Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மணமகள் விலையாக மிருகங்கள்கூட கொடுக்கப்பட்டன

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?

பூர்வ இஸ்ரவேலர்கள் ஏன் மணமகள் விலையைக் கொடுத்தார்கள்?

பைபிள் காலங்களில், கல்யாண ஏற்பாடு செய்கிறபோது பெண் வீட்டாருக்கு மணமகன் வீட்டார் மணமகள் விலையைக் கொடுத்தார்கள். விலைமதிப்புள்ள பொருள்கள், மிருகங்கள், பணம் போன்றவை மணமகள் விலையாகக் கொடுக்கப்பட்டன. சிலசமயம், மணமகள் விலைக்காக, மணமகன் பெண் வீட்டாரிடம் வேலை செய்தார். உதாரணமாக, யாக்கோபு ராகேலைக் கல்யாணம் செய்துகொள்வதற்காக அவளுடைய அப்பாவிடம் ஏழு வருஷம் வேலை செய்தார். (ஆதி. 29:17, 18, 20) மணமகள் விலையைக் கொடுக்கிற பழக்கம் ஏன் வந்தது?

கேரல் மேயர்ஸ் என்ற பைபிள் அறிஞர் இப்படிச் சொல்கிறார்: “ஒரு விவசாயக் குடும்பத்தில இருந்து ஒரு பொண்ணு எடுக்கும்போது, அந்த பொண்ணு செஞ்சிட்டிருந்த வேலைய ஈடுகட்ட மணமகள் விலைய கொடுத்தாங்க.” அதுமட்டுமல்ல, இந்தக் கல்யாணத்தால் சொந்தக்காரர்கள் ஆகப்போகிற இரண்டு குடும்பங்களும் தங்களுடைய நட்பைப் பலப்படுத்திக்கொள்ள இந்த மணமகள் விலை உதவி செய்தது. இதனால், அந்த இரண்டு குடும்பங்களும் கஷ்டமான சமயங்களில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருந்தார்கள். அதோடு, அந்தப் பெண்ணுக்கு நிச்சயம் ஆகிவிட்டது என்பதற்கு இது அடையாளமாக இருந்தது. அதுமட்டுமல்ல, இதுவரை அவளுடைய அப்பா அவளைக் கவனித்துக்கொண்டார், இனிமேல் அவளுடைய கணவர்தான் அவளைக் கவனித்துக்கொள்வார் என்பதற்கும் இது அடையாளமாக இருந்தது.

மணமகள் விலையைக் கொடுப்பது அந்த மணப்பெண்ணை ஒரு பொருள் மாதிரி வாங்குவதையோ விற்பதையோ அர்த்தப்படுத்தவில்லை. ஏன்ஷியன்ட் இஸ்ரேல்—இட்ஸ் லைப் அண்ட் இன்ஸ்டிட்யூஷன்ஸ் என்ற ஆங்கிலப் புத்தகம் இப்படிச் சொல்கிறது: “இஸ்ரவேலர்களிடம் இருந்த இந்தப் பழக்கம் வெளியே இருந்து பார்த்தவர்களுக்கு, பணத்தையோ, பொருளையோ கொடுத்து பெண்ணை வாங்குவது போல் இருந்திருக்கும். ஆனால், இந்த [மணமகள் விலை] பெண்ணை வாங்குவதற்காக கொடுக்கப்படவில்லை. அந்தப் பெண்ணுக்கு ஈடாக அவளுடைய குடும்பத்துக்கு கொடுத்தது போல்தான் தெரிகிறது.”

இன்றைக்கும் சில நாடுகளில் மணமகள் விலை கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. ஒருவேளை ஒரு கிறிஸ்தவப் பெற்றோர் மணமகள் விலையைக் கேட்கிறார்கள் என்றால் அநியாயமான விலையைக் கேட்கக் கூடாது. அவர்கள், ‘நியாயமானவர்கள் என்பது எல்லாருக்கும் தெரிவது’ போல் இருக்க வேண்டும். (பிலி. 4:5; 1 கொ. 10:32, 33) இந்த விதத்தில் தங்களுக்கு ‘பண ஆசையோ’ பேராசையோ இல்லை என்பதை அவர்கள் காட்டுகிறார்கள். (2 தீ. 3:2) கிறிஸ்தவப் பெற்றோர்கள் இப்படி அநியாயமாக மணமகள் விலையைக் கேட்காததால் அவ்வளவு பெரிய தொகையைச் சம்பாதிக்கும்வரை கல்யாணத்தைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற அவசியம் மணமகனுக்கு வராது. ஒருவேளை, அவர் பயனியர் சேவை செய்துகொண்டிருந்தால் அதை விட்டுவிட்டு முழுநேரமாக வேலை செய்து இவ்வளவு பெரிய தொகையைச் சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயமும் அவருக்கு வராது.

இன்னும் சில நாடுகளில், மணமகள் விலையைக் கொடுப்பது சம்பந்தமாக சட்டமே இருக்கிறது. அப்படிப்பட்ட சமயத்தில் கிறிஸ்தவப் பெற்றோர்கள் அந்தச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள். ஏன்? ஏனென்றால், கிறிஸ்தவர்கள் “அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு . . . கட்டுப்பட்டு நடக்க வேண்டும்” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (ரோ. 13:1) அதோடு, கடவுளுடைய சட்டங்களுக்கு எதிராக இல்லாத அவர்களுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் அது சொல்கிறது.—அப். 5:29.