Skip to content

சிறு துளி பெரு வெள்ளம்

சிறு துளி பெரு வெள்ளம்

 குவாதமாலாவில் இருக்கும் மார்த்தா என்ற பெண் ஒரு யெகோவாவின் சாட்சி. கெக்சி மொழி பேசுகிறவர்களிடம் பைபிள் செய்தியைச் சொல்வதற்காக அந்த மொழியை அவர் கற்றுவருகிறார். ஒருநாள், ஆஸ்பத்திரியிலிருந்து ஒருவர் வெளியே போவதை அவர் பார்த்தார். அந்த நபர் ஒரு மலைப்பகுதியில் இருந்த கெக்சி கிராமத்தைச் சேர்ந்தவரைப் போலத் தெரிந்தார். அங்கே யெகோவாவின் சாட்சிகள் அவ்வளவாக ஊழியம் செய்தது இல்லை. அதனால், தனக்குத் தெரிந்த அரைகுறை கெக்சியில் அந்த நபரிடம் மார்த்தா பேசினார்.

 பைபிளைக் கற்றுக்கொள்ள விருப்பமா என்று மார்த்தா அவரிடம் கேட்டார். விருப்பம்தான் என்று அவர் சந்தோஷமாக சொன்னார். ஆனால், அதற்குத் தன்னிடம் பணம் இல்லை என்பதாகச் சொன்னார். யெகோவாவின் சாட்சிகள் இலவசமாக பைபிளைக் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதை மார்த்தா விளக்கினார். ஃபோனில்கூட படிக்கலாம், குடும்பத்தோடு சேர்ந்து படிக்கலாம் என்றெல்லாம் சொன்னார். அந்த நபர் அதற்கு ஒத்துக்கொண்டார். அவருக்கு ஸ்பானிஷ் மொழியில் பேசவும் வாசிக்கவும் தெரியும். அதனால், புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளை ஸ்பானிஷ் மொழியில் மார்த்தா அவருக்குக் கொடுத்தார். அதோடு, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தை கெக்சி மொழியில் கொடுத்தார். அது பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்படும் புத்தகம். அடுத்த வாரம், அந்த நபரும் அவருடைய மனைவியும் இரண்டு பிள்ளைகளும் ஃபோனில் மார்த்தாவோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள். அதுவும் வாரத்தில் இரண்டு தடவை! “எனக்கு கெக்சி மொழி சரியா தெரியாததால நாங்க ஸ்பானிஷ் மொழியில படிச்சோம். நான் சொல்றத அவரோட மனைவிக்கு கெக்சி மொழியில அவரு சொல்வாரு. ஆனா பிள்ளைங்க ஸ்பானிஷ் மொழிய புரிஞ்சுகிட்டாங்க” என்று மார்த்தா சொல்கிறார்.

 அவர் சர்ச்சில் ஒரு பாஸ்டராக இருந்தார். பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட புதிய விஷயங்களைத் தன்னுடைய சர்ச்சுக்கு வருகிறவர்களுக்கு அவர் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். அந்த விஷயங்கள் அவர்களுக்குப் பிடித்துப்போனதால், அதையெல்லாம் எங்கிருந்து கற்றுக்கொண்டார் என்று கேட்டார்கள். ஃபோனில் பைபிள் படிப்பதைப் பற்றி அவர் சொன்னபோது, அவர்களும் ஒவ்வொருவராக அந்தப் படிப்புக்கு வர ஆரம்பித்தார்கள். கொஞ்ச நாளில், கிட்டத்தட்ட 15 பேர் ஒவ்வொரு வாரமும் மார்த்தாவோடு ஃபோனில் படித்தார்கள். எல்லாருக்கும் கேட்பதற்காக ஃபோனுக்குப் பக்கத்தில் அவர்கள் ஒரு மைக்கை வைத்துவிட்டார்கள்.

 அவர்கள் பைபிள் படிப்பதைப் பற்றி மார்த்தா தன்னுடைய சபை மூப்பர்களிடம் சொன்னார். அந்த மூப்பர்களில் ஒருவர் அந்தக் கிராமத்துக்குப் போய் அவர்களைப் பார்த்தார். இன்னொரு கிராமத்தில் ஒரு வட்டாரக் கண்காணி a கொடுக்கவிருந்த பொதுப் பேச்சுக்கு அவர்களை அழைத்தார். அந்தக் கிராமத்துக்குப் போக முதலில் அவர்கள் ஒருமணிநேரம் காரில் போக வேண்டியிருந்தது. அதன்பின் இரண்டு மணிநேரம் நடந்து போக வேண்டியிருந்தது. ஆனாலும், அவர்கள் ஒத்துக்கொண்டார்கள். மொத்தம் 17 பேர் அந்தப் பேச்சைக் கேட்பதற்காகப் போனார்கள்.

 சில வாரங்களுக்குப் பிறகு, அந்த வட்டாரக் கண்காணியும் வேறு சில யெகோவாவின் சாட்சிகளும் அங்கு பைபிள் படிப்பவர்களோடு நான்கு நாட்கள் செலவு செய்தார்கள். காலை நேரங்களில், jw.org வெப்சைட்டிலுள்ள கெக்சி மொழி வீடியோக்களைப் போட்டுக் காட்டினார்கள். அதோடு, இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்? என்ற சிறு புத்தகத்திலிருந்து படித்தார்கள். மத்தியான நேரங்களில், JW பிராட்காஸ்டிங்கிலுள்ள வீடியோக்களைப் பார்த்தார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பைபிளைக் கற்றுக்கொடுக்க அந்த வட்டாரக் கண்காணி ஏற்பாடு செய்தார்.

 அந்த நான்கு நாட்களும், பக்கத்திலிருந்த கெக்சி கிராமங்களில்கூட அந்த யெகோவாவின் சாட்சிகள் ஊழியம் செய்தார்கள். ஒரு விசேஷக் கூட்டத்துக்கு வரும்படி அங்கிருந்த மக்களை அழைத்தார்கள். அந்தக் கூட்டத்துக்கு 47 பேர் வந்திருந்தார்கள். பைபிளைக் கற்றுக்கொள்ளும்படி அவர்கள் ஒவ்வொருவரையும் யெகோவாவின் சாட்சிகள் கேட்டுக்கொண்டார்கள். 11 குடும்பங்கள் அதற்கு ஒத்துக்கொண்டார்கள்.

 சில மாதங்களுக்குப் பிறகு, அந்த முதல் கிராமத்தில் வாராவாரம் ஒரு கூட்டத்தை நடத்த மூப்பர்கள் ஏற்பாடு செய்தார்கள். இப்போது, கிட்டத்தட்ட 40 பேர் தவறாமல் கூட்டங்களுக்கு வருகிறார்கள். இயேசுவின் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு 91 பேர் வந்திருந்தார்கள்.

 இந்த அனுபவத்தைப் பற்றி மார்த்தா இப்படிச் சொல்கிறார்: “யெகோவாவுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். என்னால பெரிசா எதுவும் செய்ய முடியாதுனு சிலசமயங்கள்ல நினைப்பேன். ஆனா, கடவுள் நம்மள ஒரு கருவியா பயன்படுத்துறாரு. அந்தக் கிராமத்து ஜனங்களோட மனச பார்த்து, தன் மக்களோட சேர்த்துக்கிட்டாரு. யெகோவா அவங்கமேல ரொம்ப அன்பு வெச்சுருக்காரு.”

a வட்டாரக் கண்காணி என்பவர் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியர்; ஒரு வட்டாரத்தை, அதாவது கிட்டத்தட்ட 20 சபைகளை, அவர் சந்திப்பார்.