Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

யெகோவா கொடுக்கிற வேலையைச் செய்தால் ஆசீர்வாதங்கள் நிச்சயம்!

யெகோவா கொடுக்கிற வேலையைச் செய்தால் ஆசீர்வாதங்கள் நிச்சயம்!

எனக்கும் என் கணவருக்கும் என் அண்ணன் அண்ணிக்கும் ஒரு விசேஷ ஊழியம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. “நாங்க போறோம்!” என்று உடனடியாகச் சொன்னோம். நாங்கள் ஏன் அந்த நியமிப்பை ஏற்றுக்கொண்டோம்? யெகோவா எப்படி எங்களை ஆசீர்வதித்தார்? முதலில், என்னைப் பற்றிக் கொஞ்சம் சொல்கிறேன்.

1923-ல், இங்கிலாந்திலுள்ள யார்க்ஷயரில் இருக்கும் ஹெம்ஸ்வர்த் என்ற ஊரில் நான் பிறந்தேன். எனக்கு பாப் என்ற ஒரு அண்ணன் இருந்தார். எனக்கு ஒன்பது வயது இருக்கும்போது, என் அப்பா சில புத்தகங்களை வாங்கிவந்தார். பொய் மதம் எப்படி மக்களை ஏமாற்றுகிறது என்று அந்தப் புத்தகங்களில் சொல்லப்பட்டிருந்தது. அதிலிருந்த விஷயங்கள் என் அப்பாவுக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. மதத் தலைவர்கள், சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. சில வருஷங்களுக்குப் பிறகு, பாப் ஆட்கின்சன் என்ற சகோதரர் எங்கள் வீட்டுக்கு வந்து, சகோதரர் ரதர்ஃபோர்டின் பேச்சைப் போட்டுக் காட்டினார். இவர்களும், அப்பா படித்த புத்தகங்களை வெளியிட்டவர்களும் ஒரே பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் என்று புரிந்துகொண்டோம். தினமும் ராத்திரி சாப்பிட வரும்படி சகோதரர் ஆட்கின்சனை என் அப்பா அம்மா அழைத்தார்கள்; அப்போது, பைபிள் சம்பந்தமாக எங்களுக்கு இருந்த நிறையக் கேள்விகளுக்கான பதில்களை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டோம். சில மைல் தூரத்திலிருந்த ஒரு சகோதரரின் வீட்டில் நடந்த கூட்டங்களுக்கு அவர் எங்களை வரச் சொன்னார். நாங்கள் எல்லா கூட்டங்களுக்கும் தவறாமல் போனோம். பிறகு, ஹெம்ஸ்வர்த்தில் ஒரு சின்ன சபை உருவானது. கொஞ்ச நாளிலேயே, மண்டல ஊழியர்களை (அதாவது, வட்டாரக் கண்காணிகளை) எங்கள் வீட்டில் தங்க வைத்தோம்; அதோடு, பக்கத்து சபைகளில் இருந்த பயனியர்களை அடிக்கடி சாப்பாட்டுக்குக் கூப்பிட்டோம். அந்தச் சகோதர சகோதரிகளால் எனக்கு ரொம்பவே உற்சாகம் கிடைத்தது.

அந்தச் சமயத்தில், நாங்கள் ஒரு தொழில் செய்ய ஆரம்பித்திருந்தோம். ஆனால், என் அப்பா என் அண்ணனிடம், “நீ பயனியர் செய்ய ஆசைப்பட்டா, நாம இந்த தொழில விட்டுடலாம்” என்று சொன்னார். என் அண்ணனும் அதற்கு ஒத்துக்கொண்டார். அதனால், 21 வயதில் அவர் வேறு ஊருக்குப் போய் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். இரண்டு வருஷங்களுக்குப் பிறகு நானும் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். அப்போது எனக்கு 16 வயது. சனி, ஞாயிறுகளில் மற்றவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்தேன், மற்ற நாட்களில் பெரும்பாலும் தனியாகவே ஊழியம் செய்தேன். ஒரு ஃபோனோகிராஃபையும் ஒரு பிரசங்க அட்டையையும் எடுத்துக்கொண்டு போவேன். அந்த அட்டை சின்னதாக இருந்தது; எல்லாருக்கும் சுலபமாகப் புரியும் விதத்தில் ஒரு பைபிள் செய்தி அதில் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. என்னோடு பைபிள் படித்த ஒருவர் நன்றாக முன்னேற்றம் செய்தார்; அவருடைய குடும்பத்தில் இருந்த நிறையப் பேர் சத்தியத்துக்கு வந்தார்கள். அது, யெகோவா எனக்குக் கொடுத்த அருமையான ஆசீர்வாதம்! அடுத்த வருஷம், மேரி ஹென்ஷால் என்ற சகோதரியோடு சேர்ந்து விசேஷ பயனியராக நியமிக்கப்பட்டேன். சேஷயர் ஊரிலிருந்த நியமிக்கப்படாத ஒரு பிராந்தியத்துக்கு நாங்கள் அனுப்பப்பட்டோம்.

இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, போர் சம்பந்தப்பட்ட வேலைகளைப் பெண்கள் செய்ய வேண்டியிருந்தது. போரில் கலந்துகொள்ளாமல் இருக்க மற்ற மத ஊழியர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்ததால், விசேஷ பயனியர்களான எங்களுக்கும் அனுமதி கிடைக்குமென்று நினைத்தோம். ஆனால், நீதிமன்றங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. நான் 31 நாட்களுக்கு ஜெயிலில் அடைக்கப்பட்டேன். அடுத்த வருஷம், என்னுடைய 19-வது வயதில், இன்னும் இரண்டு தடவை நீதிமன்றத்துக்குப் போக வேண்டியிருந்தது. ஏனென்றால், போரை ஆதரிக்க அப்போதும் என் மனசாட்சி ஒத்துக்கொள்ளவில்லை. எப்படியோ, இரண்டு தடவையுமே அதிகாரிகள் என்னை விட்டுவிட்டார்கள். இந்த எல்லா சமயத்திலும் யெகோவாவின் சக்தி எனக்கு உதவியதை உணர முடிந்தது; எனக்குத் தேவையான உறுதியையும் பலத்தையும் யெகோவாதான் கொடுத்தார்.—ஏசா. 41:10, 13.

ஒரு புதிய துணை

ஆர்த்தர் மாத்யூஸும் நானும் 1946-ல் சந்தித்தோம். போருக்குப் போக மறுத்ததால் மூன்று மாதம் ஜெயிலில் இருந்துவிட்டு அப்போதுதான் அவர் வந்திருந்தார். விடுதலையான உடனேயே, ஹெம்ஸ்வர்த்தில் விசேஷ பயனியராக இருந்த அவருடைய தம்பி டென்னிஸோடு சேர்ந்து ஊழியம் செய்ய ஆரம்பித்தார். அவர்களுடைய சின்ன வயதிலேயே யெகோவாவைப் பற்றி அவர்களுடைய அப்பா கற்றுக்கொடுத்திருந்தார். அதனால், டீனேஜ் வயதிலேயே இரண்டு பேரும் ஞானஸ்நானம் எடுத்திருந்தார்கள். அவர்கள் ஒன்றாகப் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே, டென்னிஸ் அயர்லாந்துக்கு நியமிக்கப்பட்டார். அப்போது, ஆர்த்தர் தனியாக ஊழியம் செய்ய வேண்டியிருந்தது. பயனியர் ஊழியத்தில் அவர் ஓயாமல் உழைத்ததைப் பார்த்தபோது என் அப்பா அம்மாவுக்கு அவரை ரொம்பவும் பிடித்துவிட்டது. அதனால், தங்களோடு தங்கும்படி அவரிடம் சொன்னார்கள். நான் அப்பா அம்மாவைப் பார்க்கப் போனபோதெல்லாம், சாப்பிட்டு முடித்த பிறகு ஆர்த்தரும் நானும் பாத்திரங்களைக் கழுவுவோம். கொஞ்ச நாளுக்குப் பிறகு, கடிதங்கள் எழுத ஆரம்பித்தோம். 1948-ல், ஆர்த்தர் மறுபடியும் மூன்று மாதங்களுக்கு ஜெயிலில் அடைக்கப்பட்டார். 1949, ஜனவரியில் நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம். முடிந்தவரை முழுநேர ஊழியத்தைச் செய்வதுதான் எங்கள் லட்சியமாக இருந்தது. அதனால், ரொம்ப சிக்கனமாக வாழ்ந்தோம்; விடுமுறை நாட்களில், பழம் பறிக்கும் வேலையைச் செய்து கொஞ்சம் பணம் சம்பாதித்தோம். யெகோவாவின் ஆசீர்வாதத்தோடு, எங்களால் பயனியர் ஊழியத்தை விடாமல் செய்ய முடிந்தது.

1949-ல், கல்யாணமான கொஞ்ச நாளில், ஹெம்ஸ்வர்த்தில்

ஒரு வருஷத்துக்குப் பிறகு, வட அயர்லாந்துக்கு அனுப்பப்பட்டோம். முதலில் அர்மா என்ற ஊருக்கும், பிறகு நியூரி என்ற ஊருக்கும் அனுப்பப்பட்டோம். அந்த இரண்டு ஊரிலுமே பெரும்பாலும் கத்தோலிக்கர்கள்தான் இருந்தார்கள். மற்ற மதங்களை அவர்கள் ரொம்பவே வெறுத்தார்கள். அதனால், நாங்கள் ரொம்ப ஜாக்கிரதையாகவும் ஞானமாகவும் ஊழியம் செய்ய வேண்டியிருந்தது. நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்திலிருந்த ஒரு கிறிஸ்தவத் தம்பதியின் வீட்டில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதற்குக் கிட்டத்தட்ட எட்டுப் பேர் வந்தார்கள். சிலசமயம், ராத்திரி அங்கேயே தங்கினோம். தரையில் படுத்துத் தூங்கிவிட்டு, காலையில் நன்றாக சாப்பிட்டுவிட்டு, பிறகு கிளம்பினோம். அந்தப் பகுதியில் இப்போது நிறைய சாட்சிகள் இருப்பதை நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

“நாங்க போறோம்!”

என் அண்ணனும் அண்ணி லோட்டீயும் வட அயர்லாந்தில் ஏற்கெனவே விசேஷ பயனியர்களாக இருந்தார்கள். 1952-ல், பெல்ஃபாஸ்ட் நகரத்தில் நடந்த ஒரு மாவட்ட மாநாட்டுக்கு நாங்கள் நான்கு பேரும் போயிருந்தோம். ஒரு சகோதரர் எங்களை அன்பாக வரவேற்று, தன்னுடைய வீட்டில் தங்க வைத்தார். அப்போது பிரிட்டன் கிளை அலுவலக ஊழியராக இருந்த ப்ரைஸ் ஹ்யூஸ் என்ற சகோதரரும் எங்களோடு தங்கினார். ஒருநாள் ராத்திரி, அன்பே கடவுளின் வழி (ஆங்கிலம்) என்ற ஒரு புதிய சிறு புத்தகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அயர்லாந்தில் இருந்த மக்களுக்காகவே அது தயாரிக்கப்பட்டிருந்தது. அயர்லாந்து குடியரசில் இருந்த கத்தோலிக்கர்களிடம் பிரசங்கிப்பது அவ்வளவு சுலபமல்ல என்று ஹ்யூஸ் சொன்னார். அங்கிருந்த சகோதரர்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அதுமட்டுமல்ல, சகோதரர்களைத் தாக்கும்படி குருமார்கள் ஜனங்களைத் தூண்டிவிட்டார்கள். ப்ரைஸ் எங்களிடம், “ஒரு விசேஷ ஊழியத்துக்காக, கார் வச்சிருக்கிற தம்பதிகள் தேவப்படுறாங்க. நாடு முழுக்க போய் இந்த புத்தகத்த கொடுக்கணும்” என்று சொன்னார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அப்போதுதான், “நாங்க போறோம்!” என்று சொன்னோம்.

மற்ற பயனியர்களோடு, ஒரு பைக்கிலும் அதன் சைடு காரிலும்

டப்ளின் நகரத்தில், நிறைய வருஷங்களாக யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்திருந்த ரட்லாண்ட் என்ற சகோதரி இருந்தார். அவர் “மா” என்று பாசமாக அழைக்கப்பட்டார். பயனியர்களுக்கு அவருடைய வீடு எப்போதும் திறந்திருந்தது. நாங்களும் கொஞ்ச நாள் அங்கே தங்கினோம். எங்களுக்குச் சொந்தமான சில பொருள்களை விற்றோம். பிறகு, கார் வாங்குவதற்காக எல்லாரும் பாபுடைய பைக்கிலும் சைடு காரிலும் போனோம். நல்ல நிலையிலிருந்த ஒரு பழைய கார் கிடைத்தது. அதை ஓட்டி வரும்படி விற்கிறவரிடமே சொன்னோம். ஏனென்றால், எங்கள் யாருக்குமே கார் ஓட்டத் தெரியவில்லை. அன்றைக்குச் சாயங்காலம் முழுவதும் ஆர்த்தர் படுக்கையில் உட்கார்ந்து, காரில் எப்படி கியர் போடுவதென்று பழகிக்கொண்டு இருந்தார். அடுத்த நாள் காலையில் அவர் காரை வெளியே எடுக்க முயற்சி செய்துகொண்டிருந்தபோது, மில்ட்ரெட் விலட் என்ற மிஷனரி சகோதரி வந்தார். (அவர்தான் பிற்பாடு ஜான் பாரைக் கல்யாணம் செய்தார்.) அவருக்கு கார் ஓட்டத் தெரிந்திருந்ததால் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு, நாங்கள் கிளம்பத் தயாராகிவிட்டோம்.

எங்கள் காரும் ட்ரெய்லரும்

அடுத்ததாக, நாங்கள் தங்குவதற்கு இடம் தேட வேண்டியிருந்தது. ட்ரெய்லரில் தங்க வேண்டாமென்று சகோதரர்கள் சொல்லியிருந்தார்கள்; ஏனென்றால், விரோதிகள் அதைத் தீ வைத்துக் கொளுத்திவிடும் ஆபத்து இருந்தது. அதனால், வீடு கிடைக்குமா என்று தேடினோம், ஆனால் கிடைக்கவே இல்லை. அன்றைக்கு ராத்திரி நாங்கள் நான்கு பேரும் காரிலேயே தூங்கினோம். அடுத்த நாள், ஒரு சின்ன ட்ரெய்லர்தான் கிடைத்தது. அதில் இரண்டு சின்னப் படுக்கைகள் இருந்தன. அதுதான் எங்கள் வீடாக ஆனது! எங்களிடம் அன்பாகப் பழகிய சில விவசாயிகள், தங்களுடைய நிலத்தில் ட்ரெய்லரை நிறுத்த அனுமதித்தது ஆச்சரியமாக இருந்தது! ட்ரெய்லரைவிட்டு 16-லிருந்து 24 கிலோமீட்டர் தூரம் போய் நாங்கள் ஊழியம் செய்வோம். வேறொரு புதிய பகுதிக்கு ட்ரெய்லரை எடுத்துக்கொண்டு போன பிறகு, முன்பு அதை நிறுத்தியிருந்த இடத்துக்கு மறுபடியும் வந்து அங்கே இருப்பவர்களிடம் பிரசங்கிப்போம்.

அயர்லாந்து குடியரசின் தென்கிழக்கிலிருந்த எல்லா வீடுகளுக்கும் நாங்கள் போனோம்; எங்களுக்கு அவ்வளவாக எதிர்ப்பு வரவில்லை. 20,000-க்கும் அதிகமான சிறு புத்தகங்களைக் கொடுத்தோம். ஆர்வம் காட்டிய எல்லாருடைய பெயர்களையும் பிரிட்டன் கிளை அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தோம். இப்போது அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான சாட்சிகள் இருப்பது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்!

மறுபடியும் இங்கிலாந்துக்கும், பிறகு ஸ்காட்லாந்துக்கும்

சில வருஷங்களுக்குப் பிறகு, நாங்கள் லண்டனின் தென்பகுதிக்கு மறுபடியும் அனுப்பப்பட்டோம். சில வாரங்கள் கழித்து, பிரிட்டன் கிளை அலுவலகத்திலிருந்த சகோதரர்கள் ஆர்த்தரைக் கூப்பிட்டு, அடுத்த நாளே வட்டார ஊழியத்தை ஆரம்பிக்கும்படி சொன்னார்கள்! ஒரே வாரத்தில் பயிற்சியை முடித்துவிட்டு, ஸ்காட்லாந்திலிருந்த எங்கள் வட்டாரத்துக்குப் போனோம். அதனால், பேச்சுகளைத் தயாரிக்க ஆர்த்தருக்கு அவ்வளவாக நேரம் கிடைக்கவில்லை. ஆனால், எப்படிப்பட்ட கஷ்டமான நியமிப்பையும் செய்ய ஆர்த்தர் எப்போதுமே தயாராக இருந்தார். அவருடைய முன்மாதிரி எனக்கு ரொம்பவே உற்சாகம் தந்தது. வட்டார ஊழியத்தை இரண்டு பேரும் சந்தோஷமாகச் செய்தோம். நியமிக்கப்படாத பிராந்தியத்தில் சில வருஷங்கள் சேவை செய்திருந்த எங்களுக்கு, இத்தனை சகோதர சகோதரிகளோடு சேவை செய்ய வாய்ப்புக் கிடைத்தது ஒரு அருமையான ஆசீர்வாதம்!

1962-ல், ஆர்த்தர் மட்டும் கிலியட் பள்ளிக்கு அழைக்கப்பட்டார். அந்தப் பள்ளி பத்து மாதங்களுக்கு நடத்தப்பட்டதால், ஆர்த்தர் அதற்குப் போவதா வேண்டாமா என்ற பெரிய தீர்மானத்தை நாங்கள் எடுக்க வேண்டியிருந்தது. கடைசியில், அதற்குப் போவதுதான் சரியென்று முடிவு செய்தோம். அவர் வரும்வரை நான் தனியாக பயனியர் செய்ய வேண்டியிருக்கும் என்பதால், கிளை அலுவலகம் என்னை ஒரு விசேஷ பயனியராக மறுபடியும் ஹெம்ஸ்வர்த்துக்கு அனுப்பியது. ஒரு வருஷம் கழித்து ஆர்த்தர் வந்த பிறகு, அவர் மாவட்டக் கண்காணியாக நியமிக்கப்பட்டார். ஸ்காட்லாந்துக்கும், வட இங்கிலாந்துக்கும், வட அயர்லாந்துக்கும் நாங்கள் போக வேண்டியிருந்தது.

அயர்லாந்தில் ஒரு புதிய நியமிப்பு

1964-ல், அயர்லாந்து குடியரசின் கிளை அலுவலக ஊழியராக ஆர்த்தர் நியமிக்கப்பட்டார். முதலில், பெத்தேலுக்குப் போவதை நினைத்து நான் பயப்பட்டேன். ஏனென்றால், பயண ஊழியம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால், பெத்தேலில் சேவை செய்யும் பாக்கியம் கிடைத்ததற்காக இப்போது ரொம்ப நன்றியோடு இருக்கிறேன். யெகோவா தரும் நியமிப்பு நமக்குப் பிடிக்காவிட்டாலும், அதைச் செய்தால் அவர் நம்மைக் கண்டிப்பாக ஆசீர்வதிப்பார்! பெத்தேலில் நான் அலுவலக வேலையையும், பிரசுரங்களை அடுக்குவது, சமைப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளையும் செய்தேன். பெத்தேலில் இருந்தபோது, கொஞ்ச நாளுக்கு, மாவட்ட சேவையும் செய்தோம்; அப்போது, நாடு முழுவதும் இருந்த சகோதரர்களைச் சந்திக்க முடிந்தது. அதுமட்டுமல்ல, எங்கள் பைபிள் மாணாக்கர்கள் முன்னேற்றம் செய்ததைப் பார்க்கவும் முடிந்தது. அதனால், அயர்லாந்திலிருந்த சகோதர சகோதரிகளோடு நெருக்கமான பந்தம் உருவானது. இது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்!

அயர்லாந்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரத்தில் ஒரு மைல்கல்

1965-ல், அயர்லாந்தில் முதல் தடவையாக ஒரு சர்வதேச மாநாடு டப்ளின் நகரத்தில் நடத்தப்பட்டது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) பயங்கர எதிர்ப்பின் மத்தியிலும், அந்த மாநாடு வெற்றிகரமாக நடந்தது. மொத்தம் 3,948 பேர் வந்திருந்தார்கள், 65 பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள். உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த 3,500 சகோதர சகோதரிகளும் டப்ளின் நகர மக்களின் வீடுகளில் தங்கினார்கள். அவர்களைத் தங்க வைத்த ஒவ்வொருவருக்கும் ஒரு பாராட்டுக் கடிதம் கொடுக்கப்பட்டது. அவர்களும் சகோதரர்களுடைய நல்ல நடத்தையைப் பாராட்டினார்கள். அந்த மாநாடு, அயர்லாந்து மக்கள்மீது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது.

1965-ல் நடந்த மாநாட்டுக்கு வந்திருந்த நேதன் நாரை ஆர்த்தர் வரவேற்றபோது

1983-ல், என்னுடைய பைபிள் கதை புத்தகத்தை காலிக் மொழியில் ஆர்த்தர் வெளியிட்டபோது

1966-ல், வட அயர்லாந்தும் தென் அயர்லாந்தும் டப்ளின் கிளை அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் வந்தது. இப்படி அவை இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது! ஏனென்றால், அரசியல் மற்றும் மதப் பிரிவுகளால் அந்தத் தீவு பிளவுபட்டிருந்தது. நிறையக் கத்தோலிக்கர்கள் சத்தியத்துக்கு வந்தார்கள்; முன்பு புராட்டஸ்டன்டுகளாக இருந்திருந்த தங்கள் சகோதரர்களோடு சேர்ந்து அவர்கள் யெகோவாவை வணங்கியதைப் பார்த்து நாங்கள் பூரித்துப்போனோம்!

எங்கள் நியமிப்பில் வந்த பெரிய மாற்றம்

2011-ல், பிரிட்டன் மற்றும் அயர்லாந்து கிளை அலுவலகங்கள் இணைக்கப்பட்டபோது எங்கள் வாழ்க்கை அடியோடு மாறியது; நாங்கள் லண்டன் பெத்தேலுக்கு அனுப்பப்பட்டோம். அந்தச் சமயத்தில், ஆர்த்தரின் உடல்நிலையை நினைத்து நான் ரொம்பக் கவலைப்பட்டேன். அவருக்கு நடுக்கவாதம் (பார்கின்சன் நோய்) வந்துவிட்டது. 66 வருஷங்களாக அவரோடு வாழ்ந்த பிறகு, மே 20, 2015-ல் அவரை மரணத்தில் பறிகொடுத்தேன்.

சில வருஷங்களாக நான் வேதனையிலும் துக்கத்திலும் மனச்சோர்விலும் கஷ்டப்படுகிறேன். இவ்வளவு காலமாக ஆர்த்தரோடு இருந்துவிட்டு, இப்போது அவர் இல்லாமல் தவிக்கிறேன். ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகளில்தான் நாம் யெகோவாவிடம் அதிகமாக நெருங்கிப்போகிறோம். மற்றவர்கள் ஆர்த்தரை எவ்வளவு நேசித்தார்கள் என்று தெரிந்துகொள்ளும்போது சந்தோஷமாக இருக்கிறது. அயர்லாந்து, பிரிட்டன், மற்றும் அமெரிக்காவிலிருந்துகூட சகோதர சகோதரிகள் எனக்குக் கடிதங்கள் அனுப்பினார்கள். இந்தக் கடிதங்களும், ஆர்த்தருடைய சகோதரர் டென்னிஸ், அவருடைய மனைவி மாவிஸ், என்னுடைய அண்ணன் மகள்களான ரூத் மற்றும் ஜூடி ஆகியோர் தந்த உற்சாகமும் எனக்கு எந்தளவு உதவி செய்திருக்கின்றன என்பதைச் சொல்ல வார்த்தைகளே இல்லை.

எனக்கு ரொம்ப உற்சாகம் தந்த ஒரு வசனம் ஏசாயா 30:18. “உங்களுக்குக் கருணை காட்ட யெகோவா பொறுமையோடு காத்திருக்கிறார். உங்களுக்கு இரக்கம் காட்டுவதற்காக எழுந்திருப்பார். ஏனென்றால், யெகோவா நியாயம் வழங்குகிற கடவுள். அவருக்காக ஆவலோடு காத்திருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று அது சொல்கிறது. நம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்கவும், புதிய உலகத்தில் சந்தோஷமான நியமிப்புகளை நமக்குக் கொடுக்கவும் யெகோவா பொறுமையோடு காத்திருப்பதைத் தெரிந்துகொள்ளும்போது ஆறுதலாக இருக்கிறது.

கடந்தகாலத்தை யோசித்துப் பார்க்கும்போது, அயர்லாந்தில் பிரசங்க வேலையை யெகோவா எப்படி வழிநடத்தியிருக்கிறார் என்றும், எந்தளவு ஆசீர்வதித்திருக்கிறார் என்றும் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த வேலையில் எனக்கும் ஒரு பங்கு கிடைத்தது ஒரு பெரிய பாக்கியம்! யெகோவா கொடுக்கிற வேலையைச் செய்தால் ஆசீர்வாதங்கள் நிச்சயம்!

^ பாரா. 12 யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 1988 (ஆங்கிலம்), பக்கங்கள் 101-102-ஐப் பாருங்கள்.

^ பாரா. 22 இயர்புக் 1988, பக்கங்கள் 109-112-ஐப் பாருங்கள்.