தினம் ஆஸ்பரின் எடுக்கலாமா வேண்டாமா?
தினம் ஆஸ்பரின் எடுக்கலாமா வேண்டாமா?
உலக மேடையில் நித்தம் அரங்கேறும் காட்சி இது. கதாபாத்திரங்கள்: டாக்டரும் நோயாளியும்.
குடும்பமே கவலையில் ஆழ்ந்தது. இப்போது டாக்டரும் கவலைப்பட ஆரம்பித்தார். “ரத்தப்போக்கு நிற்கவில்லையென்றால், ரத்தம் ஏற்றவேண்டியிருக்கும்” என்றார் டாக்டர்.
அந்த நோயாளிக்கு பல வாரங்களாக மலத்தோடு ரத்தமும் சேர்ந்து போனது. அதனால் உடலில் ரத்தம் குறைய ஆரம்பித்தது. அவருக்கு வயிற்று புண் இருந்தது. எப்படி குணமாக்குவது என்று நொந்துபோன டாக்டர், நோயாளியை பார்த்து, “ஏதாவது மாத்திர மருந்து சாப்பிடுறீங்களா? மறைக்காம சொல்லுங்க” என்றார்.
நோயாளி: “இல்லீங்க டாக்டர். என்னோட மூட்டு வலிக்காக சாதாரண மாத்திரைய மருந்து கடையிலே வாங்கி சாப்பிடுறேன்.”
டாக்டர்: “மாத்திரையா? எங்கே கொஞ்சம் காட்டுங்க!” மாத்திரையின் உறையை கவனமாக படித்ததும் டாக்டரின் கண்கள் விரிந்தன! அதில் அசட்டைல் சாலிக் ஆசிட் இருந்தது! நோய் காரணமும் தெரிந்தது. ஆஸ்பரின் மாத்திரையில் உள்ள அதே அசட்டைல் சாலிக் ஆசிட் இந்த நோயாளி சாப்பிட்ட மாத்திரையிலும் இருந்தது. உடனே அதை நிறுத்திவிட்டு, வயிற்று புண்ணை ஆற்ற சில மருந்துகளையும் இரும்பு சத்து மாத்திரைகளையும் கொடுத்தார் டாக்டர். நோயாளிக்கு ரத்தப்போக்கு நின்று, அவரது ரத்தத்தின் அளவும் மெல்ல கூடியது. அவர் குணமாகிவிட்டார்.
மருந்தால் இரத்தக்கசிவு
மருந்தால் வயிற்றிலும் குடலிலும் ரத்தக்கசிவு ஏற்படுவது இன்று மருத்துவ துறைக்கு பெரும் தலைவலியாக உள்ளது. எத்தனையோ மருந்துகளால் இத்தகைய ரத்தக்கசிவு ஏற்படலாம். ஆனாலும் மூட்டு வலிக்காக அல்லது வலிக்காக சாப்பிடும் மாத்திரைகளே இதற்கு முக்கிய காரணம். உதாரணத்திற்கு சீழ்பிடிப்பதை தடுக்கும் ஸ்டீராய்ட் இல்லாத மாத்திரை (nonsteroidal anti-inflammatory drugs [NSAIDS]) வகைகள். இந்த மருந்துகளின் பெயர் நாட்டுக்கு நாடு மாறலாம்.
மருந்துகடைகளில் டாக்டரின் சீட்டு இல்லாமலே வாங்கப்படும் பல மருந்துகளில் இந்த ஆஸ்பரின் உள்ளது. தினம் ஆஸ்பரின் சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் பல நாடுகளில் அதிகரித்துள்ளது. ஏன்?
ஆஸ்பரினுக்கு ஆதரவு
“உயிர் காக்கும் ஆஸ்பரின்” என்று 1995-ல் ஹார்டுவர்டு ஹெல்த் லெட்டர் அறிவித்தது. பல நாடுகளில் பலமுறை புள்ளிவிவரங்களை சேகரித்தப்பின் ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு கூறினர்: “மாரடைப்பு அல்லது ஸ்ட்ரோக் வந்தவர்கள், இருதய ரத்தக்குழாய் அடைப்பு உள்ளவர்கள், இருதய ஆப்ரேஷன் செய்தவர்கள் தங்களுக்கு ஆஸ்பரின் மாத்திரை ஒத்துக்கொண்டால் எடுத்துக்கொள்ளலாம். தினம் அரை அல்லது முழு ஆஸ்பரினை சாப்பிடலாம்.” a
மாரடைப்பு வரும் அபாயத்திலுள்ள 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் பெண்களும் தினம் ஆஸ்பரின் எடுப்பதால் பல நன்மைகளை பெறமுடியும் என்கிறார்கள் சில ஆராய்ச்சியாளர்கள். மேலும், தினம் ஆஸ்பரின் சாப்பிடுவதால் பெருங்குடலில் புற்றுநோய் வரும் அபாயம் குறைவதையும், ஆஸ்பரின் அளவை அதிகரித்தால் சர்க்கரை வியாதி குறைவதையும் சுற்றாய்வுகள் காட்டுகின்றன.
ஆஸ்பரினால் இவ்வளவு நன்மைகளா? எப்படி? ரத்த உறைதலுக்கு காரணமான செல்களில் (platelets) ஆஸ்பரின் செயல்புரிந்து, ரத்தம் உறையாமல் தடுப்பதை ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. ஆனால் இது எப்படி சாத்தியம் என்று முழுமையாக தெரியவில்லை. ஒருவேளை, இருதயம் மூளை போன்ற முக்கிய உறுப்புகளில் உள்ள சிறு குழாய்களில் ரத்தம் உறையாமல் தடுத்து, அவற்றை ஆஸ்பரின் பாதுகாக்கலாம்.
இவ்வளவு நன்மைகளை அள்ளி தரும் ஆஸ்பரினை
ஏன் எல்லாரும் சாப்பிடுவதில்லை? முதலாவது, ஆஸ்பரினைப் பற்றி அதிகம் தெரியவில்லை. அதை சாப்பிடவேண்டிய அளவும் தெரியவில்லை. ஒருவகை ஆஸ்பரினை தினம் இரண்டு வேளை சாப்பிடலாம் என்கிறார்கள். அளவில் குறைந்த பேபி ஆஸ்பரினை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டால் போதும் என்கிறார்கள். இப்படியாக பரிந்துரை செய்யும் அளவுகள் பெரிதும் வேறுபடுகின்றன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு அளவுகளில் கொடுக்க வேண்டுமா என்று டாக்டர்களுக்கே தெரியவில்லை. வயிற்றில் எரிச்சலை உண்டாக்காதபடி தயாரிக்கப்படும் ஆஸ்பரின் (buffered aspirin) ஒருவேளை ஏற்றது. ஆனால் இதைப் பற்றிய சர்ச்சையும் தீர்ந்தபாடில்லை.கவனம் தேவை
ஆஸ்பரின் மாத்திரையில் இயற்கை பொருள் அடங்கியிருந்தாலும் பல பக்க விளைவுகளை உண்டாக்குகிறது. உதாரணத்திற்கு செவ்விந்தியர்கள் வில்லோ என்ற மரப்பட்டையிலிருந்து ஆஸ்பரின் மூலப்பொருட்களை எடுத்து உபயோகித்தார்கள். சிலருக்கு ஆஸ்பரினால் வெறுமனே ரத்தக்கசிவு பிரச்சினை மட்டும் அல்ல, அலர்ஜி போன்ற இன்னும் எத்தனையோ பிரச்சினைகள். ஆகவே எல்லாரும் தினம் தினம் ஆஸ்பரினை சாப்பிட முடியாது.
மாரடைப்பு, ஸ்ட்ரோக், இன்னும் இதுபோன்ற நோய்வரும் அபாயத்தில் உள்ளவர்கள் ஆஸ்பரினின் நன்மை தீமைகளை பற்றி டாக்டரிடம் கேட்ட பிறகு சாப்பிடலாம். ஒரு நோயாளி ஆஸ்பரின் எடுக்கும் முன் தனக்கு ரத்தக்கசிவு, ஆஸ்பரின் அலர்ஜி, வயிற்று அல்லது குடல் நோய் ஆகியவை இல்லை என தெரிந்திருப்பது முக்கியம். மருத்துவம் துவங்கும் முன்பே மருத்துவரிடம் போய், ஆஸ்பரினால் ஏதேனும் பிரச்சினை வருமா, ஏற்கெனவே எடுத்துக்கொண்ட மருந்தோடு இதுவும் சேர்ந்து பக்கவிளைவு வருமா என்று கேளுங்கள்.
ஆஸ்பரினையோ அல்லது ஆஸ்பரின் உள்ள மருந்துகளையோ எடுக்கும்போது ரத்தக்கசிவு ஏற்படுகிறது என்று இதுவரை பார்த்தோம். உடலுக்குள் ஏற்படும் இத்தகைய ரத்தக்கசிவின் அடையாளம் உடனே வெளியில் தெரியாது. நோய் முற்றிய பிறகே தெரியவரும். மற்ற மருந்துகளை சாப்பிடும்போதும், குறிப்பாக சீழ்தடுப்பு மருந்துகளை சாப்பிடும்போதும் கவனம் தேவை. நீங்கள் ஏதேனும் மருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தால் அதை மறக்காமல் டாக்டரிடம் சொல்லிவிடுங்கள். பெரும்பாலும், ஆப்ரேஷனுக்கு முன் இதுபோன்ற மருந்துகளை நிறுத்திவிடுவது நல்லது. அடிக்கடி உங்கள் ரத்த அளவை சோதிப்பதுகூட நல்லது.
“எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேகமுள்ளவர் மறைந்துகொள்வார். அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்” என்கிறது பைபிள் பழமொழி. (நீதிமொழிகள் 22:3, பொ.மொ.) ஆகவே இந்த பைபிள் பழமொழியைக் கேட்டு, எதிர்கால பிரச்சினையை தடுப்போமாக! குறிப்பாக, மருத்துவ விஷயத்தில் விவேகிகளாக இருப்போமாக! நம் உடம்புக்கு கேடு வராமல் பார்த்துக்கொள்ளவோமாக!
[அடிக்குறிப்பு]
a எந்த மருத்துவத்தையும் விழித்தெழு! பரிந்துரை செய்வதில்லை.
[பக்கம் 20, 21-ன் பெட்டி/படம்]
இவர்களுக்கே ஆஸ்பரின்
● இருதய நோய் உள்ளவர்கள் அல்லது குறுகிய கரோடிட் நாளங்கள் (கழுத்திலுள்ள முக்கிய ரத்தக்குழாய்கள்) உள்ளவர்கள் எடுக்கலாம்.
● த்ரோம்போட்டிக் ஸ்ட்ரோக் (ரத்த உறைவால் வரும் பக்கவாதம்) வந்தவர்கள் அல்லது ரத்தக்குழாயில் சிறிது நேரம் அடைப்பு ஏற்பட்டதால் ஸ்ட்ரோக் (கொஞ்ச நேரத்திற்கு பக்கவாதம் வந்ததுபோல் இருக்கும்) வந்தவர்கள் எடுக்கலாம்.
● 50 அல்லது அதற்கு மேற்பட்ட வயதையுடைய ஆண்களில் இருதய நோய்வரும் அபாயம் உள்ளவர்கள் எடுக்கலாம். இருதய நோய்க்கு முக்கிய காரணங்கள்: புகைபிடித்தல், ரத்தகொதிப்பு, சர்க்கரை வியாதி, அதிக கொழுப்பு சத்து, கொலஸ்ட்ராலில் உயர்-அடர்த்தி லிப்போ புரதங்கள் (HDL) குறைதல், உடல் பருமன் போன்றவை. பயங்கரமாக குடிப்பது, உட்கார்ந்தபடியே வேலை பார்ப்பது, குடும்பத்தில் இளம் வயதிலேயே (55 வயதுக்கு முன்பே) இருதய நோய் அல்லது ஸ்ட்ரோக் வழக்கமாக வருவதும் இருதய நோயின் அபாயங்கள்.
● 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மேற்கூறிய நோய் காரணங்களில் இரண்டு அல்லது அதற்கு மேல் இருந்தாலும் எடுக்கலாம்.
ஆஸ்பரின் எடுக்கலாமா வேண்டாமா என்று தீர்மானிக்கும் முன் உங்கள் டாக்டரிடம் கேட்பது நல்லது.
[படத்திற்கான நன்றி]
தகவல்: கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ் ஆன் ஹெல்த்.