Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

எசேக்கியேல் 37-வது அதிகாரத்தில் இரண்டு கோல்கள் ஒரே கோலாக ஆகும் என்று சொல்லப்பட்டதன் அர்த்தம் என்ன?

தன்னுடைய மக்கள் சொந்த தேசத்துக்கு திரும்பி வருவார்கள், அவர்கள் மறுபடியும் ஒன்றுசேர்ந்து ஒரே தேசமாக இருப்பார்கள் என்று எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலமாக யெகோவா சொல்லியிருந்தார். கடைசி நாட்களில் யெகோவாவுடைய மக்கள் ஒன்றுசேர்ந்து அவரை வணங்குவார்கள் என்றும் இந்த தீர்க்கதரிசனம் முன்னறிவித்தது.

இரண்டு கோல்களில் எழுதும்படி எசேக்கியேல் தீர்க்கதரிசியிடம் யெகோவா சொன்னார். ஒரு கோலில், “யூதாவுக்கும் அதைச் சேர்ந்த இஸ்ரவேல் புத்திரருக்கும் அடுத்தது” என்றும் மற்றொரு கோலில், “எப்பிராயீமுக்கும் அதைச் சேர்ந்த இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் அடுத்த யோசேப்பின்” கோல் என்றும் எழுத சொன்னார். அதன்பின், இரண்டு கோல்களும் “ஒரே கோலாகும்படி” அதை சேர்த்து பிடிக்க சொன்னார்.—எசே. 37:15-17.

“எப்பிராயீம்” என்ற வார்த்தை எதை குறிக்கிறது? வடக்கு ராஜ்யத்தில் எப்பிராயீம் கோத்திரம்தான் மிக முக்கியமான கோத்திரமாக இருந்தது. பத்து கோத்திர வடக்கு ராஜ்யத்தின் முதல் ராஜாவான யெரொபெயாம் எப்பிராயீம் கோத்திரத்தை சேர்ந்தவர். (உபா. 33:13, 17; 1 இரா. 11:26) யோசேப்பின் மகன் எப்பிராயீமின் வம்சத்தில் இருந்துதான் இந்த கோத்திரம் வந்தது. (எண். 1:32, 33) யோசேப்பை அவருடைய அப்பா யாக்கோபு விசேஷமாக ஆசீர்வதித்தார். அதனால் ‘எப்பிராயீமின் கோல்’ பத்து கோத்திர வடக்கு ராஜ்யத்தை குறிப்பது சரியாக இருக்கிறது. எசேக்கியேல் இந்த தீர்க்கதரிசனத்தை சொல்வதற்கு பல வருஷங்களுக்கு முன்பு, அதாவது கி.மு. 740-ல் அசீரியர்கள் பத்து கோத்திர வடக்கு ராஜ்யத்தை கைப்பற்றி அவர்களை கைதிகளாக கொண்டுபோனார்கள். (2 இரா. 17:6) சில வருஷங்களுக்கு பிறகு பாபிலோனியர்கள் அசீரியர்களை தோற்கடித்ததால் அசீரியர்களின் சாம்ராஜ்யத்தில் இருந்த நாடுகளெல்லாம் பாபிலோனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எசேக்கியேல் இந்த தீர்க்கதரிசனத்தை எழுதிய சமயத்தில் பாபிலோனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல நாடுகளில் இஸ்ரவேலர்கள் சிதறி இருந்தார்கள்.

கி.மு. 607-ல் பாபிலோனியர்கள் இரண்டு கோத்திர தெற்கு ராஜ்யத்தை கைப்பற்றினார்கள். அங்குள்ள மக்களை கைதிகளாக பாபிலோனுக்கு கொண்டுபோனார்கள். அந்த சமயத்தில் பத்து கோத்திர வடக்கு ராஜ்யத்தில் யாராவது இருந்திருந்தால் அவர்களையும் கைதிகளாக கொண்டுபோய் இருப்பார்கள். தெற்கு ராஜ்யத்தில் இருந்த ராஜாக்கள் யூதா கோத்திரத்தில் இருந்து வந்தவர்கள். குருமார்கள் எருசலேம் ஆலயத்தில் சேவை செய்ததால் அவர்களும் யூதாவில்தான் வாழ்ந்தார்கள். (2 நா. 11:13, 14; 34:30) அதனால் ‘யூதாவின் கோல்’ இரண்டு கோத்திர தெற்கு ராஜ்யத்தை குறிப்பது சரியாக இருக்கிறது.

அந்த இரண்டு கோல்களும் எப்போது ஒரே கோலாக ஆனது? இது கி.மு. 537-ல் நடந்தது. அந்த சமயத்தில்தான், வடக்கு ராஜ்யத்தை சேர்ந்தவர்களும் தெற்கு ராஜ்யத்தை சேர்ந்தவர்களும் எருசலேமுக்கு திரும்ப வந்தார்கள். எருசலேம் ஆலயத்தை மறுபடியும் கட்ட ஆரம்பித்தார்கள். அதன் பிறகு, அவர்கள் இரண்டு கோத்திரமாக பிரிந்திருக்கவில்லை. இஸ்ரவேலர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து ஒரே தேசமாக யெகோவாவை வணங்க ஆரம்பித்தார்கள். (எசே. 37:21, 22) இதைப் பற்றி ஏசாயாவும் எரேமியாவும் முன்பே தீர்க்கதரிசனமாக சொல்லியிருந்தார்கள்.—ஏசா. 11:12, 13; எரே. 31:1, 6, 31.

எசேக்கியேல் சொன்ன இந்த தீர்க்கதரிசனத்தில் இருந்து உண்மை வணக்கத்தைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்? தன்னை வணங்குகிற மக்கள் எல்லாரையும் யெகோவா ஒன்று சேர்ப்பார் என்பதை தெரிந்துகொள்கிறோம். (எசே. 37:18, 19) இந்த தீர்க்கதரிசனம் நம்முடைய காலத்திலும் நிறைவேறியதா? ஆம், 1919-ல் இந்த தீர்க்கதரிசனம் நிறைவேற ஆரம்பித்தது. அதற்கு முன்பு கடவுளுடைய மக்கள் மத்தியில் சாத்தான் பிரிவினையை கொண்டுவந்து அவர்களை ஒரேயடியாக பிரிக்க முயற்சி செய்தான். ஆனால், 1919-ல் யெகோவா அவர்களை பொய்மத பழக்கங்களில் இருந்து படிப்படியாக வெளியே கொண்டுவந்தார். அதன்பின் அவர்கள் திரும்பவும் ஒன்றுசேர்ந்து யெகோவாவை வணங்கினார்கள்.

அந்த சமயத்தில் வாழ்ந்த யெகோவாவின் மக்களில் பெரும்பாலோர் பரலோக நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தார்கள். இயேசுவோடு சேர்ந்து ராஜாக்களாகவும் குருமார்களாகவும் சேவை செய்யும் நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. (வெளி. 20:6) அவர்கள் யூதாவின் கோலைப் போல் இருந்தார்கள். அந்த சமயத்தில் பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்கள் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள். ஆனால், போகப்போக இந்த எண்ணிக்கை அதிகமானது. (சக. 8:23) இவர்கள் யோசேப்பின் கோலைப் போல் இருந்தார்கள்.

இன்று இந்த இரண்டு தொகுதியை சேர்ந்தவர்களும் ஒன்றுசேர்ந்து யெகோவாவை வணங்குகிறார்கள். இவர்கள் எல்லாருக்கும் இயேசு ஒருவரே ராஜாவாக இருக்கிறார். எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தில், “என் தாசனாகிய தாவீது” என்று இயேசு அழைக்கப்படுகிறார். (எசே. 37:24, 25) இயேசு தன்னுடைய சீடர்களுக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்தபோது இப்படி சொன்னார்: “அவர்கள் எல்லாரும் ஒன்றாயிருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்; . . . நீங்கள் என்னோடும் நான் உங்களோடும் ஒன்றுபட்டிருப்பது போலவே அவர்களும் நம்மோடு ஒன்றுபட்டிருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.” * (யோவா. 17:20, 21) சிறு தொகுதியாக இருந்த பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் ‘வேறே ஆடுகளோடு’ சேர்ந்து ‘ஒரே மந்தையாக’ இருப்பார்கள் என்றும் இயேசு சொன்னார். அவர்கள் எல்லாரும் ‘ஒரே மேய்ப்பனையே’ பின்பற்றுவார்கள். (யோவா. 10:16) இயேசு சொன்னது போலவே இன்று பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்களும் ஒன்றுசேர்ந்து யெகோவாவை வணங்குகிறார்கள்.

^ பாரா. 6 சீடர்களிடம் கடைசி நாட்களை பற்றிய அடையாளங்களை சொன்னபோது இயேசு நிறைய உதாரணங்களை பயன்படுத்தினார். முதலில், யெகோவாவின் மக்களை வழிநடத்தும் ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ பற்றிய உதாரணத்தை சொன்னார். அதாவது, பரலோக நம்பிக்கையுள்ள ஒரு சிறு தொகுதியை பற்றிய உதாரணத்தை சொன்னார். (மத். 24:45-47) பிறகு, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் பொருந்தும் உதாரணங்களை சொன்னார். (மத். 25:1-30) கடைசியாக, கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு உதவி செய்யும் பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்களை பற்றிய உதாரணத்தை சொன்னார். (மத். 25:31-46) அதேபோல் எசேக்கியேலின் தீர்க்கதரிசனம் நிறைவேற ஆரம்பித்த சமயத்தில் அந்த தீர்க்கதரிசனம் முதலில் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு பொருந்தியது. பத்து கோத்திர வடக்கு ராஜ்யம் பொதுவாக பூமியில் வாழும் நம்பிக்கையுள்ள மக்களை குறிக்கவில்லை. என்றாலும், அந்த இரண்டு ராஜ்யங்கள் ஒன்றாக சேர்ந்து இருந்ததுபோல் இன்று பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்களும் ஒன்றுசேர்ந்து யெகோவாவை வணங்குவார்கள் என்பதை இந்த தீர்க்கதரிசனம் விளக்கியது.