அட்டைப்பட கட்டுரை | ஆறுதல் தேடி எங்கே போவது?
கஷ்ட காலங்களில் ஆறுதல்
கஷ்டங்கள் பல விதங்களில் வருகின்றன. எல்லா விதமான கஷ்டங்களை பற்றியும் இங்கே நாம் விவரிக்க முடியாது, அதனால் ஏற்கெனவே பார்த்த நான்கு பேருடைய உதாரணங்களைச் சற்று கூர்ந்து ஆராயலாம். வித்தியாசமான பிரச்சனைகளைச் சந்தித்த இவர்களுக்கு எப்படி கடவுளிடமிருந்து உண்மையான ஆறுதல் கிடைத்தது என்பதை கவனியுங்கள்.
வேலை பறிபோகும்போது...
ஜான் * சொல்கிறார்... “எனக்கும் என் மனைவிக்கும் ஒரே சமயத்துல வேலை போயிடுச்சு. குடும்பத்துல இருக்கிற மத்தவங்க கொடுத்த பணத்த வெச்சுக்கிட்டு... கிடைச்ச சின்ன சின்ன வேலைகள செஞ்சிக்கிட்டு... இரண்டு வருஷமா காலத்த ஓட்டுனோம். அதனால என் வீட்டுக்காரி பிரிசில்லாவுக்கு மன உளச்சல் வந்திடுச்சு. நான் ஒன்னுத்துக்கும் லாயிக்கு இல்லாதவனா இருந்தேன்.
நாங்க எப்படி சமாளிச்சோம்? பிரிசில்லா எப்பவும் மத்தேயு 6:34-ல் இயேசு சொன்ன வார்த்தைகள ஞாபகப்படுத்தி பார்த்துக்குவா. நாளைக்காக நாம கவலைப்பட கூடாதுன்னு இயேசு சொல்லியிருந்தார். ஏன்னா, நாளைக்கு நாளைய கவலைகள் இருக்கும். அவ கடவுள்கிட்ட மனம்விட்டு ஜெபம் செஞ்சா, தொடர்ந்து வாழ்றதுக்கு தேவையான சக்தி அவளுக்கு கிடைச்சுச்சு. என் விஷயத்துல பார்த்தீங்கனா சங்கீதம் 55:22 ஆறுதலா இருந்துச்சு. சங்கீதக்காரனைப் போல யெகோவாமேல என் பாரத்த போட்டுட்டேன், அவர்தான் என்னை தாங்கினாரு. இப்ப எனக்கு ஒரு வேலை கிடைச்சிருந்தாலும், மத்தேயு 6:20-22-ல இயேசு சொன்ன மாதிரி எங்க வாழ்க்கைய எளிமையா வெச்சிருக்கிறோம். எல்லாத்துக்கும்மேல, கடவுள்கிட்ட இன்னும் அதிகமா நெருங்கி வந்திருக்கிறோம். எங்க ரெண்டுபேருக்கு இடையில இருக்கிற நெருக்கம்கூட இன்னும் அதிகமாயிருக்கு.”
ஜோனத்தான் சொல்கிறார்... “நாங்க வெச்சு நடத்திட்டு இருந்த சின்ன வியாபாரம் நொடிஞ்சுபோச்சு. எதிர்காலத்த நினைச்சு நான் ரொம்ப பயந்துபோயிட்டேன். பொருளாதார நெருக்கடி வந்ததுனால, இருபது வருஷமா கஷ்டப்பட்டு உழைச்சது எல்லாம் வீணாபோயிடுச்சு. எனக்கும் என் மனைவிக்கும் பண விஷயத்துல வாக்குவாதம் வர ஆரம்பிச்சிடுச்சி. கிரெடிட் கார்ட வெச்சிருந்தும்கூட எங்களால ஒன்னுமே வாங்க முடியல. ஏன்னா பேங்க் அதை நிராகரிச்சிடுவாங்களோ அப்படிங்கிற பயத்துல கிரெடிட் கார்ட பயன்படுத்துல.
“கடவுளோட வார்த்தையும் அவரோட சக்தியும்தான் சரியான தீர்மானங்கள் எடுக்கறதுக்கு உதவியா இருந்துச்சு. எந்த வேலையா இருந்தாலும் அத ஏத்துக்க கத்துக்கிட்டேன், தேவையில்லாத செலவுகளையும் குறைச்சுக்கிட்டேன். நாங்க யெகோவாவின் சாட்சிகளா இருந்ததுனால, மத்த சாட்சிகள்கிட்ட இருந்தும்கூட உதவி கிடைச்சது. அவுங்க எங்க சுய மரியாதைய இழந்துடாம இருக்க
உதவி செஞ்சாங்க, இக்கட்டான சூழ்நிலைமையில உதவிக்கரம் நீட்டினாங்க.”மணவாழ்வு முறிந்துபோகும்போது...
ரேக்கல் சொல்கிறார்... “எங்க வீட்டுக்காரர் எங்கள அம்போன்னு விட்டுட்டு போனப்போ, எனக்கு வேதனையா இருந்துச்சு... கோபம் கோபமா வந்துச்சு. பயங்கரமான கவலை என்னை ஒரே அழுத்தா அழுத்துற மாதிரி இருந்துச்சு. ஆனா கடவுள்கிட்ட நெருங்கி போனேன், அவர் எனக்கு ஆறுதல் கொடுத்தார். தினமும் அவர்கிட்ட ஜெபம் செஞ்சப்ப கடவுள் எனக்கு மனநிம்மதிய தந்தார். உடைஞ்சுபோன என் இதயத்த அவர் ஒட்ட வெச்சா மாதிரி இருந்துச்சு.
கடவுளோட வார்த்தையான பைபிள படிச்சதுனால என் கோபத்தையும் மனக்கசப்பையும் ஒழிச்சுக்கட்ட முடிஞ்சுது. ‘தீமை உங்களை வெல்லும்படி விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்’ என்று ரோமர் 12:21-ல பவுல் சொன்ன வார்த்தைகள என் மனசுல வெச்சுக்கிட்டேன்.
தொடர்ந்து சந்தோஷமா வாழ்றதுக்கு தேவையான ஆலோசனைய நண்பர் ஒருத்தர் கொடுத்தார். பிரசங்கி 3:6-ஐ (NW) எடுத்து காட்டி, ‘கிடைக்காது என்று விட்டுவிடுவதற்கு’ ஒரு நேரம் இருக்கிறது என்று அன்புடன் சொன்னார். அதை ஏத்துக்கறதுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தாலும் அதுதான் எனக்கு தேவையான அறிவுரை. இப்ப எனக்கு வாழ்க்கையில புதுப் புது லட்சியங்கள் இருக்கு.”
எலிசபெத் சொல்கிறார்... “உங்க மணவாழ்க்கை முறிஞ்சிபோன சமயத்துல, உங்களுக்கு ஆதரவு தேவைப்படும். ஒவ்வொரு நாளும் என்னோட ஃப்ரெண்ட்தான் எனக்கு ஆதரவா இருந்தாங்க. அவங்க என்னோட சேர்ந்து அழுதாங்க, என்னை ஆறுதல்படுத்தினாங்க, எனக்கு யாருமில்லை-ங்கிற எண்ணம் ஏற்படாம... என்னை நேசிக்கறதுக்கு ஒரு நபர் இருக்கிறாங்க என்ற உணர்வ கொடுத்தாங்க. என் மனசுல இருக்கிற காயங்கள குணப்படுத்துறதுக்காக யெகோவாதான் அவங்கள பயன்படுத்தி இருக்கறார்னு புரிஞ்சிக்கிட்டேன்.”
வியாதியோ வயோதிபமோ ஏற்படும்போது...
ஆரம்ப கட்டுரையில் பார்த்த லூயிஸ் இதய நோயினால் பயங்கரமாக கஷ்டப்படுகிறார், அவர் இரண்டு தடவை செத்து பிழைத்தார். இப்போது அவருக்கு தினமும் 16 மணிநேரம் செயற்கையான முறையில் ஆக்ஸிஜன் கொடுக்கப்படுகிறது. லூயிஸ் சொல்கிறார்... “நான் எப்பவுமே யெகோவாகிட்ட ஜெபம் செய்றேன். ஜெபம் செஞ்ச பிறகு, கடவுள் தர்ற சக்தி எனக்கு நல்ல தெம்பு கொடுக்குது. நான் தொடர்ந்து வாழ்றதுக்கு தேவையான தைரியம் ஜெபத்தின் மூலமா எனக்கு கிடைக்குது. ஏன்னா அவர்மேல நான் நம்பிக்கை வெச்சிருக்கேன், அவர் என்னை அக்கறையா கவனிச்சிக்கிறார்னு எனக்கு நல்லா தெரியும்.”
80 வயதை தாண்டிய பேட்ரா என்ற பெண்மணி சொல்கிறார்... “நிறைய செய்யனும்னு எனக்கு ஆசை, ஆனா என்னால ஒன்னுமே செய்ய முடியல. என்னோட பெலமெல்லாம் குறைஞ்சுகிட்டே வர்றத பார்க்குறப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதனால நான் அப்படியே சோர்ந்து போயிடுறேன், மருந்தே கதின்னு இருக்க வேண்டியதா இருக்கு. ‘முடியுமானால் அந்த கஷ்டத்த நீக்கிடுங்கனு’ கடவுள்கிட்ட இயேசு ஜெபம் செஞ்சார். கஷ்டம் வர்றப்போ, இயேசு ஜெபம் செஞ்ச விதத்தை நான் அடிக்கடி நினைச்சு மத்தேயு 26:39.
பார்க்கிறேன். இயேசுவுக்கு யெகோவா பலத்த கொடுத்தாரு, அதேமாதிரி எனக்கும் அவர் பலத்த கொடுக்கிறார். ஜெபம்தான் எனக்கு தினமும் மருந்து மாதிரி. கடவுள்கிட்ட ஜெபம் செஞ்சதுக்கு அப்புறம் என் மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கும்.”—கிட்டதட்ட 30 வருஷங்களாக மல்ட்டிப்பிள் ஸ்கிலிரோஸிஸ் என்ற பக்கவாத வியாதியால் போராடிக் கொண்டிருக்கிற ஹூலியனும் இப்படிதான் உணருகிறார். “ஆஃபிஸர் மாதிரி சேர்ல உட்கார்ந்துட்டு இருந்த நான் இப்ப வீல் சேர்ல உட்கார்ற நிலைமைக்கு வந்துட்டேன். ஆனா என்னோட வாழ்க்கை வீணா போகல, மத்தவங்களுக்கு உதவி செய்றதுக்காக என் வாழ்க்கைய அர்ப்பணிச்சிருக்கேன். இப்படி செய்றது வேதனைய குறைக்குது, கஷ்ட காலத்துல பலப்படுத்துவேன்னு சொன்ன வாக்கை கடவுள் நிறைவேத்தி இருக்குறார். ‘என்னைப் பலப்படுத்துகிற கடவுள் மூலமாக எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் உண்டுனு’ அப்போஸ்தலன் பவுல் சொன்னார், அதே போல என்னாலயும் சொல்ல முடியும்.—பிலிப்பியர் 4:13.
பாசமுள்ளவரைப் பறிகொடுக்கும்போது...
அண்டோனியோ சொல்கிறார்... “என்னோட அப்பா கார் ஆக்சிடென்ட்ல இறந்தப்போ அத என்னால நம்பவே முடியல. ரோட்டோரமா போயிட்டு இருந்த அந்த அப்பாவி மனுஷனுக்கு இப்படி ஆயிடுச்சு, கொஞ்சம்கூட நியாயம் இல்ல. என்னாலயும் ஒன்னும் செய்ய முடியல. சாகறதுக்கு 5 நாள் முன்னாடி வரைக்கும் அவருக்கு சுய நினைவே இல்ல. என் அம்மா முன்னாடி எப்படியோ அழுகைய கட்டுப்படுத்திக்கிட்டேன், ஆனா நான் தனியா இருந்தப்போ கதறி அழுதேன். ‘ஏன்... ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது?’ இப்படி என்னைய நானே அடிக்கடி கேட்டுப்பேன்.
இப்படி ரொம்ப சோகமா இருந்த நாட்கள்ல, உணர்ச்சிகள கட்டுப்படுத்துறதுக்காக... மனநிம்மதிக்காக... எப்பவும் யெகோவாகிட்ட ஜெபம் பண்ணுனேன். இதனால கொஞ்சம் கொஞ்சமா என்னோட வேதனை குறைய ஆரம்பிச்சுது. ‘எதிர்பாராத சம்பவங்கள்’ நம்ம எல்லாருக்கும் நடக்கும்னு பைபிள் சொன்னது என் ஞாபகத்துக்கு வந்துச்சு. கடவுளால பொய் சொல்ல முடியாது, அதனால எங்க அப்பாவ மறுபடியும் உயிரோட பார்ப்பேங்கறத உறுதியா நம்புறேன்.”—பிரசங்கி 9:11; யோவான் 11:25; தீத்து 1:2.
ஆரம்ப கட்டுரையில் பார்த்த ராபர்ட் என்பவரும் இப்படித்தான் யோசிக்கிறார். அவர் சொல்கிறார்... “பிலிப்பியர் 4:6, 7-ல சொல்லியிருக்கிற மாதிரி, எனக்கும் என் மனைவிக்கும் மனநிம்மதி கிடைச்சுது... நாங்க ஜெபம் செஞ்சதுனாலதான் கிடைச்சுது. செய்தியாளர்கள் எங்கள பேட்டி எடுத்தப்போ உயிர்தெழுதல பத்தி பேச முடிஞ்சுது. ப்ளைன் ஆக்சிடென்ட் எங்க பையனோட உயிர பறிச்சிட்டாலும், அவன் எங்ககூட இருந்த சந்தோஷமான நாட்கள நாங்க இன்னும் நினைச்சு பார்க்குறோம். அதபத்தி மட்டும்தான் நாங்க நினைச்சு பார்க்குறோம்.
எங்க நம்பிக்கைய பத்தி நாங்க டிவில நிதானமா பேட்டி கொடுத்தத சக யெகோவாவின் சாட்சிகள் பார்த்ததா எங்ககிட்ட சொன்னப்போ, நீங்க எங்களுக்காக செஞ்ச ஜெபம்தான் அதுக்கெல்லாம் காரணம்னு சொன்னோம். நிறைய பேருடைய ஆறுதலான வார்த்தை மூலமா யெகோவா எங்கள தாங்குறார்ங்கறத நான் உறுதியா நம்புறேன்.”
இந்த உதாரணங்களை எல்லாம் பார்க்கும்போது, பல விதமான பிரச்சனைகளையும் சவால்களையும் சந்திக்கிற மக்களுக்கு கடவுளால் ஆறுதல் கொடுக்க முடியும். உங்களுக்கும்தான்! வாழ்க்கையில் உங்களுக்கு எந்த கஷ்டங்கள் வந்தாலும் சரி, அவற்றை கடந்து வருவதற்கு தேவையான ஆறுதல் கிடைக்கும். * அதனால் உதவிக்காக ஏன் யெகோவாவை தேடி வரக்கூடாது? ஏனென்றால், அவர்தான் “எல்லா விதமான ஆறுதலின் கடவுள்.”—2 கொரிந்தியர் 1:3. ▪ (wp16-E No. 5)
^ பாரா. 5 சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
^ பாரா. 23 கடவுளிடம் நெருங்கி வருவதற்கும் அவர் தருகிற ஆறுதலை பெறுவதற்கும், தயவுசெய்து உங்கள் அருகில் இருக்கும் யெகோவாவின் சாட்சியை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது அருகில் உள்ள கிளை அலுவலகத்திற்கு எழுதுங்கள்.