ஜெபத்தைப் பற்றி மக்களின் கருத்து
“திக்கு தெரியாம தவிக்கிற சமயங்கள்ல உதவி கேட்டு கடவுள்கிட்ட ஜெபம் செய்றப்போ அவர் என் பக்கத்துல வந்து என் கைய பிடிச்சு வழிநடத்துறத உணர்றேன்.”—மரியா.
“என் மனைவி 13 வருஷமா புற்றுநோய்ல போராடிட்டு இருந்தா. கடைசில இறந்துபோயிட்டா. அப்பல்லாம் ஒவ்வொரு நாளும் கடவுள்கிட்ட ஜெபம் செஞ்சேன். வேதனையோட நான் செஞ்ச ஜெபத்த அவர் உண்மைலேயே கேட்டாருங்கிறத என்னால உணர முடிஞ்சுது. அது என் மனசுக்கு நிம்மதி கொடுத்துச்சு.”—ராவூல்.
“மனுஷங்களுக்கு கடவுள் கொடுத்திருக்குற அருமையான பரிசுதான் ஜெபம்.”—அர்னா.
மரியா, ராவூல், அர்னா போன்ற நிறைய பேருக்கு ஜெபம் ஒரு அற்புதமான பரிசு. ஜெபத்தின் மூலமாக, கடவுளிடம் பேச முடியும்... அவருக்கு நன்றி சொல்ல முடியும்... அவரிடம் உதவி கேட்க முடியும்... என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஜெபம் சம்பந்தமாக பைபிளில் கடவுள் கொடுத்திருக்கிற இந்த வாக்குறுதியை அவர்கள் மனதார நம்புகிறார்கள்: “கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி நாம் எதைக் கேட்டாலும், அவர் காதுகொடுத்துக் கேட்கிறார் என்பதுதான் நாம் அவர்மேல் வைத்திருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கை.”—1 யோவான் 5:14.
ஆனால், ஜெபத்தைப் பற்றி பைபிள் சொல்வதை நிறைய பேரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஜெபம் செய்வதைப் பற்றி ஸ்டீவ் இப்படி நினைத்தார்: “எனக்கு 17 வயசு இருந்தப்போ என்னோட மூணு ஃபிரெண்ட்ஸ்ல ஒருத்தர் கார் விபத்துல இறந்துட்டாரு. மத்த ரெண்டு பேரு கடல்ல மூழ்கி இறந்துட்டாங்க.” அப்போது ஸ்டீவ் என்ன செய்தார்? “இதெல்லாம் ஏன் நடந்துச்சுனு கடவுள்கிட்ட
ஜெபத்துல கேட்டேன். ஒரு பதிலும் கிடைக்கல. அதனால, ‘எதுக்கு ஜெபம் செய்யணும்?’னு என்னையே கேட்டுகிட்டேன்.” தங்கள் ஜெபத்துக்குப் பதில் கிடைக்காததுபோல் பலர் நினைப்பதால், ‘ஜெபம் செஞ்சு என்ன பிரயோஜனம்?’ என்று அவர்கள் யோசிக்கிறார்கள்.ஜெபம் செய்வதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று சிலர் நினைப்பதற்கு வேறு காரணங்களும் இருக்கின்றன. நம் தேவைகள், பிரச்சினைகள் எல்லாமே கடவுளுக்கு ஏற்கெனவே தெரியும். அதனால், அவற்றைப் பற்றி அவரிடம் சொல்ல வேண்டியதில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
முன்பு செய்த சில தவறுகளால்தான் தங்கள் ஜெபத்தைக் கடவுள் கேட்பதில்லை என்று வேறு சிலர் நினைக்கிறார்கள். ஜெனி இப்படிச் சொல்கிறார்: “நான் எதுக்குமே லாயக்கில்லனு நெனக்குறதுதான் என்னோட பெரிய பிரச்சினையே. என்னையே நொந்துக்குற அளவுக்கு தப்பு பண்ணியிருக்கேன். அதனால, என் ஜெபத்த கடவுள் கேக்க மாட்டார்னு நெனச்சுக்கிட்டேன்.”
ஜெபத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இதுபோன்ற சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால், பைபிள் தரும் திருப்தியான பதில்கள் உங்களுக்கு ஆறுதலாக இருக்கும். ஜெபத்தைப் பற்றி பைபிள் சொல்வதை நீங்கள் உறுதியாக நம்பலாம். * இந்தக் கேள்விகளுக்கான பதில்களை பைபிளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்:
-
நம்முடைய ஜெபங்களைக் கடவுள் உண்மையிலேயே கேட்கிறாரா?
-
சில ஜெபங்களுக்கு ஏன் பதில் கிடைப்பதில்லை?
-
உங்கள் ஜெபத்தைக் கடவுள் கேட்க வேண்டுமென்றால், எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?
-
ஜெபம் செய்வது உங்களுக்கு எப்படி உதவும்?
^ பாரா. 9 கடவுளுடைய ஊழியர்களும், இயேசு கிறிஸ்துவும் செய்த ஜெபங்கள் பைபிளில் இருக்கின்றன. பழைய ஏற்பாடு என்று சொல்லப்படுகிற எபிரெய வேதாகமத்தில் 150-க்கும் அதிகமான ஜெபங்கள் இருக்கின்றன.