தத்தளிக்கும் பூமி!
கடல்கள்
கடலிலிருந்து மனிதர்களுக்குத் தேவையான சாப்பாடு மட்டுமல்ல, மருந்து தயாரிப்பதற்குத் தேவையான நிறைய பொருள்களும் கிடைக்கின்றன. இந்த உலகத்தில் இருக்கும் பாதிக்கும் அதிகமான ஆக்சிஜனை கடல்கள்தான் உற்பத்தி செய்கிறது. பிறகு, ஆபத்தான கார்பன் வாயுக்களை உறிஞ்சிக்கொள்கிறது. வானிலை சீராக இருப்பதற்கும் கடல்கள்தான் உதவுகிறது.
கடல்கள்—ஆபத்தில்!
வானிலை மாற்றத்தினால் பவளப்பாறைகளும் கடலில் வாழும் மற்ற உயிரினங்களும் ஆபத்தில் இருக்கின்றன. கடலிலிருக்கும் கிட்டத்தட்ட கால்வாசி உயிரினங்கள் உயிர்வாழ்வதற்கு பவளப்பாறைகள்தான் உதவி செய்கின்றன. இன்னும் 30 வருஷத்துக்குள் இந்த பவளப்பாறைகள் மொத்தமும் அழிந்துபோவதற்கு வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
கிட்டத்தட்ட 90% கடல்பறவைகள் பிளாஸ்டிக்கை சாப்பிட்டிருக்கலாம் என நிபுணர்கள் சொல்கிறார்கள். ஒவ்வொரு வருஷமும் கடலில் வாழும் லட்சக்கணக்கான உயிரினங்கள் பிளாஸ்டிக்கினால் இறந்துபோவதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.
“கடலை நாம் கண்டும்காணாமல் விட்டுவிட்டோம். கடல் இன்று, ‘உயிருக்கு ஊசலாடிக்கொண்டு’ இருக்கிறது” என்று 2022-ல் ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் சொன்னார்.
பூமிக்கு முடிவே இல்லை
கடலும் அதில் வாழும் உயிரினங்களும் தன்னைத்தானே ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்ளும் விதத்தில்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மனிதர்கள் அளவுக்கு அதிகமாக அதை மாசுப்படுத்தாமல் இருக்க வேண்டும். “ஒருவேளை, கடலில் ஏதாவது ஒரு பகுதியை மனிதர்கள் பயன்படுத்தாமல் இருந்தார்கள் என்றால் கடலால் தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ள முடியும்” என்று ரீஜெனரேஷன்: என்டிங் த கிளைமேட் கிரைசிஸ் இன் ஒன் ஜெனரேஷன் என்ற புத்தகம் சொல்கிறது. அதற்கு சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.
-
கண்ணுக்கே தெரியாத பைட்டோபிளாங்க்டன் என்ற நுண்ணுயிர், கார்பன் டைஆக்சைடை சேர்த்து வைத்துக்கொள்கிறது. பூமி சூடாவதற்கு இந்த கார்பன் டைஆக்சைட்தான் காரணம். பூமியில் இருக்கும் செடி, கொடி, மரமெல்லாம் ஒட்டுமொத்தமாக எந்தளவுக்கு கார்பன் டைஆக்சைடை சேர்த்து வைக்கிறதோ, அந்தளவுக்கு இந்த பைட்டோபிளாங்க்டன் மட்டுமே சேர்த்து வைக்கிறது.
-
கடலை மாசுப்படுத்தும் செத்துப்போன மீன்களின் தோல், முள் எல்லாவற்றையும் பாக்டீரியாக்கள் சாப்பிடுகின்றன. பிறகு, இந்த பாக்டீரியாக்களைக் கடலில் வாழும் மற்ற உயிரினங்கள் சாப்பிடுகின்றன. இப்படி ஒன்றுசேர்ந்து செயல்படுவதால் “கடல் சுத்தமாகவும் தெளிவாகவும் இருக்கிறது” என்று ஸ்மித்சோனியன் இன்ஸ்டிடூஷன் ஓஷன் போர்ட்டல் என்ற வெப்சைட் சொல்கிறது.
-
நிறைய மீன்கள் சாப்பாட்டை செரிமானம் செய்யும்போது இன்னொரு வேலையையும் செய்கின்றன. பவளங்களுக்கும் மற்ற கடல் உயிரினங்களுக்கும் ஆபத்தாக இருக்கிற அமிலத் தண்ணீரை, நல்ல தண்ணீராக மாற்றுகின்றன.
மனிதர்களின் முயற்சி
கடலில் குப்பைப் போடாமல் இருந்தாலே கடல் சுத்தமாக இருக்கும். அதனால் ஒருதடவை பயன்படுத்திவிட்டு தூக்கிப் போடும் பிளாஸ்டிக் பொருள்களுக்குப் பதிலாக, மறுபடியும் பயன்படுத்துகிற மாதிரி இருக்கும் பைகள், டப்பாக்களைப் பயன்படுத்தும்படி நிபுணர்கள் மக்களிடம் சொல்கிறார்கள்.
ஆனால் இந்த முயற்சிகள் போதாது. சமீபத்தில், 112 நாடுகளிலிருந்து அலையில் அடித்துக்கொண்டு வந்த 9,200 டன் குப்பைகளை ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு ஒரு வருஷத்தில் சேகரித்திருக்கிறது. ஒவ்வொரு வருஷமும் கடலில் சேரும் குப்பைகளில் இது ஆயிரத்தில் ஒரு பங்கு மட்டும்தான்!
“கடல் தண்ணீரில் இருக்கும் அமிலத்தன்மை அதிகமாகிக்கொண்டே போகிறது. அதனால், கடலைப் பழைய நிலைமைக்குக் கொண்டுவருவது முடியாத விஷயம். கடலின் அமிலத்தன்மை அதிகமாவதற்குக் காரணம், மனிதர்கள் எரிபொருளை எரித்துக்கொண்டே இருப்பதுதான். அதனால், கடலைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிற கடல் உயிரினங்கள்கூட இப்போது அதனுடைய வேலையை ஒழுங்காகச் செய்ய முடியாமல் தவிக்கிறது” என்று நேஷ்னல் ஜியாகரஃபிக் என்ற பத்திரிகை சொல்கிறது.
பைபிள் என்ன நம்பிக்கை கொடுக்கிறது?
“பூமி உங்களுடைய படைப்புகளால் நிறைந்திருக்கிறது. பரந்து விரிந்த கடலும் அவற்றில் ஒன்று. சிறியதும் பெரியதுமான கணக்குவழக்கில்லாத உயிரினங்கள் அதில் இருக்கின்றன.”—சங்கீதம் 104:24, 25.
கடவுள் இவ்வளவு பெரிய கடலைப் படைத்து, தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் திறனையும் அதற்குக் கொடுத்திருக்கிறார். இதை யோசித்துப் பாருங்கள்: கடலைப் பற்றியும் அதில் வாழும் உயிரினங்களைப் பற்றியும் அவருக்கு இவ்வளவு தெரிந்திருக்கிறது என்றால், அதற்கு வந்த பாதிப்புகளை அவரால் சரிசெய்ய முடியாதா என்ன? இதைப் பற்றித் தெரிந்துகொள்ள “பூமி உயிர்வாழும் என்று கடவுள் சொல்லியிருக்கிறார்” என்ற கட்டுரையைப் பக்கம் 15-ல் பாருங்கள்.