’கடவுள் எங்கே இருந்தார்?’
“கடவுள் எங்க இருந்தாருங்குற கேள்வி என் மனசுல அடிக்கடி வந்துகிட்டே இருக்கு”— போலந்திலுள்ள ஆஷ்விட்ஸில் முன்பு இருந்த சித்திரவதை முகாமைப் பார்வையிட்டபோது போப் பெனடிக்ட் XVI சொன்னது.
கொடூரமான சம்பவங்கள் நடக்கும்போது, ‘கடவுள் எங்க இருந்தார்?’ என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? அல்லது உங்கள் வாழ்க்கையில் ஏதோவொரு துயர சம்பவம் நடக்கும்போது, ‘கடவுளுக்கு என்மேல அக்கறையே இல்லையா?’ என்று கேட்கிறீர்களா?
அமெரிக்காவில் இருக்கும் ஷீலா யோசித்தது போலவே நீங்களும் யோசிக்கலாம். மதப்பற்றுள்ள குடும்பத்தில் வளர்க்கப்பட்ட இவர் இப்படிச் சொல்கிறார்: “சின்ன வயசுல இருந்தே, கடவுள்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும், ஏன்னா அவர்தான் நம்மள படைச்சவர். ஆனாலும், கடவுள்கிட்ட நான் நெருக்கமா இருக்குற மாதிரி உணர்ந்ததே இல்ல. அவர் என்னை பார்த்துட்டு இருக்கார், ஆனா தூரத்திலிருந்துதான் பார்த்துட்டு இருக்காருன்னு நினைச்சேன். கடவுள் என்னை வெறுக்குறதாவும் நினைக்கல, அதேசமயம் அவர் என்மேல அக்கறையா இருக்குறதாவும் நினைக்கல.” ஷீலாவுக்கு ஏன் இந்தச் சந்தேகங்கள்? இதற்கு அவரே பதில் சொல்கிறார்: “என் குடும்பத்துல பிரச்சனைக்கு மேல பிரச்சனை வந்துகிட்டே இருந்துச்சு, கடவுள் எங்கள ஒரேயடியா கைவிட்டுட்ட மாதிரி தோணுச்சு.”
சர்வவல்லமையுள்ள கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நீங்களும் ஷீலாவைப் போலவே நினைக்கலாம். ஆனாலும், அவருக்கு உங்கள்மேல் அக்கறை இல்லாததுபோல நீங்கள் உணரலாம். யோபு என்ற நல்ல மனிதரின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்; படைப்பாளருடைய வல்லமையிலும் ஞானத்திலும் அவருக்கு விசுவாசம் இருந்தது, ஆனாலும், ஷீலாவுக்கு வந்த அதே சந்தேகங்கள் அவருக்கும் வந்தன. (யோபு 2:3; 9:4) யோபுவின் வாழ்க்கையில் பிரச்சினைகள் இடிமேல் இடியாய் தாக்கின, எந்தத் தீர்வும் இல்லாததுபோல் தெரிந்தது. அதனால் அவர் கடவுளிடம், “உங்கள் முகத்தை ஏன் திருப்பிக்கொள்கிறீர்கள்? என்னை ஏன் எதிரியாக நினைக்கிறீர்கள்?” என்று விரக்தியோடு கேட்டார்.—யோபு 13:24.
பைபிள் என்ன சொல்கிறது? கொடூரமான சம்பவங்கள் நடக்கும்போது கடவுளைக் குற்றம்சாட்டுவது சரியா? மனிதகுலத்தின் மீதும், தனிப்பட்ட ஒவ்வொருவரின் மீதும் கடவுள் அக்கறையாக இருக்கிறார் என்பதற்கு ஏதாவது அத்தாட்சி இருக்கிறதா? கடவுள் நம்மைக் கவனிக்கிறார், நம்மைப் புரிந்துகொள்கிறார், நம்மேல் அனுதாபப்படுகிறார், நம் பிரச்சினைகளைத் தீர்க்க உதவி செய்கிறார் என்று நம்மில் யாராவது சொல்ல முடியுமா?
அடுத்துவரும் கட்டுரைகளில், கடவுள் நம்மேல் அக்கறையாக இருக்கிறார் என்பதைப் பற்றிப் படைப்பு என்ன சொல்லித்தருகிறது என்று சிந்திப்போம். (ரோமர் 1:20) பிறகு, கடவுளுக்கு நம்மேல் இருக்கிற அக்கறையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்றும் சிந்திப்போம். படைப்பிலிருந்தும் கடவுளுடைய வார்த்தையிலிருந்தும் அவரைப் பற்றி அதிகமதிகமாக ‘அறிந்துகொள்ளும்போது,’ அவர் “உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார்” என்ற நம்பிக்கை உங்களுக்கு அதிகமாகும்.—1 யோவான் 2:3; 1 பேதுரு 5:7.