Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏன் தாத்தா பாட்டியோடு பழக வேண்டும்?

ஏன் தாத்தா பாட்டியோடு பழக வேண்டும்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

ஏன் தாத்தா பாட்டியோடு பழக வேண்டும்?

“எனக்கும் எங்கம்மாவுக்கும் பிரச்சினை வந்தா எங்க பாட்டிதான் சமாதானம் பண்ணி சேத்து வைப்பாங்க.”​—⁠டாம்ரிஸ்.

“குடும்பத்தின் சிறப்புமிக்க பாரம்பரியங்கள் இன்று வரை ஒத்திசைவோடு தழைத்தோங்குவதற்கு தாத்தா பாட்டிமார்தான் அடிப்படை காரணம் என்பதை சரித்திரத்தின் பக்கங்கள் நமக்கு படம்பிடித்து காட்டுகின்றன.” இது டாக்டர் ஆர்த்தர் கார்ன்ஹாபர் என்பவரின் கருத்து. அவர் தாத்தா பாட்டிமாரின் செல்வாக்கு! என்ற ஆங்கில புத்தகத்தில் இவ்வாறு விவரித்திருந்தார். அதில் அவர் கூறும் இன்னொரு குறிப்பை கவனிப்போம்: “அவர்கள் குடும்பத்தில் ஆற்றும் பங்கை விவரிப்பதற்கு வார்த்தைகள் இல்லை! அவர்கள் ஆசிரியர்களாக, பெற்றோரின் ஆதரவாளர்களாக, குடும்ப சரித்திரத்தை அடுத்த சந்ததிக்கு விவரித்து சொல்பவர்களாக, பராமரிப்பாளர்களாக, ஆலோசனை அளிப்பவர்களாக, மகிழ்விப்பவர்களாக செயல்படுகின்றனர். அவர்களுடைய சமூக, மனோதத்துவ, ஆன்மீக பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தாத்தா பாட்டிமாரின் பணிகளை நம் சமூகம் அற்பமாக கருதுவதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.”

கடந்த காலங்களில், தாத்தா பாட்டிமாரை குடும்ப வாழ்க்கையின் அஸ்திவாரத்திற்கு ஆதாரக்கல்லாகவே கருதினர்; அதிலும் குறிப்பாக யெகோவா தேவனை வணங்கிய ஜனங்களின் குடும்பங்களில் அவ்வாறுதான் கருதினர். வயதானவர்களை மதித்து போற்ற வேண்டும் என்பதாக பைபிள் இஸ்ரவேலர்களுக்கு ஆணையிட்டது. (லேவியராகமம் 19:32) தனிப்பட்ட மரியாதை அளிப்பதற்கு தகுதியானவர்கள் என்று அக்காலங்களில் தாத்தா பாட்டிமார் கருதப்பட்டனர்.​—1 தீமோத்தேயு 5:4.

அந்த காலமெல்லாம் மலை ஏறிவிட்டது என்பது கசப்பான உண்மை. குடும்ப அங்கத்தினர்கள் வெகு தொலைவில் வசிக்கின்றனர், எனவே அநேக இளைஞர்களுக்கு தங்கள் தாத்தா பாட்டிமாரோடு அவ்வளவு தொடர்பும் இருப்பதில்லை. ஜனங்களுடைய மனநிலையும் மாறிவிட்டது. உலகத்தின் பல பாகங்களில், வயதானவர்களை யாரும் மதிப்பதில்லை, சொந்தக்காரர்களாக இருந்தாலும் இதே கதிதான். (2 தீமோத்தேயு 3:1-3) சந்ததி இடைவெளி, இப்போது பெரும் பிளவாகவே மாறிவிட்டது. அவர்கள் வயதானவர்கள், நவீன உலகை புரிந்துகொள்ளாதவர்கள் என்றுதான் அநேக இளைஞர்கள் தங்கள் தாத்தா பாட்டிமாரைப் பற்றி நினைக்கின்றனர். ஆனால், வயதானவர்களால் இன்றைய வாலிபர்களின் பிரச்சினைகளையும் வேதனைகளையும் நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்பதை அநேக இளைஞர்களால் கற்பனைகூட செய்து பார்க்க முடிவதில்லை.

அவர்களைப் பற்றி நீங்களும் அவ்வாறே நினைத்துக் கொண்டிருந்தால் அந்த நினைப்பை மறுபரிசீலனை செய்யுங்கள்! உங்கள் தாத்தா பாட்டிமாரிடமிருந்து நீங்கள் மதிப்புமிக்க விஷயங்களை கற்றுக்கொள்ளலாம், குறிப்பாக அவர்கள் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருந்தால் இன்னும் அநேக விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். அவர்களோடு பழகாவிட்டால் நஷ்டம் உங்களுக்குத்தான். எவ்வாறு?

ஞானத்தையும் ஆலோசனையையும் அளிப்பவர்கள்

வாலிப பருவத்தில் வாழ்க்கை என்னும் ஓடத்தில் பயணம் செய்கையில், உங்களை வலிய வந்து தாக்கும் பயங்கரப் புயற் காற்றின்போது தாத்தா பாட்டிமார் அடைக்கலம் அளிக்கின்றனர். இந்த உண்மையை அநேக இளைஞர்கள் தங்களுடைய அனுபவத்திலிருந்தே கற்றுக்கொண்டிருக்கின்றனர். செவன்டீன் பத்திரிகை இளைஞர்களிடம் பின்வருமாறு விவரிக்கிறது: “உங்களைவிட தாத்தா பாட்டிமாருக்கு வாழ்க்கையில் அதிக அனுபவம் இருக்கிறது. எனவே, உங்கள் வயதுள்ள நண்பர்கள் அளிக்கும் உதவியைவிட அவர்களுடைய உதவி மேம்பட்டதாக இருக்கும். ஏனெனில் உங்கள் நண்பர்கள் வாழ்க்கைப் படகை செலுத்துவதில் உங்களைப் போலவே தடுமாறிக் கொண்டிருக்கின்றனர் என்பதை மறக்க வேண்டாம். நீங்களும் உங்கள் நண்பர்களும் வாழ்க்கைக் கடலின் கொந்தளிப்பை இப்போதுதான் பார்க்கிறீர்கள். ஆனால் உங்கள் தாத்தா பாட்டிமாரோ இவற்றைப் போன்ற அநேக கொந்தளிப்பு சவால்களை வெற்றிகரமாக சமாளித்திருக்கின்றனர். அவர்கள் விவேகத்தோடும் புத்திசாலித்தனத்தோடும் நடந்துகொள்பவர்கள்.” “நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்” என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பைபிளில் சொல்லப்பட்ட புத்திமதியைத்தான் இந்தக் குறிப்பு எதிரொலிக்கிறது.​—⁠நீதிமொழிகள் 16:31.

உங்களுடைய உலகிற்கும் உங்கள் தாத்தா பாட்டிமார் பார்த்த உலகிற்கும் வித்தியாசம் எக்கச்சக்கம் என்பது உண்மைதான். ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் நீங்கள் சமாளிப்பதற்காக போராடும் உணர்ச்சிகளை உங்கள் தாத்தா பாட்டிமாரும் சந்தித்திருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படிப்பட்ட உணர்ச்சிகளை எப்படி சமாளிப்பது என்பதில் உங்களுக்கு அனுபவம் இல்லாதிருக்கலாம், ஆனால் உங்கள் தாத்தா பாட்டிமாரோ அவற்றை சமாளிப்பதில் நிபுணர்களாகவே ஆகியிருப்பர். (நீதிமொழிகள் 1:4) இதனால்தான் நீதிமானாகிய யோபு பின்வருமாறு விளக்கினார்: “முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.” (யோபு 12:12) ஆம், இப்படிப்பட்ட ஞானம் தாத்தா பாட்டிமாரிடம் இருப்பதால், வாலிபர்களுக்கு தேவையான ஆலோசனை, ஆதரவு போன்றவற்றை அளிப்பதில் அவர்கள் சுமைதாங்கிகளாக செயல்பட முடியும்.

இப்போது ஒரு உதாரணத்தை கவனிக்கலாம். வாலிபப்பெண் டாம்ரிஸும் அவளுடைய அம்மாவும் வாழ்ந்து வந்த புறநகர் பகுதியிலிருந்த வீட்டில்தான் அவளுடைய பாட்டியும் வாழ்ந்தார். “எனக்கும் எங்கம்மாவுக்கும் பிரச்சினை வந்தா எங்க பாட்டிதான் சமாதானம் பண்ணி சேத்து வைப்பாங்க. பிரச்சினையை இன்னொரு கோணத்திலிருந்து பார்ப்பதற்கு எனக்கு உதவுவாங்க” என டாம்ரிஸ் சொன்னாள்.

அலெக்ஸான்டிரியாவுக்கும் இதேபோன்ற அனுபவம் இருக்கிறது. அவளுடைய பெற்றோர் வேறு இடத்திற்கு சென்றபோது அவளது பள்ளியும் மாறியது. அலெக்ஸான்டிரியா சொன்னதாவது: “என்னுடைய புதிய டீச்சர் சரியான சிடுமூஞ்சி, எண்ணெயில் கடுகைப்போட்டால் வெடிப்பதைப் போல கோபத்தில் வெடிப்பார்.” எனவே புதிய பள்ளியில் காலத்தை தள்ளுவது அவளுக்கு சிரமமாக இருந்திருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இந்த சமயத்தில்தான் அவளுடைய பாட்டி கைகொடுத்து உதவினார். அந்த சூழ்நிலையில் மனம் உடைந்துவிடாமல் இருப்பதற்கு அதை எவ்வாறு நோக்க வேண்டும் என்பதை சொல்லிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார். “இப்போதோ எனக்கு அந்தப் பள்ளியையும் பிடித்துவிட்டது, அந்த டீச்சரையும் பிடித்துவிட்டது” என்கிறாள் அலெக்ஸான்டிரியா.

பிரேஸிலில் வசிக்கும் ராஃபேல் என்ற வாலிபனின் அனுபவத்தை கவனிப்போமா? அவன் பள்ளிப்பருவத்தைக் கடந்து மேற்படிப்பிற்காக சென்றபோது தாத்தா பாட்டி எவ்வாறு உதவினார்கள் என்பதை பின்வருமாறு விவரிக்கிறான்: “எப்படிப்பட்ட நண்பர்களோடு பழக வேண்டும் என்பதையும், போதைப் பொருட்களை யாராவது கொடுத்தால் எவ்வாறு வேண்டாம் என்று சொல்ல வேண்டும் என்பதையும் அருமையாக விளக்கினார்கள்.” இப்போது ராஃபேல் முழுநேர ஊழியராக பணிசெய்கிறார்.

மாறி வரும் உலகில் தாத்தா பாட்டியின் பணி என்ற ஆங்கில புத்தகத்தின் ஆசிரியை எட்டா லஷான். இவர் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். அவர் எழுதுவதாவது: “ஒருநாள் என்னுடைய பேத்தி எனக்கு போன் செய்து, ‘பாட்டிமா, நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்; ஃபிரெண்ட்ஸுங்களால எனக்கு ஓயாத தொல்லை; எனக்கு ஒரு வழி சொல்லுங்களேன்’ என்றாள். அவளுடைய தோழிகளில் சிலர் அவளை மற்ற பையன்களோடு காதல் சந்திப்பில் ஈடுபடுத்த முயல்வதாக சொன்னாள். சிலர் அவளிடம் போனில் அடிக்கடி பேசுவதாகவும் சொன்னாள்.” அவள் இவ்வாறு உதவி கேட்டதால் அவளுடைய பாட்டி அருமையான முறையில் உதவினார். எனவே நீங்களும் உங்கள் அன்பான தாத்தா பாட்டிமாரோடு கொஞ்ச நேரம் பேசினால் அவர்களால் எவ்வளவு உதவி செய்ய முடியும் என்பதை புரிந்துகொள்வீர்கள்.

குடும்பத்தில் வியாதியோ அல்லது மரணமோ ஏற்படும் சமயத்தில் தாத்தா பாட்டிமாரின் உதவியை விவரிக்கவே முடியாது. லேசீயின் தந்தை தீராத வியாதியால் படுத்த படுக்கையாகி இறந்துவிட்டபோது சூழ்நிலையை சமாளிப்பதற்கு அவளுடைய பாட்டிதான் உதவினார். எனவேதான் அவரைப் பற்றி லேசீ பின்வருமாறு சொல்கிறாள்: “முன்பு இருந்ததைவிட எனக்கு பாட்டி மீது பாசம் அதிகமானதற்கு இதுவே காரணம்.”

ஒரு விசேஷ அன்பின் பிணைப்பு

உங்கள் பெற்றோரோடு உங்களுக்கு இருக்கும் உறவிற்கும் உங்கள் தாத்தா பாட்டிமாரோடு இருக்கும் உறவிற்கும் வித்தியாசம் இருக்கிறது. பெற்றோரோடு வாலிபர்களுக்கு சில சந்தர்ப்பங்களில் டென்ஷன் ஏற்படும், ஆனால் தாத்தா பாட்டியோடு அது ஏற்படுவதில்லை. இதற்கு காரணம் என்ன? தாத்தா பாட்டிமார் தங்கள் பேரப்பிள்ளைகளோடு ஒருவித விசேஷ அன்பால் பிணைக்கப்பட்டிருக்கின்றனர். அதைப் பற்றி பைபிள் இவ்வாறு விளக்குகிறது: “தங்கள் பேரப்பிள்ளைகளை நினைத்து தாத்தாக்கள் பெருமையடைகின்றனர்.”​—நீதிமொழிகள் 17:6, டுடேஸ் இங்கிலீஷ் வர்ஷன்.

பிள்ளைகளை ‘கர்த்தருக்கேற்ற [“யெகோவாவுக்கு ஏற்ற,” NW] சிட்சையிலும் போதனையிலும்’ வளர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்குத்தான் இருக்கிறது, தாத்தா பாட்டிமாருக்கு இல்லை. (எபேசியர் 6:4) அவர்களுக்கு அதிக பொறுப்பு இல்லாததன் காரணமாக அவர்கள் உங்கள் பெற்றோரைப் போல உங்களிடம் குறைகாண்பதில்லை. அதேபோல அவர்களுக்கு அனுதின வாழ்க்கையை சமாளிப்பது பெரிய போராட்டமும் இல்லை. இப்படிப்பட்ட பிரச்சினைகளை அவர்கள் அதிகம் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாததால் உங்கள் பிரச்சினைகளை செவிகொடுத்து கேட்கவும் உங்களுக்கு உதவவும் அவர்களால் முடியும். தான் “நல்ல ரேங்க் வாங்கியபோது” தாத்தா பாட்டிமார் “சிறுசிறு பரிசுகளை” அனுப்பியதாகவும், பியானோ கற்றுக்கொள்வதற்காக தனக்கு பணம் கொடுத்து உதவியதாகவும் பதினேழு வயது டாம் கூறுகிறான்.

எல்லா தாத்தா பாட்டிமாராலும் இப்படிப்பட்ட பரிசுகளை வழங்க முடியாதுதான். ஆனால், அவர்களுக்கு உங்கள் மேல் பாசம் இருக்கிறது என்பதை வார்த்தைகளால் உங்களை போற்றுவதன் மூலமும், நீங்கள் பேசும்போது அக்கறையோடு கவனிப்பதன் மூலமும் காட்டுவார்கள். இதன் மூலம் உங்களுக்கும் அவர்களுக்கும் நிலையான நட்பு ஏற்படும். டாம்ரிஸ் தன் பாட்டியைப் பற்றி இவ்வாறு சொல்கிறாள்: “எங்க பாட்டிக்கிட்ட எப்ப வேணும்னாலும் போய் எதை வேணும்னாலும் பேசலாம். நான் பேசறத பொறுமையா கேட்பாங்க. நான் பேசற விஷயம் மடத்தனமா இருந்தாலும் கவனமா கேட்பாங்க.” ஜோனாடஸ் என்ற இளைஞன் இவளைப் போலவே தன் தாத்தா பாட்டிமாரோடு சகஜமாக பேசுவான். மிக முக்கியமான விஷயங்களாக இருந்தாலும், சாதாரணமாக தயக்கமின்றி அவர்களோடு பேச முடியும் என்று விளக்குகிறான்.

ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுதல்

தாத்தா பாட்டிமாரின் ஞானத்தாலும், அவர்களது அன்பாலும் நீங்கள் பயனடைவது உண்மைதான். அதேபோல உங்களது இளமையின் பலத்தாலும், பாசத்தாலும் அவர்களும் ஊக்கமடைகின்றனர். எவ்வாறு? பலவிதங்களில் நீங்கள் உங்கள் தாத்தா பாட்டிமாருக்கு உதவியாகவும் ஆதரவாகவும் இருக்க முடியும். அவர்களது சரீர பலம் படிப்படியாக குறைகிறது என்பது வேதனையான உண்மை. ஒருவேளை அவர்கள் நோய்நொடியால் வாடலாம். இந்த சந்தர்ப்பங்களில் நீங்கள் அவர்களுக்கு உதவியாக கடைக்கு சென்று சாமான்கள் வாங்கி வந்தாலோ அல்லது வீட்டு வேலைகளில் அவர்களுக்கு கூடமாட ஒத்தாசை செய்தாலோ அதிக உதவியாக இருக்கும்.

பல தாத்தா பாட்டிமார் துணையை இழந்து தனிமையில் தவிக்கின்றனர். இந்த தனிமையை சமாளித்து வாழ்க்கையை அனுபவிப்பதற்கு உங்களால் அவர்களுக்கு உதவ முடியும்; நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களிடம் அக்கறை காட்டுவதுதான். இப்படி செய்வது பின்வரும் பைபிளின் கட்டளைக்கு கீழ்ப்படிவதாகும்: ‘[உங்கள்] தாத்தா பாட்டிமாருக்கு நன்றிக்கடன் ஆற்றவும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் இதுவே கடவுளுடைய பார்வையில் ஏற்புடையது.’​—1 தீமோத்தேயு 5:4, NW.

உங்கள் தாத்தா பாட்டிமாரிடம் நீங்கள் நெருங்கிப் பழகினால் உங்களுக்கு நன்மையளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அது உங்களுக்கும் உங்கள் தாத்தா பாட்டிமாருக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும்! ஒருவேளை நீங்கள் அவர்களோடு இதுவரை நெருங்கி பழகாமல் இருந்திருக்கலாம். இந்த விஷயத்தில் உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள விரும்பலாம், ஆனால் எங்கே ஆரம்பிப்பது, எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல் தவிக்கலாம். ஒருவேளை உங்கள் தாத்தா பாட்டிமார் அதிக தொலைவில் வாழலாம்; அல்லது உங்கள் பெற்றோரின் விவாகரத்து காரணமாக உங்கள் தாத்தா பாட்டிமாரை விட்டு விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் எப்படி சமாளிக்கலாம் என்பதை இனி வரவிருக்கும் ஒரு கட்டுரை விளக்கும்.(g01 4/22)

[பக்கம் 17-ன் படம்]

தாத்தா பாட்டிமார், நீங்கள் சொல்வதை கவனமாக கேட்பார்கள், நல்ல புத்திமதி கொடுத்து, ஆதரவளிப்பார்கள்

[பக்கம் 18-ன் படம்]

உங்கள் தாத்தா பாட்டிமாருக்கு உதவுங்கள்