உலகம் ஒன்றுபடுமா?
உலகம் ஒன்றுபடுமா?
சமீப ஆண்டுகளில், கிழக்கு ஐரோப்பாவிலும் மற்ற இடங்களிலும் நடந்த போர்களால் கோடிக்கணக்கான மக்கள் அவதியுற்றனர். இப்படிப்பட்ட கொடூரமான கலவரங்கள் இப்போதும் பல இடங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இருப்பினும், போரால் சின்னாபின்னமாக்கப்பட்டு இருக்கும் இந்த நாடுகளில் மெய்யான ஐக்கியத்தை தங்கள் மத்தியில் வளர்த்துக்கொண்டும் அதன்படி வாழ்ந்துகொண்டும் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அதற்கான ஒருசில உதாரணங்கள் இதோ!
1991-ல், ஏறக்குறைய 15,000 பேர் குரோவேஷியாவிலுள்ள ஸாக்ரப் என்ற இடத்தில் கூடினர். இவர்கள் பல நாடுகளிலிருந்து வந்தவர்கள். “இங்கே, இந்த ஸ்டேடியத்தில் என்ன நடக்கிறதென்பதை செய்தித்தொடர்பு சாதனங்கள் எல்லாவற்றிலும் காட்டினால் நன்றாக இருக்கும். செர்பிய நாட்டினரும், குரோவேஷிய இனத்தவரும், ஸ்லவோனியரும், மான்டிநீக்ரோவில் வாழ்வோரும் மற்றவர்களும் ஒருவர் பக்கத்தில் ஒருவர் சமாதானமாக உட்கார்ந்திருப்பதை பார்க்கலாம்” என அங்கு இருந்த ஒரு போலீஸ்காரர் மனதுருகி பேசினார். இந்த அசாதாரணமான ஐக்கியத்திற்கு காரணம் என்ன?
1993-ல், இதைவிட பெரிய சர்வதேச மாநாடு ஒன்று நடந்தது. இது உக்ரேய்னின் தலைநகராகிய கீவ் என்ற இடத்தில் நடைபெற்றது. “தெய்வீக போதனை” என்பதே அந்த மாநாட்டின் பொருள். அதற்கு வந்திருந்தோரின் உச்ச எண்ணிக்கை சுமார் 65,000. “யெகோவாவின் சாட்சிகள் . . . ஐக்கியமான ஜனங்கள். ‘தெய்வீக போதனை’ என்று எழுதப்பட்ட நீல நிற அட்டைகளை அணிந்திருப்பதால் மட்டுமல்ல, மெய்யான விசுவாசத்தினாலேயே” என ஈவினிங் கீவ் முதல் பக்கத்தில் அறிக்கையிட்டது.
தெய்வீக போதனை—ஐக்கியத்திற்கான தூண்டுகோல்
தங்களைச் சுற்றி எல்லா இடங்களிலும் பிரிவினை
மட்டுமீறிய அளவில் வியாபித்திருக்கையில், யெகோவாவின் சாட்சிகள் எப்படி ஐக்கியமாக இருக்கிறார்கள் என நீங்கள் வியப்படைகிறீர்களா? இதற்கான காரணத்தை போலிஷ் பேராசிரியர் வாய்செக் மாஜெலீஸ்கீ சுட்டிக்காட்டுகிறார். சாட்சிகளை உற்று கவனித்தபின் அவர் இவ்வாறு தெரிவிக்கிறார்: “பைபிளில் குறிப்பிட்டுள்ள நியமங்களை ஏற்கெனவே அவர்கள் பின்பற்றி வருவதே அவர்களுடைய சமாதான மனப்பான்மைக்கு முக்கிய காரணம்.” படைப்பாளராகிய யெகோவா தேவனின் தெய்வீக போதனையின் மூலம் உலகம் முழுவதும் சாட்சிகள் ஐக்கியமாக இருக்கின்றனர். அந்த போதனை என்ன?ஐக்கியப்படுத்தும் முக்கியமான ஒரு நியமத்தைப் பற்றி இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்டினார். தம்மைப் பின்பற்றுவோரைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “நான் உலகத்தானல்லாததுபோல், அவர்களும் உலகத்தாரல்ல.” யெகோவாவின் சாட்சிகள் எடுக்கும் நடுநிலைமையே எங்கிருந்தாலும் அவர்களை ஐக்கியப்படுத்துகிறது. இது இயேசுவின் ஜெபத்திற்கு இசைவாய் இருக்கிறது: “அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, . . . நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.”—யோவான் 17:16-21.
நடுநிலைமையான இந்த செயலே ஐக்கியத்தின் தூண்டுகோல். ஏனெனில், தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் வார்த்தைகளுக்கு இணங்க நடக்கும்படி உலகம் முழுவதும் இருக்கும் சாட்சிகளை இது தூண்டுவிக்கிறது. கடவுள் ‘தமது வழிகளை . . . போதிக்கும்’ ஜனங்களைப் பற்றி ஏசாயா குறிப்பிட்டவற்றின்படி நடக்க இது அவர்களை உந்துவிக்கிறது. இப்படிப்பட்டவர்கள், “தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்.” தீர்க்கதரிசி பின்னும் தொடர்கிறார்: “ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”—ஏசாயா 2:2-4.
கடந்த பல ஆண்டுகளாக, கிழக்கு ஐரோப்பாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் தங்கள் மாநாடுகளில் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் அனுபவித்து வருகின்றனர். ஏசாயாவின் தீர்க்கதரிசனம் சிறிய அளவில் ஏற்கெனவே நிறைவேறி வருவதை இது விளக்கமாக காட்டுகிறது. ஐரோப்பாவிலும் மற்ற இடங்களிலும், சாட்சிகள் அடையாள அர்த்தத்தில், தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடித்துள்ளனர். அதன் காரணமாக, பிளவுபட்ட இந்த உலகிலும் அவர்கள் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் அனுபவித்து மகிழ்கின்றனர். “[யெகோவாவின்] சாட்சிகளுடைய [பைபிள்] கோட்பாட்டிற்கு இணங்க உலகில் உள்ளவர்கள் அனைவருமே வாழ்ந்தால், இரத்தஞ்சிந்துதலுக்கும் பகைமையுணர்ச்சிக்கும் இடமே இல்லை. அன்பே அரசனாக ஆளுகை செய்யும்” என
செய்தித்தாள் தலையங்கக் கட்டுரை ஒன்று குறிப்பிட்டது. அது என்றாவது நிகழுமா?உலகளாவிய ஐக்கியம் எப்படி வரும்
பூமி முழுவதிலுமே ஐக்கியத்தை கொண்டுவர, நல்லெண்ணம் படைத்த ஒரு சிறு தொகுதியினர் இருந்தால் மட்டுமே போதாது. இதற்கும் அதிகம் தேவைப்படுகிறது. ஐக்கியத்திற்கும் சமாதானத்திற்கும் எதிராக வேலை செய்வோரின் கொட்டத்தை அடக்கும் சக்தி படைத்த ஓர் அரசாங்கம் தேவை. இப்படிப்பட்ட ஓர் அரசாங்கத்திற்காக ஜெபிக்கும்படிதான் இயேசு தம்மை பின்பற்றுவோருக்கு கற்பித்தார். “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:10) கடவுளுடைய அரசாங்கம், அதாவது “பரலோகராஜ்யம்” மட்டுமே, ஒற்றுமையின்மை பிரச்சினை உட்பட உலகின் பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும் பரிகாரத்தை அளிக்க முடியும் என இயேசு சுட்டிக்காட்டினார்.—மத்தேயு 4:17.
இந்த பரலோக ராஜ்யத்தின் ராஜா இயேசு கிறிஸ்து. முன்னொருபோதும் இராத அளவு சமாதானத்தையும் ஐக்கியத்தையும் அவருடைய ஆட்சியில் பூமியிலுள்ள ஜனங்கள் அனுபவிப்பர். இந்த உலகளாவிய ஐக்கியம், மனித பொருளாதார சீர்திருத்தங்களால் வராது. “சமாதானப் பிரபு”வின் உலக அரசாங்கத்தின் ஆட்சியின்கீழ் மட்டுமே இப்படிப்பட்ட காரியங்களை சாதிக்க முடியும்.—ஏசாயா 9:6, 7.
இப்போதிருக்கும் அநியாயங்கள் பெரும்பாலும் வறுமையாலும் அதிகாரத்தை துர்ப்பிரயோகம் செய்வதாலுமே ஏற்படுகின்றன. இவையனைத்தையும் சமாதானப்பிரபு நிச்சயம் பொருத்துக்கொள்ள மாட்டார். “சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள். கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; . . . பூமியில் தானிய விளைச்சல் அதிகமாக இருக்கும்; மலைகளின் உச்சியில் தானியம் நிரம்ப இருக்கும்.”—சங்கீதம் 72:11, 12, 14, 16, NW.
கிறிஸ்துவின் ஆட்சியின்கீழ் வேலையில்லா திண்டாட்டமும் கடந்த கால காரியமாகிவிடும். ஏசாயா தீர்க்கதரிசி இப்படியாக சொல்கிறார்: “அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாய் இருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அனுபவிப்பார்கள்.” (ஏசாயா 65:22) பூமியிலுள்ள அனைவரும் பயனுள்ள, திருப்தியளிக்கும் வேலையை செய்வார்கள் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்!
மெய்யான ஐக்கியம்—எப்போது?
பூமியின் மேல் கிறிஸ்துவின் ஆட்சி எப்போது துவங்கும்? இந்தக் கேள்விக்கு பதிலளிக்கையில், போர்கள், போர் பற்றிய அறிவிப்புகள், நோய்கள், பூமியதிர்ச்சிகள், இதுபோன்ற மற்ற நிகழ்ச்சிகள் நிறைந்த காலப்பகுதியையே இயேசு கிறிஸ்து சுட்டிக்காட்டினார். இருப்பினும், நன்மையான ஓர் அம்சத்தைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார். அதாவது, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தி உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படுதல். (மத்தேயு 24:3-14; லூக்கா 21:11) இந்த நிகழ்ச்சிகள் யாவும் “மிகுந்த உபத்திரவ”த்தில் உச்சக்கட்டத்தை அடையும். பூமிக்குரிய ஆளுகையில் முற்றிலுமான ஒரு மாற்றத்தை அது கொண்டுவரும். (மத்தேயு 24:21) மத்தேயு 24-ம் அதிகாரத்திலும் லூக்கா 21-ம் அதிகாரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் உரையை வாசியுங்கள். இன்று நீங்கள் உலகில் காணும் நிகழ்ச்சிகளோடு அவர் முன்னறிவித்த நிலைமைகளை ஒப்பிடுங்கள். மனித ஆட்சிமுறைகளில் கடவுள் தலையிடும் காலப்பகுதியில் நாம் இப்போது வாழ்ந்து வருகிறோம் என்பதை நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ள முடியும். இயேசு கிறிஸ்து ராஜாவாக ஆளுகை செய்யப்போகும் கடவுளுடைய ராஜ்யம் ஆட்சியுரிமையை எடுத்துக்கொள்ளும். ஒன்றுபட்ட உலகம் வெகு அருகில்!
இன்னும் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும் ஒரு கேள்வி: இந்த வாக்குறுதி மெய்யாவதைக் காண நீங்கள் என்ன செய்ய வேண்டும்? எதிர்காலத்திற்கான மனிதகுலத்தின் எதிர்பார்ப்புகளில் பைபிள் மிக முக்கிய பாகம் வகிக்கிறது. எனவே, பைபிளை இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள முயற்சி எடுப்பதே ஞானமான செயல். எனவே, ஓர் இலவச பைபிள் படிப்பை உங்கள் வீடுகளில் நடத்த யெகோவாவின் சாட்சிகள் தயாராய் இருக்கின்றனர். a இதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், உலக ஐக்கியம் என்பது அடையக்கூடிய ஒன்றே என்பதையும் அப்படிப்பட்ட உலகில் நீங்களும் வாழலாம் என்பதையும் வெகு விரைவில் புரிந்துகொள்வீர்கள்!
[அடிக்குறிப்பு]
a இந்த பைபிள் படிப்பு ஏற்பாட்டைக் குறித்து கூடுதல் தகவல் தெரிந்துகொள்ள நீங்கள் விரும்பினால், இந்தப் பத்திரிகையின் பிரசுரிப்பாளர்களையோ அல்லது உங்கள் பிராந்தியத்தில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளையோ அணுகவும்.
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
உலகம் முழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் அயர வைக்கும் ஐக்கியத்தை அனுபவித்து மகிழ்கின்றனர்
உக்ரேய்னிலுள்ள கீவ்
குரோவேஷியாவிலுள்ள ஸாக்ரப்
[பக்கம் 10-ன் படம்]
மனிதகுலம் முழுவதுமே ஒன்றுபட்ட உலகளாவிய குடும்பமாக வேண்டுமென்பதே கடவுளின் நோக்கம்