Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

“பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்” என இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன?

ஒருவருக்கொருவர் சமாதானமாக இருக்க வேண்டும் என்றுதான் இயேசு மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார். ஆனால், ஒருசமயம் தன்னுடைய அப்போஸ்தலர்களிடம், “பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; சமாதானத்தை அல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன். அப்பாவுக்கு விரோதமாக மகனையும், அம்மாவுக்கு விரோதமாக மகளையும், மாமியாருக்கு விரோதமாக மருமகளையும் பிரிக்க வந்தேன்” என்று சொன்னார். (மத். 10:34, 35) அவர் அப்படிச் சொன்னதன் அர்த்தம் என்ன?

குடும்பத்தில் ஒருவரிடமிருந்து ஒருவரை பிரிக்க வேண்டும் என்பது இயேசுவின் விருப்பம் கிடையாது. ஆனாலும், பைபிளில் அவர் சொல்லியிருக்கிற விஷயங்கள் பிடிக்காததால் சில குடும்பங்களில் பிரிவினை வரும் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. அதனால், இயேசுவின் சீஷராகி ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறவர்கள் அந்தத் தீர்மானத்தை எடுத்தால் குடும்பத்திலிருந்து பிரச்சினை வரலாம் என்பதைத் தெரிந்து வைத்துக்கொள்வது முக்கியம். சிலசமயம் கணவரிடமிருந்து மனைவிக்கோ மனைவியிடமிருந்து கணவருக்கோ எதிர்ப்பு வரலாம். அல்லது, குடும்பத்தில் இருக்கிற மற்றவர்களிடமிருந்து எதிர்ப்பு வரலாம். அப்போது இயேசு சொல்லிக்கொடுத்த விஷயங்களின்படி நடப்பது, அவர்களுக்கு ரொம்பவே கஷ்டமாகிவிடலாம்.

“எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்” என்று கிறிஸ்தவர்களுக்கு பைபிள் ஆலோசனை கொடுக்கிறது. (ரோ. 12:18) ஆனால், இயேசு சொல்லிக்கொடுத்த விஷயங்கள் சில குடும்பங்களில் ‘பிரிவினைகளை’ உண்டாக்கலாம். அவர் சொல்லிக்கொடுத்த விஷயங்களைக் குடும்பத்தில் ஒருவர் ஏற்றுக்கொண்டு மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போகும்போதுதான் இந்தப் பிரச்சினை வருகிறது. அப்படி நடக்கும்போது, பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்கிற ஒருவருக்கு அவருடைய குடும்பத்தில் இருக்கிறவர்களே “எதிரிகளாக” ஆகிவிடுகிறார்கள்.—மத். 10:36.

இப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் இருக்கிற கிறிஸ்தவருக்கு, யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் பிடித்த மாதிரி வாழ்வதா, குடும்பத்தில் இருப்பவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்வதா என்று முடிவெடுக்க வேண்டிய சில சூழ்நிலை வரலாம். உதாரணத்துக்கு, யெகோவாவின் சாட்சியாக இல்லாத குடும்பத்தார் தங்களுடைய பண்டிகையில் கலந்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தலாம். இப்படிப்பட்ட சோதனை வரும்போது, அவர் யாருக்குப் பிரியமாக நடக்க வேண்டும்? “என்மேல் காட்டும் பாசத்தைவிட தன் அப்பாவிடமோ அம்மாவிடமோ அதிக பாசம் காட்டுகிறவன் எனக்குச் சீஷனாக இருக்க முடியாது” என்று இயேசு சொன்னார். (மத். 10:37) ஒருவர் தன்னுடைய சீஷராக இருக்க வேண்டுமென்றால், அப்பா-அம்மாவிடம் பாசம் காட்டக் கூடாது என்று இயேசு இங்கே சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, வாழ்க்கையில் எது முக்கியம் என்பதை எப்படி முடிவு பண்ண வேண்டும் என்றுதான் அவர் இங்கே சொன்னார். அதனால், யெகோவாவை வணங்குவதற்காக நாம் முயற்சி எடுக்கும்போது, குடும்பத்தில் இருக்கிற மற்றவர்கள் எதிர்த்தாலும், அவர்கள்மேல் நாம் தொடர்ந்து அன்பு காட்ட வேண்டும். ஆனால், யெகோவாமேல் நாம் வைத்திருக்கிற அன்பு வேறு யார்மேல் வைத்திருக்கிற அன்பை விடவும் பலமாக இருக்க வேண்டும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

குடும்பத்தில் இருக்கிறவர்கள் நம்மை எதிர்க்கும்போது நமக்கு ரொம்ப வேதனையாக இருக்கலாம். ஆனாலும், இயேசுவின் சீஷர்கள் அவர் சொன்ன இந்த விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளலாம். “தன்னுடைய சித்திரவதைக் கம்பத்தை சுமந்துகொண்டு என்னைப் பின்பற்றி வராத எவனும் எனக்குச் சீஷனாக இருக்க முடியாது” என்று அவர் சொன்னார். (மத். 10:38) வேறு வார்த்தையில் சொன்னால், கிறிஸ்துவின் சீஷராக ஆகிறவர்கள் சில பிரச்சினைகளைச் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கும். குடும்பத்திலிருந்து வருகிற எதிர்ப்பும் அதில் ஒன்று என்பதை அவர்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளலாம். அதேசமயத்தில், குடும்பத்தில் இருக்கிறவர்களோடு அவர்கள் நல்ல விதமாக நடந்துகொள்ளும்போது, ஒருநாள் அவர்களுடைய குடும்பத்தார் மனம் மாறி சத்தியத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று அவர்கள் நம்பலாம்.—1 பே. 3:1, 2.