கதிரியக்கம் ஜாக்கிரதை!
கதிரியக்கம் ஜாக்கிரதை!
எக்கச்சக்கமான அணு ஆயுத சோதனைகள் 1950-களில் நடத்தப்பட்டன. இப்படிப்பட்ட சோதனைகளின்போது நிகழும் அணுக்கரு வினை மாற்றங்களில் துணைப்பொருளாக வெளிப்படும் ஸ்ட்ரான்ஷியம் 90 (Sr90), குழந்தைகளின் பற்களில் காணப்பட்டதாக கனடாவின் செய்தித்தாளான க்ளோப் அண்ட் மெய்ல் அறிவிக்கிறது. குழந்தைகளுக்கு புற்றுநோய் அதிகமாக வருவதற்கு இதுவே காரணம் எனவும் அப்போது சொல்லப்பட்டது.
ஐ.மா. கதிரியக்கம் மற்றும் பொது சுகாதார திட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பல பத்தாண்டுகளுக்கு பிறகு இப்போது இதைக் குறித்து அபயக்குரல் எழுப்புகின்றனர். “நிலத்தின் மேற்பரப்பில் அணு ஆயுத சோதனை நடத்திய வருடங்களில் எந்தளவுக்கு கதிரியக்கம் இருந்ததோ அந்தளவுக்கு 1990 முதல் பிறந்த பிள்ளைகளுடைய பற்களில் Sr90 இருப்பதாக” அந்த திட்டத்தில் இன்டர்னல்-மெடிசின் ஸ்பெஷலிஸ்ட்டாக பணிபுரியும் டாக்டர் ஜேனட் ஷர்மன் விளக்குகிறார்.
இந்த Sr90 எப்படி உண்டாகிறது? கடந்த காலங்களில் நடந்த அணு விபத்துக்களாலோ, அணு உலைகளிலிருந்து வரும் கதிரியக்கத்தாலோ உண்டாகலாம், அல்லது பல வருடங்களுக்கு முன் நடத்திய அணு ஆயுத சோதனைகளாலும் உண்டாகலாம் என சில விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். a அதற்கு எது காரணமாக இருந்தாலும் ஒரு விஷயம் உறுதி. கதிரியக்கத்தால் மாசுபடுத்தப்பட்ட தாவரங்களிலிருந்து உணவையும் இவற்றை உண்ணும் பசுக்களிலிருந்து கிடைக்கும் பாலையும் உட்கொள்ளுவதால் இந்த Sr90 மனித உடலில் சேருகிறது. இது கால்சியத்தைப் போன்ற ஓர் இரசாயன பொருள். எனவே, இந்த கதிரியக்க பொருள் மனிதர்களுடைய எலும்புகளில் ‘குடியிருக்கிறது.’ இதனால் எலும்பு புற்றுநோய், இரத்தப் புற்றுநோய் போன்ற வியாதிகளை ஏற்படுத்தும் ஆபத்தையும் அதிகரிக்கிறது.
இந்த விதமான கதிரியக்கத்திற்கு பலியாகும் எதிர்கால சந்ததியாரைப் பற்றி க்ளோப் செய்தித்தாள் கவலை தெரிவிக்கிறது. “அணு உலையின் உட்பகுதியை எரிபொருள் கற்றையால் நிரப்பும்போது ஏற்படும் கதிரியக்கத்தைவிட, [அணுக்கருக் கழிவுப் பொருள்களை] அகற்றும்போது உண்டாகும் கதிரியக்கம் பத்து லட்சம் மடங்கு அதிகமாகும். இவ்வாறு அகற்றப்படும் கழிவுகள் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை; எவ்வாறெனில், ஒரு மீட்டர் [மூன்று அடி] தூரத்திலிருக்கும் ஒரு நபர் அவற்றிலிருந்து வெளிப்படும் கதிரியக்கத்தால் ஒரு மணிநேரத்திற்குள் இறக்க நேரிடலாம்” என அந்த செய்தித்தாள் குறிப்பிடுகிறது.
கதிரியக்க அபாயம் மனிதகுலத்தை அச்சுறுத்துகையில் பாதுகாப்பான எதிர்காலத்திற்கான நம்பிக்கை சாத்தியமா? இந்த பூமியையும் அதிலுள்ள எல்லா ஜீவராசிகளையும் கடவுள் முதலில் படைத்தபோது, அனைத்தும் “மிகவும் நன்றாயிருந்தது” என பைபிள் விவரிக்கிறது. (ஆதியாகமம் 1:31) வெகு விரைவில், நம் கோளம் அழகிய பூங்காவனமாக மாற்றப்படும் எனும் பைபிள் வாக்குறுதியை நாம் தாராளமாக நம்பலாம். அந்த சமயத்தில் கதிரியக்கத்தால் உணவும் தண்ணீரும் மாசுபடுத்தப்படுவது கடந்த கால நிகழ்ச்சியாகிவிடும்.—சங்கீதம் 65:9-13; வெளிப்படுத்துதல் 21:1-4.
(g01 2/08)
[அடிக்குறிப்பு]
a 1986-ல், உக்ரேனிலுள்ள செர்நோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக, ஜெர்மனியில் பிறக்கும் குழந்தைகளின் பற்களில் காணப்படும் Sr90-ன் அளவு பத்து மடங்கு அதிகமாக இருக்கிறது.
[பக்கம் 31-ன் படம்]
Photo: U. S. Department of Energy photograph