‘மாறுபட்ட உலகம்’
‘மாறுபட்ட உலகம்’
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மாஸ்கோவில் யெகோவாவின் சாட்சிகள் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என்று சிலர் அரும்பாடுபட்டனர்; இது அநேகருடைய கவனத்தை ஈர்த்தது. (கூடுதல் தகவல்களுக்கு பக்கங்கள் 27, 28-ஐக் காண்க.) என்ட்ரியா ஸொலோடோவ், ஜூனியர், ஆகஸ்ட் 21, 1999, த மாஸ்கோ டைம்ஸ் என்ற செய்தித்தாளில் இவ்வாறு சொன்னார்: “யெகோவாவின் சாட்சிகள் அங்கு மாநாடு நடத்துவதைப் பற்றி அந்த நிர்வாகத்திற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று அந்த விளையாட்டு அரங்கத்தின் இணை இயக்குநர் வ்லெடிமைர் கொஸெர்யெவ் சொன்னார். ஆனால் அந்த (மாநாட்டை தடை செய்யும்படியான) ஆர்டர் எங்கிருந்து வருகிறது என்று தனக்கு தெரியாது என்றும் சொன்னார்.”
ஒரு வாரம் கழித்து த மாஸ்கோ டைம்ஸ் செய்தித்தாளில் ஒரு கடிதம் வெளியானது. அந்த செய்தித்தாளில் வெளியான “பாரபட்சமற்ற” கட்டுரையை பாராட்டி ஒரு வாசகர் எழுதியிருந்த கடிதம்தான் அது. அந்தக் கட்டுரை “அநேகர் வாசிக்க வேண்டிய ஒன்று” என அதில் அந்த வாசகர் குறிப்பிட்டிருந்தார். “யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய வருடாந்தர மாநாட்டை நடத்துவதற்கு எண்ணிலடங்கா கஷ்டங்களை எதிர்பட்டிருக்கின்றனர்; இதை நீங்கள் விவரித்திருந்த விதம் அவர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருக்கிறது” என்று அவர் பாராட்டினார்.
அதை எழுதியவர் தொடர்ந்து சொல்கிறார், யெகோவாவின் சாட்சிகள் “உலகம் முழுவதிலும் நன்கு அறியப்பட்டிருக்கின்றனர் (இப்போது ரஷ்யாவிலும்கூட) . . . அவர்கள் . . . நல்ல, இரக்கமான, பணிவான மக்கள் என்று நன்கு அறியப்பட்டிருக்கின்றனர். அவர்களுடன் பழகுவது மிக எளிது, மற்றவர்களுக்கு பிரச்சினை கொடுப்பதே இல்லை. அதுமட்டுமல்ல அவர்கள் எல்லோரோடும், அது கிறிஸ்தவர்களாக இருந்தாலும்சரி, முகமதியராக இருந்தாலும்சரி, புத்த மதத்தினராக இருந்தாலும்சரி, யாராக இருந்தாலும் எப்போதும் சமாதானமாகவே இருக்க விரும்புகிறவர்கள். அவர்களுள் லஞ்சம் வாங்குவோரோ குடிவெறியரோ போதை மருந்திற்கு அடிமையானவர்களோ இல்லை. இதற்கு காரணம், தங்களுடைய பேச்சும் செயலும் பைபிள் நம்பிக்கையின்படி இருக்கவே அவர்கள் விரும்புகின்றனர். உலகத்திலுள்ள எல்லா மக்களும் யெகோவாவின் சாட்சிகளைப்போல பைபிள் சொல்வதற்கேற்ப வாழ முயற்சித்தால், இந்தக் கொடுமை நிறைந்த உலகம் முற்றிலும் மாறுபட்ட உலகமாக இருக்கும்.”
யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி நன்கு அறிந்த அதிகாரிகள் அல்லது அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்பவர்கள் மேலே சொன்னவை எல்லாம் உண்மை என்பதை அடித்துச் சொல்கின்றனர். உதாரணமாக, ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் இந்தப் புதிய மாநாட்டு மன்றம் கட்டுவதற்கு இப்படிப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அனுமதி அளித்துள்ளனர். அந்த மன்றம் கம்பீரமாக காட்சியளிக்கும் ஓர் அழகிய கட்டடமாக கட்டப்பட்ட பிறகு செப்டம்பர் 18-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு வந்திருந்த 2,257 பேரின் முகங்களிலும் சந்தோஷம் பொங்கி வழிந்தது. செயின்ட் பீட்டர்ஸ்பர்கிலுள்ள தங்கள் ராஜ்ய மன்றங்களிலும் அதற்கு அருகிலுள்ள சொல்ன்யெக்நோயி என்ற இடத்திலிருக்கும் யெகோவாவின் சாட்சிகளது கிளை அலுவலகத்திலும் கூடுதலாக சுமார் 2,228 பேர் இந்நிகழ்ச்சியை கேட்டுக்கொண்டிருந்தனர்.