நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்
டெல்ஃபி என்ற ஊரைச் சேர்ந்த ஒரு சாமியார் சொன்னதைக் கேட்டு க்ரீஸஸ் ஏமாந்துபோய் எப்படி பெர்சிய ராஜாவிடம் தோற்றுப்போனார் என்று ஆரம்பத்தில் பார்த்தோம். ஆனால், பெர்சிய ராஜாவைப் பற்றி பைபிள் சொன்ன ஒரு முக்கியமான தீர்க்கதரிசனத்தின் சின்னச்சின்ன விவரங்கள்கூட அப்படியே நிறைவேறின.
சுமார் 200 வருஷங்களுக்கு முன்பே, அதாவது பெர்சிய ராஜாவான கோரேஸ் பிறப்பதற்கு முன்பே, அவருடைய பெயரைப் பற்றியும், மகா நகரமான பாபிலோனை அவர் எப்படி வீழ்த்துவார் என்பதைப் பற்றியும் எபிரெய தீர்க்கதரிசியான ஏசாயா விவரமாகச் சொன்னார்.
ஏசாயா 44:24, 27, 28: “[யெகோவா] சொல்வது இதுதான்: . . . ‘ஆழமான தண்ணீரைப் பார்த்து, “வற்றிப்போ” என்றும், “உன்னுடைய ஆறுகளையெல்லாம் நான் காய்ந்துபோகச் செய்வேன்” என்றும் சொல்கிறேன். “கோரேஸ் என் மேய்ப்பன். நான் விரும்புவதையெல்லாம் அவன் முழுமையாகச் செய்து முடிப்பான்” என்று சொல்கிறேன். எருசலேமைக் குறித்து, “நீ திரும்பக் கட்டப்படுவாய்” என்றும், அதன் ஆலயத்தைக் குறித்து, “உனக்கு அஸ்திவாரம் போடப்படும்” என்றும் சொல்கிறேன்.’”
கிரேக்க சரித்திராசிரியரான ஹிராடட்டஸ் சொல்கிறபடி, பாபிலோன் வழியாகப் பாய்ந்தோடிய யூப்ரடிஸ் ஆற்றின் தண்ணீரை கோரேசின் படை வேறு வழியில் திருப்பிவிட்டது. இதனால், கோரேசின் படை ஆற்றுப்படுகையில் நடந்துபோய், பாபிலோனுக்குள் நுழைந்து, அதைக் கைப்பற்றியது. அதன் பிறகு கோரேஸ், அங்கே கைதிகளாக இருந்த யூதர்களை விடுதலை செய்தார். 70 வருஷங்களுக்கு முன்பு அழிக்கப்பட்டிருந்த எருசலேமுக்குத் திரும்பிப்போய், அதை மறுபடியும் கட்டுவதற்கு அவர்களை அனுமதித்தார்.
ஏசாயா 45:1: “யெகோவாவாகிய நான் கோரேசைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். நான் அவனுடைய வலது கையைப் பிடித்திருக்கிறேன். அவனுக்கு முன்பாகத் தேசங்களை அடிபணிய வைப்பேன். அவனுக்கு முன்பாக ராஜாக்களை வீழ்த்துவேன். அவனுக்கு முன்பாக நகரவாசல்களும் அவற்றின் கதவுகளும் பூட்டப்படாமல் திறந்திருக்கும்படி செய்வேன்.”
பாபிலோன் நகரவாசல்களின் பிரமாண்டமான இரண்டு கதவுகள் கவனக்குறைவாகத் திறந்து விடப்பட்டிருந்ததால் பெர்சியர்கள் நகரத்துக்குள் சுலபமாக நுழைந்தார்கள். ஒருவேளை, கோரேசின் திட்டம் பாபிலோனியர்களுக்குத் தெரிந்திருந்தால் நகரத்தின் எல்லா கதவுகளையும் அவர்கள் அடைத்து வைத்திருந்திருப்பார்கள். ஆனால், நகரவாசல்கள் பூட்டப்படாமல் அப்படியே விடப்பட்டிருந்தன.
மிகத் துல்லியமாக நிறைவேறிய பைபிள் தீர்க்கதரிசனங்களில் இதுவொரு முக்கியமான தீர்க்கதரிசனம். a மனிதர்களுடைய கணிப்புகள் பெரும்பாலும் அவர்களுடைய பொய் தெய்வங்களிடமிருந்து வருகின்றன. ஆனால், பைபிள் தீர்க்கதரிசனங்கள் உண்மைக் கடவுளிடமிருந்தே தோன்றுகின்றன; அவர் தன்னைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார். “நடக்கப்போகும் விஷயங்களை நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன். அதை ரொம்பக் காலத்துக்கு முன்பிருந்தே சொல்லி வருகிறேன்.”—ஏசாயா 46:10.
யெகோவா. இந்தப் பெயரின் அர்த்தம், “ஆகும்படி செய்கிறவர்.” எதிர்கால சம்பவங்களைத் தெரிந்துகொள்ளவும், தன்னுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி அவற்றை மாற்றவும் அவரால் முடியும் என்பதை இது காட்டுகிறது. அதுமட்டுமல்ல, கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் அவர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையையும் தருகிறது.
உண்மைக் கடவுளால் மட்டுமே இப்படிச் சொல்ல முடியும். அவருடைய பெயர்இன்று நிறைவேறுகிற தீர்க்கதரிசனங்கள்
நாம் வாழ்கிற இந்தக் காலத்தைப் பற்றி பைபிள் தீர்க்கதரிசனங்கள் என்ன சொல்கின்றன என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? “கடைசி நாட்களில், சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்” என்று சுமார் 2,000 வருஷங்களுக்கு முன்பே பைபிள் சொன்னது. இந்தக் கடைசி நாட்கள் எதைக் குறிக்கின்றன? பூமிக்கான அல்லது மனிதகுலத்துக்கான கடைசி நாட்களை அல்ல, காலம்காலமாக மனிதர்கள் எதிர்ப்படும் சண்டை சச்சரவு, கொடுமை, துன்பம் ஆகிய பிரச்சினைகளுக்கான கடைசி நாட்களையே குறிக்கின்றன. ‘கடைசி நாட்களுக்கான’ அடையாளங்களைப் பற்றிச் சொல்லும் சில தீர்க்கதரிசனங்களை இப்போது ஆராயலாம்.
2 தீமோத்தேயு 3:1-5: “கடைசி நாட்களில், . . . மனிதர்கள் சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, கர்வமுள்ளவர்களாக, கடவுளை நிந்திக்கிறவர்களாக, அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாதவர்களாக, நன்றிகெட்டவர்களாக, உண்மையில்லாதவர்களாக, பந்தபாசம் இல்லாதவர்களாக, எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக, நம்பிக்கைத் துரோகிகளாக, அடங்காதவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக, கடவுளை நேசிக்காமல் சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறவர்களாக, பக்திமான்களைப் போல் காட்டிக்கொண்டு அதற்கு நேர்மாறாக வாழ்கிறவர்களாக இருப்பார்கள்.”
இப்படிப்பட்ட ஆட்களைத்தான் இன்று அதிகமதிகமாகப் பார்க்கிறீர்கள், இல்லையா? திரும்புகிற பக்கமெல்லாம் ஆட்கள் சுயநலவாதிகளாக, பண வெறியர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக இருப்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள், இல்லையா? ஆட்கள் அதிகாரம் பண்ணுகிறவர்களாக, எதற்கும் யாரோடும் ஒத்துப்போகாதவர்களாக இருப்பதையும் பார்க்கிறீர்கள், இல்லையா? நிறைய பேர் பெற்றோருக்குக் கீழ்ப்படியாமல் இருப்பதையும், கடவுளை நேசிப்பதற்குப் பதிலாக சுகபோக வாழ்க்கையை நேசிப்பதையும் கவனிக்கிறீர்கள், இல்லையா? நிலைமை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே வருகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!
மத்தேயு 24:6, 7: “போர் முழக்கங்களையும் போர்ச் செய்திகளையும் நீங்கள் கேட்பீர்கள் . . . ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடும்.”
1914 முதற்கொண்டு இன்றுவரை 10 கோடிக்கும் அதிகமான ஆட்கள் போர்களிலும், ஆயுதப் போராட்டங்களிலும் உயிரிழந்திருக்கிறார்கள் என்பதைச் சில அறிக்கைகள் காட்டுகின்றன. இந்த எண்ணிக்கை நிறைய நாடுகளின் ஜனத்தொகையைவிட ரொம்பவே அதிகம்! அப்படியென்றால் எவ்வளவு கண்ணீர், எவ்வளவு துக்கம், எவ்வளவு துன்பம் என்று யோசித்துப்பாருங்கள்! தேசங்கள் இதையெல்லாம் கவனித்து, போர்களுக்கு முடிவுகட்டியிருக்கின்றனவா?
மத்தேயு 24:7: ‘பஞ்சங்கள் ஏற்படும்.’
உலக உணவுத் திட்டம் (WFP) என்ற அமைப்பு இப்படிச் சொன்னது: “எல்லாருக்கும் போதுமான அளவு உணவு கிடைக்கிற இந்த உலகத்தில் 81 கோடியே 50 லட்சம் பேர், அதாவது ஒன்பது பேரில் ஒருவர், பட்டினியாகத்தான் ஒவ்வொரு இரவும் தூங்கப்போகிறார்கள். அதைவிட கொடுமை, மூன்று பேரில் ஒருவர் ஏதோவொரு விதமான ஊட்டச்சத்துக் குறைவால் அவதிப்படுகிறார்கள்.” ஒவ்வொரு வருஷமும் கிட்டத்தட்ட 30 லட்சம் குழந்தைகள் பட்டினியால் செத்துப்போகின்றன என்பதை அறிக்கைகள் காட்டுகின்றன.
லூக்கா 21:11: “பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும்.”
அதிர்வுகளை உணரும் அளவுக்கு ஒவ்வொரு வருஷமும் ஏறக்குறைய 50,000 நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. அவற்றில் கிட்டத்தட்ட 100 நிலநடுக்கங்கள் கட்டிடங்களுக்குப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதோடு, ஒவ்வொரு வருஷமும் படுபயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்படுகிறது. ஓர் அறிக்கை சொல்கிறபடி, 1975 முதல் 2000 வரை ஏற்பட்ட நிலநடுக்கங்களால் மட்டும் 4,71,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
மத்தேயு 24:14: “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.”
80 லட்சத்துக்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள், உலகம் முழுவதும் சுமார் 240 நாடுகளில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கிறார்கள். வளர்ந்துவருகிற நகரங்களிலும், தொலைதூர கிராமங்களிலும், அடர்ந்த காடுகளிலும், உயர்ந்த மலைகளிலும் பிரசங்கிக்கிறார்கள். கடவுள், போதும் என்று சொல்லும்வரை இந்த வேலை நடந்துகொண்டிருக்கும், “பின்பு முடிவு வரும்” என்று மேலே உள்ள தீர்க்கதரிசனம் சொல்கிறது. இதன் அர்த்தம் என்ன? மனிதனுடைய ஆட்சி முடிவுக்கு வரும், பிறகு புதிய ஆட்சி ஒன்று உதயமாகும். அதாவது, கடவுளுடைய ஆட்சி ஆரம்பமாகும். என்னென்ன வாக்குறுதிகள் கடவுளுடைய ஆட்சியில் நிறைவேறும்? பதிலைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.
a “துல்லியமான தீர்க்கதரிசனத்துக்கு ஒரு மவுன சாட்சி” என்ற கட்டுரையைப் பாருங்கள்.