அட்டைப்படக் கட்டுரை | தேவதூதர்கள்—உண்மையிலேயே இருக்கிறார்களா?
உங்களைப் பாதுகாப்பதற்கென்று ஒரு தேவதூதர் இருக்கிறாரா?
ஒவ்வொரு நபரையும் பாதுகாப்பதற்கென்று ஒரு தேவதூதர் இருப்பதாக பைபிள் சொல்வதில்லை. இயேசு ஒரு சமயம் இப்படிச் சொன்னார்: “இந்தச் சிறியவர்களில் ஒருவரைக்கூட கேவலமாக நினைக்காதபடி கவனமாக இருங்கள்; ஏனென்றால், அவர்களுடைய தேவதூதர்கள் என் பரலோகத் தகப்பனின் முகத்துக்கு முன்னால் எப்போதும் இருக்கிறார்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.” (மத்தேயு 18:10) ஒவ்வொரு நபரையும் பாதுகாப்பதற்கென்று ஒரு தேவதூதர் இருப்பதாக இயேசு இங்கே குறிப்பிட்டாரா? இல்லை! தன் சீஷர்கள் ஒவ்வொருவர் மீதும் தேவதூதர்களுக்கு அதிக அக்கறை இருப்பதாகத்தான் குறிப்பிட்டார். இருந்தாலும், தேவதூதர்கள் தங்களைப் பாதுகாப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு, கடவுளுடைய உண்மை ஊழியர்கள் எந்தவொரு ஆபத்தான செயலிலோ ஞானமற்ற செயலிலோ துணிச்சலாக ஈடுபடுவது கிடையாது.
அப்படியென்றால், தேவதூதர்கள் மனிதர்களுக்கு உதவ மாட்டார்கள் என்று அர்த்தமா? இல்லை! (சங்கீதம் 91:11) தேவதூதரைப் பயன்படுத்தி கடவுள் தங்களைப் பாதுகாப்பதாகவும் வழிநடத்துவதாகவும் சிலர் உறுதியாக நம்புகிறார்கள். ஆரம்பக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட கென்னத் என்பவரும் இப்படித்தான் உணருகிறார். அவர் அப்படி உணருவது சரி என்று நம்மால் அடித்து சொல்லிவிட முடியாவிட்டாலும், அவர் அப்படி உணருவது சரியாகக்கூட இருக்கலாம்! பிரசங்க வேலையில், தேவதூதர்கள் தங்களுக்கு உதவுகிறார்கள் என்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் நிறைய அத்தாட்சிகளைப் பார்க்கிறார்கள். தேவதூதர்கள், பார்க்க முடியாத உருவத்தில் இருப்பதால், ஒவ்வொரு நபருக்கும் உதவி செய்வதற்காக கடவுள் அவர்களை எந்தளவு பயன்படுத்துகிறார் என்பதை நம்மால் சொல்ல முடியாது. ஆனாலும், சர்வவல்லமையுள்ள கடவுள் நமக்குச் செய்யும் உதவிக்காக நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்!—கொலோசெயர் 3:15; யாக்கோபு 1:17, 18.