Skip to content

பேரழிவு தாக்கும்போது, அன்பு நம்மைச் செயல்பட தூண்டும்

பேரழிவு தாக்கும்போது, அன்பு நம்மைச் செயல்பட தூண்டும்

சக கிறிஸ்தவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவி தேவைப்படும்போது, யெகோவாவின் சாட்சிகள் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள். உண்மை கிறிஸ்தவர்களுக்கு அடையாளமாக இருக்கும் அன்பின் அடிப்படையில் அவர்கள் அப்படிச் செய்கிறார்கள்.—யோவான் 13:35.

2012-ன் மத்திபம் வரை, 12 மாதங்களுக்குமேல் யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களுக்கு உதவியிருக்கிறார்கள்; அதற்கான சில உதாரணங்கள் மட்டுமே இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆன்மீக ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் நாங்கள் செய்கிற உதவிகள் இங்கே பட்டியலிடப்படவில்லை. கிளை அலுவலகத்தால் நியமிக்கப்படுகிற நிவாரண குழு மற்றவர்களுக்கு உதவுவதற்கான ஏற்பாடுகளை செய்கிறது. அதோடு, உள்ளூர் சபைகளும் மற்றவர்களுக்குத் தேவையான உதவியைச் செய்கின்றன.

ஜப்பான்

ஜப்பான்: மார்ச் 11, 2011-ல், பூமி அதிர்ச்சியும் அதைத் தொடர்ந்து வந்த சுனாமியும் வட ஜப்பானைத் தாக்கியது. அதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய பணம், திறமை மற்றும் வளங்களை நிவாரண வேலைக்காகத் தாராளமாகப் பயன்படுத்தினார்கள்.

பிரேசில்: வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும், சேற்றுச்சரிவாலும் நூற்றுக்கணக்கான ஆட்கள் உயிர் இழந்திருக்கிறார்கள். இவற்றால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு 42,000 கிலோ கெட்டுப்போகாத உணவு பொருள்களையும், 10,000 கிலோ துணிமணிகளையும், 5,000 கிலோ சுத்தம் செய்யும் பொருள்களையும், 20,000 தண்ணீர் பாட்டில்களையும் யெகோவாவின் சாட்சிகள் அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதோடு, அவர்களுக்குத் தேவையான மருந்துகளையும் மற்ற பொருள்களையும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

காங்கோ (ப்ரஜாவில்): வெடிமருந்து கிடங்கு வெடித்ததால், நான்கு யெகோவாவின் சாட்சிகளுடைய வீடுகள் நாசமாயின. அதோடு, 28 யெகோவாவின் சாட்சிகளுடைய வீடுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும் துணிமணிகளும் கொடுக்கப்பட்டன. உள்ளூர் யெகோவாவின் சாட்சிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களை தங்கள் வீட்டில் தங்க வைத்துக்கொண்டார்கள்.

காங்கோ (கின்ஷாசா): காலரா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டன. அடை மழையால் வந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணிமணிகள் கொடுக்கப்பட்டன. அகதிகள் முகாம்களில் இருப்பவர்களுக்கு மருத்துவ உதவிகளும், செடி வளர்ப்பதற்குத் தேவையான விதைகளும், கிலோ கணக்கில் துணிமணிகளும் கொடுக்கப்பட்டன.

வெனிசுவேலா: கன மழையால் வெள்ளமும் சேற்றுச்சரிவுகளும் ஏற்பட்டன. நிவாரணக் குழு, பாதிக்கப்பட்ட 288 யெகோவாவின் சாட்சிகளுக்கு உதவி செய்தது. 50-க்கும் அதிகமான புது வீடுகள் கட்டித்தரப்பட்டன. அதோடு, வாலென்சியா ஏரியின் நீர் அளவு அதிகரித்ததால், அங்கே இருக்கும் வீடுகளில் வெள்ளம் புகுவதற்கான அபாயம் இருந்தது. அதனால், நிவாரணக் குழு அவர்களுக்கும் உதவி செய்தது.

பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ்: கடும் புயலால் சில இடங்களில் வெள்ளம் வந்தது. கிளை அலுவலகம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருள்களையும் துணிமணிகளையும் அனுப்பி வைத்தது. தண்ணீர் வடிந்த பிறகு, பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்ய உள்ளூரில் இருந்த யெகோவாவின் சாட்சிகள் உதவினார்கள்.

கனடா: ஆல்பர்ட்டாவில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. அந்த இடத்தைச் சுத்தம் செய்ய, ‘ஸ்லேவ் லேக்’ சபைக்கு நிறைய பணம் நன்கொடையாக வந்தது. ஆனால், அவர்களுக்கு அந்த எல்லா பணமும் தேவைப்படவில்லை. அதனால், நன்கொடையாக வந்த பாதிக்கும் அதிகமான பணத்தை, பேரழிவால் பாதிக்கப்பட்ட உலகத்தின் மற்ற இடங்களுக்கு அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

கோட் டீவார்: போருக்கு முன்பும், போரின்போதும், போருக்குப் பின்பும் இங்கிருந்தவர்களுக்குத் தேவையான பொருள்கள் கொடுக்கப்பட்டன. அதோடு தங்கும் வசதியும், மருத்துவ உதவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன.

பிஜி: கன மழை காரணமாக பயங்கர வெள்ளம் ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட 192 யெகோவாவின் சாட்சி குடும்பங்கள், தங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த விவசாய நிலங்களை இழந்தார்கள். அதனால், அவர்களுக்குத் தேவையான உணவு பொருள்கள் கொடுக்கப்பட்டன.

கானா: கிழக்குப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்குத் தேவையான உணவும் வீடும் கொடுக்கப்பட்டன. செடி வளர்ப்பதற்குத் தேவையான விதையும் கொடுக்கப்பட்டன.

ஐக்கிய மாகாணங்கள்: மூன்று மாநிலங்களில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய 66 வீடுகள் சூறாவளியால் சேதமடைந்தன. மற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய 12 வீடுகளும் நாசமாயின. இவர்களில் பெரும்பாலோருக்கு வீட்டுக்கான காப்பீடு இருந்தாலும், நிவாரண வேலைக்காக அவர்களுக்கு நன்கொடைகள் கொடுக்கப்பட்டன.

அர்ஜென்டினா: தெற்குப் பகுதியில் இருக்கும் வீடுகள் எரிமலை சாம்பலால் சேதமடைந்தன. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் உதவி செய்தார்கள்.

மொசாம்பிக்: பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட 1000-க்கும் அதிகமானவர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டது.

நைஜீரியா: பயங்கரமான பேருந்து விபத்தில் காயமடைந்த 24 யெகோவாவின் சாட்சிகளுக்குப் பண உதவி அளிக்கப்பட்டது. வடக்கு பகுதியில் ஏற்பட்ட இனம் மற்றும் மத கலவரத்தால், தங்கள் வீடுகளை இழந்த நிறைய பேருக்கு உதவி அளிக்கப்பட்டது.

பெனின்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து, துணிமணி, கொசு வலை, தங்கும் வசதி, சுத்தமான தண்ணீர் ஆகியவை கொடுக்கப்பட்டன.

டொமினிகன் குடியரசு

டொமினிகன் குடியரசு: ஐரீன் சூறாவளிக்குப் பிறகு, உள்ளூர் சபைகள் பாதிக்கப்பட்டவர்களுடைய வீடுகளைச் சரி செய்து கொடுத்தன, அவர்களுக்குப் பொருளுதவியும் செய்தன.

எத்தியோப்பியா: இரண்டு பகுதிகள் பஞ்சத்தாலும், ஒரு பகுதி வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டன. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான பண உதவி செய்யப்பட்டது.

கென்யா: பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பண உதவி செய்யப்பட்டது.

மலாவி: ஸலேகா அகதிகள் முகாமில் இருந்தவர்களுக்கு உதவி அளிக்கப்பட்டது.

நேபாளம்: ஒரு யெகோவாவின் சாட்சியுடைய வீடு நிலச்சரிவால் பயங்கரமாகச் சேதமடைந்தது. அந்தப் பெண் தற்காலிகமாகத் தங்குவதற்கு ஒரு வீடு ஏற்பாடு செய்யப்பட்டது. உள்ளூர் சபையும் அவருக்கு உதவி செய்தது.

பாப்புவா-நியூ கினி: தீ வைக்கும் வெறியர்கள், 8 யெகோவாவின் சாட்சிகளுடைய வீடுகளை எரித்து சாம்பலாக்கினார்கள். பாதிக்கப்பட்டவர்களுடைய வீடுகளை மறுபடியும் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

ரொமேனியா: யெகோவாவின் சாட்சிகளில் சிலர் வெள்ளத்தால் தங்கள் வீடுகளை இழந்தார்கள். அவர்களுடைய வீடுகளை மறுபடியும் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

மாலி: வறட்சியின் காரணமாக சரியான விளைச்சல் இல்லாமல் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. பக்கத்து ஊரான செனிகல் இவர்களுக்குப் பண உதவி செய்தது.

சியர்ரா லியோன்: பிரான்சைச் சேர்ந்த மருத்துவர்கள் (இவர்கள் யெகோவாவின் சாட்சிகள்), போரால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்தவர்களுக்கு மருத்துவ உதவி அளித்தார்கள்.

தாய்லாந்து: மோசமான வெள்ளத்தால் பல மாநிலங்கள் பயங்கரமாகச் சேதமடைந்தன. நிவாரணக் குழுக்கள், 100 வீடுகளையும் 6 ராஜ்ய மன்றங்களையும் சுத்தம் செய்து பழுதுபார்த்தார்கள்.

செக் குடியரசு: வெள்ளம் வந்ததால் இங்கே பல வீடுகள் சேதமடைந்தன. பக்கத்து ஊரான ஸ்லோவாக்யாவில் இருந்த யெகோவாவின் சாட்சிகள் இங்கே வந்து நிவாரண வேலையில் ஈடுபட்டார்கள்.

இலங்கை: இங்கே சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண வேலை பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது.

சூடான்: இந்த நாட்டில் நடந்த சண்டையின் காரணமாக துரத்தப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுக்கு உணவு, துணிமணி, ஷூ, பிளாஸ்டிக் ஷீட் ஆகியவை அனுப்பப்பட்டன.

டான்ஜானியா: பயங்கரமான வெள்ளத்தால் 14 குடும்பங்கள் தங்கள் உடைமைகளை இழந்தன. இந்தப் பகுதியில் இருந்த சபைகள், இவர்களுக்குத் துணிமணிகளையும் வீட்டுக்குத் தேவையான பொருள்களையும் கொடுத்து உதவி செய்தன. அதோடு, ஒரு வீடும் கட்டித்தரப்பட்டது.

ஜிம்பாப்வே: வறட்சியால் ஒரு பகுதியில் பஞ்சம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும் பணமும் கொடுக்கப்பட்டது.

புரூண்டி: மருத்துவ உதவி உட்பட மற்ற நிவாரண உதவியும் அகதிகளுக்குக் கொடுக்கப்பட்டது.