விழிப்புடன் இருங்கள்!
இரண்டாவது வருஷத்துக்குள் காலடி எடுத்து வைக்கிறது உக்ரைன் போர்—பைபிள் ஏதாவது நம்பிக்கை தருகிறதா?
வெள்ளி, பிப்ரவரி 24, 2023 தேதியோடு, உக்ரைனில் போர் ஆரம்பித்து ஒரு வருஷம் ஆகிறது. சில அறிக்கைகளின்படி, கிட்டத்தட்ட மூன்று லட்சம் உக்ரைன் வீரர்களும் ரஷ்ய வீரர்களும் இறந்திருக்கிறார்கள் அல்லது காயம் அடைந்திருக்கிறார்கள். அதோடு, கிட்டத்தட்ட 30,000 மக்கள் இந்தப் போரில் இறந்திருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம்.
வருத்தமான விஷயம் என்னவென்றால், இந்தப் போர் சீக்கிரத்தில் முடியப்போவதாகத் தெரியவில்லை.
“ரஷ்யப் படைகள் உக்ரைனில் நுழைந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகியிருந்தாலும், போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. உக்ரைனும் சரி, ரஷ்யாவும் சரி, போரில் ஜெயிக்கப்போவதாகத் தெரியவில்லை. இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்கப்போவதாகவும் தெரியவில்லை.”—என்பிஆர் (நேஷனல் பப்ளிக் ரேடியோ), பிப்ரவரி 19, 2023.
இந்தப் போரினாலும் மற்ற போர்களினாலும் உலகம் முழுவதும் உள்ள அப்பாவி மக்கள் படும் பாடுகளைப் பார்த்து நிறைய பேர் வேதனையில் குமுறுகிறார்கள். பைபிள் ஏதாவது நம்பிக்கை தருகிறதா? போர்களுக்கு என்றாவது ஒரு முடிவு வருமா?
எல்லா போர்களுக்கும் முடிவுகட்டப்போகும் ஒரு போர்
பைபிள் ஒரு போரைப் பற்றிச் சொல்கிறது. அது மனிதகுலத்தை அழிப்பதற்குப் பதிலாக அதைக் காப்பாற்றப்போகிறது. அந்தப் போரின் பெயர் அர்மகெதோன். அது ‘சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கப்போகும் போர்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 16:14, 16) இந்தப் போரின் மூலம் மனித ஆட்சி எல்லாவற்றுக்கும் கடவுள் முடிவுகட்டப்போகிறார். ஏனென்றால், எக்கச்சக்கமான உயிர்களைக் குடித்திருக்கும் போர்களுக்குக் காரணமே மனித ஆட்சிதான்! அர்மகெதோன் எப்படி இந்த உலகத்துக்கு நிரந்தரமான சமாதானத்தைக் கொண்டுவரும் என்று தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரைகளைப் பாருங்கள்: