Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பங்குச் சந்தையில் பணத்தைப் போடலாமா?

பங்குச் சந்தையில் பணத்தைப் போடலாமா?

பங்குச் சந்தையில் பணத்தைப் போடலாமா?

“பங்குதாரர்களின் எண்ணிக்கை சந்தையையே ஒரு கலக்கு கலக்குகிறது.”​—⁠நியூஸ் வீக், ஜூலை 5, 1999.

பங்குச் சந்தையின் தரையே தெரியாத அளவுக்கு மக்கள் குவிந்திருக்கின்றனர்; அங்கு சந்தைக்கடையை போல ஒரே கூச்சல் குழப்பமாக இருக்கிறது. அங்கு, புதிரான (புதிதாக செல்பவருக்கு) கை செய்கைகள் காட்டப்படுகின்றன; டிக்கெர்ஸ் என்ற எலெக்ட்ரானிக் மெஷினிலிருந்து சங்கேத பாஷையில் செய்திகள் வருகின்றன, அவை வந்த வேகத்தில் மாறிக்கொண்டே இருக்கின்றன; இவ்வளவுக்கும் மத்தியில் அங்குள்ள புரோக்கர்கள் முண்டியடித்துக்கொண்டு காது கிழிய கத்துகின்றனர்.

முன்னொரு காலத்தில் பங்குச் சந்தையைப் பற்றி ஒன்றும் புரியாமல் குழம்பிக்கொண்டிருந்த அநேகர், இன்று முதலீடு செய்கின்றனர். எப்படி? இதற்குக் காரணம், இன்டர்நெட். பொருளாதாரச் செய்திகளையும், புரோக்கர்களைப் பற்றியும் முதலீடு செய்வதற்குரிய ஆலோசனைகளையும் முதலீட்டாளர்கள் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இது உதவியிருக்கிறது. வால் ஸ்டிரீட் நியூஸ் என்ற செய்தித்தாளுடைய பிரதான எடிட்டர் பால் ஃபேரெல் எழுதுகிறார்: “[தனி முதலீட்டாளர்களுக்கு] இன்டர்நெட் மூலம் செய்யப்படும் முதலீடு ஒரு புதிய அத்தியாயமாக மாறியிருக்கிறது. இதை தங்க வேட்டைக்கு ஒப்பிடலாம், யார் முன்னும் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் இல்லை, வீட்டிலிருந்துகொண்டே வேலை செய்து பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பை இது அளிக்கிறது.”

இன்று பங்குச் சந்தையைப் பற்றி கொஞ்சமே தெரிந்த அநேகர், அதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்; இதனால் சில பொருளாதார ஆலோசகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். பங்கு பத்திர நிறுவனத்தில் 38 வருடங்களுக்கும் அதிகமாக வேலை செய்து அனுபவம் பெற்ற ஒரு டீலர் விழித்தெழு! நிருபரிடம் இவ்வாறு சொன்னார்: “இன்று அநேகர் நம்பிக்கையுள்ள முதலீட்டாளர்களாக அல்ல ஆனால் யூகத்தின்பேரில் சந்தையில் பங்குகளை வாங்குகின்றனர். அதை சிலர் முதலீடு என சொல்லிக்கொள்கின்றனர், ஆனால் உண்மையில் அவர்கள் வாங்கும் அல்லது விற்கும் [பங்குகளுக்குரிய] கம்பெனிகளைப் பற்றி அவர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை.”

உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு முன் எதையெல்லாம் சிந்திக்க வேண்டும்? பங்குகளின் இந்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு; அப்படியென்றால் இது சூதாட்டமா? முதலில், பங்குச் சந்தை எவ்வாறு செயல்படுகிறது என சிந்திப்போம்.

பாகப் ‘பிரிவினை’

ஒரு கம்பெனி வெற்றிகரமாக செயல்பட அதற்கு மூலதனம் தேவை அல்லது பொதுமக்கள் அளிக்கும் முதலீடு தேவை. அந்த கம்பெனி நன்கு வளர்ந்துவரும்போது, கூடுதல் முதலீடு அதாவது பெரிய தொகை தேவைப்படுகிறது. அந்த பெரிய தொகையை திரட்டுவதற்காக, நிர்வாகம் தன்னுடைய ஸ்டாக்கை (Stock) ஷேர்களாக பிரித்து பொதுமக்களுக்கு கொடுக்க முடிவு செய்யலாம். பங்குச் சந்தைக்குரிய ஒரு கையேடு இதை இவ்வாறு விளக்குகிறது: “ஸ்டாக் (பங்குக்கோவை) என்பது ஒரு நிறுவனத்தின் முதலீட்டில் உங்களுக்கு இருக்கும் பங்கு. நீங்கள் ஸ்டாக்குகளை அல்லது ஷேர்களை வாங்கும்போது அந்த கம்பெனியின் ஒரு பாகம் உங்களுக்கு சொந்தமாகிறது.”

உங்களுக்கு காய்கறி சந்தையை பற்றி நன்கு தெரியும். அங்கே வாங்குபவர்களும் விற்பவர்களும் கூடிவந்து வியாபாரம் செய்வார்கள். இதேபோன்றுதான், பங்குச் சந்தையும். இங்கு பங்குகளை வாங்குபவர்களும் விற்பவர்களும் கூடிவந்து வியாபாரம் செய்வார்கள். பங்குச் சந்தையாக இது உருவாவதற்கு முன்பு, காப்பி கடைகளிலும், ரோட்டோரங்களிலும் ஸ்டாக்குகளை புரோக்கர்கள் மூலமாக வியாபாரம் செய்தனர். பின்பு, 68 உவால் ஸ்டிரீட் என்ற இடத்தில் பட்டன்வுட் மரத்தின்கீழ் வியாபாரம் செய்தனர். இதுவே நியூ யார்க்கின் பங்குச் சந்தை உருவாவதற்கு காரணமாகியது. a இன்று அநேக நாடுகளில் பங்குச் சந்தைகள் இயங்கி வருகின்றன. எந்த நாளானாலும் எந்த நேரமானாலும் உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் பங்குச் சந்தை இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. அதன் சப்தம் ஓய்வதே இல்லை.

ஸ்டாக் வியாபாரம் செய்ய விரும்பும் ஒருவர், முதலில் புரோக்கரை அணுகி ஒரு அக்கவுண்டை துவங்குகிறார், அவரிடம் முதலீடு செய்வதற்கு ஆர்டர் கொடுக்கிறார். இன்று ஸ்டாக்குகளை வாங்குவதற்கு அல்லது விற்பதற்கு தொலைபேசி மூலமோ, இன்டர்நெட் மூலமோ, நேரடியாகவோ ஆர்டர் கொடுக்கலாம். அதன் பிறகு முதலீட்டாளருக்காக, புரோக்கர் அந்த ஆர்டருக்கேற்ப வாங்க அல்லது விற்க வேண்டும். இந்த வியாபாரம் பங்குச் சந்தையிலேயே நடக்குமேயானால், புரோக்கரின் அலுவலகம் முதலீட்டாளருக்காக ஸ்டாக்கை வாங்க அல்லது விற்க அதற்குரிய புரோக்கர்களை அனுப்பும். ஆனால் சமீப காலங்களில் சில பங்குச் சந்தைகளில் வியாபாரம் முற்றிலும் எலெக்ட்ரானிக் முறையிலேயே செய்யப்படுகிறது. இதனால் புரோக்கரிடம் ஆர்டர் கொடுத்த ஒருசில விநாடிகளிலேயே வியாபாரம் செய்துவிடலாம். இவ்வாறு செய்யப்பட்ட வியாபாரங்கள் ஸ்டாக் கொட்டேஷன்களில் பதிவு செய்யப்படுகின்றன. சமீபத்திய விலை, வியாபாரத்தைப் பற்றிய தகவல்கள் டிக்கர் என்ற எலெக்ட்ரானிக் மெஷினில் தோன்றுகின்றன.

வாங்கப்படும் அல்லது விற்கப்படும் ஸ்டாக்குகளின் விலை பெரும்பாலும் யார் குறைவாக அல்லது அதிகமாக கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. இதை, ஏலம் விடுவதற்கு ஒப்பிடலாம். வியாபாரத்தின் நிலவரம், கம்பெனியின் வருமானம் மற்றும் அந்த நிறுவனத்தைப் பற்றிய எதிர்கால நம்பிக்கை போன்றவற்றைப் பொறுத்தும் ஸ்டாக்கின் விலை வேறுபடுகிறது. முதலீட்டாளர்கள் ஸ்டாக்குகளை குறைந்த விலைக்கு வாங்கி அதன் மதிப்பு கூடியவுடன் தங்கள் பங்குகளை லாபத்திற்கு விற்க விரும்புகின்றனர். கம்பெனிகளும் தங்கள் லாபத்தின் ஒரு பாகத்தை பங்குதாரர்களுக்கு டிவிடென்டுகளாக பிரித்து கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. சிலர் ஸ்டாக்குகளை நீண்ட கால முதலீடாக வாங்குகின்றனர்; மற்றவர்கள் குறைந்த காலத்திற்கு முதலீடு செய்கின்றனர், ஸ்டாக்குகளின் விலை திடீரென மலைபோல உயரும்போது அவற்றை விற்று லாபம் சம்பாதித்துவிடலாம் என நினைத்து இவ்வாறு செய்கின்றனர்.

அநேக ஆண்டுகளாக ஸ்டாக்குகளின் வியாபாரம் தொலைபேசி மூலம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இப்போது இன்டர்நெட் (இன்டர்நெட் மூலம் ஸ்டாக்குகளை வாங்குவது விற்பது) புதிய திருப்பத்தை ஏற்படுத்தி, எல்லா இடங்களிலும் புகழ்பெற்று வருகிறது. ஐக்கிய மாகாணங்களில் இன்டர்நெட் மூலம் வியாபாரம் செய்பவர்களின் எண்ணிக்கை, “1996-⁠ல் 1,00,000-ஆக இருந்தது [1999] ஜூன் மாதத்திற்குள் 5,00,000-ஆக உயர்ந்திருக்கிறது என்று த பைனான்ஷியல் போஸ்ட் அறிவிக்கிறது. ஐக்கிய மாகாணங்களிலுள்ள வியாபாரிகளில் 16 சதவீதத்தினர் எலெக்ட்ரானிக் முறையிலேயே வியாபாரம் செய்கின்றனர்.” ஸ்வீடனில் 1999-⁠ம் ஆண்டு நடந்த மொத்த ஸ்டாக் வியாபாரத்தில் சுமார் 20 சதவீத வியாபாரம் இன்டர்நெட் மூலம் செய்யப்பட்டது.

ஞானமாக முதலீடு செய்யுங்கள்

இன்று அநேக தனி முதலீட்டாளர்கள், ஸ்டாக்குகளை வாங்குவது விற்பதையே தங்கள் வாழ்க்கைத் தொழிலாக செய்கின்றனர். இதற்கான காரணம், இன்டர்நெட் மூலம் ஸ்டாக் வியாபாரம் செய்வது மிக எளிதாக தோன்றுகிறது, அத்துடன் முன்பு புரோக்கர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த வியாபாரிகளுக்கு மட்டும் தெரிந்த வியாபார தகவல்கள் அல்லது நுட்பங்கள் இன்று இன்டர்நெட் மூலம் எல்லோருக்கும் எளிதில் கிடைக்கிறது. இதையே தொழிலாக செய்வதற்காக சிலர் நல்ல சம்பளத்தோடு பார்த்து வந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டனர். ஏன்? “ஏனென்றால் இது அவ்வளவு கவர்ச்சியாக உள்ளது. உங்களுக்கு பாஸ் யாருமில்லை நீங்களே உங்களுக்கு பாஸ், எப்போது எப்படி வியாபாரம் செய்வது என்பதெல்லாம் உங்கள் கையில்; அத்துடன் அதிக பணம் சம்பாதிக்க வாய்ப்பு (இருப்பதுபோல தோன்றுகிறது) இருக்கிறது” என விளக்குகிறது மணி என்ற ஆங்கில பத்திரிகை. 35 வயது மனிதர் ஒருவர் வருடத்திற்கு 2,00,000 அமெரிக்க டாலர் சம்பாதிக்கும் வேலையில் இருந்தார். ஆனால் ஸ்டாக் வாங்குவது அல்லது விற்பதை தொழிலாக ஆக்கிக்கொள்வதற்காக அந்த வேலையே விட்டுவிட்டார். அதற்கான காரணத்தை அவர் சொல்கிறார்: “கம்பெனியில் சரக்கு வைத்துக்கொண்டு, உங்களுக்குக்கீழ் தொழிலாளர்களை நியமித்து, அலுவலகத்திற்கு வாடகை கட்டிக்கொண்டெல்லாம் இல்லாமல், வெறும் கம்ப்யூட்டர் கீபோர்டை தட்டி பணம் சம்பாதிப்பதற்கு இதைவிட வேறென்ன வழி இருக்கிறது?”

ஆனால் ஸ்டாக் வியாபாரம் புதிதாய் துவங்குபவர்களுக்கு அவர்கள் நினைப்பதுபோல நிச்சயம் ஈஸியாக இருக்காது என நிபுணர்கள் சொல்கின்றனர். “இந்த வியாபாரம், பார்ப்பதற்கு படு ஈஸி போல தோன்றுகிறது, ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை. குறைந்த முயற்சியில் அதிக பணம் சம்பாதிப்பதற்கு இதுதான் மிக மிக கஷ்டமான வழி என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்” என்கிறார் வியாபாரத்தால் ஏற்படும் டென்ஷனுக்கு மருத்துவம் பார்க்கும் ஒரு மனநோய் மருத்துவர். பொருளாதாரத்தைப் பற்றிய செய்திகளும் ஆலோசனைகளும் இன்று எக்கச்சக்கமாக கிடைக்கின்றன ஆனால் அவற்றுடன் எக்கச்சக்கமான பாதிப்புகளும் வருகின்றன. “முதலீடு செய்யும்படி ஊக்குவிக்கும் தகவல்கள், இன்று தனி முதலீட்டாளர்களையும், அமைப்பைச் சேர்ந்த வியாபாரிகளையும், மொத்தத்தில் எல்லா முதலீட்டாளர்களையும் மின்னல் வேகத்தில் தாக்குகின்றன. இவை நரம்புத் தளர்ச்சி, ஏமாற்றம், டென்ஷன் போன்ற அநேக மனநோய் சம்பந்தப்பட்ட பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன” என்கிறார் முன்பு குறிப்பிடப்பட்ட பால் ஃபேரெல்.

இந்த வியாபாரத்தில் மட்டுக்குமீறிய தன்னம்பிக்கையும் ஆபத்தாக இருக்கலாம். வியாபாரிகள் மத்தியில் இருக்கும் தவறான மனநிலையைப் பற்றி பொருளாதார பத்திரிகை எழுத்தாளர் ஜேன் ப்ரையன் குவின் இவ்வாறு விளக்குகிறார்: “நீங்கள் வியாபாரத்தின் உச்சியிலிருந்தால் அல்லது கீழ் மட்டத்தில் இருந்தால், விரும்பாத பிரச்சினைகள், இழப்புகள் ஏற்படாது என்று நினைக்கக்கூடும். அப்படியே பிரச்சினை ஏற்பட்டாலும் சரியான நேரத்தில் அதை சரி செய்துவிடலாம் என்றும் நீங்கள் நினைக்கலாம். நிபுணர்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் உங்களுக்கும் கிடைப்பதால் நீங்களும் நிபுணர்களாகிவிட்டதாக நினைத்துக்கொள்ளலாம்.” ஸ்டாக் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ததால் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக ஆன கதைகளெல்லாம் பேசப்படுகிறபோதிலும், இந்த வியாபாரத்தில் ஆபத்துகள் இருக்கின்றன. சில முதலீட்டாளர்கள் அதிக லாபம் அடைந்திருக்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால், மற்ற சிலர் பேரிழப்புகளை சந்தித்திருக்கின்றனர்.

ஒரு நிறுவனத்தின் ஸ்டாக்குகளை வாங்குவதற்கு முன்பு, அந்த கம்பெனியின் கடந்தகால பதிவு, எதிர்கால நம்பிக்கை, அது தயாரிக்கும் பொருளுக்கிருக்கும் டிமான்ட், மற்ற நிறுவனங்களுக்கும் இதற்குமுள்ள போட்டி போன்ற அநேக விஷயங்களை முதலீடு செய்ய விரும்புபவர்கள் ஆராய்ந்து பார்க்கும்படி முதலீடு ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர். இப்படிப்பட்ட தகவல்கள் பெரும்பாலும் ஸ்டாக் புரோக்கர்கள் மற்றும் பொருளாதார நிறுவனங்கள் வாயிலாக கிடைக்கிறது. அநேக முதலீட்டாளர்கள் ஸ்டாக்குகளை வாங்குவதற்கு முன் பொருளாதார திட்டமைப்பாளர்களை கன்சல்ட் செய்கின்றனர். b முதலீடு செய்பவர், கம்பெனியைப் பற்றி நன்கு தெரிந்துகொள்வதன் மூலம் தன் பணம் ஆதரிக்கக்கூடாத நிறுவனத்தை ஆதரிக்காமலிருக்க நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.​—⁠விழித்தெழு! (ஆங்கிலம்), பிப்ரவரி 8, 1962, பக்கங்கள் 21-3-ஐ பார்க்கவும்.

அங்கீகரிக்கப்பட்ட சூதாட்டமா?

பங்குச் சந்தையில் பணத்தை இழப்பதற்கும் வாய்ப்புகள் இருப்பதால், ஸ்டாக்குகளை வாங்குவது சூதாட்டத்திற்கு சமமானதா? ஏறக்குறைய எல்லா பொருளாதார நிறுவனங்களிலும் ஏதாவது அபாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இன்று சிலர் ரியல் எஸ்டேட் வாங்குகின்றனர், ஆனால் சிறிது காலம் கழித்து அந்த நிலத்தின் மதிப்பு என்ன ஆகும், அது கூடுமா குறையுமா என்று அவர்களுக்கு தெரியாது. அதேபோல மற்றவர்கள், தாங்கள் பணம் பத்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கையிலேயே பணத்தை வங்கியில் சேமிக்கின்றனர். பங்குச் சந்தையைப் பற்றி புரிந்துகொள்வது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், அதை சுருங்கச் சொன்னால், தான் எந்த கம்பெனியின் ஷேர்களை வாங்குகிறாரோ அந்த கம்பெனி நன்கு வளரும், அதனால் தன் ஸ்டாக்குகளின் மதிப்பு கூடும் என்ற நம்பிக்கையிலேயே ஒருவர் ஸ்டாக்குகளில் முதலீடு செய்கிறார்.

இந்த முதலீடு சூதாட்டம் போன்றல்ல, ஏனென்றால் அந்த பங்குதாரர் கம்பெனியின் ஒரு பாகத்தை வாங்கியிருக்கிறார். இந்த ஷேர்களை அவர் மற்றவருக்கு விற்றுவிடலாம் அல்லது அதன் மதிப்பு அதிகரிக்கும் நம்பிக்கையில் அப்படியே வைத்துக்கொள்ளலாம். ஆனால் பணத்தை பணயம் வைத்து சூதாடுபவர் போல் அல்ல இவர். சூதாட்டக்காரர் என்ன நடக்கும் என்று நிச்சயமாக தெரியாமல், தனக்கே சாதகமாக நல்லது நடக்க வேண்டுமென விரும்புகிறார். எதிரிலிருப்பவரை தோற்கடிக்க விரும்புகிறார்.

இந்த முதலீட்டில் ஒருவர் எவ்வளவு ரிஸ்க் எடுக்கலாம்? அது ஒவ்வொரு தனிநபர் முடிவு செய்ய வேண்டியது. ஆனால் தான் இழக்க தயாராயிருக்கும் அளவிற்கும் அதிகளவான பணத்தை முதலீடு செய்து ரிஸ்க் எடுப்பது நல்லதல்ல.

பணத்தைப் பற்றி சமநிலையான மனப்பான்மை

தங்களுடைய தற்கால அல்லது எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சிலர் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளனர். ஒருவர் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கும்போது முதலீடு செய்வதற்கான நோக்கம் மிக முக்கியம். முன்பு குறிப்பிடப்பட்ட ஜேன் ப்ரையன் குவின் சொல்கிறார்: “பங்குச் சந்தையில் பணத்தைப் போட்டதால் எவ்வித தகுதியுமின்றி பணக்காரர்களானவர்களைப் பார்த்து நாம் பொறாமைப்படுவதால் கீழ்த்தரமான நோக்கத்திற்காக முதலீடு செய்பவர்களாக நாம் மாறிவிடுவோம்.” இந்த வார்த்தைகள் சுமார் 2,000 வருடங்களுக்கு முன் ஓர் இளம் மனிதனுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் காணப்படும் புத்திமதியுடன் ஒத்திருக்கின்றன: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.”​—1 தீமோத்தேயு 6:9, 10.

ஒருவர் தன் பணத்தை எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என தீர்மானிப்பது அவருடைய தனிப்பட்ட விஷயம். ஞானமாக, தன் வாழ்க்கையின் தேவைகளோடு திருப்தியாகும் ஒரு முதலீட்டாளர் பொருளாதார காரியங்களை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் வைத்து, தன் குடும்ப பொறுப்புகளையும் ஆவிக்குரிய தேவைகளையும் அசட்டை செய்யாமல் சரியாக நடந்துகொள்வார்.

[அடிக்குறிப்புகள்]

a “உவால் ஸ்டிரீட்” என்ற சொல் இன்று பெரும்பாலும் பொருளாதார சந்தைகளை குறிக்கிறது.

b எல்லா ஆலோசனைகளும் சரியானவை அல்ல. பொருளாதார திட்டமைப்பாளரோ ஸ்டாக் புரோக்கரோ தன் வேலையை விளம்பரப்படுத்துவதற்கு உங்களை பயன்படுத்தலாம் அல்லது உங்களிடமிருந்து அதிக லாபத்தை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு உங்களை தவறாக வழிநடத்தலாம். அதனால் முதலீடு செய்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.