அப்பா இல்லாமல் எப்படி சமாளிப்பேன்?
இளைஞர் கேட்கின்றனர் . . .
அப்பா இல்லாமல் எப்படி சமாளிப்பேன்?
“அப்பா இல்லாம வாழ்க்கைய ஓட்டறது ரொம்ப சிரமமா இருந்துச்சு. யாராவது என்னை கவனிச்சுக்க மாட்டாங்களான்னு ஏங்கினேன்.”—ஹென்றி. a
ஜோனின் அப்பா குடும்பத்தை அம்போவென்று தவிக்கவிட்டு எங்கோ சென்றுவிட்டார். அவருக்கு உலகமே மதுபானம்தான். அப்போது ஜோனுக்கு 13 வயது. போனவர் போனவர்தான், பிள்ளைகளை சந்திக்கவோ அவர்களுடன் பேசவோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இது ஜோனுக்கு மட்டுமே ஏற்பட்ட அனுபவமா? இல்லை. இதேபோல தகப்பன்மார்களால் கைவிடப்பட்ட அநேக ஜோன்கள் இன்று தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுதான் உங்களுடைய கதையும் என்றால் சமாளிப்பதற்கு படாதபாடுபடுவீர்கள். உங்களுடைய மனதில் விழுந்த அடியால் துடிதுடித்து போவீர்கள், அவ்வப்போது ஆத்திரமும் பொத்துக்கொண்டு வரும். சில சமயம் சோகம், சில சமயம் மன உளைச்சல். எல்லாரையும் எதிர்த்துக்கொள்ளலாமா என்றுகூட யோசிப்பீர்கள். “துன்பம் அதிகமானால் புத்திசாலியும் பைத்தியக்காரனைப் போல நடந்துகொள்வான்” என்று பைபிள் எழுத்தாளர் சாலொமோன் சொன்னது உண்மைதான்.—பிரசங்கி 7:7, NW.
‘பைத்தியத்தைப் போல நடப்பது’
ஜேம்ஸின் அப்பா வீட்டைவிட்டு போய்விட்டார். அதன் பின் ஜேம்ஸ் ‘பைத்தியக்காரனைப்போல’ நடந்துகொள்ள ஆரம்பித்தான். ஜேம்ஸ் சொன்னதைக் கேட்போமா? “அப்போதெல்லாம் நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன். எங்க அம்மா ஏதாவது சொன்னாலும் கேட்கவே மாட்டேன். எதற்கெடுத்தாலும் சண்டை போட ஆரம்பிச்சேன். வாயத்தொறந்தா பொய்தான் சரமாரியா வரும். ராத்திரி ஆச்சுன்னா வீட்டைவிட்டு கிளம்பிடுவேன், ஏன்னா என்னை கண்டிக்க யாருமே இல்ல. அம்மா எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடி பாத்தாங்க, ஊஹூம். அவங்களால ஒண்ணும் பண்ண முடியல்ல.” ஜேம்ஸ் எல்லாரையும் எதிர்த்துக்கொண்டதால் ஏதாவது பயன் இருந்ததா? இல்லவே இல்லை. அவனே சொல்கிறான்: கொஞ்ச நாட்களில் “போதை வஸ்துக்களில் மயங்க ஆரம்பித்தேன், ஸ்கூலை கட்டடித்துவிட்டு ஊர் சுற்றினேன், பரீட்சையில் பெயிலானேன்.” அவனுடைய நடத்தை படிப்படியாக பாதாளத்தை நோக்கி ‘முன்னேறியது.’ “கடைகளிலிருந்து திருட ஆரம்பித்தேன், அடுத்தபடியாக ஆட்களை அடித்து வழிப்பறியும் செய்தேன். போலீஸ் வந்தது, இரண்டுமுறை கைது செய்து கொஞ்ச காலத்திற்கு சிறையில் அடைத்தது. ஆனால், என் போக்கில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை” என்கிறான்.
ஜேம்ஸ் ஏன் இப்படி எல்லாரையும் எதிர்த்துக்கொண்டான் என்று கேட்டபோது அவன் கொடுத்த பதில்: “எங்க அப்பா வீட்டைவிட்டு போயிட்டாரு. என்னை யாராலும் கண்டிக்க முடியல்ல. அதனால எங்கம்மா, தம்பி, தங்கை எல்லோரும் நொந்துபோனாங்க; எனக்கே எவ்வளவு வேதனைங்கறத நான் யோசிக்கல்ல. எங்கப்பா என்னை கவனிச்சுக்கணும், என்னை கண்டிச்சு வளக்கணும் அப்படீன்னு ஆசைப்பட்டேன்.”
ஏற்கெனவே நிலைமை சரியில்லாமல் இருக்கும்போது எல்லாரையும் எதிர்த்துக்கொண்டால் நிலைமை படுமோசமாகிவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. (யோபு 36:18, 21) உதாரணத்திற்கு ஜேம்ஸையே எடுத்துக்கொள்ளுங்கள், அவன் ஏறுக்குமாறாக நடந்துகொண்டதால் அவனுக்கும் வேதனை, கூடபிறந்தவர்களுக்கும் வேதனை, பெற்றெடுத்த அம்மாவுக்கும் அதிக வேதனை. அவர்கள் அநாவசியமாக துன்பப்பட்டனர். இப்படி எதிர்த்துக்கொள்வதில் இன்னும் பெரிய அபாயம் ஒன்று இருக்கிறது. இளைஞர்கள் தங்கள் தாய்க்கு கீழ்ப்படிய வேண்டும் என்பதாக யெகோவா கட்டளையிட்டிருக்கிறார்; எனவே ஒருவன் பெற்றோரை எதிர்த்துக்கொண்டால் அவன் தேவனுடைய எதிரியாகிவிடுவான்.—நீதிமொழிகள் 1:8; 30:17.
கோபத்தை கட்டுப்படுத்த
அப்படியென்றால், அப்பா மீது ஆத்திரமும் எரிச்சலும் ஏற்படுகிறதே, அதை சமாளிக்க என்ன செய்வது? உங்கள் அப்பா b தவிக்கவிட்டு சென்ற அப்பாமார்களுக்கு தங்கள் பிள்ளைகள் மீது பாசம் இல்லை என்பதாக சொல்ல முடியாது என அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், பிள்ளைகளை வந்து பார்க்காமல் இருப்பதற்கான காரணம், முன்பு ஏற்பட்ட அவமானமும் குற்ற உணர்ச்சியும்தான். மற்ற அப்பாமார்களுடைய விஷயத்தில் போதை அல்லது குடிவெறி போன்ற பிரச்சினை மலையளவு உருவெடுத்து வந்து அவர்களை தடுக்கிறது. இதற்கு ஜோனுடைய அப்பாவை உதாரணம் காட்டலாம்; இப்படிப்பட்ட அப்பாக்களால் நார்மலாக நடந்துகொள்ள முடிவதில்லை.
வீட்டை விட்டு சென்றதற்கு நீங்கள் பொறுப்பாளி அல்ல என்பதே முதலாவதாக நீங்கள் கவனிக்க வேண்டிய குறிப்பு. வீட்டைவிட்டு போய்விட்டார் என்பதற்காக அவருக்கு உங்களிடம் இருந்த பாசம் சுத்தமாக வற்றிப்போய்விட்டது என்று நினைத்துவிடவும் முடியாது. உங்களை வந்து பார்க்கவில்லை, ஒரு போன்கூட செய்யவில்லை என்றால் மனம் நொந்து போகும் என்பது உண்மைதான். இந்த விஷயத்தைக் குறித்து இதற்கு முன்பு ஒரு கட்டுரை வெளிவந்தது.எது எப்படியிருந்தாலும் சரி, உங்கள் பெற்றோரும் அபூரணர்களே என்பதை மறக்க வேண்டாம். ‘எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகிவிட்டனர்’ என்பதே பைபிள் கற்பிக்கும் பாடம். (ரோமர் 3:23; 5:12) எனவே, பெற்றோர் அபூரணராக இருப்பதால் பிள்ளைகளை எப்படி வேண்டுமானாலும் நோகடிக்கலாம் அல்லது பொறுப்பற்ற விதமாக நடந்துகொள்ளலாம் என்பதும் அர்த்தமல்ல. ஆனால், அபூரணத்தை நாம் வம்சாவளியாக பெற்றிருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டால் உங்களையே காயப்படுத்தும் கோபத்தையும் மனக்கசப்பையும் தொலைத்துவிடுவதற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
பெற்றோர்மீது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோபத்தையும் மனக்கசப்பையும் மேற்கொள்வதற்கு பிரசங்கி 7:10-ல் (பொ.மொ.) கொடுக்கப்பட்டிருக்கும் வசனம் உதவி செய்யக்கூடும். அந்த வசனத்தில், கடந்துபோன நல்ல நாட்களை நினைத்து ஏங்கக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை கவனிக்கவும்: “‘இக்காலத்தைவிட முற்காலம் நற்காலமாயிருந்ததேன்?’ என்று கேட்காதே; இது அறிவுடையோர் கேட்கும் கேள்வியல்ல.” எனவே, முன்பெல்லாம் எவ்வளவு நன்றாக இருந்தது என்று நினைத்துக் குமுறுவதைவிட இப்போதிருக்கும் நிலையை எப்படி சரிசெய்யலாம் என்பதில் கவனம் செலுத்துவது புத்திசாலித்தனம்.
நீங்கள் எடுக்க வேண்டிய முயற்சி
உதாரணத்திற்கு, நீங்களே உங்கள் அப்பாவை சந்திப்பதற்கு முயற்சி எடுக்கலாமே. உங்களை தவிக்கவிட்டு சென்றவர் அவர்தான், எனவே உங்களை சந்திக்க வேண்டிய பொறுப்பு அவருக்குத்தான் இருக்கிறது என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் சரியே. ஆனால், இதுவரை உங்களை சந்திப்பதற்கு அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதேசமயம் அவரை பார்க்காததால் நீங்கள் மனமுடைந்து போயிருக்கிறீர்கள், வேதனை உங்களை வாட்டுகிறது. இந்த கசப்பான சூழ்நிலையில் நீங்களே ஏன் பரிகாரத்திற்கு முயற்சி செய்யக்கூடாது? இதைப் போன்ற பிரச்சினையை இயேசு எவ்வாறு கையாண்டார் என்பதை கவனியுங்கள். அது இயேசு பூமியில் வாழ்ந்த கடைசி நாள்; இயேசுவின் அப்போஸ்தலர்கள் அவரை தனியாக விட்டுவிட்டு ஓடிவிட்டனர். நண்பர்களே இப்படிச் செய்தபோது அவருக்கு வேதனையாகத்தான் இருந்தது. பேதுருவோ, தனக்கு என்ன நேரிட்டாலும் சரி, தான் இயேசுவை கைவிடுவதில்லை என்று அதே நாளில்தான் பெருமை அடித்திருந்தார். ஆனால், ஒரு தடவை அல்ல மூன்று முறை அவர்தான் இயேசுவை மறுதலித்தார்!—மத்தேயு 26:31-35; லூக்கா 22:54-62.
இப்படியெல்லாம் பேதுரு நடந்துகொண்ட போதிலும் இயேசு அவரிடம் தொடர்ந்து பாசத்தைக் காட்டினார். இயேசு உயிர்த்தெழுந்த பிறகு பேதுரு முன் தனிப்பட்ட முறையில் தோன்றினார். எதற்காக? பேதுருவோடு தமக்கிருந்த உறவை புதுப்பித்துக்கொள்வதற்கே. இவ்வாறு இயேசுவே முன்வந்து நடவடிக்கை எடுத்தார். (1 கொரிந்தியர் 15:5) இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் நடந்தது. இயேசு பேதுருவிடம், “நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?” என்று கேட்டார். அதற்கு பேதுரு, “ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!” என்றார். ஆக, பேதுரு இயேசுவை மறுதலித்து வெட்கத்திற்குரிய விதத்தில் நடந்திருந்தாலும், அவருக்கு இயேசுவிடம் அன்பு இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.—யோவான் 21:15, பொ.மொ.
மேற்கண்ட சம்பவத்தில் சுமுகமான முடிவு ஏற்பட்டது. அதைப் போலவே உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பமும் முடிவுக்கு வரலாம், எனவே வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது என்று நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே முதல் அடி எடுத்து வைப்பதைப் போல ஒரு லெட்டர் எழுதினால் அல்லது ஒரு ஃபோன்கால் செய்தால் அப்பா ஒருவேளை பதிலளிக்கக்கூடும். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஹென்றி என்ன செய்தார் என்பதை விவரிக்கிறார்: “எங்கப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதினேன், அவரும் உடனே பதில் போட்டார். அதில் என்னை நினைத்து பெருமை அடைவதாக எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை ஃபிரேம் போட்டு மாட்டி வைத்தேன். பல ஆண்டுகள் அந்தக் கடிதத்தை பொக்கிஷமாக பாதுகாத்தேன், இன்று வரை பத்திரமாக வைத்திருக்கிறேன்.”
இவரைப் போலவே ஜோனும் அவளது சகோதர சகோதரிகளும் தங்கள் குடிகாரத் தந்தையை சென்று பார்ப்பது என்று முடிவு செய்தனர். “அவரைப் பார்த்த சமயத்திலும் போதையில்தான் இருந்தார், ஆனாலும் அவரைப் பார்த்ததே எனக்கு ஒருவித திருப்தியை அளித்தது” என்பதாக ஜோன் சொன்னாள். எனவே நீங்களும் இப்படி ஏதாவது முயற்சி செய்தால் ஒருவேளை பிரயோஜனமாக இருக்கக்கூடும். அப்பாவை நீங்கள் தொடர்புகொள்ள முயற்சி செய்தபோது அவர் உங்களை கண்டுகொள்ளவே இல்லை என்றால் என்ன செய்வது? கொஞ்ச நாட்களுக்கு அப்படியே விட்டுவிட்டு மறுபடியும் முயற்சி செய்யலாம்.
புறக்கணிக்கப்பட்டால்
சாலொமோன் நமக்கு கொடுக்கும் புத்திமதியை கவனிப்போமாக: “தேடுவதற்கு ஒரு காலம் உண்டு, தேடிப் பயனில்லை என்று கைவிடுவதற்கு ஒரு காலம் உண்டு.” (பிரசங்கி 3:6, NW) தங்களுடைய தந்தை தங்களோடு பேசுவதற்குக்கூட தயாராக இல்லை என்ற கசப்பான உண்மையை சில இளைஞர்கள் சந்திக்க வேண்டியிருக்கும். ஒருவேளை உங்கள் அப்பா இந்த ரகமாக இருக்கலாம். அப்படியென்றால் என்றாவது ஒருநாள் உங்களை புறக்கணித்ததற்கு அவர் வருத்தப்படுவார்.
அவர் இப்போது உங்களை புறக்கணித்துவிட்டார் என்பதால் நீங்கள் மதிப்பில்லாதவர் என்பதாகிவிடுமா? இல்லவே இல்லை. பைபிளில் சங்கீதங்களை எழுதிய தாவீது இவ்வாறு சொல்கிறார்: “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் [“யெகோவா,” NW] என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.” (சங்கீதம் 27:10) கடவுள் உங்களை இன்னமும் மதிப்பு மிக்கவராகவே கருதுகிறார்.—லூக்கா 12:6, 7.
ஆகவே நீங்கள் மனமுடைந்து போயிருக்கும்போது அல்லது மன உளைச்சலால் அவதிப்படும்போது ஜெபத்தில் கடவுளிடம் உங்கள் வேதனைகளை கொட்டுங்கள். (சங்கீதம் 62:8) அவர் உங்கள் ஜெபத்தைக் கேட்டு நிச்சயமாக ஆறுதல் அளிப்பார். இதைப் பற்றி இன்னொரு பைபிள் சங்கீதம் இவ்வாறு சொல்கிறது: “என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது.”—சங்கீதம் [திருப்பாடல்கள்] 94:19, பொ.மொ.
இவ்வாறு, புறக்கணிக்கப்பட்ட வேதனையை சமாளிப்பதற்கு சபையில் இருக்கும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளோடு நீங்கள் அன்பாக பழக வேண்டும். “உண்மை நண்பன் எப்போதும் அன்பாக இருப்பான், வேதனை வரும்போது உதவுவதற்காக உடன் பிறந்தவன் போல் செயல்படுவான்” என்று நீதிமொழிகள் 17:17-லில் (NW) சொல்லப்பட்டிருக்கிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் இப்படிப்பட்ட உண்மையான நண்பர்களை நீங்கள் காண முடியும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சபையில் இருக்கும் கண்காணிகளிடம் நன்றாக பழகுவது உங்களுக்கு பயனளிக்கும். ஜோனுடைய தம்பி பீட்டர் கொடுக்கும் புத்திமதியை கவனிப்போம்: “சபையிலுள்ள வயதானவர்கள் அல்லது முதிர்ச்சிவாய்ந்தவர்களிடம் பேசுங்கள், அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். உங்கள் அப்பா உங்களை தவிக்கவிட்டு சென்றுவிட்டார் என்றால், உங்கள் மனம் எப்படி தவிக்கிறது என்பதை அவர்களிடம் விளக்குங்கள்.” உங்கள் அப்பா வீட்டில் இருந்தபோது எத்தனையோ வேலைகளை செய்திருப்பார்; இப்போதோ அவற்றையெல்லாம் நீங்கள் செய்தாக வேண்டும். உதாரணத்திற்கு, அவர் வீட்டிலிருக்கையில் சிறுசிறு ரிப்பேர் வேலைகளை எல்லாம் கவனித்து வந்திருப்பார். அதனால், இப்போது நீங்கள் இவற்றை எப்படி செய்யலாம் என்பதற்கு சபை கண்காணிகள் சில நடைமுறையான ஆலோசனைகளையும் அளிப்பார்கள்.
உங்கள் அம்மா தாங்க முடியாத மனவேதனையை தாங்கிக்கொண்டிருக்கிறார் என்பது உண்மைதான். இருந்தாலும் உங்கள் மனம் படும் வேதனையை அம்மாவிடம் மரியாதையுடனும் சாந்தத்துடனும் சொன்னால் உங்களுக்கு தன்னால் முடிந்த உதவியை நிச்சயம் அளிப்பார். ஆகவே உங்கள் அம்மா கட்டிடத்தை தாங்கும் தூணைப்போல் உங்களை ஆதரிப்பார்.
நீங்களும் குடும்பத்திற்கு தூணாக!
வீட்டில் அப்பா இல்லை என்றால் குடும்பத்தில் ஏராளமான மாற்றங்கள் வரும். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு உங்கள் அம்மா வேலைக்கு செல்ல வேண்டி இருக்கும், சம்பளம் போதவில்லை என்றால் ஒருவேளை இரண்டு இடங்களில் வேலை செய்ய வேண்டி இருக்கும். நீங்களும் உங்களோடு பிறந்தவர்களும் வீட்டில் அதிக வேலைகளை செய்து அவருடன் ஒத்துழைக்க வேண்டி இருக்கும். ஆனால் தன்னலமற்ற கிறிஸ்தவ அன்பு உங்களுக்கு இருந்தால் இப்படிப்பட்ட மாற்றங்களை சமாளிக்க முடியும். (கொலோசெயர் 3:14) உங்களுக்கு சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்படும், கசப்புணர்ச்சியை உங்களால் கட்டுப்படுத்தவும் முடியும். (1 கொரிந்தியர் 13:4-7) இதைப் பற்றி பீட்டர் என்ன சொல்கிறான் என்பதை கேட்போமா? “என் குடும்பத்துக்கு என்னாலான உதவிகளை செய்யறேன்; அதனால எனக்கு ரொம்ப திருப்தியா இருக்கு. இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில் எங்கம்மாவுக்கும் சகோதரிகளுக்கும் உதவி செய்யறதைவிட வேறென்ன சாதிக்க போறேன்?”
அப்பா வீட்டைவிட்டு போனது கொடுமையானதே, அதனால் ஏற்பட்ட வலியும் மிக அதிகமே. ஆனால் உங்களுக்கு உதவுவதற்கு கடவுளும் அன்பான கிறிஸ்தவ நண்பர்களும், குடும்பங்களும் இருக்கின்றன. எனவே நீங்களும் உங்கள் குடும்பமும் இந்த சவாலை நிச்சயம் சமாளிக்கலாம். c
[அடிக்குறிப்புகள்]
a பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
b நவம்பர் 22, 2000 தேதியிட்ட ஆங்கிலப் பத்திரிகையில் “இளைஞர் கேட்கின்றனர் . . . அப்பா எங்களை விட்டு சென்றதற்கு காரணம் என்ன?” என்ற கட்டுரையை பார்க்கவும்.
c ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தில் வாழ்வதைப் பற்றி இன்னும் கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள டிசம்பர் 22, 1990, மார்ச் 22, 1991 ஆகிய ஆங்கில இதழ்களில் “இளைஞர் கேட்கின்றனர் . . .” பகுதிகளை வாசிக்கவும்.
(g00 12/22)
[பக்கம் 26-ன் படங்கள்]
சில இளைஞர்கள் அப்பாவை சந்திப்பதற்கு சுயமுயற்சி எடுத்திருக்கின்றனர்