பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
“குற்றச்செயலும் பண ஆசையும் எனக்கு வேதனையைதான் கொடுத்தது”
பிறந்த வருஷம்: 1974
பிறந்த இடம்: அல்பேனியா
என்னைப் பற்றி: திருடன், போதைப்பொருள் விற்கிறவன், சிறைக்கைதி
என் கடந்த காலம்
அல்பேனியா நாட்டின் தலைநகரமான டிரானே என்ற இடத்தில் ஓர் ஏழை குடும்பத்தில் நான் பிறந்தேன். என்னுடைய அப்பா ரொம்ப நேர்மையானவர். எங்களை நன்றாகக் கவனித்துக்கொள்வதற்காக ரொம்ப நேரம் வேலை செய்தார். ஆனாலும் எங்களுடைய வாழ்க்கையை ஓட்டுவதற்கே நாங்கள் படாதபாடுபட வேண்டியிருந்தது. நான் சின்னப் பையனாக இருந்தபோதே நாங்கள் ஏழையாக இருந்ததை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டேன். ஏனென்றால், நிறைய சமயங்களில் எனக்கு போட்டுக்கொள்ள ஷூ இருக்காது, போதுமான சாப்பாடும் இருக்காது.
என் குடும்பத்துக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதனால், சின்ன வயதிலேயே திருட ஆரம்பித்தேன். சீக்கிரத்தில் நான் போலீஸிடம் மாட்டிக்கொண்டேன். அதனால், 1988-ல் எனக்கு 14 வயது இருந்தபோது என்னுடைய அப்பா என்னைச் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தார். இரண்டு வருஷங்கள் நான் அங்கே இருந்தேன். அப்போது வெல்டிங் செய்யும் வேலையைக் கற்றுக்கொண்டேன். அங்கிருந்து வெளியே வந்தபோது நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், எனக்கு வேலை கிடைக்கவில்லை. அல்பேனியாவில் அரசியல் பிரச்சினைகள் இருந்ததால் நிறையப் பேருக்கு வேலை இல்லாமல் இருந்தது. எவ்வளவு தேடியும் வேலை கிடைக்காததால் மறுபடியும் நான் என்னுடைய பழைய நண்பர்களோடு சேர்ந்து திருட ஆரம்பித்தேன். சீக்கிரத்தில் என்னையும் என்னுடைய நண்பர்களையும் போலீஸ் பிடித்துவிட்டது. மூன்று வருஷங்கள் நாங்கள் சிறையில் இருந்தோம்.
நான் சிறையிலிருந்து வந்த பிறகும் குற்றச்செயல்களைச் செய்துக் கொண்டே இருந்தேன். அல்பேனியா நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக இருந்ததால் அந்த நாடு முழுவதும் குழப்பத்தில் இருந்தது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, சட்டவிரோதமான செயல்களைச் செய்து நிறையப் பணம் சம்பாதித்தேன். ஒருமுறை துப்பாக்கியைக் காட்டி நாங்கள் கொள்ளையடித்தோம். அப்போது என்னுடைய நண்பர்கள் இரண்டு பேரை போலீஸ் கைது செய்தது. அதனால், என்னையும் கைது செய்துவிடுவார்களோ, ரொம்ப நாட்கள் சிறையில் அடைத்துவிடுவார்களோ என்று பயந்து வேறொரு நாட்டுக்கு ஓடிப் போனேன். பின்பு, நான் யூலின்டா என்ற பெண்ணைக் கல்யாணம் செய்துக் கொண்டேன். எங்களுக்கு ஒரு குட்டிப் பையன் பிறந்தான்.
பிறகு, நாங்கள் இங்கிலாந்துக்குப் போனோம். என்னுடைய மனைவியோடும் மகனோடும் சேர்ந்து ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய குறியாக இருந்தது. ஆனால், என்னுடைய பழைய பழக்கவழக்கங்கள் எனக்குள் ஊறிப்போயிருந்ததால் அதை விடுவது எனக்குப் போராட்டமாக இருந்தது. அதனால், நான் மறுபடியும் குற்றச்செயல்களைச் செய்ய ஆரம்பித்தேன். இந்தமுறை போதைப்பொருள்களை விற்றேன். அதனால், கை நிறையப் பணம் சம்பாதித்தேன்.
நான் போதைப்பொருள்கள் விற்பதைப் பற்றி யூலின்டா என்ன நினைத்தாள் தெரியுமா? அதை அவளே உங்களிடம் சொல்வாள்: “நான் அல்பேனியால வளந்ததால ஏழையா இருந்தேன். நான் வசதியா வாழ்றதுக்கு எதை வேணும்னாலும் செய்யலாம்னு நினைச்சேன். பணம் இருந்தாதான் சந்தோஷமா வாழ முடியும்ணு நினைச்சேன். அதனால பணம் சம்பாதிக்க என் கணவர் என்ன செஞ்சாலும், பொய் சொன்னாலும் திருடுனாலும் போதைப்பொருள் வித்தாலும் நான் அவருக்கு முழு ஆதரவு கொடுத்தேன்.”
பிறகு, 2002-ல் எங்களுடைய வாழ்க்கையே தலைகீழாக மாறியது. நாங்கள் கண்ட கனவு, பணத்தைச் சேர்ப்பதற்காக போட்டத் திட்டம் எல்லாமே மண்ணோடு மண்ணாகிவிட்டது. நான் பெரிய அளவில் போதைப்பொருள்களைக் கடத்தும்போது போலீஸ் என்னைப் பிடித்துவிட்டது. மறுபடியும் நான் சிறைக்குச் சென்றேன்.
பைபிள் என் வாழ்க்கையையே மாத்திடுச்சு
நான் பைபிளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பிப்பதற்கு முன்பே அது என் வாழ்க்கையை மாற்ற ஆரம்பித்தது. 2000-ல் யூலின்டா யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிள் படிப்பு படிக்க ஆரம்பித்தாள். பைபிளைப் பற்றி படிப்பதில் எனக்கு ஆர்வமே இல்லை. ‘அதெல்லாம் சுத்த போர்’ என்று நினைத்தேன். ஆனால், யூலின்டாவுக்கு அது ரொம்ப பிடித்திருந்தது. யூலின்டா இப்படிச் சொல்கிறார்: ”நான் கடவுள்பக்தியுள்ள ஒரு குடும்பத்துல வளந்தேன். அதனால எனக்கு பைபிளை பிடிக்கும், அதை நான் உயர்வா மதிக்கிறேன். பைபிள்ல என்ன இருக்குதுனு தெரிஞ்சுக்க எனக்கு ரொம்ப ஆசை. யெகோவாவின் சாட்சிகள் பைபிளை பத்தி சொல்லிக்கொடுத்தப்ப அது எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது. பைபிள்ல இருக்குற நிறைய விஷயங்கள என்னால நல்லா புரிஞ்சுக்க முடிஞ்சுது. என்னோட வாழ்க்கைல சில மாற்றங்கள செய்றதுக்கு அது ரொம்ப உதவியா இருந்துச்சு. ஆனாலும் பணத்த பத்தி என்னோட கண்ணோட்டம் கொஞ்சம்கூட மாறல. என்னோட கணவர் சிறைக்கு போனதுக்கு அப்புறம்தான் எனக்கு அந்த விஷயம் புரியவே ஆரம்பிச்சுது. பணத்த பத்தி பைபிள் சொல்றது உண்மை. பணம் பணம்னு அது பின்னாலயே ஓடுனோம். ஆனா, அது எங்களுக்கு சந்தோஷத்த கொடுக்கவே இல்ல. கடவுள் சொல்றத கேட்டு என்னோட வாழ்க்கைய முழுசா மாத்திக்கணும்னு நான் அப்பதான் புரிஞ்சுகிட்டேன்.“
2004-ல் நான் சிறையிலிருந்து வெளியே வந்தேன். மறுபடியும் போதைப்பொருள் விற்பனையில் இறங்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இந்தமுறை யூலின்டாவின் யோசிக்கும் விதம் மாறியிருந்தது. அவள் சொன்ன விஷயம் என்னுடைய வாழ்க்கையையே மாற்றிக்கொள்ள உதவியாக இருந்தது. ”எனக்கு இனிமே உங்க பணம் வேணாம். எனக்கு என்னோட கணவர் திரும்ப வேணும், என் குழந்தைங்களுக்கு அப்பா வேணும், நீங்க எங்க கூடவே இருக்கணும்“ என்று சொன்னாள். அவள் அப்படிச் சொல்வாள் என்று நான் கொஞ்சம்கூட நினைக்கவில்லை. ஆனால், அவள் சொன்னது உண்மைதான். நான் என் குடும்பத்தை விட்டு பல வருஷங்கள் தூரமாக இருந்துவிட்டேன். குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதற்காக நான் செய்த எல்லா விஷயங்களும் எவ்வளவு பிரச்சினைகளைக் கொண்டுவந்தது என்று நான் யோசித்தேன். அதனால், என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். பழைய நண்பர்களோடு பழகுவதையே நிறுத்திவிட்டேன்.
பிறகு, நான் என்னுடைய மனைவியோடும் இரண்டு மகன்களோடும் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்துக்குப் போனேன். அங்கிருந்த எல்லாரும் நேர்மையானவர்களாக இருந்தார்கள், அன்பாகப் பழகினார்கள். இது என்னுடைய மனதைத் தொட்டது. அதனால், நான் பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டேன்.
நிறையப் பணம் இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று நான் நினைத்தேன்
”பண ஆசை எல்லா விதமான தீமைக்கும் வேராக இருக்கிறது; சிலர் இந்த ஆசையை வளர்த்துக்கொண்டு, . . . பலவிதமான வேதனைகளால் தங்கள் உடல் முழுவதும் குத்திக்கொண்டிருக்கிறார்கள்“ என்ற வசனத்தை நான் பைபிளிலிருந்து படித்தேன். (1 தீமோத்தேயு 6:9, 10) இந்த வசனம் எவ்வளவு உண்மை என்பதை என்னுடைய அனுபவத்திலிருந்தே தெரிந்துகொண்டேன். என்னுடைய பழைய வாழ்க்கையில் நான் செய்த தவறுகளால் ஏற்பட்ட பிரச்சினைகளையும் அதனால் எனக்கும் என்னுடைய குடும்பத்துக்கு வந்த வலிகளையும் யோசித்துப் பார்த்தபோது, ‘ஏன்டா இதெல்லாம் பண்ணேன்’ என்று நினைத்து ரொம்ப வருத்தப்பட்டேன். (கலாத்தியர் 6:7) யெகோவாவும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவும் நம்மேல் வைத்திருக்கும் அன்பைப் பற்றி தெரிந்துகொண்டபோது, நான் என்னுடைய சுபாவத்தை மாற்றிகொள்ள ஆரம்பித்தேன். என்னைப் பற்றி குறைவாக யோசித்தேன். மற்றவர்களைப் பற்றி அதிகமாக யோசிக்க ஆரம்பித்தேன். அதனால், என்னுடைய குடும்பத்தோடும் நிறைய நேரம் செலவிட முடிந்தது.
எனக்கு கிடைச்ச பலன்
”பண ஆசையில்லாமல் வாழுங்கள். உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்” என்ற பைபிள் ஆலோசனையைக் கடைப்பிடித்தது எனக்கு நிறைய நன்மைகளைக் கொடுத்தது. (எபிரெயர் 13:5) இப்போது நான் மனநிம்மதியோடு இருக்கிறேன்; சுத்தமான மனசாட்சியோடு இருக்கிறேன். இந்த மாதிரி சந்தோஷத்தை நான் இதற்கு முன்பு அனுபவித்ததே கிடையாது. இப்போது என்னுடைய திருமண பந்தம் பலமாகியிருக்கிறது. குடும்பமாக நாங்கள் எல்லாரும் நெருக்கமாக இருப்பது போல் உணருகிறோம்.
நிறையப் பணம் இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியும் என்று நான் நினைத்தேன். ஆனால், குற்றச்செயலும் பண ஆசையும் எனக்கு எவ்வளவு வேதனையைக் கொடுத்தது என்பதை நான் இப்போது தெளிவாகப் புரிந்துகொண்டேன். இப்போது எங்களிடம் நிறைய காசு பணம் இல்லைதான். ஆனால், எங்களிடம் மிகப் பெரிய சொத்து இருக்கிறது. அதுதான் யெகோவாவோடு எங்களுக்கு இருக்கும் நட்பு. குடும்பமாக யெகோவாவை ஒன்றுசேர்ந்து வணங்குவதால் நாங்கள் இப்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறோம்.