இந்தியாவில் சீன மீன்பிடி வலைகள்
இந்தியாவில் சீன மீன்பிடி வலைகள்
இந்தியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
இந்திய துணைக்கண்டத்தின் தென்கோடியிலிருந்து 250 கிலோமீட்டர் தூரத்தில் மேற்கு கடலோரத்தில் காற்று வாங்கிக்கொண்டிருக்கிறது கொச்சி நகரம். இரண்டு பக்கங்களிலும் கடல் சூழ்ந்த அந்தத் தீபகற்பத்தின் கடலோரப் பகுதியில் அசாதாரண காண்டிலிவர் (ஒற்றை பிடிமானமுள்ள) சீன-வகை மீன்பிடி வலைகள் வரிசையாக காணப்படுகின்றன. சீன வலைகள் கொச்சிக்கு வந்ததெப்படி?
பொ.ச. எட்டாம் நூற்றாண்டிலிருந்தே சீன மக்கள் இப்பகுதியில் வாழ்ந்து வந்தார்கள். 1400 வருடங்களுக்கு முன்பு குப்லைக்கானின் அரச குடும்பத்தைச் சேர்ந்த சீன வியாபாரிகளால் இவ்வகை வலைகள் முதன்முதலில் கொண்டுவரப்பட்டதாக கருதப்படுகிறது. கொச்சியின் கடலோரப் பகுதிகளில் அதிகமாக மீன்பிடிக்க முடியும். உயரமான, மனிதரால் இயக்கப்படும் இந்த மீன்பிடி வலைகள் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக, அதாவது சீனர்களை அரபியர்கள் அங்கிருந்து விரட்டியடித்தது வரை பயன்படுத்தப்பட்டது.
சீனர்கள் அங்கிருந்து போனபின்பு, இந்த வலைகளும் நீக்கப்பட்டன. ஆனால் 16-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அரபியர்களை போர்ச்சுகீசியர் துரத்தினர். தென்கிழக்கு சீனாவின் மகாவோவிலுள்ள போர்ச்சுகீசிய தீவு குடியிருப்பைச் சேர்ந்த போர்ச்சுகீசியர்கள் மறுபடியும் இந்த வலைகளை கொச்சியில் அறிமுகப்படுத்தினார்கள் என்பது தெளிவாகிறது.
இந்தத் தொழில்நுட்பம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டது; இருந்தாலும் அதன் பழைய வடிவமைப்பிலும் உபயோகத்திலும் எவ்வித மாறுதலுமின்றி இப்போதும் தொடர்ந்து விறுவிறுப்புடன் இந்த சீன வலைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வலைகள் மீன்பிடிப்பவர்களுக்கு வயிற்றுப் பிழைப்பையும் மக்களுக்கு உணவையும் தொடர்ந்து அளித்துவருகின்றன. சொல்லப்போனால், ஒரு வலையிலிருந்து ஒரு முழு கிராமத்திற்குத் தேவையான மீன்கள் கிடைக்கிறது. இந்த வலைகள் அதிக பயனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல், பார்ப்பதற்கு மிக அழகாகவும் இருக்கின்றன. குறிப்பாக, சூரியன் உதிக்கும் நேரத்திலும் மறையும் நேரத்திலும் பொன் வானத்திரையில் கார்வண்ண நிழலாக இதைப் பார்ப்பதற்கு கண்கோடி வேண்டும்!
பயன்படுத்துவது எப்படி?
பிரமாண்டமான இந்த சீன வலைகளுக்கு அதன் பாரத்தையும் மீன்களின் சுமையையும் சமநிலைப்படுத்துவதற்கு நெம்புகோலும் நேரெதிரே வலையின் பாரத்திற்குச் சரிசமமான எடையும் பயன்படுகிறது. உபயோகிக்காத சமயத்தில் வலையும் அதைத் தாங்கி நிற்கும் சட்டமும் தண்ணீரிலிருந்து நீக்கப்பட்டு அந்தரத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மீன்பிடித்தல் அதிகாலையிலேயே ஆரம்பித்து நான்கு அல்லது ஐந்து மணிநேரத்திற்குத் தொடர்கிறது. வலைகள் தண்ணீருக்குள் மெதுவாக அமிழ்த்தப்படுகின்றன. மீன்பிடிப்பவர்கள் நெம்புகோலின் எதிர்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள பாரத்தை சரிப்படுத்துவதன் மூலமோ வலை பொருத்தப்பட்டுள்ள நடுச்சட்டத்தில் மீன்பிடி குழுவின் தலைவர் நடப்பதன் மூலமோ அமிழ்த்தப்படுகின்றன. கடற்கரையோரமாக நீந்திக்கொண்டிருக்கும் மீன்களை வாரிக்கொள்வதற்கு இந்த வலை 5 முதல் 20 நிமிடங்கள் வரை தண்ணீருக்குள் போடப்படுகிறது. அதற்குப்பின் நெம்புகோல் மெதுவாக உயர்த்தப்படுகிறது. குழுவின் தலைவர் பல வருட அனுபவம் உள்ளவராதலால் எப்போது வலையை உயர்த்த வேண்டும் என்பதை நன்கு அறிவார்.
தலைவர் சத்தம் கொடுத்ததும் குழுவில் மீதமுள்ள ஐந்து அல்லது ஆறு பேர் சேர்ந்து எதிர்புறத்தில் பாரத்தைச் சுற்றிக் கட்டியிருக்கும் கயிறை கீழே இழுப்பதன்மூலம் வலை மேலே தூக்கப்படுகிறது. வலை மேலே தூக்கப்படுகையில் முதலில் வெளியே வருவது அதன் மூலை பாகங்கள்தான். இவ்வாறாக இந்த வலை கிண்ணம் போன்ற வடிவில் நடுவே மீன்களுடன் வெளியே எடுக்கப்படுகிறது. மீனவர்களுக்கு என்னே மகிழ்ச்சி! அதிகமான மீன்கள் அகப்பட்டதால் ஒருவரையொருவர் முதுகில் தட்டிக்கொடுத்து தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். அதற்குப்பின் மீன்களை வியாபாரிகளுக்கும், இல்லத்தரசிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் ஏலம் விடுகின்றனர்.
சீனர்கள், அரபியர்கள், போர்ச்சுக்கீசியர்கள் ஒருவர் மாறி ஒருவராக வந்து சென்றுவிட்டார்கள். ஆனால் சீன வலைகளோ 600-க்கும் அதிக வருடங்களுக்கு முன்பு அவர்கள் செய்தது போன்றே கொச்சி கடற்கரை தண்ணீரில் தொடர்ந்து முங்கி எழுந்து கொண்டிருக்கின்றன.
[பக்கம் -ன் தேசப்படம்31]
கொச்சி
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc