பைபிள் வசனங்களின் விளக்கம்
மத்தேயு 6:34—“நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்”
“நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள். நாளைக்கு நாளைய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடுகள் போதும்.”—மத்தேயு 6:34, புதிய உலக மொழிபெயர்ப்பு.
“நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.”—மத்தேயு 6:34, பரிசுத்த வேதாகமம்—தமிழ் O.V. பைபிள்.
மத்தேயு 6:34-ன் அர்த்தம்
இந்த வார்த்தைகளைச் சொன்னவர் இயேசு கிறிஸ்து. வரப்போகும் பிரச்சினைகளை நினைத்து அளவுக்கு அதிகமாகக் கவலைப்பட வேண்டியதில்லை என்று தன்னைப் பின்பற்றியவர்களுக்கு அவர் நம்பிக்கை அளித்தார். நாளைக்காக இன்றே கவலைப்படுவதற்குப் பதிலாக இன்றைய நாளைப் பற்றி மட்டுமே யோசிக்க வேண்டும் என்று இயேசு சொன்னார்.
ஆனால் அதற்காக அடுத்த நாளைப் பற்றி யோசிக்கவே கூடாது என்றோ, எதிர்காலத்துக்காகத் திட்டமிடக் கூடாது என்றோ இயேசு சொல்லவில்லை. (நீதிமொழிகள் 21:5) நாளைக்கு என்ன நடக்குமோ என்று நினைத்து அநாவசியமாக அல்லது அளவுக்கு அதிகமாகக் கவலைப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றுதான் சொன்னார். அப்படிப்பட்ட கவலை நம் சந்தோஷத்தைப் பறித்துவிடும். அதோடு, இப்போது செய்ய வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்த முடியாதபடி செய்துவிடும். வரப்போகும் பிரச்சினைகளை நினைத்து இப்போது கவலைப்படுவதால் அந்தப் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? பார்க்கப்போனால், என்ன நடந்துவிடும் என்று நாம் கவலைப்படுகிறோமோ அது பெரும்பாலும் நடப்பதில்லை. அப்படியே நடந்தாலும், நாம் நினைக்கும் அளவுக்கு மோசமாக இருப்பதில்லை.
மத்தேயு 6:34-ன் பின்னணி
மத்தேயு 5-7 அதிகாரங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் புகழ்பெற்ற மலைப்பிரசங்கத்தில்தான் இயேசு இந்த வார்த்தைகளைச் சொன்னார். அநாவசியமாகக் கவலைப்படுவதால் நமக்கு சந்தோஷம் கிடைத்துவிடாது, நம் வாழ்நாளும் கூடிவிடாது என்று அதில் அவர் விளக்கினார். (மத்தேயு 6:27) நம் வாழ்க்கையில் கடவுளுக்கு முதலிடம் கொடுக்கும்போது, நாளைக்காக அநாவசியமாகக் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் அவர் சொன்னார். செடிகொடிகளையும் விலங்குகளையும் கவனித்துக்கொள்கிற கடவுள், தனக்குச் சேவை செய்கிறவர்களையும் கண்டிப்பாகக் கவனித்துக்கொள்வார் என்று சொன்னார்.—மத்தேயு 6:25, 26, 28-33.
மத்தேயு 6-வது அதிகாரத்தை அடிக்குறிப்புகளோடும் இணை வசனங்களோடும் சேர்த்து வாசித்துப் பாருங்கள்; அதற்கான படங்களையும் பாருங்கள்.