அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அன்றும் இன்றும்
முடி அலங்கார வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கேத்தி * ஐரோப்பாவுக்கு வந்தாள். சிலர், வேலை வாங்கித் தருவதாக சொல்லி அவளை ஏமாற்றி அங்கு அழைத்து வந்தார்கள். 10 நாட்களுக்கு அவளை அடித்துத் துன்புறுத்தினார்கள். ஊரிலிருக்கும் அவளுடைய குடும்பத்தை தொலைத்துக்கட்டிவிடுவதாக மிரட்டினார்கள். இப்படிச் செய்து அவளை விபச்சாரத் தொழிலில் ஈடுபட வைத்தார்கள்.
கேத்தி தங்கியிருந்த விபச்சார விடுதியின் அதிகாரியாக இருந்த பெண், 40,000 யூரோவுக்கும் * அதிகமாக பணம் கொடுத்தால்தான் அவள் அங்கிருந்து போக முடியும் என்று சொன்னார். அந்தக் கடனைக் கட்டுவதற்காக தினமும் விபச்சாரம் செய்து 200 முதல் 300 யூரோ வரை கேத்தி சம்பாதிக்க வேண்டியிருந்தது. “நான் இங்க வந்து நல்லா மாட்டிக்கிட்டேன். எப்படியாவது இங்கிருந்து தப்பிச்சு போயிடலாம்னு நினைப்பேன். ஆனா, அவங்க என்னோட குடும்பத்த ஏதாச்சும் செஞ்சிடுவாங்களோன்னு பயமா இருந்துச்சு” என்று சொல்கிறார் கேத்தி. இது கேத்தி என்ற ஒரேயொரு பெண்ணின் கதையல்ல. சர்வதேச செக்ஸ் வியாபாரத்தில் சிக்கியிருக்கும் கிட்டத்தட்ட 40 லட்சம் பேரின் கதையும் இதே மாதிரிதான் இருக்கிறது.
சுமார் 4,000 வருஷங்களுக்கு முன்பு, பருவ வயதில் இருந்த யோசேப்பை அவனுடைய அண்ணன்கள் அடிமையாக விற்றார்கள். எகிப்தில் புகழ்பெற்ற ஒரு வீட்டில் யோசேப்பு அடிமையாக இருந்தான். கேத்தியைப் போல் யோசேப்பு ஆரம்பத்தில் கொடுமைப்படுத்தப்படவில்லை. ஆனால் ஒரு நாள், அவனுடைய முதலாளியின் மனைவி அவனிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்தாள். யோசேப்பு அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இருந்தாலும், அவன்மீதுதான் பழி விழுந்தது. முதலாளியின் மனைவியை அவன் கற்பழிக்க நினைத்தான் என்று சொல்லி அவனை சிறையில் அடைத்தார்கள். அவனுடைய கழுத்தை இரும்பு சங்கிலியில் மாட்டினார்கள்.—ஆதியாகமம் 39:1-20; சங்கீதம் 105:17, 18.
யோசேப்பின் வாழ்க்கையோ பழங்காலத்தில் நடந்த கதை. ஆனால் கேத்தியின் வாழ்க்கை, இந்த 21-ம் நூற்றாண்டில் நடந்த கதை. இவர்கள் இருவருமே மனிதர்களைக் கடத்தி அடிமைகளாக்கும் வியாபாரத்தில் (human trafficking) சிக்கிக்கொண்ட அப்பாவிகள். காலங்காலமாக இருந்துவரும் இந்த வியாபாரம், மனிதர்களை வெறும் பொருட்களாக கருதுகிறது; அவர்களை வைத்து லாபம் சம்பாதிக்கப் பார்க்கிறது.
கொடிகட்டிப் பறந்த அடிமை வியாபாரம்
போர் செய்வதன் மூலம், தேசங்களுக்கு சுலபமாக நிறைய அடிமைகள் கிடைத்தார்கள். கானான் தேசத்தை ஒருமுறை படையெடுத்து சென்ற மூன்றாம் தட்மோஸ் என்ற எகிப்திய ராஜா 90,000 பேரை கைதிகளாக பிடித்து வந்தான். சுரங்கத்தில்
வேலை செய்வதற்கும், கோயில்களைக் கட்டுவதற்கும், கால்வாய்களை வெட்டுவதற்கும் இவர்களை அடிமைகளாகப் பயன்படுத்தினான்.ரோம பேரரசாட்சியிலும் இதே கதைதான். போர் செய்து அடிமைகளைக் கொண்டுவந்து குவித்தார்கள். சிலசமயம், அடிமைகள் தேவைப்படுகிறார்கள் என்பதற்காகவே ரோமர்கள் போர் செய்தார்கள். முதல் நூற்றாண்டில், ரோம் நகரத்தில் வாழ்ந்த குடிமக்களில் பாதிப் பேர் அடிமைகள்தான் என்று கணக்கிடப்படுகிறது. எகிப்திலும் ரோமிலும் அடிமைகளாக இருந்தவர்கள் பயங்கர கொடுமைக்கு ஆளானார்கள். சொல்லப்போனால், ரோம சுரங்கத்தில் வேலை செய்தவர்களுடைய ஆயுள் காலமே வெறும் 30 வயதாகத்தான் இருந்தது.
காலங்கள் மாறினாலும் அடிமைகளைக் கொடுமைப்படுத்துவது ஒன்றும் குறைந்தபாடில்லை. 16-ம் நூற்றாண்டிலிருந்து 19-ம் நூற்றாண்டு வரை, ஆப்பிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அடிமை வியாபாரம் நடந்தது. அந்த சமயத்தில், இந்த பூமியிலேயே அதிக லாபத்தை ஈட்டித் தந்த வியாபாரம், அடிமை வியாபாரம்தான். சொல்லப்போனால், ‘2.5 கோடி முதல் 3 கோடி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கப்பட்டதாக கணக்கிடப்பட்டிருக்கிறது’ என்று யுனஸ்கோ (UNESCO) நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கை சொல்கிறது. அடிமைகளைக் கூட்டிக்கொண்டு அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து போன பயணங்களில், லட்சக்கணக்கான பேர் இறந்து போயிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட பயணங்களின்போது உயிர்பிழைத்த ஒரு அடிமைதான் ஓலாவ்டா எக்வியானோ. “பெண்களோட அலறல்... சாகுற சமயத்துல மக்கள் வலியில துடிச்ச சத்தம்... இதெல்லாம் கொஞ்சம்கூட கற்பனை செய்ய முடியாதளவுக்கு பயங்கரமான காட்சியா இருந்தது” என்று தான் பார்த்த கோர சம்பவத்தை விவரித்தார் ஓலாவ்டா.
அடிமைத்தனம் என்ற கொடுமை, சரித்திரத்தில் ஏதோ ஒரு சமயத்தில் நடந்து முடிந்துவிட்ட கதையல்ல. இன்றும் சுமார் 2.1 கோடி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தப்பிக்க வழியில்லாமல் அடிமைகளாக வேலை செய்துவருகிறார்கள், அதுவும் கொஞ்சப் பணத்துக்காக, அல்லது சம்பளமே இல்லாமல்கூட அப்படி வேலை செய்துவருகிறார்கள் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு சொல்கிறது. சுரங்கங்கள், டெக்ஸ்டைல் நிறுவனங்கள், செங்கல் சூளைகள், விபச்சார விடுதிகள் மற்றும் வீடுகளில் பலர் அடிமைகளாக வேலை செய்துவருகிறார்கள். இது சட்டவிரோதமாக இருந்தாலும், இந்த விதமான அடிமைத்தனம் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
விடுதலையைத் தேடி
அடிமைகளை இப்படிக் கொடூரமாக நடத்தியதால், அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. கி.மு. முதல் நூற்றாண்டில் சண்டைவீரனாக (Gladiator) இருந்த ஸ்பார்டகஸுடன் (Spartacus) சேர்ந்து ஒரு லட்சம் அடிமைகள் ரோமை எதிர்த்து கலகத்தில் குதித்தார்கள். ஆனால், தோல்வியைத்தான் தழுவினார்கள். 18-வது நூற்றாண்டில், கரீபியன் தீவான ஹிஸ்பானியோலாவில் இருந்த அடிமைகள் கரும்பு தோட்டங்களில் பயங்கர கொடுமையை அனுபவித்தார்கள். அதனால், முதலாளிகளை எதிர்த்துப் போராடினார்கள்; உள்நாட்டுப் போர் வெடித்தது. 13 வருஷங்கள் நடந்த இந்தப் போரின் விளைவாக, 1804-ம் ஆண்டில் ஹெய்டி என்ற சுதந்திர நாடு உருவானது.
எகிப்திலிருந்த இஸ்ரவேலர்களுக்கு கிடைத்த விடுதலைதான் இதுவரை மனித சரித்திரத்தில் அடிமைகளுக்கு கிடைத்த மாபெரும் விடுதலை என்று சொல்லலாம். கிட்டத்தட்ட 30 லட்சம் பேர் அடங்கிய ஒரு தேசமே எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையானது. அந்த விடுதலை அவர்களுக்கு நிச்சயம் தேவையான ஒன்றாக இருந்தது. ஏனென்றால், எகிப்தியர்கள் “அவர்களைப் யாத்திராகமம் 1:11-14) இஸ்ரவேலர்கள் பெருகக் கூடாது என்பதற்காக அவர்களுடைய குழந்தைகளை எல்லாம் கொல்ல எகிப்தை ஆட்சி செய்த ஒரு பார்வோன் ராஜா கட்டளைப் போட்டான்.—யாத்திராகமம் 1:8-22.
படாத பாடுபடுத்தி, சக்கையாகப் பிழிந்தெடுத்தார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எகிப்தில் இஸ்ரவேலர்கள் அனுபவித்த கொடுமையிலிருந்து அவர்களுக்கு கிடைத்த விடுதலை ரொம்ப வித்தியாசமானது. ஏனென்றால், கடவுளே இஸ்ரவேல் மக்களுக்கு நேரடியாக உதவி செய்தார். ‘அவர்களுடைய வலியும் வேதனையும் எனக்கு நன்றாகவே தெரியும். நான் போய் அவர்களைக் காப்பாற்றுவேன்’ என்று மோசேயிடம் கடவுள் சொன்னார். (யாத்திராகமம் 3:7, 8) இன்று வரையாக யூதர்கள் அந்த விடுதலையை நினைத்துப் பார்ப்பதற்காக பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.—யாத்திராகமம் 12:14.
அடிமை வாழ்வுக்கு நிரந்தர முடிவு
“நம்முடைய கடவுளான யெகோவா அநியாயம் செய்ய மாட்டார்” என்றும் அவர் இன்றும் மாறவில்லை என்றும் பைபிள் நமக்கு உறுதியாக சொல்கிறது. (2 நாளாகமம் 19:7; மல்கியா 3:6) கடவுள் ‘கைப்பற்றப்பட்டவர்களுக்கு விடுதலை . . . கிடைக்குமென்று அறிவிப்பதற்காகவும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்காகவும்’ இயேசுவை அனுப்பி வைத்தார். (லூக்கா 4:18) அப்படியென்றால், அடிமையாக இருக்கும் ஒவ்வொருவரையும் விடுதலை செய்யத்தான் இயேசு வந்தாரா? அப்படியிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், பாவம் மற்றும் மரணம் என்ற அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுதலை செய்யத்தான் இயேசு வந்தார். ஒருமுறை இயேசு, “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று சொன்னார். (யோவான் 8:32) அவர் சொல்லித் தந்த உண்மைகள் இன்றும் நிறைய பேருக்கு பல வழிகளில் விடுதலையைத் தந்திருக்கிறது.—“ வித்தியாசமான அடிமைத்தனத்திலிருந்து விடுதலை” என்ற பெட்டியைப் பாருங்கள்.
சொல்லப்போனால், யோசேப்புக்கும் கேத்திக்கும் கடவுள் வித்தியாசமான வழிகளில் விடுதலையைத் தந்தார். யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றிய அற்புதமான விஷயங்களை நீங்கள் ஆதியாகமம் புத்தகத்தில் அதிகாரங்கள் 39-லிருந்து 41 வரை வாசித்து தெரிந்துகொள்ளலாம். கேத்தியின் வாழ்க்கையிலும் அற்புதமான விஷயங்கள் நடந்தது.
ஒரு ஐரோப்பிய நாட்டிலிருந்து கேத்தி வெளியேற்றப்பட்டாள். அதனால், அவள் அங்கிருந்து ஸ்பெயின் நாட்டுக்கு சென்றாள். அங்கே யெகோவாவின் சாட்சிகளைச் சந்தித்தாள். பைபிளை அவர்களோடு படித்த பிறகு, தன்னுடைய வாழ்க்கையைச் சரிப்படுத்த வேண்டும் என்று உறுதியாக தீர்மானம் எடுத்தாள். ஒரு வேலைக்கும் சேர்ந்தாள். பிறகு, தன்னுடைய அதிகாரியாக இருந்த பெண்ணிடம் பேசி, கடனைக் கொஞ்சம் கொஞ்சமாக கட்டித் தீர்க்க ஏற்பாடு செய்தாள். ஒருநாள், கேத்திக்கு அந்த பெண் அதிகாரியிடம் இருந்து ஃபோன் வந்தது. அவள் கடனைக் கட்ட வேண்டியதில்லை என்று அவர் சொன்னார். அதோடு, மன்னிப்பும் கேட்டார். அந்தப் பெண்ணிடம் இப்படியொரு மாற்றம் ஏற்பட என்ன காரணம்? அந்தப் பெண்ணும்கூட யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிளைப் படிக்க ஆரம்பித்துவிட்டார்! “ஆச்சரியமான பல வழியில சத்தியம் நம்மள விடுதலையாக்குது” என்று சொல்கிறார் கேத்தி.
எகிப்தில் இஸ்ரவேலர்கள் அடிமையாக இருந்தபோது அனுபவித்த கொடுமைகளைப் பார்த்து கடவுளான யெகோவா மிகவும் துக்கப்பட்டார். இன்றும், அந்த மாதிரியான அநியாயங்கள் நடப்பதைப் பார்த்து அவர் கண்டிப்பாக துக்கப்படுவார். இன்று பூமியில் இருக்கும் எல்லா விதமான அடிமைத்தனத்தையும் ஒழிக்க, முழு மனித சமுதாயத்திலும் பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த மாற்றத்தைக் கொண்டுவரப் போவதாக கடவுளே வாக்குக் கொடுத்திருக்கிறார். “அவருடைய வாக்குறுதியின்படியே நீதி குடியிருக்கிற புதிய வானமும் புதிய பூமியும் உண்டாகுமென்று ஆவலோடு காத்திருக்கிறோம்.”—2 பேதுரு 3:13