Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பேஷனுக்காக உடம்பில் குத்திக் கொள்ளலாமா?

பேஷனுக்காக உடம்பில் குத்திக் கொள்ளலாமா?

இளைஞர் கேட்கின்றனர் . . .

பேஷனுக்காக உடம்பில் குத்திக் கொள்ளலாமா?

‘முதல்முறையாக உதடுகளிலும் உடலின் மற்ற இடங்களிலும் ஆட்கள் குத்திக் கொண்டிருப்பதை பார்த்தபோது “ஆஹா! அது வித்தியாசமாக இருக்கிறதே” என்று நினைத்தேன்.’—லிசா.

இப்படி நினைப்பது லிசா மட்டும் அல்ல. இளைஞர்களில் நிறைய பேர் புருவங்களிலும் நாசி துவாரங்களிலும் காதுகளிலும் நாக்கிலும் உதட்டிலும் தொப்புளிலும் குத்திக்கொண்டு வளையங்களையும் நகைகளையும் அணிந்துகொள்கின்றனர். இதுதான் உடலில் துளைப்போடுதல் அல்லது குத்துதல் என்றழைக்கப்படுகிறது.  a

பதினாறு வயதிலிருக்கும் ஹெதருக்கு குத்திக்கொள்ள வேண்டும் என்று ரொம்ப ஆசை. தொப்புளில் குத்தி வளையம் மாட்டிக்கொண்டால் “ரொம்ப அட்டகாசமாக” இருக்கும் என்று உறுதியாக நம்புகிறாள். பத்தொன்பது வயதுள்ள ஜோ, வெயிட் லிஃப்டிங் பார் வடிவத்தில் ஒரு பொன் ஆபரணத்தை நாக்கில் அணிந்துகொண்டிருக்கிறான். மற்றொரு இளம் பெண் “பார்த்தாலே பளிச்சென்று தெரிய வேண்டும், அதைப் பார்ப்பவர்கள் அதிர்ச்சியடைய வேண்டும்” என்பதற்காக புருவத்தில் குத்திக்கொண்டிருக்கிறாள்.

உடம்பில் ஆபரணங்களை போட்டுக்கொள்வது ஒன்றும் புதிதல்ல. பைபிள் காலங்களில், கடவுள் பயமுள்ள பெண்ணாக இருந்த ரெபெக்காள் பொன் மூக்குத்தியை அணிந்திருந்தாள். (ஆதியாகமம் 24:22, 47, NW) எகிப்திலிருந்து வெளியே வரும்போது இஸ்ரவேலர் காதணிகளை அணிந்திருந்தனர். (யாத்திராகமம் 32:2) காதிலும் மூக்கிலும் குத்தி இவர்கள் இந்த ஆபரணங்களை அணிந்திருந்தார்களா என்பது நமக்குத் தெரியாது. உண்மையுள்ள அடிமைகள் தங்கள் எஜமானருக்கு விசுவாசமுள்ளவர்களாக இருப்பதற்கு அடையாளமாக காதுகளைக் குத்தியிருந்தார்கள். (யாத்திராகமம் 21:6) பிற பண்டைய நாகரிகங்களிலும்கூட குத்துவதென்பது முக்கியத்துவமுள்ளதாக இருந்திருக்கிறது. அஸ்டெக்குகளும் மாயா சமுதாயத்தினரும் ஆன்மீக நம்பிக்கைகளின் காரணமாக தங்கள் நாக்கில் குத்தியிருந்தார்கள். உதட்டில் குத்திக் கொள்வது இன்னும் ஆப்பிரிக்காவிலும் தென் அமெரிக்க இந்தியர்கள் மத்தியிலும் பழக்கமாக இருந்து வருகிறது. மெல்லநீசியர்கள், இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் மத்தியில் மூக்கில் குத்தி பலவகையான அலங்கார பொருட்களை அணியும் பழக்கம் காணப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மேற்கத்திய உலகில் பொதுவாக பெண்கள்தான் காதுகளை குத்திக்கொண்டனர். ஆனால் இப்போதோ ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் பருவ வயதினரும் இளம் பிள்ளைகளும் உடலில் எங்கெல்லாம் ஆபரணங்களை அணிய முடியுமோ அங்கெல்லாம் அதை அணிகின்றனர்.

ஏன் குத்திக்கொள்கிறார்கள்

நாகரிகம் என்று நினைப்பதாலும் எல்லாரும் குத்திக்கொள்கிறார்கள் என்பதாலும் நிறைய பேர் குத்திக்கொள்கிறார்கள். தாங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக குத்திக்கொள்கிறார்கள். பிரபல மாடல்களும், விளையாட்டு நட்சத்திரங்களும் பிரசித்திப் பெற்ற பாடகர்களும் உடலில் இந்த ஆபரணங்களை அணிவதால் இது இன்னும் பிரபலமாகிறது. சில இளைஞருக்கோ சுதந்திரமாக இருப்பதைக் காட்டிக்கொள்வதற்கும் தாங்கள் எல்லாரையும் போல இல்லை என்பதைக் காட்டி தங்களுக்கென்று ஒரு தனித்தன்மை வேண்டும் என்பதற்காகவும்கூட இப்படிக் குத்திக்கொள்கிறார்கள். பத்திரிகை எழுத்தாளர் ஜான் லியோ இவ்வாறு கூறுகிறார்: “திரும்பத் திரும்ப இப்படிக் குத்திக் கொள்வதற்கு முக்கிய நோக்கம், பெற்றோரை எரிச்சலடைய செய்வதற்கும் நடுத்தர வர்க்கத்தை அதிர்ச்சிக்குள்ளாக்குவதற்குமே.” அதிருப்தியால், சமுதாயத்தோடு ஒத்து வாழ விருப்பம் இல்லாததால், எதிர்ப்பைத் தெரிவித்து கலகம் செய்ய விரும்புவதால் இப்படி எல்லாம் அவர்கள் செய்கின்றனர்.

ஆழமான உணர்ச்சிப்பூர்வ தேவைகளை திருப்தி செய்துகொள்வதற்கும் உடலில் குத்திக்கொள்பவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக, சில இளைஞர் இதனால் தங்கள் சுயமரியாதை கூடும் என்று நினைக்கிறார்கள். பிள்ளைப் பருவத்தில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிலர் தங்கள் உடல்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு ஒரு வழியாக கருதி குத்திக்கொள்கிறார்கள்.

உடல்நல ஆபத்துகள்

உடலில் எல்லா இடங்களிலும் குத்திக்கொள்வது பாதுகாப்பானதா? ஒரு சில இடங்களில் குத்துவது ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். நீங்களாகவே குத்திக்கொண்டால் அது மிகவும் ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை. குத்துவதை தொழிலாக செய்பவர்களிடம் சென்றாலும் ஆபத்து இருக்கலாம். அநேகருக்கு இதில் பயிற்சி இல்லை, இந்தக் கலையை நண்பர்களிடமிருந்து அல்லது பத்திரிகைகள் அல்லது வீடியோக்களைப் பார்த்து கற்றுக்கொண்டவர்கள் இருக்கிறார்கள். சுகாதார முறைப்படி இதை எப்படி செய்வது என்பது இவர்களுக்கு தெரியாது. அல்லது குத்துவதில் என்ன ஆபத்துகள் உண்டு என்பதை இவர்கள் புரிந்துகொள்ளாதவர்களாக இருக்கலாம். உடல் உறுப்புகளின் அமைப்பு அநேகருக்குத் தெரியாது. இது கவலைக்குரிய பிரச்சினையே, ஏனென்றால் தவறான இடங்களில் குத்திவிட்டால் எக்கச்சக்கமாக இரத்தப்போக்கு ஏற்பட்டுவிடலாம். ஒரு நரம்பு வெட்டப்பட்டுவிட்டால் நிரந்தரமான சேதம் ஏற்பட்டுவிடலாம்.

நோய் தொற்றும் வாய்ப்பு மற்றொரு கவலைக்குரிய ஆபத்தாகும். ஸ்டெரிலைஸ் செய்யப்படாத ஊசியினால் ஹெப்படைட்டிஸ், எய்ட்ஸ், காசநோய், டெட்டனஸ் ஆகியவை கடத்தப்படலாம். ஸ்டெரைல் செய்யப்பட்ட ஊசிகள் பயன்படுத்தப்பட்டாலும் குத்தின பிறகு கவனிப்பு மிகவும் அவசியம். உதாரணமாக தொப்புளில் குத்திய பின், அதன்மீது எப்போதும் உடை உரசிக்கொண்டிருப்பதால் உறுத்தல் இருக்கும். அது குணமாவதற்கு ஒன்பது மாதங்கள் வரை ஆகலாம்.

மூக்கு அல்லது காதுகளின் குருத்தெலும்பில் குத்துவது காது மடலில் குத்துவதைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். அமெரிக்கன் அக்கதமி ஆப் ஃபேஷியல் ப்ளாஸ்டிக் அண்டு ரீகன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜரியின் செய்தி மடல் இவ்வாறு விளக்குகிறது: “காதின் மேல்புறத்தில் பல ஓட்டைகளை குத்துவது கவலைக்குரிய ஒன்று, நோய் தொற்றிக்கொண்டால் காதின் மேற்புற வளைவையே இழக்க நேரிடலாம். மூக்குத்திகளிலும் ஆபத்து உண்டு​—⁠இந்தப் பகுதியில் நோய் தொற்றிக்கொண்டால் அருகிலுள்ள இரத்த நாளங்கள் பாதிப்புக்குள்ளாகி அது மூளைக்கு பரவிவிடும்.” செய்தி மடல் இவ்வாறு முடிகிறது: “காதின் கீழ்ப்பகுதியில் குத்துவது மட்டுமே சரி.”

அலர்ஜிக் ரியாக்க்ஷன் ஏற்படலாம், மாறாத வடு ஏற்படலாம், இவையெல்லாம் மற்ற ஆபத்துகள். மார்பு போன்ற மென்மையான பகுதிகளில் குத்தி வளையங்கள் மாட்டிக்கொண்டால் அவை துணியில் மாட்டி சதை பிய்ந்துவிட வாய்ப்பிருக்கிறது. ஓர் இளம் பெண்ணின் மார்பில் உண்டான வடு பால் உற்பத்தியாகும் நாளத்தை தடைசெய்துவிடலாம். சிகிச்சை பெறவில்லையென்றால் எதிர்காலத்தில் குழந்தைக்கு பாலூட்டுவது கடினமாகலாம் அல்லது அது முடியாமல் போகலாம்.

வாயில் குத்துவது உடலுக்கு ஆபத்து என்று சமீபத்தில் அமெரிக்கன் டென்டல் அசோஷியேஷன் கூறியது. வாய்ப்பகுதியில் குத்துவதால் வரும் கூடுதலான ஆபத்துக்கள் வருமாறு: ஆபரணம் விழுங்கப்படுமானால் தொண்டை அடைப்பு, நாக்கு மரத்துப்போய் சுவை உணர முடியாமல் போய்விடுவது, நீண்ட நேரம் இரத்தம் கசிந்துகொண்டிருப்பது, பல் சிராய்ப்பு அல்லது உடைந்துபோவது, எச்சில் அதிகமாக ஊறுவது, கட்டுப்படுத்த முடியாமல் எச்சில் வழிவது, ஈரில் காயம், திக்கிப் பேசுவது, சுவாசிப்பதிலும் சவைப்பதிலும் விழுங்குவதிலும் சிக்கல். கேந்திரா என்ற பெயருள்ள ஒரு இளம் பெண் தன் நாக்கில் குத்திக்கொண்ட போது அது “ஒரு பலூனைப்போல ஊதிவிட்டது.” அது மட்டுமல்ல, குத்துபவர், முகவாய்க்கட்டைக்காக செய்த ஆபரணத்தைப் பயன்படுத்தியதால் அது நாக்கையும் கீழே உள்ள திசுவையும் அறுத்துவிட்டது. கேந்திராவுக்கு கிட்டத்தட்ட பேச முடியாத நிலை ஏற்பட்டது.

கடவுள் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலருக்கு அவர்களுடைய உடல்களை மதிக்க வேண்டும், அதை கீறிக்கொள்ளவோ குத்திக்கொள்ளவோ கூடாது என்று கற்பித்தார். (லேவியராகமம் 19:28; 21:5; உபாகமம் 14:1) கிறிஸ்தவர்கள் இன்று மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் இல்லாவிட்டாலும் இன்னும் அவர்கள் தங்களுடைய சரீரங்களை மரியாதையுடன் நடத்தும்படியே ஊக்குவிக்கப்படுகிறார்கள். (ரோமர் 12:1) அப்படியென்றால் தேவையில்லாத உடல்நல ஆபத்துக்களைத் தவிர்ப்பது நல்லதல்லவா? உடல்நலத்தைத் தவிர நீங்கள் யோசித்துப்பார்க்க வேண்டிய மற்ற காரியங்களும் இருக்கின்றன.

அது ஏற்படுத்தும் அபிப்பிராயம்?

உடலில் குத்திக்கொள்வது குறித்து பைபிளில் திட்டவட்டமான கட்டளை எதுவும் இல்லை. ஆனால் அது “அடக்கத்தினாலும் தெளிந்த புத்தியினாலும்” அலங்கரித்துக்கொள்ளும்படி நம்மை உற்சாகப்படுத்துகிறது. (1 தீமோத்தேயு 2:9, 10, NW) உலகின் ஒரு பகுதியில் ஏதோ ஒன்று அடக்கமுள்ளதாக கருதப்படலாம், ஆனால் நீங்கள் வாழும் இடத்தில் அது எவ்வாறு கருதப்படுகிறது என்பதே முக்கியம். உதாரணமாக, பெண்கள் காதுகளைக் குத்திக்கொள்வது உலகின் ஒரு பகுதியில் ஏற்றுக்கொள்ளப்படலாம். ஆனால் மற்றொரு தேசத்தில் அல்லது கலாச்சாரத்தில் அது அவர்களுக்கு வெறுப்பூட்டலாம்.

பிரபலங்கள் மத்தியில் உடலில் குத்திக்கொள்வதும் ஆண்கள் காதணிகளை அணிந்துகொள்வதும் மதிப்புள்ளதாக இருந்தாலும் மேற்கில் இது இன்னும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இது நீண்ட காலமாக சிறைவாசிகள், மோட்டார்சைக்கிள் ரவுடிகும்பல்கள், ராக் இசை குழுவினர், ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ளவர்கள் ஆகியோரின் முத்திரையாகவே இருந்துவிட்டது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அநேகருக்கு உடலில் குத்திக்கொண்டால் அது வித்தியாசமாகவும் கலகம் செய்வதற்கு அடையாளமாகவும் இருக்கிறது. நிறைய பேருக்கு அது அதிர்ச்சியாகவும் பொருத்தமற்றதாகவும் இருக்கிறது. ஆஷ்லி என்ற ஒரு கிறிஸ்தவ பெண் இவ்வாறு சொல்கிறாள்: “எங்க வகுப்புல ஒரு பையன் மூக்கு குத்திக்கொண்டு அது ரொம்ப அழகா இருக்கறதா நினைச்சிட்டிருக்கான். ஆனா எனக்கு அதை பார்க்கவே அருவருப்பா இருக்கு!”

இதன் காரணமாகவே அமெரிக்காவில் பிரபலமான ஒரு அங்காடி, வாடிக்கையாளரோடு நேரடியாக தொடர்பு கொள்பவர்கள் காதில் ஒரு வளையம் மட்டுமே அணிய அனுமதிக்கிறது. மற்ற இடங்களில் குத்திக்கொள்வதை தடைசெய்கிறது என்ற விஷயம் நமக்கு ஆச்சரியமாயில்லை. “வாடிக்கையாளர்கள் எப்படி பிரதிபலிப்பார்கள் என்று நமக்குத் தெரியாது” என்று ஒரு கம்பெனி பிரதிநிதி கூறுகிறார். வேலைக்கு விண்ணப்பிக்கும் கல்லூரி மாணவர்களிடம் வாழ்க்கைப்பணி ஆலோசகர்கள் “காது வளையங்களை அல்லது உடம்பில் குத்தி அணியும் ஆபரணங்களை அணியாதீர்கள் என்றும் பெண்களிடம் . . . மூக்கில் வளையங்களை அணியாதீர்கள் என்றும்” சொல்கின்றனர்.

இளம் கிறிஸ்தவர்கள் குறிப்பாக சுவிசேஷ வேலையில் ஈடுபட்டிருக்கையில் மற்றவர்களுக்கு தங்களைப் பற்றிய ஒரு நல்ல அபிப்பிரயாயத்தைக் கொடுப்பது குறித்து கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் ‘ஊழியம் குற்றப்படாதபடிக்கு, யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல்’ இருக்க விரும்புகிறார்கள். (2 கொரிந்தியர் 6:3, 4) குத்திக்கொள்வது குறித்து உங்களுடைய தனிப்பட்ட கருத்து என்னவாக இருந்தாலும் உங்களுடைய தோற்றம் உங்கள் மனப்பான்மையையும் வாழ்க்கை பாணியையும் குறித்து பேசுகிறது என்ற உண்மையை மறுக்க முடியாது. அது என்ன பேசவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?

கடைசியாக நீங்களும் உங்கள் பெற்றோருமே இது சம்பந்தமாக நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ‘உங்களைச் சுற்றியுள்ள உலகம் அதன் வார்ப்புக்குள் உங்களைத் திணிக்க அனுமதியாதீர்கள்’ என்கிறது பைபிளின் நல்ல புத்திமதி. (ரோமர் 12:2, ஃபிலிப்ஸ்) ஏனென்றால் நீங்கள்தான் அதனால் வரும் விளைவுகளோடு வாழ வேண்டும்.

[அடிக்குறிப்பு]

a அநேக தேசங்களில் சர்வ சாதாரணமாக செய்யப்படும் காது குத்தலை நாங்கள் இங்கே குறிப்பிடவில்லை. (காவற்கோபுரம், [ஆங்கிலம்] மே 15, 1974, பக்கங்கள் 318-19 காண்க.) இன்று மிகவும் அத்துமீறியதாக இருக்கும் பிரபலமான பழக்கங்களையே நாங்கள் குறிப்பிடுகிறோம்.

[பக்கம் -ன் படங்கள்12]

உடம்பில் குத்திக்கொள்வது இளைஞர் மத்தியில் மிகவும் பிரபலம்