பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
”தெருவே எனக்கு வீடானது“
பிறந்த வருஷம்: 1955
பிறந்த நாடு: ஸ்பெயின்
என்னைப் பற்றி: போதை மருந்துக்கும் மதுவுக்கும் அடிமையாக இருந்தேன், வன்முறையில் இறங்கினேன்
என் கடந்த கால வாழ்க்கை
சில பேர் வாழ்க்கையில் அடிபட்டு, அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்கிறார்கள்; அதிலும், சில பேர் ரொம்ப காலம் கழித்துதான் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களில் நானும் ஒருவன்! நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே பார்சிலோனா நகரத்தில்தான். இது ஸ்பெயின் நாட்டின் இரண்டாவது பெரிய நகரம். பார்சிலோனாவில், சோமோரோஸ்ட்ரோ என்ற பகுதியில்தான் நாங்கள் வாழ்ந்தோம். பார்சிலோனாவின் கடற்கரையின் பெரும்பகுதி இங்கேதான் இருந்தது. சோமோரோஸ்ட்ரோ, குற்றங்களுக்கும் போதை மருந்து விற்பனைக்கும் பேர்போன இடம்.
எங்கள் அப்பா அம்மாவுக்கு ஒன்பது பிள்ளைகள், நான்தான் மூத்தவன். நாங்கள் காசு பணத்துக்கு ரொம்பக் கஷ்டப்பட்டோம். அதனால், எங்கள் ஊரில் இருந்த ஒரு டென்னிஸ் கிளப்பில் பந்து பொறுக்கி போடுகிற வேலைக்கு என் அப்பா என்னை அனுப்பினார். அப்போது எனக்கு பத்து வயதுதான். ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் வேலை செய்தேன். அதனால், என் வயதிலிருந்த மற்ற பிள்ளைகளைப் போல் என்னால் பள்ளிக்குப் போக முடியவில்லை. எனக்கு 14 வயது இருக்கும்போது, ஒரு கடையில் மெஷின் ஓட்டுகிற வேலையைச் செய்தேன்.
1975-ல் ராணுவத்தில் சேர்ந்தேன். ஏனென்றால், இளைஞர்கள் ராணுவத்தில் கண்டிப்பாகச் சேவை செய்ய வேண்டும் என்ற சட்டம் ஸ்பெயினில் இருந்தது. என்னுடைய வாழ்க்கை வீரதீர சாகசங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். அதனால், வட ஆப்பிரிக்காவில் இருக்கிற ஸ்பானிய பகுதியான மெலில்லாவுக்குப் போய், அங்கிருந்த ஸ்பானிஷ் ஃபாரின் லீஜியன் (Spanish Foreign Legion) என்ற ராணுவப் பிரிவில் சேர்ந்தேன். அங்கே இருக்கும்போதுதான், போதை மருந்துக்கும், மதுவுக்கும் அடிமையானேன்.
அந்த ராணுவப் பிரிவில் சேவை செய்து முடித்த பிறகு, பார்சிலோனாவுக்குத் திரும்பிப் போய் அங்கே ஒரு ரவுடி கும்பலை உருவாக்கினேன். கையில் கிடைத்ததை எல்லாம் நாங்கள் திருட ஆரம்பித்தோம். பிறகு, அவற்றை விற்று, போதை மருந்தை வாங்கினோம்; போதையில் மிதந்தோம். அடுத்த கட்டமாக, நான் இன்னும் மோசமான போதை மருந்துகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். ஒழுக்கக்கேடு... குடி... சூதாட்டம்... இவற்றிலேயே மூழ்கிப்போனேன். இப்படியொரு வாழ்க்கை வாழ்ந்ததால், என்னுடைய முரட்டுத்தனம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது. கத்தி, கோடாரி, வெட்டுக்கத்தி இல்லாமல் வெளியே போகவே மாட்டேன். தேவைப்பட்டால் அவற்றைக் கையில் எடுக்கவும் தயங்க மாட்டேன்.
ஒரு தடவை, நாங்கள் ஒரு காரைத் திருடினோம். போலீஸ்காரர்கள் எங்களைத் துரத்த ஆரம்பித்தார்கள். ஏதோ சினிமா காட்சி மாதிரிதான் இருந்தது! நாங்கள் திருடிய அந்த காரை ஓட்டிக்கொண்டு கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தூரம் போயிருப்போம். அந்தச் சமயத்தில், போலீஸ்காரர்கள் பின்னாலிருந்து எங்களைச் சுட ஆரம்பித்தார்கள். கடைசியில், எங்கள் காரை ஓட்டியவன் அதை ஒரு இடத்தில் மோதிவிட்டான். எல்லாரும் அங்கிருந்து தெறித்து ஓடினோம். என் அப்பாவுக்கு விஷயம் தெரிந்ததும், முதல் வேலையாக என்னை வீட்டை விட்டு துரத்திவிட்டார்.
அடுத்த ஐந்து வருஷங்களுக்கு, தெருவே எனக்கு வீடானது. வாசல், ட்ரக், பூங்கா பென்ச், கல்லறை என கண்ட இடங்களில் தூங்கினேன். கொஞ்ச நாளைக்கு ஒரு குழியில்கூட தங்கினேன். எதற்காக வாழ்கிறேன் என்றே தெரியாமல் வாழ்ந்தேன். நான் இருந்தால் என்ன, செத்தால் என்ன என்று தோன்றியது. போதையில் என் மணிக்கட்டையும் கையையும் அறுத்துக்கொண்டேன். அந்தத் தழும்புகள் இப்போதுகூட இருக்கின்றன.
பைபிள் என் வாழ்க்கையையே மாற்றியது
எனக்கு 28 வயது இருக்கும்போது, என் அம்மா என்னைத் தேடி வந்து, வீட்டுக்கு வரச் சொல்லி கூப்பிட்டார். வீட்டுக்குப் போவதுதான் சரியென்று எனக்குத் தோன்றியது. இனிமேல் திருந்தி வாழ்கிறேன் என்று அம்மாவுக்குச் சத்தியம் செய்து கொடுத்தேன். ஆனால், செய்த சத்தியத்தைக் காப்பாற்றுவதற்குக் கொஞ்ச காலம் ஆனது.
ஒருநாள் மதியம், யெகோவாவின் சாட்சிகளில் இரண்டு பேர் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். அவர்கள் சொல்வதை நான் கேட்டுக்கொண்டு இருந்தேன். அப்போது என் அப்பா ‘அவங்ககிட்ட என்ன பேச்சு, கதவ சாத்திட்டு உள்ள வா’ என்று வீட்டுக்குள் இருந்து கத்தினார். இப்படியெல்லாம் அதிகாரம் செய்தால் எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது. அதனால், அவர் கத்துவதைக் கண்டுகொள்ளாமல், அவர்கள் சொல்வதைக் கேட்டேன். அவர்கள் மூன்று சிறிய புத்தகங்களைக் கொடுத்தார்கள். அதையும் வாங்கிக்கொண்டேன். அவர்களுடைய கூட்டம் எங்கே நடக்கிறது என்று விசாரித்தேன். ஒருசில நாட்களிலேயே, ராஜ்ய மன்றத்துக்குப் போனேன். ஆனால், உள்ளே போகாமல் வெளியிலேயே நின்றுகொண்டேன்.
அங்கே வருகிறவர்களுடைய உடைதான் முதலில் என் கண்ணில் பட்டது! எல்லாரும் ரொம்ப அழகாக உடை உடுத்தியிருந்தார்கள். நீளமான தலைமுடி, வெட்டப்படாத தாடி, ஏனோதானோவென்ற உடை என நான் ஒருவன் மட்டும் ரொம்ப வித்தியாசமாக இருந்தேன். அதனால் உள்ளே போகாமல் வெளியிலேயே நின்றுகொண்டிருந்தேன். அப்போதுதான், க்வான் அங்கே வருவதைப் பார்த்தேன். அவர் என்னுடைய முன்னாள் கூட்டாளி. ஆனால், இப்போது கோட் சூட் போட்டுக்கொண்டு ஆளே மாறியிருந்தார். ஒரு வருஷத்துக்கு முன்னால் அவர் யெகோவாவின் சாட்சியாக ஆகியிருந்ததை பிறகுதான் தெரிந்துகொண்டேன். க்வான் இருந்ததால், நான் தைரியமாக உள்ளே போய், கூட்டத்தில் கலந்துகொண்டேன். அதுதான் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை!
பைபிள் படிப்புக்கு நான் ஒத்துக்கொண்டேன். கடவுளுடைய அன்பைப் பெற வேண்டுமென்றால், என்னுடைய முரட்டுத்தனத்துக்கும் ஒழுக்கக்கேடான வாழ்க்கைக்கும் முடிவுகட்ட வேண்டும் என்று புரிந்தது. ஆனால், அதைச் செய்வதுதான் கஷ்டமாக இருந்தது. யெகோவா தேவனை சந்தோஷப்படுத்த வேண்டுமென்றால், நான் ‘யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் என்னையே மாற்றிக்கொள்ள’ வேண்டும் என்பதும் புரிந்தது. (ரோமர் 12:2) கடவுளுடைய இரக்கம் என் நெஞ்சைத் தொட்டது. நான் எத்தனையோ தவறுகளைச் செய்திருந்தாலும், இப்போது ஒரு புது மனிதனாக வாழ அவர் எனக்கு வாய்ப்பு கொடுக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். யெகோவா தேவனைப் பற்றிக் கற்றுக்கொண்ட ஒவ்வொரு விஷயமும் என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்தது. என்மேல் அக்கறை வைத்திருக்கிற படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பது எனக்கு நன்றாகப் புரிய ஆரம்பித்தது.—1 பேதுரு 5:6, 7.
இதுதான் மாற்றங்களைச் செய்ய என்னை தூண்டியது. உதாரணத்துக்கு, புகையிலையைப் பற்றி பைபிள் படிப்பில் தெரிந்துகொண்டபோது, ‘நான் எந்த கறையும் இல்லாம, எல்லா விதத்துலயும் சுத்தமா இருக்கணும்னு யெகோவா தேவன் ஆசப்படுறாரு. அப்படினா, நான் இந்த சிகரெட்டுக்கு குட்பை சொல்லியே ஆகணும்’ என்று முடிவெடுத்தேன். (2 கொரிந்தியர் 7:1) அன்றே அதையெல்லாம் குப்பைத்தொட்டியில் வீசி எறிந்தேன்!
போதை மருந்துகளை பயன்படுத்துவதையும் விற்பதையும் நிறுத்துவதற்குத்தான் கொஞ்ச காலம் எடுத்தது. அதற்காக நான் நிறைய முயற்சி செய்ய வேண்டியிருந்தது. பழைய கூட்டாளிகளோடு தொடர்பு இருக்கும்வரை இதையெல்லாம் என்னால் செய்ய முடியாது என்பதும், ஆன்மீக விஷயங்களில் முன்னேற வேண்டுமென்றால் அவர்களோடு பழகுவதை நான் நிறுத்தியே ஆகவேண்டும் என்பதும் புரிந்தது. அதற்குப் பிறகு, கடவுளை அதிகமாக நம்பியிருக்க கற்றுக்கொண்டேன். சபையில் கிடைத்த புது நண்பர்களும் எனக்கு ரொம்ப உதவி செய்தார்கள். அவர்கள் என்னையும் ஒரு மனிதனாக மதித்து, அன்பும் அக்கறையும் காட்டியது எனக்கு புது அனுபவமாக இருந்தது. அடுத்த சில மாதங்களில் போதையின் பிடியிலிருந்து முழுவதுமாக வெளியே வந்தேன். ‘புதிய சுபாவத்தை அணிந்துகொண்டேன்.’ (எபேசியர் 4:24) அதனால், கடவுளுடைய பிரியத்தைச் சம்பாதிக்க முடிந்தது. ஆகஸ்ட் 1985-ல், நான் ஞானஸ்நானம் எடுத்தேன்.
எப்படி நன்மை அடைந்தேன்
பைபிள் என்னை ஒரு புதிய மனிதனாக மாற்றியது. என் உடம்பு கெட்டுப்போனதுக்கும், என்னுடைய மரியாதையை நான் இழந்ததுக்கும் காரணம் என்னுடைய பழைய வாழ்க்கைதான். அந்தச் சேற்றிலிருந்து பைபிள் என்னைத் தூக்கிவிட்டது. என்னுடைய முன்னாள் கூட்டாளிகளில் 30 பேர், எய்ட்ஸ் நோயால் அல்லது போதை மருந்தால் வந்த மற்ற கோளாறுகளினால் பாதிக்கப்பட்டு சின்ன வயதிலேயே இறந்துவிட்டார்கள். பைபிள் சொல்வது போல் நடந்ததால் நான் தப்பித்தேன்.
நான் முரடனாக இருந்த காலத்தில், எப்போதுமே கத்தி, கோடாரியோடுதான் திரிந்தேன். கத்தியைத் தூக்கிய கையால் ஒருநாள் பைபிளைத் தூக்குவேன்... மற்றவர்களுக்கு உதவி செய்வேன்... என்றெல்லாம் கனவில்கூட நினைத்ததில்லை. இப்போது, நானும் என் மனைவியும் முழுநேரமாக ஊழியம் செய்கிறோம்.
என்னுடைய அப்பாவும் அம்மாவும் யெகோவாவின் சாட்சிகளாக ஆகவே இல்லை. ஆனால், பைபிள் படித்த பிறகு நான் மாறியதைப் பார்த்து அவர்கள் ரொம்பச் சந்தோஷப்பட்டார்கள். என்னுடைய அப்பாவுடன் வேலை செய்கிறவர்கள் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றித் தவறாகப் பேசியபோது, அவர் எல்லாருக்கும் முன்பாக சாட்சிகளுக்கு ஆதரவாகப் பேசினார். ஏனென்றால், என் வாழ்க்கை நல்லபடியாக மாறியதற்கு நான் ஒரு யெகோவாவின் சாட்சி ஆனதுதான் காரணம் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். என் அம்மா என்னிடம், ‘நீ முன்னாடியே பைபிள படிச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்’ என்று அடிக்கடி சொல்வார். அது நூற்றுக்கு நூறு உண்மை!
போதை மருந்தோ, மோசமான மற்ற பழக்கங்களோ வாழ்க்கையில் திருப்தியைத் தராது என்பதை அடிபட்டு கற்றுக்கொண்டேன். அதனால், கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற சத்தியங்களை மற்றவர்களுக்குச் சொல்லித் தந்து, உண்மையான திருப்தியை இப்போது அனுபவிக்கிறேன். ஏனென்றால், இந்தச் சத்தியம்தான் என் வாழ்க்கையைக் காப்பாற்றியது.