அப்பா இல்லா குடும்பங்களுக்கு—முற்றுப்புள்ளி
அப்பா இல்லா குடும்பங்களுக்கு—முற்றுப்புள்ளி
தற்போதைய போக்கு தொடருமேயானால் அப்பா இல்லாத குடும்பங்கள் சர்வ சாதாரணமாகிவிடும். ஐ.மா.-வின் சுகாதார மற்றும் மனித சேவைகள் இலாக்காவின் அறிக்கை இவ்வாறு கூறுகிறது: “ஒற்றை பெற்றோரால் வளர்க்கப்படும் பிள்ளைகள் குறைவான மார்க்குகள் வாங்குகிறார்கள், இவர்கள் ஒழுங்காக நடந்துகொள்வதில்லை. நாள்பட்ட உடல்நல, மனநல கோளாறுகள் இவர்களுக்கு அதிகம் இருக்கின்றன. . . . தனியாக அம்மாவால் வளர்க்கப்படும் பிள்ளைகள் பருவ வயதில் அம்மாவாவதற்கும், பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிடுவதற்கும், ஜெயிலுக்கு போவதற்கும் வாய்ப்பு அதிகமிருக்கிறது.”
சமூக அறிவியல் அறிஞர்களும் குடும்ப ஆலோசகர்களும் கல்வியாளர்களும் அரசியல்வாதிகளும்கூட, நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தும் இந்தப் போக்கை தடுத்து நிறுத்துவதற்கு அரும்பாடுபடுவது நமக்கு ஆச்சரியமாயில்லை. அப்பாவாக இருப்பதில் இருக்கும் பெருமையை எடுத்துக்காட்டவும், குடும்ப பொறுப்புகளை ஏற்கத் தூண்டவும் பெரிய அளவில் பேரணிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அப்பாக்களுக்கான புத்தகங்கள் சந்தையில் ஏராளமாக கிடைக்கின்றன. அப்பாக்களை அவர்களுடைய பொறுப்புகளை ஏற்க வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஐக்கிய மாகாணங்களில் “தன் பிள்ளையை ஆதரிக்க பிடிவாதமாக மறுக்கும் அப்பாக்களுக்கு” நீதிபதிகள் கடுமையாக தண்டனை வழங்குகிறார்கள், டிவி நிகழ்ச்சிகளில் கடுமையாக சாடப்படுகிறார்கள், எல்லாருக்கும் முன்பாக இவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஆனால் இந்த முயற்சிகளால் ஒன்றும் பிரமாதமாக பலன் இல்லை.
அவசர பரிகாரம்
அவசரப்பட்டு பரிகாரம் தேடுகையிலும்கூட விரும்பின பலன் கிடைக்காமல் போகலாம். உதாரணமாக, டைவர்ஸ் பெற்ற ஒரு பெண் தன் பிள்ளைகளுக்கு ஒரு அப்பா வேண்டும் என்ற எண்ணத்தில் அவசரப்பட்டு மறுமணம் செய்யலாம். மறுமணத்தில் நன்மைகள் ஒருவேளை இருந்தாலும், அதிலும் பிரச்சினைகள் வரலாம். யாரோ ஒரு புதிய மனிதரை பிள்ளைகள் தங்கள் அப்பாவாக ஏற்றுக்கொள்ள தயங்கலாம். சில சமயங்களில் அவர்கள் ஏற்றுக்கொள்வதே இல்லை. “தாய் மறுமணம் செய்துகொண்ட குடும்பங்களில் 19 வயதாவதற்குள் வீட்டைவிட்டு வெளியேறிய பெண்களின் எண்ணிக்கை மூன்றில் இரு பகுதி . . . ஆனால் மறுமணம் செய்துகொள்ளாத குடும்பங்களிலிருந்து 50 சதவிகிதமே வெளியேறினர்” என்பதை ஒரு ஆய்வு காட்டியது. தாய் மறுமணம் செய்து, குடும்பம் ஓரளவு வெற்றிகரமாக அமைந்தாலும், மாற்றான் தகப்பனை பிள்ளைகள் ஏற்றுக்கொள்வதற்கு பல வருடங்கள் ஆகின்றன. a
அதேவிதமாய், பருவ வயதில் கருத்தரிக்கும் பிரச்சினைக்கு அவசர பரிகாரங்களே இல்லை. உதாரணமாக கருக்கலைப்பு கடவுளுடைய சட்டத்தை மீறும் செயல். இது தன்னுள் உருவாகி வளர்ந்துகொண்டிருக்கும் சிசுவுக்கு தாய்மை காட்டாத செயல். (யாத்திராகமம் 20:13; 21:22, 23; சங்கீதம் 139:14-16; ஒப்பிடுக: 1 யோவான் 3:17.) இதனால் மனவேதனை ஏற்படாமல் இருக்குமா என்ன? பிள்ளையை பெற்றெடுத்து யாருக்காவது தத்துக்கொடுத்துவிடுவது மனிதநேய செயல் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் அதுவும்கூட அம்மாவுக்கும் குழந்தைக்கும் உணர்ச்சி கொந்தளிப்பையும், மனவேதனையையும் ஏற்படுத்தலாம்.
இதுபோல் அவசரப்பட்டு எடுக்கும் தீர்வினால் அப்பாக்கள் இல்லாத குடும்பங்களுக்கு முற்றுப்புள்ளி எபேசியர் 3:14, 15) பிள்ளைகளுக்கு என்ன தேவை என்பதை வேறு யாரைக்காட்டிலும் அவரே அதிகம் அறிந்திருக்கிறார்.
வைக்க முடியாது. மக்கள் தங்கள் சிந்தனைகளிலும் மனோபாவங்களிலும் தங்கள் நடத்தையிலும் தங்கள் ஒழுக்கங்களிலும் பெரிய மாற்றங்களைச் செய்ய மனமுள்ளவர்களாய் இருந்தால் மாத்திரமே இதை தடுத்து நிறுத்த முடியும். இப்படிப்பட்ட அபாரமான மாற்றங்களைச் செய்ய ஒருவரைத் தூண்டுவதற்கு நீண்ட சொற்பொழிவாற்றி தத்துவம் பேசுவது மாத்திரமே போதாது. “தேவைப்படுவது” கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் காணப்படுகிறது. ஏனெனில் குடும்ப ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவரே கடவுள்தானே. (சமாளிக்க உதவும் பைபிள் நியமங்கள்
ஆனால் அம்மா மாத்திரம் இருக்கும் பிள்ளைகளுக்கு பைபிள் உண்மையில் உதவ முடியுமா? சரிசெய்ய முடியாத அளவு நிலைமை மோசமாகிவிடவில்லையா? நிச்சயமாக இல்லை! இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் ஐ.மா. அரசு அறிக்கை ஒன்றிலிருந்து நாங்கள் மேற்கோள் காட்டினோம். அதில், இந்தப் பிள்ளைகள் எதிர்ப்படும் ஆபத்துக்கள் பல பட்டியலிடப்பட்டிருந்தன. இந்நிலையிலும்கூட அறிக்கை இவ்வாறு முடிக்கிறது: “அம்மா மாத்திரம் இருக்கும் குடும்பங்களில் அதிக ஆபத்துக்கள் இருப்பதற்கு அத்தாட்சிகள் உள்ளபோதிலும் பெரும்பாலான பிள்ளைகள் இயல்பாய் வளர்ந்துவருவதையும் ஆராய்ச்சி காட்டுகிறது.” ஆம், அப்பா இல்லாததால் ஏற்படும் பிரச்சினைகளை நீக்கிடலாம் அல்லது குறைக்கவாவது செய்யலாம். பிள்ளைகளை வளர்க்கும்போது பைபிள் நியமங்களைப் பின்பற்றினால் இதைச் செய்ய முடியும்.
இதற்கு அந்த தாய் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும், ஆரம்பத்தில் இது மிகவும் பாரமாக தோன்றலாம். ஆனால் இந்நிலை உங்களுக்கு ஏற்படுமானால் நீங்கள் யெகோவா தேவன்மீது முழுமையாக சார்ந்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும். (நீதிமொழிகள் 3:1, 2) பைபிள் காலங்களில் வாழ்ந்துவந்த சில கிறிஸ்தவ பெண்களும் வேதனையான சூழ்நிலைமைகளை எதிர்ப்பட்டனர். உதாரணத்திற்கு சிலர் விதவையானார்கள். அப்படிப்பட்டவர்களைப் பற்றி பைபிள் இவ்விதமாகச் சொல்கிறது: “உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.” (1 தீமோத்தேயு 5:5) யெகோவா தம்மை ‘திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பன்’ என்று அழைத்துக்கொள்வது உங்கள் நினைவிலிருக்கட்டும். (சங்கீதம் 68:5) கடவுள் பயமுள்ள ஒரு பெண்ணையும் அவள் தன் பிள்ளைகளை வளர்ப்பதற்கு எடுக்கும் முயற்சிகளையும் அவர் ஆதரிப்பார் என்று நீங்கள் நிச்சயமாயிருக்கலாம்.
பிள்ளைகளோடு தவறாமல் பைபிளைப் படிப்பது சமநிலையுள்ள, முதிர்ச்சியுள்ள ஆட்களாக அவர்களை வளர்ப்பதற்கு சிறந்த வழியாகும். (உபாகமம் 6:6-9) யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் ஒற்றைப் பெற்றோராய் இருப்பவர்கள் பைபிள் அடிப்படையில் எழுதப்பட்ட புத்தகங்களை இதற்காக பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக இளைஞர் கேட்கும் கேள்விகளும்-பலன்தரும் விடைகளும் b என்ற புத்தகம் விசேஷமாக இளைஞருக்கென்றே தயாரிக்கப்பட்டது. அது, பெற்றோர் செய்த தவறை தவிர்த்து நல்ல ஒழுக்க தராதரங்களை வளர்த்துக்கொள்ள இளைஞருக்கு உதவுகிறது. யெகோவா தேவனைப் பற்றி பிள்ளைகள் அறிந்துகொள்ளும்போது, தங்கள்மீது அக்கறையுள்ள பரம தந்தை ஒருவர் இருக்கிறார் என்பதை உணர ஆரம்பிப்பார்கள். (சங்கீதம் 27:10) கைவிடப்பட்டதால் அவர்கள் படும் வேதனையை சமாளிக்க இது அவர்களுக்கு உதவி செய்யும். அப்பா அம்மாவின் பிரிவை சமாளித்ததைப் பற்றி பிரிட்டன் நாட்டுப் பெண் இவ்வாறு சொல்கிறாள்: “எப்பவும் ஜெபம் செய்யணும், யெகோவாவையே நம்பியிருக்கணும் அப்படின்னு அம்மா சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அத செஞ்சதனாலதான் எங்களால சமாளிக்கவே முடிஞ்சுது.”
பெற்றோர்-பிள்ளை உறவை காத்துக்கொள்ளுதல்
ஒரு பிள்ளை தன் தாயையும் தன் தகப்பனையும்கூட கனம்பண்ண வேண்டும் என்பதை பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (யாத்திராகமம் 20:12) டைவர்ஸ் என்பது அப்பா-பிள்ளை உறவை முறித்துவிடுவதில்லை. அப்பா வீட்டில் இல்லாவிட்டாலும் பிள்ளைகள் அவரோடு பாசமாக பழகுவதால் நன்மையடையலாம். c அம்மாவுக்கு அவர்மேல் கோபமிருக்கலாம், அவர் பிள்ளைகளோடு பழகுவதைப் பார்த்து எரிச்சலடையலாம். அப்போது அம்மா என்ன செய்யலாம்?
பைபிள் இவ்வாறு நல்ல ஆலோசனை தருகிறது: “கடுங்கோபம் உன்னை தீய [செயல்களுக்கு] வழிநடத்தாதபடி கவனமாயிரு . . . புண்படுத்த நாடாமல் எச்சரிக்கையாயிரு” (யோபு 36:18-21) உங்களைப் புண்படுத்தியவரைப் பற்றி அல்லது உங்களை கைவிட்டவரைப் பற்றி நல்ல விதமாக பேசுவது சுலபமல்ல என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் உங்களை இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘அப்பா மோசமானவர் என்று எப்போது பார்த்தாலும் மகளிடம் சொல்லிக்கொண்டே இருந்தால் அவள் எந்தவொரு ஆணையும் நம்புவாளா? “நீ உன் அப்பாவை உரிச்சுவைச்ச மாதிரியிருக்க” என்று மகனை திட்டிக்கொண்டே இருந்தால் அவன் தைரியமும் சுயமரியாதையும் மிக்க ஆண்மகனாக வளருவானா? அப்பாவை வெறுக்கும்படி அல்லது அவரைப் பார்க்கவே கூடாது என்று சொல்லிக்கொண்டிருந்தால் தலைமையை மதிக்கத் தோன்றுமா?’ பிள்ளைகளை அப்பாவிடமிருந்து பிரித்துவிட நினைப்பதால் தீமைதான் விளையும் என்பது தெளிவாக உள்ளது.
ஒரு ஆச்சரியமான விஷயம், நியாயமாக கோபப்படுவதை பைபிள் தவறு என்று சொல்வது கிடையாது. ‘நீங்கள் கோபங்கொள்ளுங்கள்’ என்று பைபிள் சொல்கிறது. ஆனாலும் ‘பாவஞ்செய்யாதிருங்கள்’ என்கிறது. (எபேசியர் 4:26) கோபப்படுவது பாவமல்ல ஆனால் ‘கோபமும் மூர்க்கமும் தூஷணமும் வம்பு வார்த்தைகளும்’ நம்மைக் கட்டுப்படுத்துவது பாவமாகும். (கொலோசெயர் 3:8) ஆகவே பிள்ளைகள் முன்னால் அப்பாவைத் திட்டாதீர்கள். உங்கள் வேதனைகளை யாரிடமாவது கொட்டித்தீர்க்க வேண்டும் என்று நினைத்தால் பிள்ளையைத் தவிர வேறு யாரிடமாவது பேசுங்கள். பைபிளின் ஆலோசனைபடி “இருதயத்திலுள்ள கவலை”யை நம்பகமான ஒரு நண்பரிடம் பேசி தீர்த்துக்கொள்ளலாம். (நீதிமொழிகள் 12:25) எப்போதும் ‘பாஸிடிவ்வாக’ இருங்கள். கடந்த காலத்தைப் பற்றியே எப்போதும் யோசிக்காதிருங்கள். (பிரசங்கி 7:10) இப்படிச் செய்தால் உங்கள் கோபம் தணிந்துவிடும்.
கடைசியாக, அப்பா நல்ல முன்மாதிரியான நடத்தை உள்ளவராக இல்லாவிட்டாலும்கூட அவரை கனம்பண்ணும்படி பிள்ளைக்கு பைபிள் கட்டளையிடுகிறது என்பதை மறந்துவிட வேண்டாம். (எபேசியர் 6:2, 3) அப்பாவின் குறைபாடுகளை யதார்த்தமாக எடுத்துக்கொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவிசெய்யுங்கள். டைவர்ஸ் ஆன குடும்பத்தில் வளர்ந்துவந்த ஒரு இளம் பெண் இவ்வாறு சொல்கிறாள்: “அப்பாவும் தவறுசெய்யக்கூடிய சாராசரி மனிதன்தான் என்று எண்ணிப்பார்த்து கடைசியாக அவரை ஏற்றுக்கொண்டேன், இப்போதெல்லாம் எனக்கு அவர்மீது கோபம் வருவதில்லை.” அப்பாவுக்கு மரியாதை கொடுக்கும்படி உற்சாகப்படுத்தினால், அம்மாவாக உங்கள் ஸ்தானத்திற்கு மதிப்பை தேடிக்கொள்வீர்கள்!
உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்குமிடையே இருக்கவேண்டிய எல்லைக்கோட்டினை அழித்துவிடாதிருப்பது முக்கியம். அவர்கள் இன்னும் ‘தாயின் சட்டத்தின்கீழ்’தான் இருக்கின்றனர். (நீதிமொழிகள் 1:8) ஒரு மகனிடம் அப்பாவின் சுமைகளை அவன் சுமக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அல்லது அம்மா தனக்கு சுமையாக இருக்கும் அனைத்தையும் மகளிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தால் அது குருவி தலையில் பனங்காய் வைப்பதற்கு சமம். பெற்றோராக நீங்கள் உங்கள் பிள்ளைகளை கவனித்துக்கொள்வீர்கள் என்று உறுதியளிப்பதுதான் அவர்களுக்கு வேண்டும்—தலைகீழாக இருக்கக்கூடாது. (2 கொரிந்தியர் 12:14-ஐ ஒப்பிடுக.) குடும்ப சூழ்நிலை அவ்வளவு சரியாக இல்லாவிட்டாலும்கூட இது பிள்ளைகளை பாதுகாப்பாக உணரச் செய்யும்.
அப்பாவின் ஸ்தானத்தில்
அப்பாவோடு தொடர்பே இல்லையென்றால்? ஒரு ஆணின் தோழமை பயனுள்ளதாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். உறவினர் ஒருவரோ பக்கத்துவீட்டுக்காரரோ ஆண் பிள்ளையின்மீது அக்கறை காட்டுகையில் அது அவனுக்கு ஓரளவு நல்லதாக இருக்கலாம். ஆனால், கிறிஸ்தவ சபையினுள் சகோதரர்களோடு கூடிபழகுவது அவனுக்கு மிகவும் நன்மையாக இருக்கும். சபை ஒரு குடும்பம்போல இருந்து ஆதரவு தரும் என்று இயேசு வாக்குறுதியளித்தார்.—மாற்கு 10:29, 30.
பைபிள் காலங்களில் வாழ்ந்த தீமோத்தேயுவின் அப்பா கிறிஸ்தவர் அல்ல. ஆகவே மதவிஷயத்தில் தீமோத்தேயுவிற்கு அப்பாவின் ஆதரவு கிடைக்கவில்லை. ஆனாலும் தீமோத்தேயு கடவுளுடைய சேவையில் முக்கிய பங்காற்றினார். தீமோத்தேயு இவ்வாறு சிறந்து விளங்கியதற்கு பைபிள் அவருடைய அம்மாவையும் பாட்டியையும் பாராட்டுகிறது. (அப்போஸ்தலர் 16:1; 2 தீமோத்தேயு 1:1-5) அதே சமயத்தில் கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுலின் கூட்டுறவாலும் அவன் நன்மையடைந்தான். பவுல் தீமோத்தேயுவை “எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயு” என்றழைக்கிறார். (1 கொரிந்தியர் 4:17) “துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் [விதவைகளையும்] கவினி”க்கும்படி பைபிள் ஆலோசனை தந்துள்ளது. அதை இன்று யெகோவாவின் சாட்சிகள் அப்படியே பின்பற்றுகிறார்கள். (யாக்கோபு 1:27, பொ.மொ.) உண்மையான, சமநிலையான அக்கறை எடுத்து, “அனாதை” பிள்ளையை காப்பாற்றும்படி அவர்களுக்கு சொல்லப்படுகிறது. (யோபு 29:12) அனட் என்ற ஒரு இளம் பெண் சிறுமியாக இருந்தபோது ஒரு கிறிஸ்தவ மூப்பர் காட்டிய பரிவை இப்போதும் நினைத்துப்பார்க்கிறார். “அவர் ஒரு அப்பாவைப் போல எனக்கு ஆதரவு கொடுத்தார்” என்று நெகிழ்ச்சியோடு கூறுகிறார்.
பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி
இந்த நியமங்களை பின்பற்றினால் அப்பா இல்லாத பிள்ளைகளும் வாழ்வில் வெற்றி பெறலாம். தங்கள் குழந்தைப்பருவம் மகிழ்ச்சியற்றதாக இருந்தாலும் அவர்கள் சமநிலையுள்ள, பயனுள்ள பெரியவர்களாக ஆகலாம்; பின்னால் அன்பும், உண்மையும், பொறுப்புமுள்ள பெற்றோராக ஆகமுடியும். ஆனாலும் வருமுன் காப்பதே மேல் அல்லவா? கடைசியாக பைபிள் சொல்வதன்படி வாழ ஆண்களும் பெண்களும் உறுதிபூண்டாலொழிய அப்பா இல்லாத குடும்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. உதாரணமாக திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்வதை தடை செய்யும் பைபிளின் சட்டத்தின்படி நடக்க வேண்டும்; கணவனும் மனைவியும் பைபிள் நிர்ணயிக்கும் தராதரங்களைப் பின்பற்ற வேண்டும்.—1 கொரிந்தியர் 6:9; எபேசியர் 5:21-33.
இப்போதெல்லாம் அநேக பிள்ளைகளுக்கு வீட்டில் அப்பா இருந்தாலும் இல்லை என்ற நிலைதான். குடும்ப விவகாரங்களில் வல்லுநரான ஒருவர் இப்படிச் சொல்லுகிறார்: “பிள்ளைகளுக்கு பெற்றோரின் நேரமும் கவனமும் கிடைக்காதிருப்பதே . . . அவர்கள் இன்று எதிர்ப்படும் மிகப் பெரிய பிரச்சினையாகும்.” கடவுளுடைய வார்த்தை இந்த விஷயத்தைக் குறித்து நேரடியாகவே பேசுகிறது. பிள்ளைகளைக் குறித்து அது அப்பாக்களுக்கு இவ்வாறு கட்டளையிடுகிறது: “கிறிஸ்தவர்களுக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4, நியூ இங்லிஷ் பைபிள்; நீதிமொழிகள் 24:27) அப்பாக்கள் பைபிளின் புத்திமதியை பின்பற்றினால், கைவிடப்படுவோமோ என்ற பயம் பிள்ளைகளுக்கு வராது.
நிறைய பேர் பைபிளின் புத்திமதிக்கு செவிகொடுத்து மாறிவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? முடியாது. (மத்தேயு 7:14) ஆனால் யெகோவாவின் சாட்சிகள் லட்சக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சியாக வாழ உதவியிருக்கிறார்கள். அவர்களின் வீடுகளுக்கே சென்று பைபிளை கற்றுக்கொடுத்து உதவியிருக்கிறார்கள். d திருமணம் செய்துகொள்ளும் எல்லா தம்பதிகளுக்கும் நிறைகுறைகள் இருப்பதால் “சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்” என்று பைபிள் எச்சரிப்பது உண்மைதான். (1 கொரிந்தியர் 7:28) ஆனால் கடவுளுடைய வார்த்தையை மதிக்கிறவர்கள் ஏதாவது ஒரு பிரச்சினை வந்தவுடனே டைவர்ஸ் பற்றி யோசிக்காமல் பிரச்சினைகளை எப்படித் தீர்த்துக்கொள்ளவது என்று யோசிப்பர். அதேசமயம் பிரிந்து வாழ்வதே அல்லது திருமண விலக்கே சரியாக இருக்கும் என்று ஒரு கிறிஸ்தவர் முடிவுசெய்யும் சமயங்கள் இருக்கலாம். (மத்தேயு 5:32) ஆனால் அவ்வாறு செய்வதால் பிள்ளைகளுக்கு வரக்கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, கூடுமானவரை ஒரு கிறிஸ்தவர் திருமணத்தை முறித்துக்கொள்ள மாட்டார்.
பைபிளைப் பின்பற்றுவதால் இப்போது உங்கள் குடும்ப வாழ்க்கை சிதையாமல் காப்பாற்றப்படும். அதோடு எதிர்காலத்திலும் நீங்கள் அனைவரும் என்றென்றுமாக வாழ்வதை அது கூடிய காரியமாக்கும்! இயேசு சொன்னார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” (யோவான் 17:3) கடவுளுடைய வார்த்தையை வாசித்து, அதிலுள்ள புத்திமதியை பின்பற்றுவதே உங்களுடைய குடும்பம் என்றென்றுமாக நிலைத்திருக்க மிகச் சிறந்த வழியாகும்.
[அடிக்குறிப்புகள்]
a மாற்றான் பெற்றோருக்கு உதவியாக இருக்கும் தகவல் எமது காவற்கோபுரம் பத்திரிகை மார்ச் 1, 1999 இதழில் வெளிவந்திருக்கிறது.
b உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா வெளியிட்டது.
c பிள்ளைகளை அடித்து நொறுக்கும் அல்லது பாலியல் பலாத்காரம் செய்யும் அப்பாக்கள் இருந்தால், இந்த அறிவுரை பொருந்தாது.
d குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகம் (உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா வெளியிட்டது) குடும்பங்களுக்கு உதவியாக இருக்கும் பைபிள் ஆலோசனைகளை தருகிறது. உங்கள் ஊரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்புகொண்டு இதைப் பெற்றுக்கொள்ளலாம்.
[பக்கம் 8, 9-ன் படம்]
பைபிள் நியமங்களை பின்பற்றினால் ஒற்றைப் பெற்றோரால் பிள்ளைகளை வெற்றிகரமாக வளர்த்து ஆளாக்க முடியும்
[பக்கம் 10-ன் படம்]
கிறிஸ்தவ ஆண்கள் உண்மையுடனும் நல்ல நோக்கோடும் ‘திக்கற்ற பிள்ளையிடம்’ அக்கறை காட்டுவதன்மூலம் அவனைக் ‘காப்பாற்ற’ முடியும்