கை உயிரின வாழ்க்கைச் சூழலையும் கால்நடை தொழிலையும் பாதித்ததால் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று.

1978-லிருந்து 1993 வரை அவை சட்டப்பூர்வமாக கொல்லப்பட்டன. அதன் விளைவாக வடமேற்கு ஆஸ்திரேலியாவில் மட்டுமே 5,00,000-⁠த்திற்கும் அதிகமானவை கொல்லப்பட்டன. யூதாஸ் திட்டம் என அழைக்கப்படும் திட்டத்திற்காக தற்போது 300 கழுதைகளில் ரேடியோ டிரான்ஸ்மிட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை மற்ற கழுதைகளோடு சேர்ந்துகொள்ளும்படி அனுப்பப்படுகின்றன; பிறகு ஹெலிகாப்டர் மூலம் அவற்றின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு மனிதாபிமானத்தோடு கொல்லப்படுகின்றன. கொல்லாமல் விடப்படும் யூதாஸ் கழுதை மற்றொரு மந்தையோடு சேருகையில் அவையும் கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்படுகின்றன.

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள வேளாண்மை பாதுகாவலர் ஒருவர் விழித்தெழு!-விடம் பின்வருமாறு கூறினார்: “இது பல காலமாக இருந்துவரும் பிரச்சினை. இனப்பெருக்க திறனுள்ள சில கழுதைகளை விட்டுவைத்தாலும்கூட, அவை பெருக ஆரம்பித்து 1970-களில் இருந்த எண்ணிக்கையை வெகு சீக்கிரத்தில் எட்டிவிடும்” என்று எச்சரித்தார். “இந்த விலங்குகள் ஏன் கொல்லப்பட்டு அப்படியே விடப்படுகின்றன என்பதை மக்கள் அநேக சமயங்களில் புரிந்துகொள்வதே கிடையாது. இந்த இடங்களுக்கு செல்வதே பெரும் கஷ்டம் என்பதும் அவர்களுக்கு புரிவதில்லை. அங்கு செல்ல சாலைகளே கிடையாது, பெரும்பாலான இடங்களுக்கு ஹெலிகாப்டரில்தான் செல்ல முடியும். இந்த பிரச்சினை உருவாவதற்கு காரணமே மனிதன்தான், ஆகவே அதனால் விளைந்த சேதத்தையும் முடிந்தளவு மனிதாபிமானத்தோடுதான் சரிசெய்ய முயல வேண்டும்.”

கட்டுறுதியும் செழிப்பும் மிக்கவை

ஆஸ்திரேலியாவின் தொலைதூர உட்பகுதியில் தேவையற்ற பொதி சுமக்கும் மிருகங்களின் நெரிசல் சமாளிக்க முடியாததாக இருக்கும் என்று இப்போது நீங்கள் நினைத்தால் அதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால் ஆஸ்திரேலியாவின் தொலைதூர உட்பகுதியோ மிகவும் பெரியது. ஏறக்குறைய ஐரோப்பாவின் பரப்பளவும் சந்திரனைப் போல தொலைதூரத்திலும் உள்ள இடத்தில்தான் இந்த விலங்குகள் சுற்றித்திரிகின்றன. அதன் நிலப்பரப்பு சந்திரனையும் ஐரோப்பாவையும் ஒத்திருக்கிறது. அந்த இடத்தில் மந்தைகளை கண்டுபிடிப்பதே பெரும் சிரமமாயிருக்க அவற்றை கட்டுப்படுத்துவது அதைவிட கடினமாகும்.

ஆஸ்திரேலியாவிற்கே உரிய அநேக இனங்கள் அழிந்து வருகையில், கட்டுறுதியும் செழிப்பும் மிக்க இந்த விலங்குகள் ஆஸ்திரேலியாவை ‘சொந்த வீடாக’ சொந்தம் கொண்டாட ஆரம்பிக்கின்றன. இயற்கையான எதிரிகளும் இல்லாமல், வியாதிப்படும் வாய்ப்புகளும் குறைவாக இருப்பதால் அவை ஆஸ்திரேலியாவின் ஒதுக்குப்புறமான உட்பகுதியில் இஷ்டத்திற்கு சுற்றித்திரிகின்றன!

(g01 4/8)

[பக்கம் 26-ன் படங்கள்]

ஆஸ்திரேலிய பாலைவனங்களில் சுமார் 2,00,000 ஒட்டகங்கள் வலம் வருகின்றன

[படத்திற்கான நன்றி]

Agriculture Western Australia

[பக்கம் 27-ன் படங்கள்]

சிம்ஸன் பாலைவனத்தின் எல்லைகளில் ப்ரம்பிகள் சுற்றித் திரிகின்றன

[பக்கம் 27-ன் படங்கள்]

கம்பளி மூட்டைகளை இழுத்துச் செல்லும் ஒட்டக கூட்டம், 1929

[படத்திற்கான நன்றி]

Image Library, State Library of New South Wales

[பக்கம் 28-ன் படங்கள்]

ப்ரம்பிகளை வளைத்து பிடிக்கும் அவுட்பேக் ஸ்டைல்

[படத்திற்கான நன்றி]

© Esther Beaton

[பக்கம் 28-ன் படங்கள்]

ஒரு யூதாஸ் கழுதையில் ரேடியோ டிரான்ஸ்மிட்டரை பொருத்துதல்

[படத்திற்கான நன்றி]

Agriculture Western Australia