Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காலத்தால் அழியாத ஆலோசனைகள்!

கவலைப்படாதீர்கள்

கவலைப்படாதீர்கள்

பைபிள் தரும் ஆலோசனை: “கவலைப்படுவதை நிறுத்துங்கள்.” —மத்தேயு 6:25.

இதன் அர்த்தம் என்ன? ஒரு மலையின் மீது உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது இயேசு இந்த வார்த்தைகளை சொன்னார். “கவலைப்படுவது” என்றால் என்ன? “கவலைப்படுவது” என்ற வார்த்தையின் கிரேக்க வினைச்சொல், “வறுமையின் போதோ, பசியின் போதோ அல்லது தினசரி வாழ்க்கையில் வரும் மற்ற பிரச்சினைகளின் போதோ ஒருவருக்கு இருக்கும் இயல்பான உணர்ச்சிகளை” குறிக்கலாம் என்று ஒரு பைபிள் டிக்ஷனரி சொல்கிறது. நிறைய சமயங்களில், எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்பதைப் பற்றி நாம் யோசிப்பதால் கவலைப்படுகிறோம். ‘பணத்துக்கு என்ன செய்றது’ அல்லது ‘குடும்பத்தை நல்லபடியா பார்த்துக்க என்ன செய்றது’ என்றெல்லாம் நினைத்து கவலைப்படுவதில் எந்த தப்பும் இல்லை. (பிலிப்பியர் 2:20) அப்படியென்றால், கவலைப்படுவதை நிறுத்துங்கள் என்று இயேசு ஏன் சொன்னார்? அதிகமாக கவலைப்படுவதைத்தான் நிறுத்த வேண்டும் என்று இயேசு சொன்னார். நாளைக்கு என்ன செய்வோம் என்று அதிகமாக கவலைப்பட்டால், நம் சந்தோஷம் போய்விடும்.—மத்தேயு 6:31, 34.

இந்த காலத்துக்கு ஒத்துவருமா? இயேசு சொன்னபடி செய்வதுதான் புத்திசாலித்தனம்! ஏன்? அதிகம் கவலைப்படுவது நம் உடலை எப்படி பாதிக்கிறது என்று சில ஆராய்ச்சிகள் சொல்வதை கவனியுங்கள். நம் உடலில் ‘பரிவு நரம்பு மண்டலம்’ (sympathetic nervous system) என்ற நரம்பு மண்டலம் இருக்கிறது. ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி நாம் அதிகமாக கவலைப்படும்போது அது இந்த நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. அதனால், நமக்கு “அல்சர், இதய நோய் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் வருகிறது.”

நாம் அளவுக்கு அதிகமாக கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று இயேசு சொன்னார். ஏன்? ஏனென்றால், ‘அது ஒன்றுக்கும் உதவாது!’ “கவலைப்படுவதால் உங்களில் யாராவது தன் ஆயுளோடு ஒரு நொடியைக் கூட்ட முடியுமா?” என்று இயேசு கேட்டார். (மத்தேயு 6:27) அது உண்மைதான். கவலைப்பட்டுக்கொண்டே இருப்பதால் நம் வாழ்நாளில் ஒரு நொடியைக்கூட கூட்ட முடியாது. சொல்லப்போனால், நிறைய சமயங்களில் நாம் பயப்படுகிற மாதிரி எதுவும் நடக்காது! “எதிர்காலத்தை நினைத்துக் கவலைப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. நாம் நினைத்து பயப்படுவதைவிட எதிர்காலம் நன்றாகவே இருக்கும்” என்று அறிஞர் ஒருவர் சொன்னார்.

கவலையை விரட்டி அடிக்க என்ன செய்யலாம்? முதலாவது, கடவுளை நம்புங்கள். பறவைகளுக்கு கடவுள் உணவைக் கொடுக்கிறார், பூக்களை அழகான உடையால் அழகுபடுத்துகிறார். அப்படியென்றால், அவரை வணங்கும் ஆட்களுக்கு தேவையானதை கடவுள் கொடுக்க மாட்டாரா என்ன? (மத்தேயு 6:25, 26, 28-30) இரண்டாவது, அந்தந்த நாளைப் பற்றி மட்டும் யோசியுங்கள். “நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள்” என்று இயேசு சொன்னார். ஏனென்றால், “நாளைய தினத்திற்கு அதற்குரிய கவலைகள் இருக்கும்.” அதனால், “அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு” மட்டும் போதும்!—மத்தேயு 6:34.

இயேசு சொன்னபடி செய்தால் நாம் ஆரோக்கியமாக வாழலாம். அதைவிட முக்கியமாக, நிம்மதியாக வாழலாம்! இந்த மன நிம்மதிதான் “தேவசமாதானம்” என்று பைபிள் சொல்கிறது.—பிலிப்பியர் 4:6, 7. ▪ (w16-E No.1)