இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
இன்னும் நிறைய பேரை நான் நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டுமா?
“எனக்குன்னு ஒரு ஃப்ரெண்ட்ஸ் குரூப் இருக்கு, அந்த குரூப்ப விட்டுட்டு என்னால வரவே முடியாது.”—ஆலென்.
“என் ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ல கொஞ்சப் பேர்தான் இருக்காங்க. கொஞ்சப் பேர் இருந்தாத்தான் எனக்குப் பிடிக்கும். முன்னபின்ன தெரியாதவங்ககிட்ட பேசிப் பழகற டைப் நான் இல்ல.”—சாரா.
நீங்களும்கூட ஆலென், சாராவைப் போல உணருகிறீர்களா? எப்போதும் ஒரே ஃப்ரெண்ட்ஸ் குரூப்போடு இருக்கிறீர்களா? புதிய ஆட்களை நண்பர்களாக்கிக்கொள்ள உங்களுக்கு இஷ்டமே இல்லையா?
அப்படியானால், இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்!
ஃப்ரெண்ட்ஸ் குரூப்பினால் வரும் பிரச்சினைகள்
நெருங்கிய நண்பர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு குரூப்பாக இருப்பதில் தவறில்லை. “எனக்குன்னு சில பேர் இருக்காங்க” என்ற உணர்வை அது உங்களுக்குக் கொடுக்கும். அதோடு, “என்னோட ப்ளஸ், மைனஸை தெரிஞ்சு என்னை ஏத்துக்கறவங்ககூடதான் நான் இருக்கேன்” என்கிற உணர்வையும் அது உங்களுக்குக் கொடுக்கும்.
“ஒரு குரூப்ல இருந்தா... எல்லார்க்கும் பிடிச்ச மாதிரி இருந்தா... மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லாரும் நம்மள ஃப்ரெண்ட்ஸா ஏத்துக்கணும்னுதானே இந்த வயசில தோணும்.”—கேரன், வயது 19.
உங்களுக்குத் தெரியுமா? இயேசுவுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள்; 12 அப்போஸ்தலர்களும் அவருடைய நண்பர்கள்தான், ஆனால் அவர்களில் மூன்று அப்போஸ்தலர்கள் மட்டும், அதாவது பேதுரு, யாக்கோபு, யோவான் மட்டும், அவருடைய மிக நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள்.—மாற்கு 9:2; லூக்கா 8:51.
என்றாலும், நீங்கள் இந்த விஷயத்திற்குக் கவனம் செலுத்த வேண்டும்: வேறு யாரிடமும் பழகாமல், ஒரேவொரு குரூப் ஃப்ரெண்ட்ஸோடு மட்டும் பழகினால் பிரச்சினைகள் உண்டாகலாம். உதாரணத்திற்கு:
அருமையான ஃப்ரெண்ட்ஸ் உங்களுக்குக் கிடைக்காமல் போய்விடலாம்.
“உங்கள மாதிரி இருக்கற இருக்கறவங்கள மட்டுமே ஃப்ரெண்ட்ஸா வெச்சிருந்தீங்கன்னா, புது அனுபவங்கள்—தங்கமான ஆட்களோட நட்பு—உங்களுக்குக் கிடைக்காமலயே போயிடும்.”—இவென், வயது 21.
மற்றவர்கள் உங்களைத் திமிர்பிடித்தவராகப் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.
“எப்பவும் ஒரே குரூப்போட இருந்தீங்கன்னா, மத்த யாரோடயும் பேசிப் பழக உங்களுக்கு இஷ்டமில்லனுதான் மத்தவங்க நெனச்சுப்பாங்க.”—சாரா, வயது 17.
உங்கள் குரூப்பில் உள்ள நண்பர்களோடு சேர்ந்து நீங்களும் மற்றவர்களை மிரட்டி வம்புபண்ணுகிறவராக ஆகிவிடலாம்.
“தனியா இருக்கும்போது யாரும் மத்தவங்கள மிரட்டி வம்புபண்ண மாட்டாங்க, ஆனா ஃப்ரெண்ட்ஸ் குரூப்போட இருக்கும்போது அப்படிச் செய்யறது தப்பே இல்லனு தோணும்—வேடிக்கையாகூட தோணும்.”—ஜேம்ஸ், வயது 17.
உங்களைப் பிரச்சினையில் சிக்க வைத்துவிடலாம்—என்ன ஆனாலும் சரி, அந்த குரூப்போடுதான் இருப்பேன் என்று சொன்னீர்கள் என்றால், கண்டிப்பாகப் பிரச்சினைதான்.
“ப்ரெண்ட்ஸ் குரூப்ல, ஒருத்தர் கெட்டவரா இருந்தா போதும், அத்தனை பேரும் கெட்டுக் குட்டிச்சுவராதான் ஆவாங்க.”—மார்ட்டினா, வயது 17.
நீங்கள் என்ன செய்யலாம்
உங்கள் ஒழுக்கநெறிகளை ஆராய்ந்து பாருங்கள்.
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எந்த ஒழுக்கநெறிகளின்படி வாழ நான் முயற்சி செய்கிறேன்? அவற்றின்படி வாழ என் நண்பர்கள் எனக்கு உதவுகிறார்களா அல்லது அவற்றைக் கடைப்பிடிக்காதபடி எனக்கு உபத்திரவமாக இருக்கிறார்களா? அவர்களால் எனக்குப் பிரச்சினை வந்தாலும் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருப்பேனா?’
பைபிள் நியமம்: “ஏமாந்துவிடாதீர்கள்; கெட்ட சகவாசம் நல்ல ஒழுக்கநெறிகளை கெடுத்துவிடும்.”—1 கொரிந்தியர் 15:33, அடிக்குறிப்பு.
“உங்க குரூப்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் நீங்க கடைப்பிடிக்கற ஒழுக்கநெறிகள கடைப்பிடிக்கலேன்னா, சீக்கிரத்திலயே நீங்ககூட செய்யக்கூடாத காரியங்கள செய்ய ஆரம்பிச்சிடுவீங்க.”—எல்லென், வயது 14.
எதற்கு முக்கியத்துவம் தருகிறீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னோட ஒழுக்கநெறிகள விட்டுக்கொடுக்கற அளவுக்கு நான் என் ஃப்ரெண்ட்ஸ்கூட நெருக்கமா இருக்கேனா? என் ஃப்ரெண்டு தப்பு செய்யறத பார்த்தா நான் என்ன செய்வேன்?’
பைபிள் நியமம்: “என் பாசத்துக்குரிய எல்லாரையும் நான் கண்டித்துத் திருத்துவேன்.”—வெளிப்படுத்துதல் 3:19.
“ஃப்ரெண்ட்ஸ் குரூப்ல ஒருத்தர் பிரச்சனைல மாட்டிக்கிட்டா, அவர காப்பாத்தணும்னு தோணும்; அவர பத்தி கம்ப்ளெய்ன் பண்ணினா அவர காட்டிக்கொடுக்கற மாதிரி இருக்கும்னு நெனச்சுகிட்டு வாய்திறக்காம இருந்துடுவோம்.”—மெலனி, வயது 22.
இன்னும் நிறைய பேரை நண்பர்களாக்கிக்கொள்ளுங்கள்.
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எனக்கு அவ்வளவா தெரியாதவங்களகூட என்னோட ஃப்ரெண்ட்ஸா ஆக்கிக்கிட்டா எனக்கு ஏதாச்சும் நன்மை கிடைக்குமா?’
பைபிள் நியமம்: “உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்.”—பிலிப்பியர் 2:4.
“யாருக்குமே பிடிக்காத பிள்ளைங்களுக்கு ஒருவேளை அவங்க வீட்ல ரொம்பக் கஷ்டங்கள் இருக்கலாம். அவங்களோட பழகிப் பார்த்தீங்கன்னா, அவங்களுக்குன்னு சில அட்டகாசமான குணங்கள் இருக்கறத தெரிஞ்சுப்பீங்க.”—ப்ரையன், வயது 19.
முக்கிய விஷயம் இதுதான்: ப்ரெண்ட்ஸ் குரூப்பில் இருப்பது தவறு கிடையாது. அதேசமயம், மற்றவர்களையும் உங்கள் ப்ரெண்ட்ஸாக ஆக்கிக்கொள்ளுங்கள், அது உங்களுக்கு நன்மையளிக்கலாம். “மற்றவர்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறவன் புத்துணர்ச்சி அடைவான்” என்று பைபிள் சொல்கிறது.—நீதிமொழிகள் 11:25.