யெகோவாவின் சாட்சிகள் கலப்பு விசுவாசத்தைக் கடைப்பிடிக்கிறார்களா?
யெகோவாவின் சாட்சிகளாகிய நாங்கள், விசுவாசம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி எல்லா மதத்தினரோடும் சந்தோஷமாகக் கலந்துபேசுகிறோம்; ஆனால், நாங்கள் கலப்பு விசுவாசத்தைக் கடைப்பிடிப்பதில்லை; அதாவது, வேறு நம்பிக்கைகளை உடையவர்களோடு சேர்ந்து கடவுளை வழிபடுவதில்லை. உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் “இசைவாக இணைக்கப்பட்டு ஒற்றுமையாக” செயல்படுகிறார்கள் என்று பைபிள் சொல்கிறது; அந்த இசைவுக்கு முக்கியக் காரணமே, மத நம்பிக்கைகளில் ஒற்றுமையாக இருப்பதுதான். (எபேசியர் 4:16; 1 கொரிந்தியர் 1:10; பிலிப்பியர் 2:2) இது வெறுமனெ அன்பு செலுத்துவது, கரிசனை காட்டுவது, மன்னிப்பது போன்ற நல்ல குணங்கள் எவ்வளவு முக்கியமென ஒத்துக்கொள்வது மட்டுமே அல்ல. பைபிளுடைய திருத்தமான அறிவின் அடிப்படையில்தான் எங்களுடைய மத நம்பிக்கைகள் அமைந்துள்ளன; அந்தத் திருத்தமான அறிவு இல்லையென்றால் எங்களுடைய விசுவாசமே வீணானதாக இருக்கும்.—ரோமர் 10:2, 3.
வேறு நம்பிக்கைகளை உடையவர்களோடு சேர்ந்து கடவுளை வணங்குவது, பொருத்தமற்ற நுகத்தடியில் பிணைக்கப்படுவது போல் இருக்குமென பைபிள் சொல்கிறது; அப்படிச் செய்வது ஒரு கிறிஸ்தவருடைய விசுவாசத்தையே குலைத்துவிடும். (2 கொரிந்தியர் 6:14-17, அடிக்குறிப்பு) அதனால்தான், கலப்பு விசுவாசத்தைக் கடைப்பிடிக்க இயேசு தன்னுடைய சீஷர்களை அனுமதிக்கவில்லை. (மத்தேயு 12:30; யோவான் 14:6) அதுபோலவே, பூர்வ இஸ்ரவேலர்கள் தங்களைச் சுற்றியிருந்த தேசத்தாருடைய வணக்கத்தில் ஈடுபடுவதை மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட கடவுளுடைய சட்டம் அனுமதிக்கவில்லை. (யாத்திராகமம் 34:11-14) பிற்பாடு ஒருசமயம், வேறு விசுவாசத்தைச் சேர்ந்த ஆட்களுடைய உதவியை ஏற்றுக்கொள்ள உண்மையுள்ள இஸ்ரவேலர்கள் மறுத்துவிட்டார்கள்; காரணம்? இவர்களுடைய மத நம்பிக்கைகள் அவர்களுடைய மத நம்பிக்கைகளோடு கலப்படமாகிவிடக் கூடாது என்பதற்காக!—எஸ்றா 4:1-3.
யெகோவாவின் சாட்சிகள் வேறு விசுவாசத்தைச் சேர்ந்த ஆட்களைச் சந்தித்துப் பேசுகிறார்களா?
ஆம், பேசுகிறார்கள். அப்போஸ்தலன் பவுலைப் போலவே, ஊழியத்தில் “எத்தனை பேரை முடியுமோ அத்தனை பேரையும்” சந்தித்துப் பேசி, அவர்களுடைய எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் புரிந்துகொள்வதற்கு ஆர்வம் காட்டுகிறோம். (1 கொரிந்தியர் 9:19-22) அப்படி அவர்களிடம் பேசும்போது, பைபிளின் ஆலோசனைப்படியே அவர்களுக்கு “ஆழ்ந்த மரியாதை” காட்ட உள்ளப்பூர்வமாக முயற்சி எடுக்கிறோம்.—1 பேதுரு 3:15.