Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டிவி செய்திகள்—அனைத்தும் செய்திகளா?

டிவி செய்திகள்—அனைத்தும் செய்திகளா?

டிவி செய்திகள்—அனைத்தும் செய்திகளா?

செய்தித்துறை கண்காணிப்புக் குழு ஒன்று டிவியில் ஒளிபரப்பப்படும் செய்திகளில் என்ன அடங்கியிருக்கிறது, அது எவ்வாறு அளிக்கப்படுகிறது என்பதை ஆராய்ந்தது. ஐக்கிய மாகாணங்களின் 52 முக்கிய நகரங்களிலிருந்து வரும் 102 உள்ளூர் டிவி செய்தி ஒளிபரப்புகளை ஆராய்ந்ததில் மொத்த நிகழ்ச்சிநிரல்களில் 41.3 சதவீதம்தான் செய்தி ஒளிபரப்பானதை கண்டுபிடித்தது. அப்படியானால் மீதி செய்தி எதைப் பற்றியது?

செய்தி வாசிக்க ஒதுக்கப்பட்டிருக்கும் நேரத்தில் சராசரியாக 30.4 சதவீதத்தை விளம்பரங்களே விழுங்கிவிடுகின்றன. சொல்லப்போனால், சில டிவி நிலையங்கள் விளம்பரங்களுக்கே அதிக நேரத்தை ஒதுக்குகின்றன என்பதை ஆய்வு காட்டியது. அதுமட்டுமல்லாமல், செய்திகளுக்கு பதிலாக சம்பந்தமற்ற விஷயங்களே அடிக்கடி இடம் பெற்றதையும் அந்தக் குழு சுருக்கமாக அறிக்கை செய்கிறது. a “சம்பந்தமற்ற விஷயங்கள்” என்ற தலைப்பில் பின்வரும் அறிக்கையை அளிக்கின்றனர்; “முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நடுவே அரட்டையடித்தல், விளம்பரங்கள், செய்தி முன்னோட்டம், உணர்ச்சிவசப்படுத்துகிற அல்லது அற்பமான செய்திகள், பிரபல நட்சத்திரங்களைப் பற்றிய செய்திகள் போன்றவற்றிற்கு அதிக நேரமளிக்கப்படுகிறது.” தேவையற்ற செய்திகளுக்கு சில எடுத்துக்காட்டுகள்: “உச்சஸ்தாயில் ஆண்கள் பாடும் மட்டரக இசை போட்டிகள்,” “ரோலர் கோஸ்டரில் ரிப்போர்ட்டர்—மாபெரும், நம்பமுடியாத, அதிர்ச்சியூட்டும் பயணம்,” “சூப்பர் மார்க்கெட்டில் ரொட்டி வாங்குகின்றனர்.”

அப்படியானால் ஒலிபரப்பப்படும் செய்திகளில் முக்கிய இடம்பிடித்துள்ளவை யாவை? டிவி செய்திகளில் 26.9 சதவீதம் குற்றச்செயல் பற்றிய செய்திகளே ஆக்கிரமித்துள்ளன. “‘வன்முறையை பற்றிய செய்திகளாக இருந்தால் அதுவே மிக முக்கிய செய்தியாகிவிடுகிறது.’ டிவி செய்திகளில் இது யாவரும் அறிந்த உண்மை . . . ஐ.மா.-வில் கடந்த சில வருடங்களில் குற்றச்செயலின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் உள்ளூர் டிவி செய்திகளில் அவ்வாறு இல்லை.” ஏன்? “குற்றச் செயல்களை தத்ரூபமாக வர்ணிப்பது மக்களின் கவனத்தை ஈர்க்கிறது” என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குற்றச் செயல்களுக்கு அடுத்து வருவது விபத்து செய்திகள்: தீ விபத்துகள், கார் விபத்துகள், வெள்ளம், குண்டு வெடிப்புகள் (12.2 சதவீதம்), அதைத் தொடர்ந்து விளையாட்டு செய்திகள் (11.4 சதவீதம்). அதற்குப்பின் வரும் செய்திகள் உடல் ஆரோக்கியம் பற்றியது (10.1 சதவீதம்), அரசாங்கம் (8.7 சதவீதம்), பொருளாதாரம் (8.5 சதவீதம்). கல்வி, சுற்றுச்சூழல், கலை, அறிவியல் போன்றவற்றிற்கு குறைந்தளவு நேரமே ஒதுக்கப்படுகிறது (1.3-லிருந்து 3.6 சதவீதம்). மறுபட்சத்தில், எல்லா ஒலிபரப்பு செய்திகளிலும் வானிலை அறிக்கைக்கு சராசரியாக 10 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. “எல்லாருமே வானிலையைப் பற்றி பேச விரும்புகிறார்கள். டிவி செய்திகள் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல” என ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அவர்கள் மேலும் கூறினர்: “வானிலை நல்லதோ கெட்டதோ, வெயிலோ குளிரோ, மழையோ வறட்சியோ எதுவாயினும் டிவி செய்திகள் அதை விரிவாக அறிவிக்கின்றன.”

செய்தித்துறை கண்காணிப்புக் குழுவின் அறிக்கையில் கூறும் பிரயோஜனமான குறிப்பு என்னவெனில், செய்தி தொகுப்பாளர்களும் டிவி பார்ப்பவர்களும் மாற்றம் செய்ய வேண்டியதன் அவசியத்தை காண்கிறார்கள் என்பதே. என்றாலும், அப்படிப்பட்ட மாற்றம் வருவது கடினம் என்பதை அந்த ஆய்வு ஒப்புக்கொள்கிறது. ஏனென்றால் “வியாபார உலகமும் பேராசையும் தரமான செய்திகளுக்கு எப்போதுமே அச்சுறுத்தலாக இருக்கலாம்.”

[அடிக்குறிப்புகள்]

a பொது மக்களின் நலனில் அக்கறையற்ற அமெரிக்க உள்ளூர் டிவி செய்திகள் என்பது செய்திகளில் என்ன இருக்கிறது என்பதை கண்காணிக்கும் நான்காம் வருடாந்தர தேசிய சுற்றாய்வின் அறிக்கை. ராக்கி மலைத்தொடரைச் சேர்ந்த செய்தித்துறை கண்காணிப்புக் குழுவினரான டாக்டர் பால் க்ளைட், டாக்டர் ராபர்ட் ஏ. பார்ட்வெல், ஜேஸன் சால்ஸ்மன் என்பவர்களால் தொகுக்கப்பட்டது.