Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஏசாவிடமிருந்து மூத்தமகன் உரிமையை வாங்கிக்கொண்டதால்தான் யாக்கோபு மேசியாவின் மூதாதையாக ஆனாரா?

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

பூர்வ இஸ்ரவேலில், மேசியா வந்த வம்சாவளிக்கும் மூத்தமகன் உரிமைக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்ததா?

சம்பந்தம் இருந்ததாகச் சில சமயங்களில் நம் பிரசுரங்களில் சொல்லியிருக்கிறோம். அந்தக் கருத்து எபிரெயர் 12:16-ல் இருக்கும் விஷயத்தோடு ஒத்திருந்ததாக நினைத்தோம். ஏசா ‘பரிசுத்த காரியங்களை மதிக்கவில்லை’ என்றும், ‘ஒரேவொரு வேளை உணவுக்காகத் தன்னுடைய மூத்தமகன் உரிமையை [யாக்கோபுக்கு] கொடுத்துவிட்டான்’ என்றும் அந்த வசனம் சொல்கிறது. யாக்கோபு “மூத்தமகன் உரிமையை” பெற்றுக்கொண்டபோது, மேசியாவின் மூதாதையாக ஆனார் என்று அந்த வசனம் சொல்வதாக நாம் நினைத்தோம்.—மத். 1:2, 16; லூக். 3:23, 34.

ஆனால், மற்ற பைபிள் பதிவுகளை ஆராய்ச்சி செய்யும்போது ஒரு விஷயம் புரிகிறது. அதாவது, ஒருவர் மேசியாவின் மூதாதையாக இருப்பதற்கு மூத்தமகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது புரிகிறது. சில அத்தாட்சிகளை இப்போது பார்க்கலாம்:

யாக்கோபின் (இஸ்ரவேலின்) மகன்களில் முதல் மகன், லேயாளுக்குப் பிறந்த ரூபன். பிற்பாடு, அவருடைய அன்பு மனைவி ராகேலுக்குப் பிறந்த முதல் மகன், யோசேப்பு. ஒழுக்கங்கெட்ட காரியத்தை ரூபன் செய்ததால், மூத்தமகன் உரிமை யோசேப்புக்குப் போய்விட்டது. (ஆதி. 29:31-35; 30:22-25; 35:22-26; 49:22-26; 1 நா. 5:1, 2) இருந்தாலும், மேசியாவின் வம்சாவளி ரூபன் வழியிலும் வரவில்லை, யோசேப்பின் வழியிலும் வரவில்லை. லேயாளின் மூலம் யாக்கோபுக்குப் பிறந்த நான்காவது மகனான யூதாவின் வழியில்தான் மேசியாவின் வம்சாவளி வந்தது.—ஆதி. 49:10.

மேசியாவின் வம்சாவளியில் வந்த இன்னும் ஐந்து பேரைப் பற்றி லூக்கா 3:32 சொல்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒவ்வொருவரும் மூத்தமகன்களாக இருந்ததாகத் தெரிகிறது. அதில் நாம் கவனிக்கிறபடி, போவாசுக்கு ஓபேத் பிறந்தார்; ஓபேத்துக்கு ஈசாய் பிறந்தார்.—ரூத் 4:17, 20-22; 1 நா. 2:10-12.

ஆனால் தாவீது, ஈசாயின் மூத்தமகன் கிடையாது. ஈசாயின் எட்டு மகன்களில் தாவீதுதான் கடைசி. இருந்தாலும் தாவீதின் வழியில்தான் மேசியாவின் வம்சாவளி வந்தது. (1 சா. 16:10, 11; 17:12; மத். 1:5, 6) அதேபோல், மேசியாவின் வம்சாவளியில் அடுத்து வந்த சாலொமோனும் தாவீதின் மூத்தமகன் கிடையாது.—2 சா. 3:2-5.

அதற்காக, மூத்தமகனாக இருப்பது அவ்வளவு முக்கியமாக இருக்கவில்லை என்று சொல்ல முடியுமா? அப்படிச் சொல்ல முடியாது! சொல்லப்போனால், மூத்தமகனுக்குக் குடும்பத்தில் மதிப்புமிக்க ஸ்தானம் இருந்தது. பெரும்பாலும், அப்பாவுக்கு அடுத்து அவர்தான் குடும்பத் தலைவராக ஆனார். அதோடு, சொத்தில் அவருக்கு இரண்டு பங்கு கிடைத்தது.—ஆதி. 43:33; உபா. 21:17; யோசு. 17:1.

ஆனால், மூத்தமகன் உரிமை மற்ற மகன்களுக்குப் போகும் வாய்ப்பும் இருந்தது. உதாரணத்துக்கு, ஆபிரகாம், மூத்தமகன் உரிமையை இஸ்மவேலுக்குக் கொடுக்காமல் ஈசாக்குக்கு கொடுத்தார். (ஆதி. 21:14-21; 22:2) ஏற்கெனவே பார்த்தது போல், ரூபனுக்கு இருந்த மூத்தமகன் உரிமை யோசேப்பின் கைக்கு மாறியது.

இப்போது திரும்பவும் எபிரெயர் 12:16-ஐப் பார்க்கலாம். “உங்களில் யாரும் பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவராகவோ, ஏசாவைப் போல் பரிசுத்த காரியங்களை மதிக்காதவராகவோ இல்லாதபடி எச்சரிக்கையாக இருங்கள்; அவன் ஒரேவொரு வேளை உணவுக்காகத் தன்னுடைய மூத்தமகன் உரிமையைக் கொடுத்துவிட்டான்” என்று அந்த வசனம் சொல்கிறது. அதில் அப்போஸ்தலன் பவுல் சொன்ன குறிப்பு என்ன?

மேசியாவின் வம்சாவளியைப் பற்றி பவுல் பேசவில்லை. “நீங்கள் போகிற பாதைகளை எப்போதும் நேராக்குங்கள்” என்று கொஞ்சம் முன்புதான் கிறிஸ்தவர்களை அவர் உற்சாகப்படுத்தினார். ஏனென்றால், அந்தக் கிறிஸ்தவர்கள் தங்களுடைய பாதைகளை நேராக்கும்போது பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டு ‘கடவுளுடைய அளவற்ற கருணையை இழந்துவிட’ மாட்டார்கள். (எபி. 12:12-16) ஒருவேளை அவர்கள் அப்படி பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டால், ஏசாவைப்போல்தான் இருப்பார்கள். ஏனென்றால், அவன் ‘பரிசுத்த காரியங்களை மதிக்காமல்,’ கடவுளுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்தான்.

முற்பிதாக்களின் காலத்தில் வாழ்ந்த ஏசாவுக்கு, பலிகள் செலுத்தும் பாக்கியம்கூட சிலசமயங்களில் கிடைத்திருக்கும். (ஆதி. 8:20, 21; 12:7, 8; யோபு 1:4, 5) ஆனால், அவன் ஆன்மீகக் காரியங்களை மதிக்காததால் ஒரேவொரு வேளை உணவுக்காக அப்படிப்பட்ட அருமையான பாக்கியங்களை இழந்தான். ஆபிரகாமின் சந்ததிக்கு வரவிருந்த கொடுமைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றுகூட அவன் நினைத்திருக்கலாம். (ஆதி. 15:13) அதோடு, பொய் கடவுள்களை வணங்கிய இரண்டு பெண்களைக் கல்யாணம் செய்ததன் மூலம், தான் ‘பரிசுத்த காரியங்களை மதிக்கவில்லை’ என்பதையும், கடவுளுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்வதிலேயே தனக்கு ஆர்வம் இருந்ததையும் காட்டினான். இதன் மூலம் தன் அப்பா அம்மாவுக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தான். (ஆதி. 26:34, 35) உண்மைக் கடவுளை வணங்குகிற பெண்ணைத்தான் கல்யாணம் செய்ய வேண்டுமென்று உறுதியாக இருந்த யாக்கோபுக்கும் ஏசாவுக்கும் எவ்வளவு வித்தியாசம்!—ஆதி. 28:6, 7; 29:10-12, 18.

ஆக, மேசியாவாகிய இயேசு வந்த வம்சாவளியைப் பற்றி நாம் என்ன முடிவுக்கு வரலாம்? சிலசமயங்களில், அந்த வம்சாவளி மூத்தமகன்களின் வழியாக வந்திருக்கிறது; ஆனால் எல்லா சமயத்திலும் அப்படி அல்ல! யூதர்களுக்கு இது தெரிந்திருந்தது, இதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவும் செய்தார்கள். இதை எப்படிச் சொல்லலாம்? ஈசாயின் கடைசி மகனான தாவீதின் வம்சாவளியில் கிறிஸ்து வந்தார் என்பதை அவர்களே ஒத்துக்கொண்டார்கள்!—மத். 22:42.