Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மெத்தான மெத்தை வாங்க

மெத்தான மெத்தை வாங்க

மெத்தான மெத்தை வாங்க

பிரிட்டனிலுள்ள விழித்தெழு! நிருபர்

இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல், அடிக்கடி புரள்கிறீர்களா? வசதியாக படுக்க போராடுகிறீர்களா? காலையில் மெத்தையை விட்டு எழுந்தால் உங்களுக்கு விறைப்பாகவும் சலிப்பாகவும் உள்ளதா? அப்படியென்றால் அதற்கு காரணம் உங்கள் அருமை மெத்தையாக இருக்கலாம்.

உங்களுடைய மெத்தை சிலசமயம் மலர் மஞ்சமாகவும் இருக்கலாம் சிலசமயம் முள் படுக்கையாகவும் இருக்கலாம். மெத்தையை தினமும் பயன்படுத்துபவர் என்றால் உங்கள் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பகுதியை அதில்தான் செலவழிப்பீர்கள். ஆனால் உங்கள் மெத்தை எப்போதும் புதிதாக அப்படியே இருக்காது. ஆகவே இப்போது உங்கள் மெத்தை எப்படியிருக்கிறது?

உங்களுக்கு புது மெத்தை தேவையா?

பொதுவாக ஒரு மெத்தையின் ஆயுள் காலம் சுமார் பத்து வருடங்கள் என வைத்துக்கொள்ளலாம். ஆனால், கொஞ்சம் உடல் பருத்த ஆசாமிகள் உபயோகித்தால் மெத்தைகளின் ஆயுசு கொஞ்சம் கம்மிதான். அதோடு உங்களுக்கு வயதாக வயதாக, உங்கள் தேவைகளும் விருப்பங்களும் மாறிக்கொண்டே இருக்கும் என்பதை நினைவில் வைக்க வேண்டும். புதிய மெத்தை உங்களுக்கு வேண்டுமா என்பதை தீர்மானிக்க, உங்களை இவ்வாறு கேட்டுக்கொள்ளவும்: ‘காலையில் நான் எழுந்திருக்கும்போது என் கழுத்து விறைப்பாக இருக்கிறதா அல்லது முதுகு வலிக்கிறதா? என்னுடைய மெத்தை மிகவும் சிறியதாக உள்ளதா? தொட்டால் அதிலுள்ள ஸ்பிரிங்கு என் கையில் தட்டுப்படுகிறதா அல்லது மெத்தையில் ஆங்காங்கே மேடுகளை என்னால் உணரமுடிகிறதா? புரண்டுபடுக்கும் போது கீச் கீச் என்று கத்துகிறதா? மத்தியில் குழியாக இருக்கிறதா? அடிப்பகுதியில் மேடு பள்ளங்கள் இருக்கின்றனவா அல்லது அது தொய்ந்துபோய் இருக்கிறதா? கட்டிலின் கால்களும் சக்கரங்களும் தேய்ந்துவிட்டனவா?’ இந்தக் கேள்விகளுக்கு உங்களுடைய பதில் புதிய மெத்தையை வாங்க நேரம் வந்துவிட்டதா இல்லையா என்பதை தீர்மானிக்க உதவியாக இருக்கும்.

வசதியான மெத்தை எப்படி இருக்கும்?

வசதியான மெத்தை செளகரியமாக இருக்க வேண்டும். உங்களுக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும். உங்கள் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்றதாய் இருக்க வேண்டும். கட்டிலில் மெத்தையும் அந்த மெத்தையின் சப்போர்ட்டுக்காக ஒரு சட்டமும் இருக்கும். செளகரியத்துக்கு முக்கியம் மெத்தையே. அதில் பல பகுதிகள் உண்டு. முதலாவது மெத்தையின் உறை, இது எல்லாவற்றையும் ஒன்றாய் சேர்த்து வைக்கிறது. அடுத்தது, உங்களுக்கு மெத்தென்று இருந்து உடலின் வியர்வை வெளியேறுவதை அனுமதிக்கும் பஞ்சு உள்வைத்து திணிக்கப்பட்ட திண்டு. மூன்றாவது, மெத்தைக்கு சப்போர்ட், அதாவது அதற்கு உறுதியை அளிக்கும் பாகம். அது பொதுவாக ஸ்பிரிங்குகளாக இருக்கும். மெத்தைக்கு உள்ளே பலவிதமான பொருட்கள் சப்போர்ட்டுக்காக கொடுக்கப்படலாம். பொதுவாக ஸ்பிரிங்குகள் அதிகமாக இருந்து கம்பிகள் தடியாக இருந்தால் நல்ல சப்போர்ட்டாக இருக்கும். அதற்கு பதிலாக இன்று பாலியூரித்தேன் அல்லது லேட்டக்ஸ் ஃபோம் மெத்தைகளை விரும்பி பயன்படுத்துகிறார்கள். ஸ்பிரிங் வைத்த மெத்தைகளைவிட இது இலேசாக இருக்கிறது.

ஒரு மெத்தை எவ்வளவு நன்றாக இருந்தாலும் அதன் அடிபாகம் நல்லவிதமாக வடிவமைக்கப்பட்டிருந்தால்தான் அது நன்றாக உழைக்கும். மெத்தை வைத்த நீண்ட இருக்கை திவான் எனப்படுகிறது. மெத்தையும் அடிபாகமும் சேர்ந்தே ஒரு செட்டாக இது விற்கப்படுகிறது. அதற்கு உயரமான பக்கங்கள் இருப்பதால் பெட்டி போல் காணப்படுகிறது, இந்த அமைப்பு அதிர்வு தாங்கியாக செயல்படுகிறது. இந்த வகை மெத்தையை உபயோகிக்கும்போது, மெத்தைக்குள்ளே காற்றோட்டம் இருப்பதால் இது நீண்டநாள் உழைக்கிறது. சட்ட மெத்தை என்று மற்றொன்று அழைக்கப்படுகிறது. இதன் அடிபாகத்தில் சட்டங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால், அதனுடைய மெத்தைக்குப் போதுமான காற்றோட்டம் இருக்கும். தேவைக்கு ஏற்றவாறு, உறுதியான மரச் சட்டங்களும் வளைந்து கொடுக்கும் சட்டங்களும் உபயோகிக்கப்படுகின்றன.

சரியான மெத்தையை தேர்ந்தெடுத்தல்

ஒரு மெத்தையை வாங்கும்போது எதை மனதில் வைக்க வேண்டும்? யாரோ பயன்படுத்திய மெத்தையை வாங்கினால், அதில் பிறருடைய வேர்வையும் தோல் செதில்களும் ஒட்டிக்கொண்டிருக்கும். அதில் அதிகமான தூசியும் படிந்திருக்கலாம். டஸ்ட் மைட் என்று அழைக்கப்படும் சிறு பூச்சிகளும் இருக்கும். இதனால் அலர்ஜி, காசநோய் அல்லது சொறி சிரங்கு வரலாம். அது ஆரோக்கியமானதும் இல்லை, பாதுகாப்பானதும் இல்லை.

புதிய கட்டில், மெத்தையை வாங்க போவதற்கு முன் அதன் விலை என்ன, உடல் ஆரோக்கியத்துக்கு உகந்ததா, அல்லது அது எத்தனை பெரியதாக இருக்கவேண்டும் என்பதையெல்லாம் தீர்மானித்துக் கொள்ளவும். நல்ல பெயர் எடுத்த பல கடைகளுக்குச் சென்று மெத்தைகளைப் பற்றிய தகவல்களை திரட்ட வேண்டும். ஏனென்றால் நீங்கள் வாங்கும் மெத்தை அதிக காலம் உழைக்க வேண்டுமே. கடைக்காரரிடம் இருக்கும் கட்டில்களைப் பற்றியும் மெத்தையைப் பற்றியும் அவை எப்படி உழைக்கும் போன்ற தகவல்களையெல்லாம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அதிக விலைகொடுக்க வேண்டியிருப்பதால் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம்.

உங்களுக்கு களைப்பாக இருந்தால் சரியானதை தேர்ந்தெடுப்பது கடினமாக இருக்கும். செளகரியமான உடைகளை அணிந்துகொள்ளுங்கள். ஒரு மெத்தையை சோதித்துப் பார்க்க கூச்சப்படாதீர்கள். உங்கள் கோட்டையும் ஷூவையும் கழற்றிவிட்டு ஒவ்வொரு மெத்தையின்மீதும் சில நிமிடங்கள் படுத்துப்பாருங்கள். பலவிதமாக திரும்பி படுத்துப்பாருங்கள். உங்கள் தோள், இடுப்பு, பின்முதுகு ஆகியவை மெத்தையில் படும்போது எப்படியிருக்கிறது என்பதை விசேஷமாக கவனித்துப் பாருங்கள்.—கீழேயுள்ள பெட்டியைக் காண்க.

மெத்தையை பராமரிப்பது எப்படி?

உங்கள் மெத்தையை நன்றாக பராமரித்து வந்தால் அது நிச்சயமாக நீண்டகாலம் உழைக்கும். கடைக்காரரிடம் ஆலோசனை கேட்டு உற்பத்தியாளர் கொடுக்கும் ஆலோசனையை தவறாமல் வாசித்துப்பார்க்க வேண்டும். உங்கள் புதிய மெத்தையை வீட்டுக்குக் கொண்டு வந்தவுடன் அதைச் சுற்றி பேக் செய்திருக்கும் பாலித்தீன் உறைகளை உடனடியாக எடுத்துவிடுங்கள். இதனால் ஈரமாவதை, பூஞ்சணம் பற்றுவதை, வீணாகிவிடுவதை தவிர்த்திடலாம். கூடுதலாக சில டிப்ஸ் இதோ:

புதிய ஸ்பிரிங் மெத்தையை முதல் சில மாதங்களுக்கு ஒவ்வொரு வாரமும் பக்கவாட்டிலும் மேலும் கீழுமாக மாற்றி மாற்றி திருப்பிப்போடுங்கள். அதற்குப்பின் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதை மாற்றிப்போடுங்கள். இதனால் உறையினுள் இருப்பவை சீராகும். அதனுடைய தேய்மானம் சீராக இருக்கும். உங்களுக்கு முதுகில் பிரச்சனை எதுவுமிருந்தால் ஃபோம் மெத்தை நல்லது, அதை அடிக்கடி திருப்பிப்போட வேண்டாம்.

மெத்தையை ஒருபோதும் மடக்கவோ சுருட்டவோ நசுக்கவோ கூடாது. துணி வீணாகாமல் இருப்பதற்கு அதிலுள்ள கைப்பிடியை பிடித்து தூக்காதீர்கள்; மெத்தையை லேசாக நகர்த்துவதற்கு மட்டுமே கைப்பிடியைப் பயன்படுத்துங்கள்.

ஒவ்வொரு நாள் காலையும் மெத்தை உறைகளை நீக்கிவிட்டு குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள் உலரவிடுங்கள். அதனால் உடலின் ஈரம் ஆவியாகும்.

மெத்தைக்கு, துவைத்து உலர்த்தக்கூடிய ஒரு உறையை போட்டு அதை சுத்தமாக வைத்துக்கொள்ளவும். படிந்துள்ள தூசி தும்புகளை அகற்ற மெத்தையையும் அதன் அடிபாகத்தையும் வேக்யூம் கிளீனரால் சுத்தம்செய்து மெத்தையில் கறைகள் இருந்தால் அல்லது ஏதாவது சிந்திவிட்டிருந்தால் உடனடியாக கொஞ்சம் சோப்பும் குளிர்ந்த நீரும் கொண்டு அதை அகற்றிவிடுங்கள்.

எப்போதும் மெத்தையின் ஓரத்தில் ஒரே இடத்தில் உட்காருவதை தவிர்த்துவிடுங்கள். உங்கள் பிள்ளைகளோ மற்றவர்களோ மெத்தையின்மீது ஏறி குதிப்பதை அனுமதிக்க வேண்டாம்.

உங்கள் மெத்தையில் நீங்கள் பணத்தை மட்டும் முதலீடு செய்யவில்லை. உங்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதியை முதலீடு செய்துள்ளீர்கள். இது மூன்றில் இரண்டு பகுதியான உங்கள் வாழ்க்கையின்மீது கவனிக்கத்தக்க பாதிப்பை ஏற்படுத்தலாம். உங்கள் மெத்தையை ஞானமாக தேர்ந்தெடுத்து அதை நன்றாக கவனித்துக்கொண்டால் அது உங்களை நன்றாக கவனித்துக்கொள்ளும்.

[பக்கம் 24-ன் பெட்டி]

உங்களுக்கு உகந்த மெத்தை எது?

செளகரியமும் சப்போர்ட்டும். ஒரு மெத்தை உடலுக்கு உகந்ததாக இருப்பதற்கு ஒரு மரப்பலகையைப் போல கடினமாக இருக்கவேண்டியதில்லை. அதிக கெட்டியான மெத்தையினால் முதுகு வலி அதிகமாகும் என்று சொல்லப்படுகிறது. எது செளகரியமாக இருக்கும் என்பதை உங்கள் உடல் சொல்லட்டும். மல்லாந்து படுங்கள். உங்கள் முதுகிலுள்ள பள்ளமான இடத்தில் உங்கள் கையைவிட்டு பார்த்தால், மெத்தை கச்சிதமாக இருக்க வேண்டும். எளிதாக உங்களால் திரும்பிப்படுக்க முடியவேண்டும். அப்படியென்றால் உங்கள் மெத்தைக்கு உங்கள் உடலுக்கேற்ற உறுதி இருக்கிறது என்று அர்த்தம். நீங்கள் ஒருக்களித்து படுக்கும்போது உங்கள் முதுகெலும்பு நேர்கோட்டில் இருக்கவேண்டும். கொஞ்சம் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இன்னும் உறுதியான மெத்தை தேவைப்படலாம்.

அளவு. தாராளமாக புரண்டு படுப்பதற்கு வசதியாக மெத்தையை தேர்ந்தெடுங்கள். சாதாரணமாக ஒரு டபுள் மெத்தையில் இரண்டு பேர் தூங்கும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு தொட்டிலில் உறங்கும் குழந்தைக்கு எவ்வளவு இடமிருக்குமோ அவ்வளவு இடம்தான் இருக்கும் என்பதை நினைவில் வையுங்கள்.

மேட்சிங் செட்டுகள். உங்கள் செளகரியத்துக்கும் சப்போர்ட்டுக்கும் கட்டிலையும் அதற்கென்றே வடிவமைக்கப்பட்ட மெத்தையையும் சேர்த்தே வாங்கப்பாருங்கள். பழைய கட்டிலில் அதற்கு பொருந்தாத புதிய மெத்தையைப் போட்டால் அந்த மெத்தை பாதிக்கப்பட்டு அதனால் மெத்தைக்கு கொடுக்கப்பட்ட உத்தரவாதம் பிரயோஜனமற்றதாகிவிடும்.

மதிப்பு. காசுக்கேற்ற பொருள்தான் கிடைக்கும். அதனால், முடிந்தளவு சிறந்த தரமுள்ள மெத்தையை வாங்கவும்.

இடம். வீட்டில் இடம் குறைவாக இருந்தால் மடித்துவைக்கக்கூடிய மெத்தையை வாங்கலாம் அல்லது சுருட்டிவைக்கக்கூடிய பஞ்சு மெத்தையை வாங்கி இரவில் தரையில் போட்டுக்கொள்ளலாம். பகலில் சோபாவாக பயன்படுத்தி இரவில் அதை படுக்கையாக்கி அதன் மேல் இப்படிப்பட்ட மெத்தையை விரித்தும் பயன்படுத்தலாம்.

உடல்நலப் பிரச்சினைகள். சாதாரணமாக பயன்படுத்தப்படுகிற மெத்தை உங்களுக்கு வசதியாக இல்லாவிட்டால் வசதிக்கேற்ப அட்ஜெஸ்ட் பண்ணி இஷ்டப்படி உறங்குவதற்கு மெத்தைகள் இருக்கின்றன. வாட்டர் பெட் உடலின் எடையை சமமாக பரவச்செய்து சப்போர்ட் கொடுப்பதால், உடலை மெத்தை அழுத்துவதால் ஏற்படும் அசெளகரியத்தினால் கஷ்டப்படுகிறவர்களுக்கு வசதியாக இருக்கும்.

அலர்ஜியால் அவதிப்படுகிறவர்கள். தூசி அல்லது மெத்தையினுள் திணிக்கப்படும் இயற்கைப் பொருட்கள் உங்களுக்கு அலர்ஜியாக இருக்குமென்றால் சின்தடிக் அல்லது ஃபோம் உங்களுக்கு உகந்ததாய் இருக்கலாம். அடியில் சட்டமுள்ள மெத்தையில் அல்லது ஒரு வாட்டர் பெட்டில் அலர்ஜி உண்டாக்கும் பொருட்கள் சாதாரணமாக சேர்ந்துகொள்வதில்லை.

முதியோர். உங்கள் மெத்தை ஓரத்தில் உட்காரும்போது உங்கள் கால் தரையின்மீது படவேண்டும். உறுதியான ஓரமுள்ள மெத்தையாக இருந்தால் உட்கார்ந்துவிட்டு பின்னர் படுக்கவோ அல்லது எழுந்திருக்கும்போது உட்கார்ந்துவிட்டு பின்னர் மெத்தையிலிருந்து இறங்கவோ சுலபமாக இருக்கும்.

[பக்கம் 25-ன் பெட்டி]

பாதுகாப்பு டிப்ஸ்

◼ இரவில் தீப்பற்றாத உடைகளை அணியவும்.

◼ குளிர்காயும் இடத்துக்கும் ஹீட்டருக்கும் அருகே மெத்தை இருக்கக்கூடாது.

◼ எலக்ட்ரிக் போர்வை, நைந்து போயுள்ளதா, அதன் மடிப்புகளில் பிய்ந்திருக்கிறதா, தீய்ந்து போன அடையாளம் இருக்கிறதா, எலக்ட்ரிக் ஒயர் பிய்ந்துள்ளதா என்பதையெல்லாம் சரிபார்த்துக் கொள்ளவும். ஈரமான எலக்ட்ரிக் போர்வையை பயன்படுத்தாதீர். அது இயற்கையாக காயட்டும். போர்வையில் மின்சாரம் பாயும்போது படுக்கையின்மீது கனமான பொருட்களை வைக்கவேண்டாம்.

◼ ஒத்தடம் கொடுப்பதற்காக பயன்படுத்தப்படும் ரப்பர் பையில் கொதிக்கும் தண்ணீரை பயன்படுத்த வேண்டாம். சிறு பிள்ளைகள் மெத்தையில் படுக்க வருவதற்குள் அதை அகற்றிவிடுங்கள். எலக்ட்ரிக் போர்வையை பயன்படுத்தும்போது ஒத்தடப் பையை பயன்படுத்தவே கூடாது.

[பக்கம் 25-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

உறை அல்லது மெத்தை உறைத்துணி

டீப்-ஸ்டிட்ச் டையமன்டு குவில்டிங்

மைக்ரோ இணைப்பு மெத்தை

இழை முடிச்சு

பஞ்சு மெத்தை

உள்ளே இருக்கும் சப்போர்ட்

ஃபோம்

கோர்வையான ஸ்பிரிங்ஸ்

ஓப்பன் ஸ்பிரிங்ஸ்

பாக்கெட் ஸ்பிரிங்ஸ்

[படத்திற்கான நன்றி]

Reproduced by courtesy of the Sleep Council

[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]

Reproduced by courtesy of the Sleep Council