உயிர் மலிந்துவிட்டதா?
உயிர் மலிந்துவிட்டதா?
“உயிருக்கு மதிப்பே காட்டாத உலகம் இது. கொஞ்சம் நோட்டுக்களை நீட்டினால்போதும், தீர்த்துக்கட்டிவிடலாம். இந்தச் ‘சேவை’க்கு ஆட்கள் எப்போதும் ரெடி.”—த ஸ்காட்ஸ்மேன்.
ஏப்ரல் 1999 அன்று, கொலராடோவில் கொலம்பைன் பள்ளியில் நடந்த சம்பவம் உலகையே உலுக்கியது. இரண்டு வாலிபர்கள் திடுதிடுவென நுழைந்து 13 பேரை சரமாரியாக சுட்டு வீழ்த்தினர். தங்களையும் சுட்டுக்கொண்டு சுருண்டு விழுந்தனர். இவர்களில் ஒருவன், “செத்துப் போனவர்கள் வாதாடுவதில்லை” என தனது வெப் சைட்டில் எழுதி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
உலகில் இங்கு அங்கு என்றில்லாமல் எங்கும் நடக்கிறது கொலை. தினந்தினம் ஏராளமானவர்கள் கோரமாக கொல்லப்படுகின்றனர். 1995-ல், 1,00,000 பேருக்கு 75 பேர் என்ற வீதத்தில் கொலைகள் நடந்த தென் ஆப்பிரிக்கா கொலைகாரர்களின் சாம்ராஜ்யமாக முதலிடத்தைப் பெற்றிருந்தது. 1997-ல் தென் அமெரிக்க நாடு ஒன்றில் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே 6,000 பேருக்கும் மேல் கொல்லப்பட்டனர். உயிருக்கு கொஞ்சம்கூட மதிப்பே இல்லாத இந்நாட்டில் கூலிப்படைகள் சகஜமாக உலா வருகிறார்கள். இப்போது இங்கு “பிள்ளைகள்கூட கணக்குவழக்கில்லாமல் கொல்லப்படுவது நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கிறது. 1996-ல் மட்டும் 4,322 பிள்ளைகளை ஈவிரக்கமின்றி கொன்றிருக்கிறார்கள். இது முந்தைய இரண்டு ஆண்டுகளைவிட 40 சதவீதமாக அதிகரித்திருப்பது நெஞ்சை கனக்கச்செய்கிறது” என்கிறது ஓர் அறிக்கை. பிள்ளைகளே மற்ற பிள்ளைகளை கொல்வது, சொந்த பெற்றோரையும்கூட கொல்வது அதைக் காட்டிலும் அதிர்ச்சியளிக்கிறது. இவ்வாறு உயிரை செல்லாக்காசாக மதித்து ஆளாளுக்கு கொலைசெய்கிறார்கள்.
‘மரண கலாச்சாரத்தின்’ அவலம்
புள்ளிவிவரங்கள் காட்டுகிறபடி, உயிரை துச்சமாக மதிக்கும் “மரண கலாச்சாரம்” இன்று உருவாகி வருகிறது. ஒருபுறம் பதவிக்கும் பணத்திற்கும் வெறிபிடித்து அலைவோர்தான் கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் கொடூரமாக கொலை செய்கின்றனர் என்றால், போதைப்பொருள் கடத்தல் மன்னர்கள்
வேறு குடும்பம் குடும்பமாக கொன்று குவிக்கின்றனர். அந்தக் கொடூரத்தைக் காட்டிக்கொள்ளாமல், “கதையை முடிச்சாச்சு,” “க்ளோஸ் பண்ணியாச்சு,” “அட்ரஸ் இல்லாம ஆக்கியாச்சு,” “கழிச்சு கட்டியாச்சு,” “ஒரேடியா மேல அனுப்பியாச்சு” என்றெல்லாம் கூலாக சொல்கின்றனர். போதாக்குறைக்கு, இனச்சண்டைகளிலும் அரசியல் கலவரங்களிலும் உயிர் விரயமாகிறது. ஆகவே டிவியை ஆன் செய்தாலே கொலை செய்திகள்!அடிதடி குத்து கொலையை உயர்த்திக் காட்டுவதற்கு டிவியும் சினிமாவும் வேறு போட்டிபோடுகின்றன. மொத்தத்தில் பார்த்தால், மனித சமுதாயமே “மரண கலாச்சாரத்தில்” மூழ்கிவிட்டதாக தெரிகிறது. என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இப்படிச் சொல்கிறது: ‘20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் மரணம் என்ற சப்ஜக்ட்-க்கு மவுசு கூடிவிட்டது. சுமார் 50 வருடங்களுக்கு முன்புகூட மரணத்தைப் பற்றிய சப்ஜக்ட் தவிர்க்கப்பட்டது.’ காட்டலோனியாவைச் சேர்ந்த சமூக மற்றும் கலாச்சார பேராசிரியர் ஜோசஃப் ஃபெரிக்ளா சொல்கிறபடி, “இப்போது நிலைமை மாறிவிட்டது. இன்று மக்கள் மத்தியில் மரணம் பகடைக்காயாக உருட்டப்படுகிறது.”
உயிரை தூசாக நினைக்கும் இன்றைய “மரண கலாச்சாரத்தில்” ஒழுக்கத்தை மூட்டைகட்டி எறிந்துவிட்டார்கள். பேரும் புகழும் பணமும்தான் வாழ்க்கையாகிவிட்டது. இஷ்டப்படி இன்பமாய் வாழவே அலைகிறார்கள்.
“மரண கலாச்சாரம்” எப்படி உலகெங்கும் பரவியிருக்கிறது? இதிலிருந்து பெற்றோர் எவ்வாறு தங்களையும் பிள்ளைகளையும் பாதுகாக்கலாம்? விடைகளை அடுத்த கட்டுரையில் காண்க.
[பக்கம் 4-ன் பெட்டி/படங்கள்]
உயிரின் விலையென்ன?
◼ “[இந்தியாவிலுள்ள மும்பையில்] இளம் கூலிப் பட்டாளங்கள், வெறும் 5,000 ரூபாய்க்குக்கூட கொலை செய்ய காத்திருக்கிறார்கள்.”—ஃபார் ஈஸ்டர்ன் எக்கனாமிக் ரிவ்யூ.
◼ “சிகரெட் கொடுக்க மறுத்தவர் கொலை.”—லா டெர்ஸரா செய்தித்தாளின் தலைப்புச்செய்தி, சான்டியாகோ, சிலி.
◼ 1995-ல், “ரஷ்யாவில் ஒருவரின் தலையை சீவ சுமார் 7,000 டாலர் கொடுக்க வேண்டும் . . . கம்யூனிஸம் கவிழ்ந்த பிறகு ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் கூலிக்கு கொலை செய்வதும் குபுகுபுவென அதிகரித்திருக்கிறது.”—மாஸ்கோ நியூஸ்-ல் வெளிவந்த ஓர் அறிக்கையின் அடிப்படையில் ரியூடர்ஸ் வெளியிட்ட செய்தி.
◼ “புரூக்ளினில் ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் கைது . . . கர்ப்பமாயிருந்த மனைவியையும் மாமியாரையும் கொல்ல டீனேஜ் பையனுக்கு 1,500 டாலர் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.”—த நியூ யார்க் டைம்ஸ்.
◼ ‘இங்கிலாந்தில் கொலை செய்வதற்கான கூலி குறைந்துவருகிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு 30,000 பவுண்டுகள் கொடுக்க வேண்டியிருந்தது, இப்போது 5,000 முதல் 10,000 பவுண்டுகள் கொடுத்தாலே காரியத்தை முடித்துவிடலாம்.’—த கார்டியன்.
◼ ‘பால்கன் ரௌடி கும்பல்கள் மாஃபியா தாதாக்களை மிஞ்சுகின்றன. இந்த புதிய ரௌடிகளிடம் உள்ள ஆயுதங்களும் புதுசு, இவர்களது பாணியும் புதுசு. எடுத்ததற்கெல்லாம் இவர்களுடைய குண்டுகளும் இயந்திர துப்பாக்கிகளும்தான் பேசும்.’—த கார்டியன் வீக்லி.